புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

 

புலிகள் மக்களை என்றும் நம்பவில்லை. தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதுதான், வலதுசாரிய புலிகளின் பாசிசச் சித்தாந்தமாக இருந்தது. இனவழிப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும், மக்கள் நடைப்பிணமாக ஓடிக்கொண்டிருந்தனர். மக்களை தம் யுத்த எடுபிடிகளாகவே பயன்படுத்தத்தான், புலிகள் விரும்பியிருந்தனர். தாம் பயிற்சி வழங்கிய மக்கள், தமது சொந்த யுத்த நெருக்கடி காலத்தில் கூட அவர்கள் ஆயுதமேந்துவதை புலிகள் விரும்பவில்லை. அது அந்த வர்க்கத்தின் அரசியல்.  புலிகளின் மிக நெருக்கடியான அரசியல் காலகட்டத்தில், இதை நாம் ஒரு அரசியல் கோரிக்கையாக கூட வைக்கத் தவறியிருந்தோம்.

 

இந்த நிலையில், இன்று கொல்லப்படும் மக்கள் யார்? இன்று முட்கம்பிக்கு பின் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் யார்? இவர்கள் புலிகள் அல்ல, மாறாக எம் மக்கள்.

 

இவர்களை யார் கொன்றனர்? யார் அடைத்து வைத்திருக்கின்றனர்? எம் மக்களினதும், இலங்கை மக்களினதும் பொது எதிரிதான்.

 

இப்படி எம் மக்களின் எதிரி அவர்கள் மேல் நடத்திய இனவொடுக்குமுறையினை, நாம் ஆவணமாக்கிக் தொகுத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் கீழ் உள்ள இருபகுதிக்கு ஊடாக, பேரினவாதத்தின் சில பக்கத்தை நீங்கள் தெளிவாக இனம் காணமுடியும். 

 

1. கடந்த நூறு நாட்களில் பேரினவாதம் அப்பாவி மக்கள் மேலான படுகொலைகள் முதல் மக்கள் சந்தித்த மனித அவலங்களை உள்ளடக்கியது. (இவை சில நூற்றுக்கணக்கான படங்களாகும்.) இதில் சில அதற்கு முற்பட்டது. (இதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்)

 

2. 2001 முந்தைய நாட்களின் பேரினவாதம் நடத்திய மனித படுகொலைகளின் தொகுப்பு ஆவணம். இதை புலிகள் சமாதான காலத்தில் தொகுத்தனர். மிகமுக்கியமான இந்த பணியினை முன் நின்று செய்த, ஆயுதமேந்தாத அந்த முதியவரை பேரினவாதம் தன் ஊடுருவல் தாக்குதல் மூலம் இலக்கு வைத்துக் கொன்றது. பலர் இதை, இதனூடாக அறியமாட்டார்கள். தனது இனவழிப்பு படுகொலைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்ற அக்கறை, இங்கு மற்றொரு படுகொலையாக அரங்கேறியது. (இதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்

தமிழில்

 

1. 1956 இலிருந்து 2001 வரை


2. 2002 இலிருந்து 2008 வரை

 

இப்படி எம்மக்களின் ஒடுக்குமுறை மேலான வரலாற்றில், புலிகள் எம்மக்களை எதிரியாக்கி எம் போராட்டத்தை குறுக்கினர். தமிழ் மக்களின் ஆதரவை பாசிசமாக்கினர். இதன் மூலம் இன்று ஒரு பொட்டல் வெளியில் சிக்கி, இன்றோ நாளையோ என்று, அவர்கள் கதை முடியும் நிலையில் உள்ளனர். இதன் பின் ஒரு இனத்தின் நியாயமான ஜனநாயக உரிமைகள் அனைத்தையும், பேரினவாதமும் அதன் கைக்கூலிகளும் கூட்டி அள்ளி புதைக்கின்றனர். புலிகளின் கதை போல், மக்களின் நியாயமான போராட்டத்தையும், அடிமைத்தனம் மூலம் முடித்து வைக்க முனைகின்றனர். ஒரு இனவழிப்பாக, இனச்சுத்திகரிப்பாக, இனக் களையெடுப்பாக இன்று அது அரங்கேற்றி வருகின்றது.

 

எங்கும் நிலவும் மனித அவலங்களுக்கு, பாடையில் கிடக்கும் புலியே காரணம் என்று அரசு கூற முனைகின்றது. அதற்கு தாங்கள் அல்ல என்று காட்டமுனைகின்றது. ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை, இந்த இடத்தில் திணிக்க முற்படுகின்றது. புலிகளின் பாசிசம் விட்டுச்செல்லும் வடுக்களை எல்லாம் கூட்டியள்ளி, தமிழ்ச் சமூகம் மீது எறிகின்றது. தமிழ் கூலிக்குழுக்களும், அரச கைக்கூலிகளும், நாலு காலில் அரச விசுவாசிகளாக குலைத்தபடி, மக்களின் உரிமைகள் மீது பாய்ந்து குதறுகின்றது. எம் மக்கள் இனி சந்திக்கப் போகும், எதிர்காலம் இது தான். தம் சொந்த மனிதஅவலத்தின் மீது எதிர் வினையாற்ற முடியாத வண்ணம், பேரினவாத பாசிசம் எம்மை நோக்கி மனிதத்தைக் காட்டி வேகமாகவே அணிதிரளுகின்றது.    

       

பேரினவாதம் கொன்றதும், சிறைவைத்ததும் யாரை?

 

அவர்கள் தமிழர்கள் என்பது பொதுவானது. ஆனால் குறிப்பானது என்ன? இலங்கையில் மிக கடும் உழைப்பை வழங்கி வாழ்ந்த, ஏழை எளிய விவசாயப் பாட்டாளிகள். யாழ்குடாவில் சாதி ஒடுக்குமுறைக்களுக்குள்ளாகிய, அங்கு நிலமற்று கிடந்த தலித்துக்கள். மலையகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த தலித்திய தொழிலாளர்கள். யாழ்குடாவில் கடைநிலையில் வாழ்ந்த ஏழை எளிய மக்கள்;. யுத்தத்தின் கொடுமையால் கிழக்கு முதல் யாழ்குடா வரை புலம்பெயர்ந்து வாழ்ந்த அபலைகள்;. இவர்களை அடிப்படையாக கொண்டது தான் வன்னி. கடும் உழைப்பினால் வாழ்ந்த சமூகம். மனிதன் வாழாத பிரதேசங்களில் ஊடுருவி, உழைத்து வாழ்ந்த சமூகம்.  

 

மிக அடிப்படையான தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியாத ஏழைப் பாட்டாளிகள்;. இவர்களைத்தான் எம் கண் முன்னால், பேரினவாதம் ஈவிரக்கமின்றி கொல்லுகின்றது. தம் கொலைவெறியில் தப்பிக்க முடியாத வண்ணம், முட்கம்பிக்கு பின்னால் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து, வெளியில் உள்ள இந்த பாசிச உலகத்தை வெறித்துப் பார்க்கின்றனர். வெளியில் உள்ளவர்கள் தம் பாசிச புளுக்கத்தில் நின்று, அவர்களை வேடிக்கையாக பார்க்கின்றனர், பிச்சை போடுகின்றனர். இப்படி இதற்குள் மனிதாபிமான அரசியல், அரசியல் நாடகங்கள்;. இந்தச் சிறையின் கொடுமையில் இருந்து தப்பிச் சென்ற அப்பாவி மக்களை, சரணையும்படி பேரினவாதம் மிரட்டுகின்றது. அடைக்கலம் கொடுத்த உற்றார் உறவினர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கின்றது. இப்படி மக்களை புலியிடம் 'மீட்ட" கதை உள்ளது. 

 

எங்கு திரும்பினாலும் சொல்லொணாத மனித அவலம். பேரினவாதம் நடத்தும் இனவழிப்பில்,  இவை எல்லாம் அரங்கேறுகின்றது. எல்லா சுரண்டும் ஆளும் வர்க்கமும், தாம் ஒடுக்கவிரும்பும் எதிரியை வசைபாடுவது போல் தான் இங்கு நடக்கின்றது. ஆனால், இங்கு புலிகள் இதற்கு துணையாகவும் தூணாகவும் இருப்பது ஒரு முரண் தான். மற்றும்படி ஆளும் வர்க்க பேரினவாத ஒடுக்குமுறை என்பது, இங்கு வெளிப்படையான அரசியல் உண்மை. இதற்குள் புலியின் பாசிசம், காவிமயமாகி அதை மூடிமறைக்கின்றது.  

  

இதனால் இந்த வன்னியின் அவலத்தை சரியாக முன்வைக்க தவறி, இது பேரினவாதத்துக்கு உதவும் அரசியல் அம்சமாகியுள்ளது. இதை விலக்கி, பேரினவாதத்தின் கொடூரத்தை திரைகிழிக்க வேண்டியுள்ளது.

 

இன்று வன்னியில் கொல்லப்பட்ட மக்களில் 100 இல் 99 பேரை பேரினவாதம்; தான் கொன்றது. மிகுதி ஒருவனைத்தான் புலி கொன்றது. ஆனால் அவர்களை புலிகள் கொன்றதுபோல், கதைசொல்லுகின்றனர். புலிகள் தம் பாசிச அரசியல் வழியில், இவர்களை கொல்ல உதவினர்.  புலிகள் மக்களை சிறைவைத்ததாக குற்றம் சாட்டும் அரசு தான், அந்த மக்களை மீளவும் சிறைவைத்துள்ளது. சண்டை செய்வதற்காக புலிகள் தமிழ் குழந்தைகளை இழுத்து செல்வதாக கூறும் அதே அரசு, இன்று அவர்களை தனது இனவழிப்பு சித்திரவதை சிறைக்கூடங்களுக்கு இழுத்துச் செல்லுகின்றது.

 

புலிகளின் நடவடிக்கைகளை கடந்தகாலத்தில் மிகத் துல்லியமாக நாம் அம்பலப்படுத்தி வந்துள்ளோம். இதைவிட யாரும் இதை அரசியல் ரீதியாக செய்தது கிடையாது.  மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பாசிசத்தை எத்தனை பேர், இன்று அரசியல் நேர்மையுடன் அணுகுகின்றனர். அனைத்தையும் புலிக்கூடாக பார்க்கின்றனர் அல்லது அரசு சார்பு குழுக்கூடாகவே அணுகுகின்றனர். பிரதான எதிரியான அரசுக்கு ஊடாக பார்க்க வேண்டியதை, பலரும் புலிக்கு ஊடாகவே பார்க்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கு எற்பட்டுள்ள உண்மைத் துயரத்தை மறுத்து, கொலைகார அரசுக்கு சார்பாக மாற்றிவிடுகின்றனர். 

    

எதிரியை தப்பவிட்ட இலகற்ற விமர்சனங்கள்

 

இன்று புலிகள் தாமாகவே தம் சொந்தப் பாடையில் ஏறி, சங்கூதும் நாளுக்காக காத்திருக்கின்றனர். ஏகாதிபத்தியங்களை நக்கியாவது, ஒரு துரோகத்தை கவுரமாக அடைந்துவிட, இடைவிடாது முனைகின்றனர். ஓநாய் வருது, ஓநாய் வருது கதை போல், ஓநாய் வந்த போது, யாரும் இன்று இல்லை. ஒநாய்கள் குதறுகின்றது. புலிகளின் விளையாட்டை நம்பி, எந்த பிற்போக்குவாதியும் கூட இனி காலை விடத் தயாராகவில்லை. மெல்லச்சாவது தான், இனி அதன் வழி. இந்த நிலையில் அனைத்துத் தரப்பும் கோரும் உச்சபட்ச தீர்வாக வைக்கும் சரணடைவை, செய்து துரோகியாக பிழைப்பார்களா அல்லது போராடி மடிவார்களா என்பதை இன்னும் எம்மால் அறுதியிட்டு எதுவும் கூற முடியாதுள்ளது.

 

ஆனால் துரோகம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும், எப்படியும் பழையபடி மீண்டு விடுவார்கள் என் அங்கலாய்ப்பும், புலிகளைச் சேர்ந்தவர்கள் முன்னுள்ளது. மறுபக்கத்தில் அவநம்பிக்கை, இனி எல்லாம் முடிந்துவிட்டது என்ற உண்மை, அவர்கள் முன் உறைக்க ஆரம்பித்துள்ளது.

 

இந்த அரசியல் அதிர்வு, சிந்தனை அதிர்வு, தடுக்கி வீழ்கின்ற அரசியல் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதேநேரம் இன்று அவர்களின் எதிர்த்தரப்பு தான், அவர்களுக்கு மறுபக்கத்தை அதாவது துரோகத்தையும் போராட்டத்தையும் கூட கற்றுக்கொடுக்கின்றது. எதிரி என்ன சொல்லுகின்றான் என்ற கூர்ந்த தேடுதலும், பதிலளிக்க முடியாத புலிப் பாசிச நடத்தைகள் சார்ந்த புலியின் கையாலாகாத்தனமும், அரசின் பின் மெதுவாக அவர்களை கொண்டு செல்லுகின்றது அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கவைக்கின்றது.

 

இன்று புலிகள் சொல்லும் உண்மைகளைக் கூட, அவன் நம்ப மறுக்கின்ற அரசியல் அவலநிலை. எது உண்மை?, எது பொய்? என்ற கேள்விக்கு, அவர்கள் விடை காணமுடியாத அவலநிலை. இந்த நிலைக்கு, அவர்களை புலிகள் கொண்டு வந்துள்ளனர். கடந்த காலத்தில் நடந்த யுத்தத்தின் தொடர்ச்சியான தோல்விப் போக்கை புலிகள் மறுத்து வந்த நிலையில், அரசு அதை சரியாக சொன்ன நிலையும், இன்று அரசு சொல்வது மட்டும் சரி என்ற மயக்கம் புலிக்குள் ஆழமாக உருவாகியுள்ளது. இந்த மாறும் அரசியல் எதார்த்தத்தை, புரிந்துகொள்ள முடியாத நிலையில் நாம். 

 

நாம் இந்த இடத்தில் இதை புரிந்து அவர்களை வென்றெடுத்தல் என்பது, மிக முக்கியமான ஆனால் நுட்பமான பணி. எதிரியை தப்பவிட்டு இலக்கற்ற விமர்சனத்துக்கு பதில், எதிரியை நோக்கி எமது உறுதியான போராட்டத்தை இக் காலகட்டத்தில் மிகத் துல்லியமாக நடத்தவேண்டும். இதன் ஊடாக எமது எதிரியையும், அவனின் எதிரியையும், அம்பலப்படுத்தும் அரசியலை மிக நுட்பமாக வைப்பது அவசியம். அந்த அரசியல் பணியை, என்றும் புலிகள் செய்தது கிடையாது.

 

அதேநேரம் புலிகளின் தவறுகளையும், அவர்களின் பாசிச அரசியல் விளைவுகளையும் விளங்க வேண்டும். மிக நெருங்கிச் சென்று வென்றெடுக்கும் அரசியல் அணுகுமுறை, முதன்மையானதும் அவசியமானதுமாகும். அவனின் எதிரி, எமது எதிரியாகவும், ஏன் எம் வர்க்கத்தின் எதிரியாகவும் இருப்பதால்;, எதிரியை தோலுரித்துக் துல்லியமாக காட்டவேண்டும். இதுவே முதன்மையான அவசியமான, அவசரமான, உடனடி அரசியல் பணியாகும். 

 

கடந்த 30 ஆண்டுகளாக உருப்போட்ட ஒன்றை, எடுத்த எடுப்பில் விளக்கி விட முடியாது. முள்ளில் சிக்கிய சேலையை மெதுவாகத்தான் கழற்ற வேண்டும். எதிரியை அம்பலம் செய்து, எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் விட்ட அரசியல் தவறை விளக்க வேண்டும். புலிப் பாசிசத்தை அம்பலம் செய்தும், தேசியம் பற்றிய புலி மாயையையும், தவறையும் நட்புடன் அணுகி விளக்க வேண்டும். ஒற்றைப்பரிணாம அணுகுமுறை, எல்லாவற்றையும் புலியாக பார்த்தல் தவறு. பிரித்தறிய தெரிந்திருக்க வேண்டும். இது பாசிட்டுகளுக்கும், அரசியல் தத்துவவாதிகளுக்கும் பொருந்தாது. 

 

இன்று புலிப் போராட்டம் கேள்விகளாகவும், மனச் சிதைவுகளாகவும் மாறிவரும் நிலையில்,  அரசுக்கு எதிரான வன்மம் மிக்க எதிர்ப்பை, சரியான புரட்சிக்கு வழிநடத்திச் செல்வது அவசியம்;. இதற்கு பக்குவமான அணுகுமுறையும், எதிரியை துல்லியமாகவும் கடுமையாகவும் அம்பலப்படுத்தி அணுக வேண்டும்.

 

சீண்டுவதற்கு பதில், உரையாடலை நடத்த வேண்டியுள்ளது. மறுபக்கத்தில் எதிரியை இனம் காட்டுவதும், எதிரியுடன் கூடி கைக்கூலிகளை அம்பலம் செய்வதும், சந்தர்ப்பவாத நிலை எடுத்து அங்குமிங்கும் மேய்பவர்களையும் இனம்காட்டி அம்பலப்படுத்தி போராட வேண்டியுள்ளது. நாம் இதை மேதின அறைகூவலாக விடுக்கின்றோம்.

 

பி.இரயாகரன்
01.05.2009