எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

 

தாம் விரும்பும் இந்த படுகொலைகளை உலகறிய வைக்கவேண்டும் என்பதே, இன்று புலியின் இலட்சியம். இதை மூடிமறைக்க வேண்டும் என்பது, பேரினவாதத்தின் இலட்சியம். இந்த எல்லைக்குள் தான் இவர்களின் தர்மம், தார்மீகம், மனிதவுரிமை என்று எல்லாம். இதை மூடிமறைக்கவே, இவர்கள் மக்கள் என்கின்றனர்.

 

இப்படி மக்கள் நலனுக்காகத்தான் அனைத்தும் என்று கூறிக்கொண்டு, மக்களை கொன்று குவிக்கவே இருதரப்பும் தயாராகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், தாமே உருவாக்கிய பாதுகாப்பு பிரதேசத்தில் வைத்து, மக்களை கொன்று குவிக்க முனைவதுதான். அரசும் சரி புலியும் சரி இதற்கு பின்நிற்கப் போவதில்லை என்ற உண்மைதான், இன்று பலரும் உணராதுள்ள விடையம்.

 

யுத்த சூனிய பிரதேசத்தை அறிவித்துவிட்டு, குண்டுகளை போட்டு அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாகவே இதற்குள் அழைத்துச் சென்றனர். இன்று இதற்குள் வைத்து மக்களை படுகொலை செய்ய தயாராகின்றனர். தம் வர்க்க கண்ணோட்டத்தில் கொண்டுள்ள மனித விரோத வக்கிரத்துடன், மக்களை கொலை செய்யத் தயராகின்றனர்.

 

இதன் பின்னணியில் மக்களில் இருந்து அன்னியமான புலிகள், இந்த மக்களுக்குள் பதுங்குகின்றனர். மறுபுறம் பேரினவாத அரசு தன் இனவழிப்புடன் கூடிய வேள்வியை இதற்குள் தொடங்கத் தயாராகின்றது.

 

இன்றோ, நாளையோ நாளை மறுநாளோ, 50000 அப்பாவி மக்களை கொன்றாவது புலி தன்னை பாதுகாக்கவும், மக்களை கொன்று புலியை அழிக்கவும் அரசும் தயாராகிவிட்டது. இதற்கு பின்னால்தான் அனைத்து அரசியல் ஆட்டமும், அரசியல் கூத்தும் அரங்கேறுகின்றது.

 

இந்த மக்களைப் பற்றி நாம் மட்டும் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால் எதுவும் செய்யமுடியாத நிலை. இந்த உண்மையை மிகச் சிறுபான்மையினருக்கு முன்னால் எடுத்துக் காட்ட மட்டும் முனைகின்றோம். இது எங்கள் பரிதாபகரமான நிலை.

 

இதுவரை காலமும் அவர்கள் போட்ட மக்கள் வேஷங்கள் நாடகங்கள் எல்லாம் களைந்த நிலையில், நிர்வாணமாகி கொலை வெறியுடன் வீதியில் நிற்கின்றனர். கடந்த 30 வருடத்தில் அங்காங்கே ஆடிய கொலைவெறி ஆட்டங்கள் எல்லாம், இன்று ஒன்றாக உருவேறி நிற்கின்றது. காட்டுமிராண்டிகள் நிலையில் மக்களைப் படுகொலை செய்வதையே,  அரசியலாக்கி நிற்கின்றனர். இப்படி புலியை பாதுகாக்கவும், புலியை பலியெடுக்கவும், மக்களை பலிகொடுக்கவும் புலி-புலியெதிர்ப்பு அரசியல் முனைப்புடன் இயங்குகின்றது. சூதும், சதியும், மோசடிகள்  மூலமும், இதை தயார் செய்கின்றனர்.  

 

இவர்கள் ஆயிரம் தரம் தம் வாயால் பாதுகாப்பு பிரதேசம் என்று சொன்ன பகுதிக்குள், இந்த படுகொலைகள் அரங்கேறுகின்றது, அரங்கேறவுள்ளது. அரசு மக்களை புலிகளாக்கி கொல்லுகின்றது. புலி இதில் இருந்து தப்பிப்போக முனையும் மக்களை கொல்லுகின்றது. இவை எல்லாம் யுத்த சூனியப் பிரதேசத்தில், இவர்கள் உருவாக்கிய பாதுகாப்பு பிரதேசத்தில் தான் அரங்கேறுகின்றது. அரசு மக்களை இலக்கின்றி கொல்லுகின்றது. புலி இதற்குள் பதுங்கிக் கிடந்தபடி மக்கள் மேல் பாய்கின்றது. இப்போதைக்கு இதுதான் வித்தியாசம்.

 

ஆனால் மக்கள் ஆயிரம் ஆயிரமாக படுகொலைக்குள்ளாகி இறப்பது என்பது நிச்சயமான ஒன்று. இதுவே இன்றைய புலி-புலியெதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரல்.

 

நாங்கள் பலமுறை கோரியது போல், புலிகள் மக்களை விடுவிக்கப் போவதில்லை. அரசு தன் ஆக்கிரமிப்பையும், அதன் அடிப்படையிலான யுத்தத்தையும் நிறுத்தப்போவதில்லை. மக்களி;ன் மரணம் மேல் தான், அவரவர் தர்க்கங்கள் கருத்துகள் போராட்டங்கள் என எல்லாம் அரங்கேறுகின்றது. புலியைப் பாதுகாத்தல் - புலியை அழித்தல் என்ற எல்லைக்குள் பரப்புரை, போராட்டங்கள், இராஜதந்தர முயற்சிகளே ஓழிய, மக்களை பாதுகாத்தல் என்ற எல்லைக்குள் யாரும் இதற்காக முனையவில்லை.   

 

ஏகாதிபத்தியம் புலியிடம் அரசியல் விபச்சாரத்தையும், அரசியல் துரோகத்தையும், மக்களை மீட்கும் திட்டத்தில் தன் பங்குக்கு முன் மொழிகின்றது. புலியிடம் ஆயுதத்தை கீழே வை என்கின்றனர். அரசியலை மறைத்து வைத்துக்கொண்டு மனிதாபிமான அரசியல் பேசும் சிலர், ஆயுதத்தை கீழே போட்டு புலிகளை சரணடையக் கோருகின்றனர். அரசோ மக்களை விடுவித்துவிட்டு சண்டைக்கு வா என்கின்றது.

 

இப்படி புலியின் பலி அரசியலில் இருந்து, அரசின் இனவழிப்பு அரசியலில் இருந்தும், மக்களை மீட்கும் அரசியல்.

 

ஆனால் புலிகள் மக்களை தம் பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இதன் மூலம் பலி அரசியலைத் செய்யத் தயாராகவே உள்ளனர். இதற்குப் பதிலாக மக்களை பாதுகாக்க விரும்பின், யுத்தத்தை நிறுத்து என்கின்றது புலி.

 

இப்படி மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்ற உலகம் தளுவிய மனித வேஷங்கள், இன்று மக்களையே பலி கேட்கின்றது. யார் யாரை இதற்காக குற்றம்சாட்டுவது என்று அலைகின்றது.

 

நாங்கள் இந்த நெருக்கடியில் இருந்து உடனடியாக மீள, சில அரசியல் கோசத்தை முன்வைத்து வந்தோம்.

 

1. அரசிடம், யுத்தத்தை நிறுத்து என்றோம்!


2. புலியிடம், மக்களையும் யுத்தம் செய்ய விரும்பாத புலிகளையும்; விடுவி என்றோம்! புலிகள் தம் சொந்த வழியில் மீளக் கோரினோம்!!


3. புலிகளிடம், தமது தவறுகளுக்கு எல்லாம் சுய விமர்சனத்தைக் கோரினோம்!


4. சரணடைவுக்கும், துரோகத்துக்கும் பதில் போராடும்படியும், போராடி மடியும் படி கோரினோம்;!  


5. யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவும் கோரினோம்! 

 

இதை நாம் மட்டும் தனித்துவமாக வைக்க முடிந்தது. ஆனால் மாற்ற முடியவில்லை. இனவாத சூழலுக்குள் இவை இன்று தனிமைப்பட்டு நிற்கின்றது. 

கடந்த 60 ஆண்டுகளாக இனப்பிரச்சனையை தீர்க்காத பேரினவாத அரசு, அதன் அரசியல் விளைவை இன்று இன அழிப்பாக நடத்திவருகின்றது. அது கூர்மையாகி இன்று கூட்டுப் படுகொலையை நடத்தவும், தூண்டவும் தயாராகி வருகின்றது.

 

மக்களை இந்த பலி-பலியெடுப்பு அரசியலில் இருந்து விடுவித்தல் என்ற அரசியல் நிலைப்பாடு, மிக முதன்மையான ஒன்று. இன்று கூர்மையாகியுள்ள இந்த நெருக்கடி, இன்று முதன்மையான அரசியல் விடையமாகி நிற்கின்றது. அரசு-புலி என இரண்டு தரப்பும், இதை அரங்கேற்றுவதில் விடாப்படியாகவே நிற்கின்றனர். இதற்காக அரசையும்-புலியையும் ஆதரிக்கும் கூட்டம், இந்தப் படுகொலைக்கு உடந்தையாக நிற்பது வெளிப்படையாகியுள்ளது. இனி இதற்குள் யாரும் வேஷம் போடமுடியாதுள்ளது. பாசிசமாகிப் போன 'தேசியம்-ஜனநாயகம்" படுகொலை அரசியலாக மாறி, மக்களை பலி எடுக்கவும் பலிகொடுக்கவும் அணிதிரண்டு நிற்கின்றது. இதுதான் இன்றைய எதார்த்தம். இதை நாம் இன்று சொல்ல முடிகின்றது, மாற்ற முடியாது.

 

பி.இரயாகரன்
12.04.2009