நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்திருக்கிறார். நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலை பதவி நீக்கம் செய்து பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் நிராகரித்ததற்கான எதிர் நடவடிக்கை இது. இது ஜனாதிபதியின் அதிகார வரம்பை மீறியது என்றும் அரசமைப்பு முறைக்கு எதிரானது என்றும் அம்பலப்படுத்தி, தனது பதவி விலகலை தொலைக்காட்சி மூலம் அறிவித்திருக்கிறார் பிரசண்டா. “நேபாளத்தின் மக்களாட்சியைக் கருவிலேயே கொல்வதற்கு இந்தியா (அண்டை நாடு) சதி செய்கிறது” என்று குற்றம் சாட்டியுமிருக்கிறார்.

 

இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க கொலைக்கரங்கள் நேபாளத்தில் நடத்தி வரும் சதிவேலைகள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது பிரசண்டாவின் ராஜினாமா அதனை முழுமையாக அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நேபாள மன்னராட்சியைத் தூக்கியெறிவதில் மாவோயிஸ்டுகள் ஆற்றிய முதன்மைப் பாத்திரத்தை வெறிகொண்ட கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களும் கூட மறுக்க முடியாது. மன்னராட்சியை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு நேபாளத்தின் ஓட்டுக்கட்சிகள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அவ்வாறு அகற்றும் நோக்கத்துடன் அவர்கள் அந்தப் போராட்டங்களை நடத்தவும் இல்லை. மன்னராட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து ஆதாயங்களைப் பெறுவதை மட்டுமே செய்து வந்தனர். அதன் காரணமாகவே மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர். இறுதியில் மன்னர் ஞானேந்திரா நாடாளுன்றத்தை முடக்கி, கட்சித் தலைவர்களை சிறை வைத்து அடக்குமுறையை ஏவிவிட்ட காலத்தில் செய்வதறியாமல் இந்திய அரசிடம் தங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடிக் கொண்டிருந்தன நேபாள காங்கிரசு, யு.எம்.எல் முதலான ஓட்டுக் கட்சிகள். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டமும் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் எழுச்சியும்தான் ஞானேந்திராவைத் தூக்கி எறிந்தன. ஓட்டுக் கட்சித்தலைவர்களை சிறையிலிருந்து மீட்டன. இது உலகறிந்த வரலாற்று உண்மை.

எனினும், மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதற்கும், மன்னராட்சியை எப்படியாவது காப்பாற்றுவதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இறுதிவரை பெரிதும் முயன்றன. எல்லா வகையான சூழ்ச்சிகளையும் செய்து பார்த்தன. ஏழு கட்சிக் கூட்டணி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒர் முன்னணி அமைத்து விடாமல் தடுப்பதற்கு இந்தியா எல்லா சூழ்ச்சிகளையும் செய்து தோற்றது. பிறகு, மன்னர் ஒழிக என்ற முழக்கத்துடன் இந்தியா ஒழிக என்று நேபாள மக்கள் தெருவில் முழங்கத் தொடங்கிய பின்னர்தான் வேறு வழியே இல்லாமல் மாவோயிஸ்டுகளின் வெற்றியை கசப்புடன் விழுங்கிக் கொண்டது இந்தியா.

பிறகு, மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, தெராய் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் கலவரங்களைத் தூண்டியது. பின்னர் இந்து பாசிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுத்து நேபாளத்துக்குள் அனுப்பி, (இதில் மட்டும் அத்வானி சோனியா கூட்டணி) நிராயுதபாணிகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மாவோயிஸ்டு அணிகளைக் கொலை செய்தது. இத்தனைக்கும் பிறகு மாவோயிஸ்டுகள் பெற்ற தேர்தல் வெற்றி இந்தியாவின் மேலாதிக்க மகுடத்தில் இரண்டாவது செருப்படியாக இறங்கியது.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை வாய் பேச்சுக்கு வரவேற்ற போதிலும், மாவோயிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து அகற்றும் தனது முயற்சியை இந்தியா நிறுத்தவில்லை. இராணுவ தலைமை ஜெனரல் கட்வால் விவகாரத்தில் இது வெடித்து வெளியே வந்திருக்கிறது.

 

Nepal May Day

ராயல் நேபாள் ஆர்மி என்று முன்னர் அழைக்கப்பட்ட நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால், ஞானேந்திராவின் தந்தையான மன்னர் மகேந்திராவின் வளர்ப்பு மகன். நேசனல் டிஃபென்ஸ் அகாதமி, இந்தியன் மிலிட்டரி அகாதமி போன்ற இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர். மன்னராட்சிக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் விசுவாசமான அடியாள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பிறகு, அதன் உத்தரவுகளுக்குக்  கட்டுப்படுவதாக வாயளவில் ஏற்றுக் கொண்டு, செயலில் நேரெதிராகச் செயல்பட்டார் கட்வால். மிக முக்கியமாக, மன்னராட்சிக்கும் இந்தியாவுக்கும் விசுவாசமான பல இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலத்துக்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு அளித்தார். மாவோயிஸ்டுகளின் மக்கள் படையைச் சேர்ந்த சிப்பாய்களை நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்வது என்ற அரசின் நிராகரித்தது மட்டுமின்றி, தன்னிச்சையாக ஆளெடுப்பு நடத்தி, மன்னராட்சிக்கு சாதகமான ஆட்களை இராணுவத்தில் பெரும் அளவில் சேர்க்கத் தொடங்கினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தினால், இவருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பினார் பிரசண்டா. அவரது பதில் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இவரைப் பதவிநீக்கம் செய்தார். கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே “கட்வாலை நீக்கக் கூடாது” என்று பிரசண்டாவை மிரட்டியது இந்திய அரசு. ஏற்கெனவே மாவோயிஸ்டுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருந்த நேபாள காங்கிரசு, யு.எம்.எல் கட்சியினரை மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தூண்டி விட்டது. ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கான சதிவேலைகளையும் இந்தியா தொடங்கியது.

இந்தியாவின் இந்த தலையீட்டுக்கு இரண்டாவது முக்கியக் காரணம், சீனாவுடன் நேபாள அரசு செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த ஒப்பந்தம். ஏற்கெனவே நேபாளத்தின் மீது இந்தியா திணித்திருந்த மேலாதிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் உணர்வு நேபாள மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருப்பதால், வேறு வழியின்றி பிற ஓட்டுக் கட்சிகளும் இதனை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் சீனாவுடன் நேபாளம் சுயேச்சையாக செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம், தனது மேலாதிக்க நோக்கத்துக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே மாவோயிஸ்டு அரசை வீழ்த்திவிட வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டமாக இருந்திருக்கிறது. இதனை ஒட்டித்தான் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த முன்னாள் மன்னன் ஞானேந்திரா, சோனியாவை இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் நடந்திருக்கிறது பிரச்ண்டாவின் ராஜினாமா. இப்போது தனது எடுபிடிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நேபாளத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முனைந்திருக்கிறது இந்தியா.

இவை எதையும் “இல்லை” என்று இந்திய அரசு மறுக்வே முடியாது. அனைத்தும் அப்பட்டமாக அம்பலமாகி விட்டன. இந்தியாவின் நலனுக்கு அவசியமான நடவடிக்கைகள் என்ற கோணத்தில் இவற்றை நியாயப்படுத்தி எழுதுகின்றன ஆளும் வர்க்கப் பத்திரிகைகள். “இந்தியாவின் மேலாண்மையை இந்தப் பிராந்தியத்தில் நிலைநாட்ட காங்கிரசு தவறிவிட்டது” என்பதுதான் நேபாளம் குறித்த பா.ஜ.க வின் விமரிசனம். இன்னும் கொஞ்சம் சூழ்ச்சித் திறனுடன், குட்டு உடைபடாத வண்ணம் இதனை செய்திருக்க வேண்டும் என்பது ஆளும் வர்க்க அரசியல் விமரிசகர்கள் கூறும் விமரிசனம்.

மாவோயிஸ்டு அரசின் நடவடிக்கைகளில் இந்தியாவை அச்சுறுத்தும் மூன்று விசயங்கள் எவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிடுகிறது. முதலாவதாக நேபாள இராணுவத்தில் மாவோயிஸ்டுகளின் மக்கள் படையின் வீரர்களைச் சேர்ப்பது. இதில் இந்தியாவுக்கு என்ன நோக்காடு? நியாயமாக மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட உடனேயே அதனைப் பாதுகாத்து நின்ற இராணுவம் கலைக்கப் பட்டிருக்க வேண்டும். நேபாளத்தின் சூழலும், இன்றைய உலகச் சூழலும் அதனை சாத்தியமற்றதாக்கியிருந்தன. எனவேதான் மக்கள் படையை இராணுவத்தில் சேர்ப்பது என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில் 7 கட்சிக் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டது.

மன்னராட்சியை அகற்றி குடியரசை நிறுவுவதற்காகப் போராடி, பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்த மக்கள் படைதான் குடியாட்சியைப் பாதுகாக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கை நேபாள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் பாதுகாப்பானது இல்லையே! அதன் விளைவுதான் இந்தியத் தலையீடு. ஞானேந்திரா சோனியா சந்திப்பு.

இரண்டாவதாக, இராணுவத்தில் ஊடுறுவுவதைப் போலவே, நீதிமன்றத்திலும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவி விடுவார்களாம். மக்கள் நீதிமன்றம் என்ற தங்களது அமைப்பை நீதித்துறைக்குள்ளும் புகுத்தி விடுவார்களாம். அந்த அபாயம் குறித்து நேபாள பிரபுக்குலம் மட்டுமின்றி, இந்திய மன்னர் குலமும், நேபாளத்தில் முதலீடு செய்திருக்கும் இந்திய தரகு முதலாளிகளும் கவலைப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கான இரண்டாவது அபாயம்.

மூன்றாவதாக, நேபாளம் சீனாவுடன் செய்து கொள்ள விரும்பும் ஒப்பந்தம். ஒரு இறையாண்மை மிக்க நாடு, வேறொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவதை இந்தியா எப்படி தடுக்க முடியும்? ஏனென்றால் தனது அண்டை நாடான சீனாவுடன் நேபாள அரசு ஒப்பந்தம் போடுவது இந்திய நலனுக்கு எதிரானதாம். நேபாளத்தில் தனக்குப் போட்டியாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லையாம்.

அண்டை நாட்டின் இறையாண்மையை இந்தியா மதிக்கும் யோக்கியதை இதுதான். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால், “இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் நாம் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்கும் அதே வாயால்தான் இராணுவ ஜெனரலை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று மாவோயிஸ்டுகளை மிரட்டுகிறது இந்தியா. ஆட்சிக் கவிழ்ப்புக்கும் சதித்திட்டம் தீட்டுகிறது. இராணுவ ஜெனரல் விவகாரம் கிடக்கட்டும். கேவலம் பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே இந்தியா தலையிடவில்லையா?

இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய வட்டாரத்திலேயே தேசிய இனப் போராட்டமோ ஜனநாயகப் புரட்சியோ வெற்றி பெறுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. அன்று ஐரோப்பியப் புரட்சிக்குத் தடையரணாக இருந்த ரசியாவின் ஜாராட்சியைப் போல, இன்று இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் பிற்போக்கின் காவலன், அமெரிக்காவின் அடியாள்.

தற்போது பொருளாதார வலிமை பெற்றிருக்கும் சீன முதலாளித்துவ அரசு, அமெரிக்காவுக்குப் போட்டியாக, தனது செல்வாக்கை தெற்காசியப் பகுதிக்கும் விரிவு படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் காரணம் காட்டித் தனது மேலாதிக்க நோக்கத்தை இந்திய ஆளும் வர்க்கம் மறைத்துக் கொள்ள முனையும். இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்த்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடியாளாக நியமனம் பெற்றுவிட்டதால், சீனப்பூச்சாண்டி காட்டி தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

ஆனால் அதில் கடுகளவும் உண்மை இல்லை. சீனாவின் தற்போதைய ஆசைகள் தான் புதியவை. ஆனால் இந்திய

ஆளும் வர்க்கத்தின் ஆசையும் ஆதிக்கமும் மிகவும் பழையவை. 1950 களிலேயே அது தொடங்கி விட்டது. இந்திய நேபாள ஒப்பந்தம் முதல், ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் வரை இதற்குப் பல சான்றுகள் உண்டு.

1990 களில் நேபாளத்தில் மன்னர் பிரேந்திராவுக்கு எதிராக நேபாள ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயகத்துக்கான இயக்கத்தைப் பின்நின்று இந்தியா இயக்கியதற்கும், 1983 இல் இந்தியா ஈழப்போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் கொடுத்ததற்கும் ஒற்றுமைகள் உண்டு. இன்று ராஜபக்சேவுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்துவதற்கும், சோனியா ஞானேந்திரா சந்திப்புக்கும் கூட ஒற்றுமை உண்டு. ஒருவேளை சோனியாவுக்குப் பதில் அத்வானியோ, ஜெயல்லிதாவோ பிரதமராக இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தே இருக்கும். ஈழத்து இனப் படுகொலைக்கும் இந்திய அரசின் ஆதரவு கிடைத்தே  இருக்கும்.

“ஹவாய் செருப்புக்கும் தோல் செருப்புக்கும் வித்தியாசமில்லையா?” என்று டெல்லிக்குக் காவடி எடுத்துக் கொண்டிருக்கும் அறிவாளிகளும் தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழலாம். இல்லை என்று நாம் கூறவில்லை. அந்த வித்தியாசத்தைக் காட்டிலும், அவையிரண்டுமே ஆளும் வர்க்கத்தின்  கால்செருப்புகள் என்ற ஒற்றுமையே முதன்மையானது என்ற உண்மையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறோம். வர்க்கம் என்ற சொல்லை தமிழ் உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் எவ்வளவுதான் வெறுத்தாலும், கண்களை மூடிக்கொண்டாலும், ஆளும் வர்க்க நலன்தான் இந்திய அரசை இயக்குகிறது.

இறுதியாக, பிரசண்டாவின் பதவி விலகல் உரையிலிருந்து சில வாக்கியங்கள்:

“நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டு, “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.”

இறையாண்மை நாட்டுப்பற்று என்ற பெயரில் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் மிரட்டலுக்குத் நாமும் தலை வணங்க கூடாது.  தெற்கே ஈழம். வடக்கே நேபாளம். இந்திய மேலாதிக்கத்தின் கொலைக்கரங்கள் நீள்கின்றன. அவற்றை வெட்டி எறிவது நம் கடமை. மேலாதிக்கத்தின் தயவில் விடுதலையைச் சாதிக்கலாம் என்று நம்புவது மடமை.