புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

 

இப்படி விழிப்புற்று தெளிவுறும் இந்தக் காலகட்டத்தில், இவை மக்களுக்கு சார்பாக மாறிவிடவில்லை. இப்படி வெளிவருபவர்கள் மக்களுக்கான ஒரு அரசியலை முன்னிறுத்தி, அதற்காக செயல்;படத் தயாராகவில்லை என்பதுதான், ஒரு கசப்பான உண்மை. இரண்டு வலதுசாரி போக்குகளில் இருந்து வெளிவருபவர்கள், அதை விமர்சிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் வலதுசாரிய அரசியலைத் தாண்டி, இடதுசாரிய மக்கள் அரசியலை முன்னெடுக்க அவர்கள் தயாராகவில்லை.

 

மக்களுக்கான அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கப் போராட்டமும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில், இந்த சமூகத்தில் நடைபெறும் இன்றைய அரசியல் மாற்றங்கள் முன்னோக்கி செல்லவில்லை. ஏன் அதைக் கோரவுமில்லை. இதைத் எதிர்த்துத்தான் கருத்துகள், நடைமுறைகள் அனைத்தும் செல்ல முனைகின்றது. 

 

இங்கு நாம் ஒன்றைத் தெளிவாக வரையறுத்து காட்டுவது அவசியமாகின்றது. நடைமுறையும், அது சார்ந்த போராட்டமும், எம் மண்ணில் தான் அமைப்பாக இருக்கமுடியும் என்பது உண்மை. இதை புலம்பெயர் மண்ணில் நாம் கற்பிக்க முடியாது. ஆனால் மண்ணின் போராட்டத்துக்கு உதவக் கூடிய புறநிலை, புலம்பெயர் மண்ணில் தான் இன்று அதிகமாக காணப்படுகின்றது. தத்துவார்த்த மற்றும் இலங்கை சமூக பொருளாதார விடையங்களை உள்வாங்கியவர்கள் மண்ணில் அழிக்கப்பட்டு விட்டனர். புலம்பெயர் சமூகத்தில் வர்க்க போராட்டத்தை தம் அரசியல் வழியாக கொண்டவர்களின், ஒழுங்குபடுத்தப்பட்ட பங்களிப்பு இன்று இதற்கு அவசியமானது.  

     

ஆனால் எம் மத்தியில் மீண்டும் இதற்கு நேரெதிரான போக்கு வளர்ச்சியுறுகின்றது. மக்கள் அரசியலை முன்னிறுத்திய செயலைக் கோரும், விமர்சன தத்துவார்த்த அரசியல் போக்கு எம் மத்தியில் இன்று பொதுவாக கிடையாது.

 

இப்படி இன்றைய உடனடியான அரசியல் விளைவாக, இதற்கு எதிர்மறையான இரண்டு பிரமுகர் அரசியல் போக்குகள் உருவாகின்றது.

 

1. புலிகளின் இருந்து வருபவர்கள், புலியை விமர்சிப்பதன் மூலம், தமது வலதுசாரி அல்லது வலது இடது கலந்த இடதுசாரியம் மூலம், தம்மை பிரமுகராக நிலைநாட்ட முனைகின்றனர்.

 

2. இடதுசாரிய விமர்சனங்கள் மூலம், தம்மை பிரமுகராக நிலைநாட்ட முனைகின்றனர். 

 

இவ் இரண்டு போக்குகளும் வர்க்கப் போராட்டங்களை (நடைமுறையில்) மறுக்கின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டத்துக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், தம் இலக்கியத்தை முன்வைப்பதை மறுக்கின்றது. இதை கோரும் எழுத்தை நிராகரிக்கின்றது. மாறாக சமூகத்தின் முரண்பாடுகள் மீது, தன்னை இதில் ஒரு அங்கமாக்கி அதற்கான பிரமுகராக தன்னை நிலைநாட்ட முனைகின்றது. விமர்சனத்தை செய்வதன் மூலம், அதாவது இதன் மேலான தன் எதிர்ப்பை காட்டுவதன் மூலம், பிரமுகராக முனைகின்றது. மக்களுக்கு அதை தீர்க்கும் அரசியல் வழியைக் காட்டாது, அதற்கு தலைமை தாங்கிச் செல்லாது, தம்மை இதன் மேல் பிரமுகராக தக்கவைக்க முனைகின்றது.

    

இப்படி தன்னை சமூகத்தின் பால் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்வதற்கு ஏற்ற விமர்சனத்தை செய்து, தம் பிரமுகர் தனத்தை இதன் மேல் உருவாக்க முனைகின்றது.

 

இப்படி ஒரு எழுத்தாளன், விமர்சகன் சமூகத்தை மாற்ற போராட வேண்டிய அரசியல் பணி தமக்கு கிடையாது என்பதுதான், இந்த பிரமுகத்தனத்தின் பின் உள்ள பிழைப்புவாத  அரசியலாகும். மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் மேல், அரசியல் சூழல் மேலான விமர்சனம் என்பதும், முரண்பாடு என்பதும், தமது இருப்பு சார்ந்த அறிவைக் காட்டும் குதிரைகளாக கருதுகின்றனர்.

 

மக்களின் முரண்பாடுகள் மேல், மக்களை அணிதிரட்டுவதை இவர்கள் தீவிரமாக மறுக்கின்றனர். மக்களின் வர்க்கப் போராட்டத்தையும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும், வழிநடத்தி முன் செல்லவேண்டிய நடைமுறை சார்ந்த பொறுப்பை மறுக்கின்றனர்.

 

இன்றைய எமது பாசிச சூழலில் இதற்கான ஒரு அமைப்பு, எம் மண்ணில் உருவாகிவிடவில்லை. இருந்தபோதும் இதை வலியுறுத்தி, இது சார்ந்து கருத்துகளை எம் செயல் சார்ந்த கருத்துத்தளத்தில் நாம் முன்வைக்க வேண்டும். இதுமட்டும் தான் உண்மையானது, மக்களுக்கானதுமாகும். 

 

இன்றும் எம்மை சுற்றிய எழுத்துகளில், கருத்துக்களில் இதை நாம் காணமுடியாது. மக்களை வழிநடத்தக் கூடிய எழுத்தையும், அதைக் கோருவதையும் பொது அரசியல் அரங்கில் காயடித்துவிட்டு, பிரமுகராகும் எழுத்தை தேடி அலைகின்ற பிற்போக்கு கூறு முதன்மை பெற்று வளர்ச்சியுறுகின்றது. 

 

இதற்காக எம்மை மறுக்கும் போது, வெறும் 'இணைய புரட்சி" என்று மொட்டையாக கூறுகின்றனர். எம் எழுத்து, நடைமுறை சார்ந்த அரசியல் செயலை மறுத்து நிற்பதாக நீங்கள் கருதினால், நீங்கள் சுயமாக உங்கள் வழியில் முன்னெடுக்க நாங்கள் தடையாக எந்தவிதத்திலும் இருக்கமாட்டோம்.

 

எதார்த்தத்தில் எம் வர்க்கப்போராட்டக் கருத்தின் மீதுதான், மக்கள் அரசியலும், உண்மையும் உண்டு. இதை நாம் தான் சொல்லவேண்டும் என்பதல்ல. நீங்களும் இதை சொல்லலாம். இதற்காக நடைமுறையில் நீங்கள் போராடலாம். இது உங்களளவில் உள்ள சுதந்திரம்.

 

வர்க்கப் போராட்டமின்றி, மக்களுக்கான உண்மையான நேர்மையான அரசியல் இந்த சமூக அமைப்பில் எதுவும் கிடையாது. இதை நீங்கள் மறுத்தால், நீங்கள் மக்களுக்கு எதிரானவர்தான். அந்த வழியில்தான் பயணிக்கமுடியுமே ஒழிய, வேறு வழியில்லை என்பதே மனித வரலாறுமாகும்.

 

பி.இரயாகரன்
13.05.2009