தேர்தல் நடப்பது ஒன்றே ஜனநாயகம் என்பதற்கு போதுமானது என்னும் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, கூடவே சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட அதன் வாசகங்களை உள்ளூர் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற மக்கள் உரிமையை

 நிலைநாட்டக்கூடிய கட்டுப்பாட்டு விதிகளையும் சேர்த்து. தேர்தல் என்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்பது திருமங்கலம் இடைத்தேர்தல் நிரூபித்துக்காட்டிவிட்டது. கையூட்டு வாங்குவது குற்றம் என்றிருந்த நிலை மாறி தெரியாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று மக்கள் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிப்படையாக அதுவும் ஒரு தொகுதி மக்கள் அனைவரையும் கூச்சமில்லாமல் பணத்துக்கு விலைபோகும் நிலைக்கு தள்ளிச்சென்றுவிட்டன ஓட்டுக்கட்சிகள். நல்ல பழக்கங்களை எல்லாம் பட்டினி போட்டுக்கொன்றுவிட்டு கறி விருந்து போட்டுக்கொண்டாட பொதுத்தேர்தல் வருகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட வாழும் உரிமையை பரித்துக்கொண்ட கும்பல் மக்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை வழங்க நாள் குறித்து விட்டன. இதுவரை வார்த்தைகளில் கொள்கை பேசிக்கொண்டிருந்த ஓட்டுக்கட்சிகள் இப்போது செயல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.

          நேற்றுவரை ராஜபக்சேவின் சகோதரியாய் இருந்து போர் என்றால் நான்குபேர் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று இலங்கை பிரச்சனையில் அருள் பாலித்த அம்மா இன்று இலங்கையில் தமிழர்கள் காக்கப்படவேண்டும் என்று உண்ணாவிரதமிருந்து தன் நடிப்புத்திறமையை காட்டியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அம்மாவின் இந்த கருணை வெளிப்பட்டிருக்குமா?

          சட்டசபை தீர்மானம், மனிதச்சங்கிலி, பதவிவிலகல் என்று உலகத்தமிழர்களின் தலைவன் போல் காட்டிவரும் கலைஞர், இலங்கையில் போரை நடத்துவது இந்தியாதான் என்று வெளிப்படையாக தெரிந்த பின்னரும் கடைசிவரை காங்கிரஸ் அரசை முட்டுக்கொடுத்து தாங்கி நிற்பதை விடமுடியாது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் நாற்காலியில். தமிழர்களைவிட பதவி முக்கியம் என்று அவருக்கு தெரிகிறது மக்களுக்கு….?

          மகனின் அமைச்சர் பதவி போய்விடக்கூடாது என்று இத்தாலி அம்மாவிடம் பம்மிக்கொண்டிருந்த மருத்துவர் போயஸ் அம்மாவிடம் அடைக்கலம் தேடப்போகிறார். இலங்கைப்பிரச்சனையில் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று கூறிக்கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதம் என்ற ஒரு நாடகம் போட்டதும் அங்கு ஓடிப்போகப்போகிறார். இதுவரை இலங்கை தமிழர்களைச் சொல்லிக் குதித்ததெல்லாம் அவரின் சொந்த நாடகம் என்பதை தேர்தல் நாடகம் வெளிச்சம் போட்டு விட்டது.

           அணுசக்தி உடன்பாடு கருவாகி உருவாகி பிறப்பதுவரை உறவு கொண்டிருந்துவிட்டு பிறக்கக்கூடாது பிறந்தால் உறவை முறிப்போம் என்று வெளியில் வந்து பாஜக காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சவடால் அடித்தனர் போலிகள். தேர்தல் முடிந்தவுடன் கிடைத்த எம்பிக்களை வைத்துக்கொண்டு தான் பிரதமராக முடியுமா என்று பார்ப்பார், முடியாவிட்டால் பாஜக வுடன் எம்பிவிடுவார் என்று பாமரனுக்கும் தெரிந்திருந்தாலும் தலா இரண்டு இடத்துக்காக அம்மாவுடன் நின்று தொகுதி பேசுகிறார்கள்.

           முதலில் தனித்தே போட்டி என்றார், தேர்தலை புறக்கணியுங்கள் என்றார், பிறகு நான் கை காண்பிக்கும் ஆட்களுக்கு ஓட்டுப்போடுவீர்களா என்று உருகினார், இப்போது மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்று எடுத்துவிடுகிறார் கேப்டன். இவர் கேட்ட பத்துத்தொகுதிகளையும் அம்மாவோ, கலைஞரோ த‌ரச்சம்மதித்திருந்தால் கடவுளும் மக்களும் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும்.

           இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்று சுற்றிச்சுற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு எங்கள் கூட்டணை ஆட்சிக்குவந்தால் இலங்கைப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு என்று பாயாசம் விற்கிறார் நாட்டாமை.

            கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தருபவர்களுக்குத்தான் முஸ்லீம் சமுதாயம் ஓட்டளிக்கும் என்று கூறிக்கொண்டிருந்துவிட்டு, ஆறு சீட்டு தந்தால் தான் ஓட்டு என்று கட்சி கட்டிக்கொண்டு வந்து கேட்கும் மதக்கட்சிகள்.

          கடவுளை நம்பினால் நல்லது நடக்கும் என்று குறைந்த பட்ச நம்பிக்கையாவது கடவுள் மீது பக்தனுக்கு இருக்கிறது இதைப்போன்ற எந்த நம்பிக்கையாவது தேர்தல் மீது மக்களுக்கு இருக்கிறதா? (மருதையன் பேட்டி ஆனந்த விகடன்) ஆனாலும் இங்கு தேர்தல் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. உரிய விலையில்லாமல் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை, விளை நிலங்களை பறித்துவிட்டு கிராமங்களை நகரங்களை நோக்கி விரட்டிவிடும் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், அனைத்துத்தரப்பு மக்களையும் வாழவிடாமல் சாகடிக்கும் உலகவங்கிக்கட்டளைகள், இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிபணத்தையே செலவு செய்யும் பொருளாதாரக்கொள்கை இவை எதாவது மாறுமா இந்தத்தேர்தலால்? மாறப்போவதுமில்லை மாற்றவும் மாட்டர்கள். ஆனாலும் மக்களுக்காகவே வாழ்கிறோம், மக்களுக்காகவே உழைக்கிறோம், மக்களுக்காகவே இறக்கவும் தயார் என்று புளித்துப்போன வசனங்களை பேசிக்கொண்டு கோரைப்பற்களை மறைப்பதற்க்கு ஒரு இளிப்பை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள். என்ன செய்வதாய் உத்தேசம்?

          தேய்ந்து போன துடைப்பங்களையும், பிய்ந்து போன செருப்புகளையும் உபயோகம் இல்லாதவை என்று வீசிவிடாதீர்கள். அருமையான மிகப்பொருத்தமான பயன்பாடு ஒன்று உண்டு அவைகளுக்கு.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருத்துப்படங்கள் வினவு தளத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது