அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான்,  புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.  

 

  

இதற்காக 50000 மக்களை படுகொலை செய்தாலும் கூட, அதை எதிர்ப்தரப்பு மீது குற்றம்சாட்டி விடத் தயாராகவே புலி-புலியெதிர்ப்பு உள்ளனர். மக்களை படுகொலை செய்வதன் மூலம் தான் தமக்கு தீர்வு உண்டு என்று அடித்துச் சொல்லும் பிரச்சாரங்கள், எம்மைச் சுற்றி சூடுபறக்க நடக்கின்றது. தமிழ் மக்கள் கொல்லப்படுவது என்பதுதான், புலி-புலியெதிர்ப்பு தரப்பின் அரசியல்;. ஆகவே நாளை தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். புலி-புலியெதிர்ப்பு அரசியல் இதை நன்கு தெரிந்துகொண்டே, இந்த வழியை ஆதரிக்கின்றனர்.

 

இந்த துயரத்தை அனுபவிக்கும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்ற கவலை இங்கு யாருக்கும் கிடையாது. அவர்கள் தம் சோகத்தை (இதை கிளிக்செய்து பார்க்கவும்)

{auto displayheight="0" height="60" width="500" plthumbs="true" shuffle="true" repeat="false" pbgcolor="#000000" pfgcolor="#cccccc", phicolor="#0099ff" showstop="true"}bbcPeopleInterview.xml{/auto}

சொல்லிப் புலம்புவதை, யார் தான், எந்த மனிதன் தான், ஒரு மனிதனாகக் செவிமடுக்கின்றான். வன்னியில் இருந்து இந்த அவலத்தைச் சொல்ல, அங்கு புலிகள் அனுமதிப்பதில்லை. அங்கிருந்து தப்பி வந்த மக்கள், அதைச் சொல்லி புலம்பக் கூட முடியாத வகையில் திறந்தவெளியில் மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

 

இரண்டு பாசிட்டுகளும் மக்களை நடத்திய, நடத்துகின்ற கேவலமான ஓடுக்குமுறையையும், படுகொலை அரசியலையும், கண்ணை மூடிக்கொண்டு இதில் ஒன்றை ஆதரிக்கின்ற தமிழ் பாசிச உலகத்தில் நாம் வாழ்கின்றோம். 

 

இவர்கள் சொல்வது என்ன? தமிழ்மக்களை கொல்வதன் மூலமே, 'தேசியத்தை" பாதுகாக்கவும், 'ஜனநாயகத்தை" மீட்கவும் முடியுமென்கின்றனர். இப்படிக் கூறிக் கொண்டுதான்,  மக்கள் கொல்லப்படுவதையும், கொல்வதையும் நியாயப்படுத்துகின்றனர் அல்லது எதிர்தரப்புக்கு எதிராக தாம் கொல்லும் சொந்த அரசியலுக்காக அதை அம்பலப்படுத்துகின்றனர்.

 

மக்களைக் கொன்று விடுதலைப் புலிகளைப் பாதுகாத்தல், இதுவே இன்று புலி அரசியல்;. தமிழ்மக்களை கொன்று புலியை அழித்தல், இதுவே இன்று பேரினவாத- புலியெதிர்ப்பு அரசியல்;. இதை புலிகளும், புலியெதிர்ப்பும் தத்தம் தரப்பின் நியாயப்பாட்டை முன்வைத்து, மக்களைக் கொல்வதை நியாயப்படுத்துகின்றனர் அல்லது கொல்லப்படுவதை எதிர்க்கின்றனர்.

 

50000 மக்கள் கொல்லப்பட்டாலும் கூட பரவாயில்லை, புலியைப் பாதுகாக்க வேண்டும் என்பது இன்று புலியின் அரசியல். இன்று இதை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி தர்க்கிக்கின்றனர். மறுதளத்தில் இதைச் செய்தாவது புலியை அழி என்று, புலியழிப்பு 'ஜனநாயகம்" புலியெதிர்ப்புடன் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதும், கொல்லப்பட வேண்டும் என்பதும், இதில் ஈடுபட்டுள்ள அரசு - புலி அரசியலாகும்;. இதற்குள்தான், இவர்களின் பக்தகோடிகள் ஆலவட்டம் பிடிப்;பது முதல் கட்டுரைகளை எழுதுவது வரை நீடிக்கின்றது. புலி-புலியெதிர்ப்பு அரசியல்தளம், இப்படி இதற்குள் மனித பேரவலத்தை விதைத்தபடி, அதை அறுவடை செய்தபடி இயங்குகின்றது. 

 

இந்த மக்கள்விரோத பாசிச நிலையெடுக்க காரணம் என்ன? இது தனிமனிதர்களின் தேர்வல்ல. மாறாக இதை செய்ய, அவர்கள் கொண்டுள்ள அரசியல் தான் காரணமாகும். அதுவென்ன அரசியல்;? அது சுரண்டும் வர்க்க அரசியல். இதுதான் இதற்கான அரசியல் அடிப்படையாகும். எம்மையும் அவர்களையும் வேறுபடுத்துவது, இந்த அரசியல் தான். வெளிப்படையாக தத்துவார்த்த ரீதியாக சொன்னால், சுரண்டும் வர்க்க கோட்பாடுகள் தத்தம் நிலையில் நின்று இதை ஆதரிக்கிறது. சுரண்டலுக்கு எதிரான வர்க்கக் கோட்பாடுகள் இதை எதிர்க்கின்றது. யாரெல்லாம் மனிதனை சுரண்டி வாழ்வதை ஆதரிக்கின்றனரோ, அவர்கள் மனிதர்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.

 

ஒரு சுரண்டும் வர்க்கம், மக்களை நேசிப்பதில்லை. மக்களை சுரண்டி வாழ்வதுதான், அதன் அடிப்படைத் தத்துவம்;. இது இயல்பில் மக்களை தன் நலனுக்கு ஏற்ப, சுரண்டுகின்றது பலியிடுகின்றது. அதுதான் இன்று அரசு-புலி என்ற, இருதளத்திலும் நடக்கின்றது.

 

சுரண்டலை ஆதரிக்கின்ற வர்க்கங்கள் தம் சொந்த எதிரிக்கு எதிராக மக்கள் என்பது, மக்களை மேலும் ஒடுக்குவதற்கே. இதுதான் அதன் சொந்த வர்க்க இயல்பாகும். மக்களைப் பிளந்து மோதவிடுவது முதல் அவர்களை ஒடுக்குவது வரை, அதன் உள்ளார்ந்த சுரண்டும் வர்க்கத்தின் விதியாகும்;. இதற்குள்தான் தமிழ் மக்கள், சிக்கித் தவிக்கின்றனர்.

 

புலித் 'தேசியம்", புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசியவர்கள் அனைவரும், சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதியாகவே உள்ளனர். இதை அவர்கள் மூடிமறைக்கவே தேசியம், முற்போக்கு, ஜனநாயகம், இடதுசாரியம் முதல் தலித்தியம் வரை, இவர்களுக்கு உதவுகின்றது. தாம் ஒரு சுரண்டும் வர்க்கமாக இருப்பதை மூடிமறைக்க, மக்களை வெறுக்கும் தம் சொந்த வர்க்க அரசியல் நிலைப்பாடை மூடிமறைக்கவும், மக்களை ஏமாற்ற அரசியல் வேஷம் போட முனைகின்றனர்.

 

மக்களுக்காக போராடுதல், மக்கள் அரசியல் எல்லாம், 'நடைமுறைப்படுத்த இயலாது" என்று கூறிக்கொண்டு, படுபிற்போக்கான தம் சுரண்டும் பாசிச அரசியலை தீர்வாக முன்வைக்கின்றனர், ஆதரிக்கின்றனர். இதற்காகவே மக்கள் பலியிடப்படுகின்றனர். 'நடைமுறைச் சாத்தியமான" தாக இவர்கள் கருதி ஆதரிப்பதும், முன்வைக்கும் தீர்வுகளும் தான், இன்று மக்களை பலியிடும் அரசியல். தன் எதிரி மக்களைக் கொன்றால் மட்டும், குறுகிய எல்லையில் மனிதத்தைப் பற்றி ஒருதலைப்பட்சமாக புலம்பும் சுரண்டும் வர்க்க அரசியல். இதற்குள் தான், புலி-புலியெதிர்ப்பு எல்லாம்.  

 

மனித அவலத்தைக் கண்டிப்போர்

 

இவை அரசியலற்ற போலிக் கண்டனம். வர்க்க அரசியல் நிலைப்பாடின்றி, தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் கண்டனங்கள். தம் கடந்தகாலத்தை சுயவிமர்சனமின்றி இதை கண்டனம் செய்யும், அரசியல் இருப்பு சார்ந்த நடிப்பு வித்தைகள்.

 

இன்று இதைக் கண்டிப்பவர்கள், கடந்தகாலத்தில் என்ன செய்தார்கள்? இதைப் பற்றி மறுபரீசிலனையின்றி, சுயவிமர்சனமின்றி, விமர்சனமின்றி, கடந்தகாலத்தைப் பற்றிய சுய மதிப்பீடு இன்றி, இன்றைய நிலையை மட்டும் கண்டித்தல் என்பது, அரசியலில் போலியானது. இது சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக்கொண்டது.  

 

இதில் எந்த நேர்மையும் கிடையாது. போக்கிலித்தனம் தான், இதில் எஞ்சிக்கிடக்கின்றது. புலி-புலியெதிர்ப்பு மட்டுமல்ல, இதுவல்லாததாக காட்டிக்கொண்டு வாலை அங்குமிங்கும் நுழைத்தவர்கள் கூட, இந்த மனிதஅவலத்தைச் சொல்லி இன்று பிழைக்க முனைகின்றனர். மனிதஅவலத்தைச் சொல்லிப் பிழைத்த பழைய பெருச்சாளிகள் எல்லாம் கூடி, எந்தச் சுயவிமர்சனமுமின்றி, விமர்சனங்களுமின்றி கண்டித்து நாடகமாடுகின்றனர். இதில் கூடும் பெரும்பான்மையோ, அரசியல் சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்டு பிழைக்கத் தெரிந்த சுரண்டும் வர்க்கப் பிரதிநிதிகள்.

 

அரசியல் தெளிவும், தத்துவ அடிப்படை எதுவுமின்றி உளறும் இந்த கண்டனங்கள்.  இதன் மூலம் அவர்கள் தம் பிழைப்புவாதத்துடன் கூடிய, சுரண்டும் வர்க்க இருப்பு அரசியலை தக்கவைக்க முனைகின்றனர். இப்படி புலி-புலியெதிர்ப்பு மீதான அரசியல் கண்டனத்தை, நடைமுறை ரீதியாக வர்க்க அரசியல் வேலைத்திட்டத்திற்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர். உண்மையில் ஒடுக்கப்பட்ட எந்த வர்க்க அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும், இவர்கள் இயங்குவதில்லை. இதை எதிர்ப்பதன் மூலம், இயல்பில் புலி-புலியெதிர்ப்பு சுரண்டல் அரசியல் தளத்தை பாதுகாக்கின்றனர்.

 

ஒரு கூட்டத்தைக் கூட, மக்களை கொல்லும் பொது அரசியல் தளத்துக்கு எதிரான பொதுக் கோசத்தில், இவர்கள் இதைக் கூட்டுவது கிடையாது. இங்குதான் இவர்கள், வர்க்க அரசியலற்ற வெறும் கண்டனங்களைச் செய்கின்றனர். கண்டிப்பவர்கள் மிகக் கவனமாக, இந்த பிழைப்புவாத அரசியல் சோரத்தை கண்டிப்பது கிடையாது. இங்கு நட்பு தோழமை என்று, மக்களின் பிணங்களில் மேல் வர்க்கம் கடந்து அரசியல் மூலம் கூத்தாடுகின்றனர். இங்கு மனிதம், தீர்வு, மனிதாபிமானம், அமைதி, சமாதானம் என்ற தம் நடிப்பையும் நாடகத்தையும், வர்க்கம் கடத்த சுரண்டும் வர்க்க அரசியல் கூத்தாகவே நடத்துகின்றனர்.

 

இப்படி இவர்கள் சுரண்டும் வர்க்கத்துடன் கூடி நிற்கின்றனர். இப்படி இவர்கள் அத் தீமையை கண்டனம் செய்வது, அத்தீமையை அடியோடு வெறுப்பது, சமூகமாற்றத்துடன் கூடிய ஆக்கபூவமான கருத்தாக கட்டாயமாக இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது. வர்க்க அரசியல் அடிப்படையின்றி, அதற்கான அடிப்படையிலான செயற்பாடின்றி, கடந்தகாலத்தில் சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள், விமர்சனம் சுயவிமர்சனமின்றி மீண்டும் வேஷம் போடத்தான் முனைகின்றனர்.

 

மொத்தத்தில் நேர்மையான வர்க்க அரசியலை முன்வைத்து, ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுதல் என்பது, இங்கு மறுப்புக்கு உள்ளாகின்றது. இதுவே புலி-புலியெதிர்ப்பு தளத்தில் மட்டுமல்ல, மறுதளத்திலும் கூட அரங்கேறுகின்றது. புலி-புலியெதிர்ப்பு தளத்தில், மனித படுகொலையை எதிர்த்தரப்புக்கு எதிராக ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். மறுதளத்தில் இதை தம் இருப்பு சார்ந்த அடிப்படையில் இதைக் கண்டித்து, தம் சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்துடன் இதை அரங்கேறுகின்றனர். இதையெல்லாம் இனம் கண்டு, மக்கள் விடுதலைக்கான வர்க்க அடிப்படையில் போராட வேண்டியகாலமிது.  

 

பி.இரயாகரன்
05.04.2009