மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

 

புலியல்லாத அரசியல் தளம் பேரினவாதத்தின் பிரச்சார அமைப்பாகிவிட்டது. மக்களுக்காக யாருமில்லை. பேரினவாதம் தான் மக்களை காப்பாற்றுவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

 

இதற்கு எதிரான போராட்டம் என்பது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எம்மைச் சுற்றியுள்ள அரசியல் ரீதியான நண்பர்களுடன் கடுமையான முரண்பாட்டைக் கடக்காமல், இந்த அரசியல் பணியை நாம் முன்னெடுக்கவில்லை. 30 வருட அரசியல் நட்புகள் கூட, இன்று எம்மைச்சுற்றிய அரசியல் நிகழ்வுகளால் அதிருகின்றது. கோபம், பகை, முரண்பாடு, நட்பு என்று எம் உணர்வுகளும், உணர்ச்சிகளும் இன்றி நாம் பயணிக்கவில்லை. 

 

அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் மக்களைச் சார்ந்து முன்வைக்கும் போராட்டப் பணி, பல்வேறு கடினமான சிரமங்கள் ஊடாக முன்வைக்க வேண்டியுள்ளது.

 

இன்று இலங்கையில் ஒரு இனவழிப்பு நடக்கின்றது. ஒரு இனச் சுத்திகரிப்பு நடக்கின்றது. இனக் களையெடுப்பு நடக்கின்றது. இந்த விடையம் எதுவும் நடவாத மாதிரி, இன்று பலர் நடந்து கொள்ள முனைகின்றனர். இதையே ஊடகங்களும் காட்ட முனைகின்றது.

 

எல்லாம் புலி, புலியால் வந்த வினையென்று காட்டி, பேரினவாதத்தின் பின் நிற்க முனைகின்றனர். இலங்கையில் பேரினவாதம் நிலவவில்லை, பேரினவாதம் படுகொலை செய்யவில்லை என்ற வரலாற்று இருட்டடிப்பு ஊடாக அனைத்தையும் நியாயப்படுத்த முனைகின்றனர்.

 

வரலாற்று வெற்றிடத்தில் தமிழினம். நடந்த வரலாற்றை தெரிந்து கொள்ளமுடியாத நிலையில்,   நடக்கின்ற கொடூரத்தை குறுக்கிப் பார்க்கின்ற மனித துயரம்.

 

ஆற்றாமையும், துயரமும் ஒரு இனத்தின் அவலமாகி வருகின்றது. பேரினவாதம் கொட்டமடிக்கின்றது. இனவொடுக்குமுறையோ இன்று உச்சத்தில் நிற்கின்றது. புலிகள் தான் பிரச்சனை என்றவர்கள், இன்று பேரினவாதத்தின் தொப்புள் கொடியாகி நஞ்சை தன்  இனத்துக்கு எதிராக வார்க்கின்றனர்.

 

இதற்கு எதிரான எமது போராட்டம் என்பது கடினமாகி வருகின்றது. ஒருபுறம் அரசியல் திரிபுகள். மறுபக்கத்தில் எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. எல்லாப் பொறுக்கிகளும், போலிகளும் சொந்தமுகத்துடன் வெளி வருகின்றனர்.

 

இதை எதிர்த்து நடத்தும் போராட்டம், ஒன்றை அழுத்தினால மறுபக்கம் அதை கொண்டு எம்மை வெட்ட முனைகின்றது. நாள் தோறும் இதை எழுதும் நாம், அனைத்தையும் ஒரு கட்டுரையில் கொண்டு வந்துவிட முடியாது. எமது போராட்டத்தை, எழுத்தை முழுத் தொடர்ச்சியில் பார்க்க வேண்டும்.

 

இதை விடுத்து ஒரு சொல்லில், ஒரு வரியில், ஒரு கட்டுரையில் பார்த்தால், இது அவர்களிள் சொந்த குறுகிய அரசியலுக்குள் திரிந்து குறுகி விடுகின்றது. அத்துடன் எம் கட்டுரைகளை ஒடி மேய்பவர்கள், இடைக்கிடை வாசிப்பவர்கள், ஒரு கட்டுரையை வாசித்து விட்டு, கருத்து கூறுபவர்கள் எல்லாம், அரசியலைக் கைவிட்டு புலம்பத்தான் முடிகின்றது.

 

அத்துடன் நிலைமையை பற்றி திடீரென தடலாக எழுதும், சந்தர்ப்பவாத அரசியல் பித்தலாட்டம் நிரம்பிய உலகத்தில் நாம் நிற்கின்றோம். பேரினவாதம் எம்மை சுற்றி கூச்சல் போட, எம்மினத்தின் எதிர்காலம் இன்று ஒரு புதிய எதிர்ப்புரட்சியால் கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

 

பி.இரயாகரன்
22.04.2009