மே 2 சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.



poonolநாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்ந்த அம்பி. நந்தினியோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அம்பி நந்தினியை ஏற்றுக் கொண்டதற்கு அவரது சம்பளம், படிப்பு, அமெரிக்க வாசம் என்பதைத் தவிர வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நந்தினியைப் பொறுத்தவரை தன் சுயசாதி அவலத்தை ஒரு பார்ப்பனரை திருமணம் செய்வதன் மூலம் வென்றுவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படியும் அமெரிக்காவில் செட்டிலான ஒரு தலித் பெண்ணுக்கு அம்மக்களின் போராட்ட உணர்வு இருக்கும் என்பதற்கு அவசியமில்லை. இருவரின் சாதியையும் தினத்தந்தி நேரடியாக குறிப்பிடவில்லை எனினும் நாம் உறுதியாகவே ஊகமின்றி அவர்களது சாதியை அறிய முடியும்.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்யும் போது அங்கே சமூகப்புரட்சி நடப்பதில்லை. தம்பிதியினர் இருவரும் யாரது சாதி படியெடுக்கில் மேலிருக்கிறதோ அந்த சாதியின் பண்பாட்டில் சங்கமித்து விடுவார்கள். இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். இங்கே நாம் கூற விரும்புவது நந்தினியும் அப்படி பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பதைத்தான். அப்படியெல்லாம் அவர் மாறியிருக்கக் கூடுமென்றாலும் அம்பி நாராயணனின் பெற்றோர்கள் ஏற்பதாக இல்லை.

ஒரு தலித் பெண்ணின் உறவில், இரத்தக் கலப்பில் குழந்தை கூடாது என அவர்கள் அம்பியை மாம்பலத்தில் இருந்தவாறே நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தலித் பெண்ணின் நான்கு இலட்ச ரூபாய் சம்பளத்தை உற்சாகமாக வரவேற்ற அம்பியும் இறுதியில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று குழந்தை வேண்டாமெனவும் கடைசியில் தாம்பத்திய உறவே கூடாது எனவும் வக்கிரமாக நடந்திருக்கிறார். இந்தக் கயமைத்தனத்தை நான்கு ஆண்டுகளாக போராடியிருக்கிறாள் அந்த அபலைப் பெண். இறுதியில் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

தன் உறவில் குழந்தை  கூடாதென இழிவு படுத்தும் நாராயணனோடு சேர்ந்து வாழ்வதில் பயனில்லை என பெற்றோருடன் சேர்ந்து முடிவெடுத்த நந்தினி கூடுதலாக அம்பியின் மேல் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். அவ்வாறே போலீசு ஆணையரிடம் புகார் பதிவு செய்தார். ஆணையரின் உத்தரவுப்படி அசோக் நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். முதலில் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து சேர்ந்து வாழ முயற்சி எடுத்த போலீசாரை நாராயணன் சட்டை செய்யவில்லை. நந்தினியுடன் சேர்ந்து வாழத்தயாராக இருப்பதாகவும் குழந்தை மட்டும் கிடையவே கிடையாது என அந்த திமிரெடுத்த மாம்பலத்துப் பார்ப்பான் உடும்புப் பிடியாக நிற்கிறார்.

கடைசியில் நாராயணன் மேல் தீண்டாமை சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக அறிவித்த போலீசு போனால் போகட்டுமென ஒரு நாள் சிந்திப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது. அமெரிக்காவில் ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்து விட்டு இப்போது புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா என பயந்து போன அம்பி அடுத்த நாள் நந்தினிக்கு அவர் விரும்பியவாறு குழந்தை தருவதாக ஒப்புக் கொண்டாராம். தலித் சாதி மக்களுக்கு மட்டும் தண்டனைகளை பாவம் பார்க்காமல் வாங்கித் தரும் போலீசு ஒரு அக்ரகாரத்துப் பார்ப்பானை தண்டிப்பதற்கு தயாராக இல்லை. என்ன இருந்தாலும் இது மேன்மக்களின் பிரச்சினையல்லவா! அப்புறமென்ன, அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும்போது குழந்தையுடன் வரவேண்டுமென போலீசு வாழ்த்துக்களுடன் அவர்களை அனுப்பி வைத்ததாம்.

தலித் மக்களின் மீது ஆதிக்கத்தை அரிவாளின் மூலம் நிலை நிறுத்தும் தேவர் சாதி - வன்னிய சாதி வெறிகளைப் போல பாரப்பன சாதி வெறி வன்முறை செய்வதில்லை என சிலர் பேசுவது வழக்கம். ஆனால் இந்த பிரச்சினையின் வன்முறையும், அநாகரிகமும், அயோக்கியத்தனமும் அரிவாளை விட அணுதினமும் சித்திரவதை செய்யும் வல்லமை கொண்டது. எவ்வளவு நுட்பமாக பாரப்பன சாதி தன்னை தக்கவைத்துக் கொள்கிறது பாருங்கள்! இத்தகைய சாமர்த்தியங்களெல்லாம் நிச்சயமாக தேவர், வன்னிய சாதி வெறியர்களிடம் இல்லை. அதனால்தான் இவர்களை திருத்துவது முடியும் என்பதோடு பார்ப்பனர்களை திருத்துவது இயாலாததாக இருக்கிறது.

போகட்டும், நந்தினியின் இந்த கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. காதலித்து மணந்த ஒரு பெண்ணை உலகில் வேறு எவரும் இதைப் போல கேவலப் படுத்த முடியாது என்றளவுக்கு இலக்கணம் படைத்திருக்கும் இந்த நபரின் உறவை அவர் வழக்குப் போட்டு தண்டித்திருக்க வேண்டும். அந்த மண உறவையும் துண்டித்திருக்க வேண்டும். இவ்வளவு கீழான நடத்தை உள்ளவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஆனாலும் இந்தியப் பெண்கள் இத்தகைய கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் அடிமை மனநிலையை நந்தினி அமெரிக்கா சென்றும் கூட வெல்ல முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

நாராயணன் இத்துடன் முடித்துக் கொள்ளும் ஆள்மாதிரி தெரியவில்லை. அமெரிக்க திரும்பியதும் சுலபமாக அந்த நாட்டு சட்டப்படி ஏதாவது ஒரு போண்டா காரணத்தைச் சொல்லிக்கூட விவாகரத்து செய்யலாம் என நினைத்திருக்கலாம். ஊர் உலகம் என்ன சொன்னாலும், எப்படியிருந்தாலும் பார்ப்பனர்கள் தமது இருப்பை தந்திரமாக காத்துக் கொள்வதில் விற்பன்னர்களாயிற்றே! பாவம் நந்தினி!!

தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” - இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம்.