1987ம் ஆண்டு பங்குனி மாதம் 28ம் திகதி மலை 6.30 மணியளவில் தான் தீபன் எனக்கு அறிமுகமானான். என் காதுக்குள் திடீரென துப்பாக்கியை வைத்தவன், என்னை ஒரு காருக்குள் திணித்து கடத்த உதவினான்.

 

அவன் கேட்ட உதவியைச் செய்த போதுதான், எனக்கு இந்த நிகழ்வு நடத்தது. இது நடக்க முன், நான் நின்றிருந்த வீட்டின் முன், என்னை கடத்துவதற்காக அருகில் இருந்த ஓரு மோட்டார் சைக்கிள் திருத்தும் இடத்தில், பழுதடைந்த ஓரு மோட்டார் சைக்கிளை திருத்தும் வேஷம் போட்டுக்கொண்டு திரிந்தான். நான் அடிக்கடி அவனை நான் கண்ட போது, என்னைக் கடத்தத்தான் நிற்கின்றான் என்று சந்தேகிக்கவில்லை.

 

மாலையாகிவிட்ட நிலையில் தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால் மோதல் தொடங்கியிருந்தது. அதாவது எனது சொந்த ஊரான வறுத்தலைவிளானிலேயே மோதல் நடைபெற்றது. துப்பாக்கி வேட்டுகளும் இடையிடையேயான "செல்"லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலைகொண்டிருந்த இடத்துக்கும், மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது. இரவு தங்கி தலைமறைவாகும் இடத்தை தெரிவு செய்தபடி, அங்கு தொலைக்காட்சியை பார்க்கும் எண்ணத்துடன் வீதியை நோக்கி; சைக்கிளை நகர்த்தினேன். அப்போது காலை முதல் மோட்டார் சைக்கிளை தள்ளி இயக்க முனைந்த நபர், எனக்கு முன்பாக வீதியில் நடந்து செல்வதைக் கண்டேன். அவர் என்னிடம் தானும் எனது சைக்கிளில் தெல்லிப்பழைச் சந்திவரை வரப்போவதாக கோரினார். நான் தெல்லிப்பழைச் சந்திக்குச் செல்லவில்லை என்று கூறியபோது, அவர் கொஞ்சத் தூரம் கொண்டுசென்று விடும்படி கெஞ்சினார். அந்த இடத்தில் காலை தொடக்கம் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளி இயக்க முடியாத பரிதாபத்தை கருத்தில் கொண்டு, சைக்கிளில் ஏற்றிக் கொண்டேன். நான் பரிதாபப்பட்ட அதேநேரம் அவரும் அப்படியே கோரினார். ஏற்றும்போது தெல்லிப்பழைச் சந்தி வரை அல்ல, நான் செல்லும் இடம் வரை கொண்டு சென்று விடுவதாகவே வாக்குக் கொடுத்தேன்; அந்த இடம் நான் அவரை ஏற்றிய இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்தது. சைக்கிளில் ஏறியவர் இடுப்பில் இருந்த ஆயுதம் என் கையில் இடிபடுவதை உணர்ந்தேன். அப்போது தான் அவரின் அகன்ற பெரிய சேட்டை அவதானித்தேன். ஆயுதங்களை இடுப்பில் மறைக்க அச் சேட்டை பயன்படுத்தியதை அவதானித்தேன். இது விசேடமாக புலிகளுக்குரிய தனியான உடுப்பாக அன்று இருந்தது. அப்போது நான் அவரிடம் அவரின் துப்பாக்கி எனது கையில் இடிபடுவதை வெளிக்காட்டாது, நீங்கள் புலியா? என வினாவினேன். அவர் இல்லை என்றார். அப்போது நான் அவரிடம் அடுத்த கேள்வியாக நீங்கள் வேறு இயக்கமா? என மீண்டும் கேட்டேன். அதற்கும் அவர் இல்லை என்றார். அன்று புலிகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்களுடன் திரிவதில்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே நேரம் எமக்கிடையில் மௌனம் மொழியாகியது.

 

நான் திரும்ப வேண்டிய இடம் வந்தவுடன் அவரிடம் இறங்கும்படி கோரினேன். அவர் தெல்லிப்பழைச் சந்தியில் விடும்படி மீண்டும் கெஞ்சினார். இராணுவத்துடன் சண்டை நடப்பதால் தான் போக வேண்டிய இடத்துக்கு போக்குவரத்து இல்லாது போய்விடுமாதலால், தன்னை விரைவாக சந்தியில் கொண்டு சென்று விடும்படி கெஞ்சினார். இந்த நிலையில் அவரை நான் சந்தி வரை அழைத்துச் செல்லத் தொடங்கினேன். கொஞ்ச தூரம் (நான் ஏற்றிய இடத்தில் இருந்த 200 மீற்றர் தூரத்தில்) சென்றவுடன், திடீரென வந்த ஒரு ஏ-40 பச்சை நிறக் கார் சட்டென்று திரும்பி சைக்கிள் முன்பாக நின்றது. நான் விபத்தை தடுக்க சைக்கிளின் பிரேக்கை அழுத்தி நிறுத்தினேன். என்னுடன் சைக்கிளில் வந்தவர், தனது துப்பாக்கியை எடுத்து எனது காதில் வைத்தார். ஒரு கணம் தான், அடுத்த கணம் வலுக்கட்டாயமாக என்னை காரில் திணித்தனர்.

 

பின் என்னை அவர்கள் தமது வதைமுகாமுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு நிர்வாணமாக்கியது முதல் தாக்குதல் வரை, இந்தத் தீபனின் பங்கு தனித்துவமானது. இந்த புலி வதைமுகாம் பற்றிய என் கதை, தனி நூலாக வெளிவரவுள்ளது. ஒரு தவறான வகையில் ஒரு மனிதவிரோதப் போராட்டத்தை நடத்திய போது, இன்று அவன் கொல்லப்பட்டுள்ளான். கடந்த காலத்தில் நான் இவனால் அனுபவித்த சித்திரவதைகளை, இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.

 

பி.இரயாகரன்
05.04.2009