அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

 

சமுதாய மாற்றம் ஒன்றுக்கான செயல் சிந்தனை நடைமுறை, இதற்கான உறுதியான போராட்டமே எதிர்காலத்தை வழிகாட்டும்;. இதையொட்டி எம்மிடம் எழுப்பிய சில கேள்விகளும், பதில்களும்.

 

1.'ஆய்வுகள், தீர்வுகள் சொல்லியாகிவிட்ட போதிலும் பல கருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலைதான் மிஞ்சியிருக்கின்றது? இவற்றை போக்குவதற்கான அணுகுமுறையை கண்டடைவது முக்கிய தேவையாக இருக்கின்றது. காரணம் மார்க்சீய லெனினிய சிந்தனையில் இருப்பவர்களுக்கும் அதில் படிப்பாற்றல் தேவை இவற்றில: முழுமை பெறாத ஊழியர்களுக்குமிடையிலான சிக்கலை தீர்ப்பதான நோக்கில் இருந்து முயற்சிக்கப்படுகின்றது."

 

இந்த வாதத்தில் 'ஆய்வுகள், தீர்வுகள்" அனைவரும் ஏற்கும் வகையில் சொல்லியாகி விடவில்லை. பலரும் ஏற்கும் வண்ணம் அவை இருந்தால், மோதும் நிலை உருவாகாது. கற்றல், விடையங்களை நுணுகிப்பார்த்தல் என்பது எமக்கு அன்னியமாகியுள்ளது. இருந்ததை வைத்து அரைப்பதால், நிலைமைகளின் மாற்றத்தை உள்வாங்குவதில் பல குழறுபடிகள் நிகழ்கின்றது. கற்றல், கற்றுக்கொடுத்தல் என்பது, கற்காமல் சாத்தியமில்லை. இது நிலைமைகளின் மாற்றத்தை உள்வாங்குவதிலும் தங்கியுள்ளது.  

 

இதில் உள்ள இரண்டாவது விடையம், இங்கு மோதல் என்பது, கருத்து தளத்திலல்ல. சமூதாயத்தை அவர்கள் பார்க்கும் வர்க்க கண்ணோட்டத்தில் அல்ல. சமுதாயத்தை தம் சொந்த இருப்பு சார்ந்த லும்பன் வர்க்க வாழ்வுக்குள், கருத்தைப் போட்டு உடைத்தல் தான். இது பழைய பெருசாளிகளுக்கு இடையில் தானே ஓழிய, சமூகத்தை நேசிக்க கற்றுக் கொண்டவர்களிடையே அல்ல.

 

 

'பலகருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலை" என்பது, தவறானது. அந்த பல கருத்து என்ன? அதற்கும் சமூகத்துக்குமான அரசியல் தொடர்பு என்ன? இங்கு பல கருத்து என்பது, கடந்தகால அரசியலற்ற செயல்பாட்டில் ஏற்பட்ட கதம்பமான சீரழிவின் அராஜகமான வர்க்க எச்சங்கள். இவர்களை திருத்த முடியாது. சரியான கருத்துக்கு கொண்டு வரவும் முடியாது. சமூகத்தை மாற்றுவதற்கு பதில், தம்மை நிலைநிறுத்தி வைத்திருக்கும் வண்ணம் உருவான சமூக விரோத ஒட்டுண்ணிகள்.

 

இவர்களை நோக்கி காலத்தையும் நேரத்தையும் செலவு செய்தால், அவை பொறுப்பற்றதனமாகும். சமூகத்தால் ஓழித்துக்கட்டப்பட வேண்டிய உதவாக்கரைகள். அவர்கள் வரலாறுகள், அப்படித்தான் இருந்துள்ளது.

 

இவர்களுக்கு வெளியில் சமூகத்தில் இருந்துதான், புதிதாக கற்றல் கற்றுக்கொடுத்தல் என்பது சாத்தியமானது. இன்று ஏற்படும் அரசியல் வெற்றிடத்தில், எம்மை கடந்து செல்லும் மனித அவலம் பல கேள்விகளை சமூகத்தில் உருவாக்கும். இதில் இருந்து புதிய புரட்சிகர தலைமுறை, தன் தேடுதலை மெதுவாகத் தொடங்கியுள்ளது. இதன் மேல் வழிகாட்ட வேண்டிய, பாரிய பொறுப்பு எம் மீதுள்ளது.

 

இந்த வகையில் அவர்கள் இன்று உடனடியாக அணுகுகின்ற சமகால அரசியல் நிகழ்ச்;சிகள் ஊடாக, புரட்சியை கற்றுக்கொடுத்தல் என்பதே உடனடியாக சாத்தியமானதும் பொருத்தமானதுமாகும். சமகால விடையங்கள் மீதான விமர்சனங்கள், தம் சமூக அறியாமையை போக்கிக்கொள்ளவும், அதை புதிதாக கற்றுக்கொள்ளவும் தூண்டுதலாக அமையும்.

 

பழைய பெருச்சாளிகளுக்கு உபதேசிப்பதற்கு பதில், அடித்தே கொல்ல வேண்டும். அதாவது அம்பலப்படுத்த வேண்டும். இரண்டு பணியும் ஓரே தளத்தில் அமைய வேண்டும். புதிய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கவும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், நாம் எம் கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.

 

மனித அவலத்தை அரசியலாக்கும் இன்றைய சூழல், பலரை தாம் சொந்த அனுபவத்தின் வாயிலாக கற்க வைத்துள்ளது. ஆனாலும் இவை அரசியல் மயமாகவில்லை. எதார்த்தம் மீதான தெளிவு, மக்களை வழி நடத்தும் வண்ணம் அதைக் கற்று அரசியல் மயமாகவில்லை. 

 

அதற்காக மார்க்சீய லெனினிய மாவோயிச சிந்தனை மெக்கானிக்காக, நடைமுறை விடையங்களுக்கு வெளியில் கற்றுக்கொடுக்க முடியாது. அது மனப்பாடம் செய்யும் பாடப் புத்தகமல்ல. நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற வாழ்வை புரிந்துகொள்ள உதவும் எல்லையில் இருந்துதான், மார்க்சீய லெனினிய மாவோவிய சிந்தனையை கற்றுக்கொள்ளமுடியும். இன்றைய நாளாந்த நிகழ்ச்சிகள் ஊடாக கற்றுக்கொடுக்க முனைவதன் மூலம், இதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்;. இதைக் கற்றுக் கொள்ளாத வரை, சமூகத்தை வழிநடத்த யாரும் இதற்கு வெளியில் இருக்கப்போவதில்லை.

 

2. 'இந்தச் சமூகத்;தில் இருக்கின்ற புதிய அணுகுமுறையைக் கண்டடைய ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிரியை எவ்வாறு இனம் கண்டு கொள்கின்றார்கள்? தனது எதிரியை இனம் கண்டு கொள்வதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறையினால் பெற்ற படிப்பினை அடிப்படையாகின்றது. சிலர் தமது எதிரியை சரியாக தத்துவரீதியாக இனம் காண்கின்றனர். தமது இலக்கை அடைவதற்காக பாதையை தெரிவு செய்கின்றனர். இவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மை அவ்வாறில்லை. எதிரி யார் என்பது பற்றிய தெளிவின்மை இலக்கில் தெளிவின்மை தவறான சித்தாந்தத்தில் அணிதிரள்வது என சமூகம்; எங்கும் இதுதான் நிலை இதனை பரீஸ் போராட்டத்தின் போதும் சரி முத்துக்குமாரன் எடுத்த முடிவுகள் கூட இந்தக் குறைபாடுகளினால் உருவாகியதுதான்."

 

இவை உண்மை. இதுதான் பொதுவான சமூக நிலையாக நீண்டகாலம் இருக்கும். வாழ்க்கையின் சொந்த அனுபவம் தான், பெரும்பான்மையான மக்களுக்கு எதார்த்தத்தை கற்றுக்கொடுக்கின்றது. சமூகத்தை தத்துவார்த்த ரீதியாக ஒருங்கிணைத்து விளக்கக் கூடியவர்கள், ஒரு சிறிய பகுதியாகத்தான் இருப்பார்கள். இது அசமந்தமான சூழலில் தொடர்ந்து நீடிக்கும். சிறிய பகுதிதான் சமூகத்தை வழிகாட்டும் வண்ணம், சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கும்.

 

எம்மைச் சுற்றி அந்த நிலை இன்றில்லை. எம் சூழல் அதையும் அன்னியப்படுத்தி நிற்கின்றது. கடந்தகால அனுபவங்கள், மக்களுடன் கொண்டிருந்த அரசியல் உறவு, சமூகம் என்ன நினைக்கின்றது என்பதை நெருங்கி அணுகுவதன் மூலம், சரியானதற்கு மிக நெருக்கமாக எம்மால் நிற்க முடிகின்றது.  

 

இதில் இருந்துதான் நாம் முன்னேற வேண்டும். இதைவிட வேறு எந்த மாற்றும் கிடையாது.  புதிய தலைமுறையிடம் சமூகவுணர்வுகளை உருவாக்கும் வண்ணம், அரசியல் விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும். அதற்குரிய காலகட்டம் கனிந்து வருகின்றது. சமூகம் தன் அறிவின் வெற்றிடத்தில் நிற்கின்றது.

 

என்னசெய்வது எதைச் செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றது. ஒரு துரும்பை பிடித்துக்கொண்டு மிதக்க முனைகின்றது. இந்த சமூகத்தின் நிலையை இட்டு சிந்திக்கின்றவர்கள், இந்த வெற்றிடத்தில் இருந்து சமூகத்தை வழிகாட்ட முன்முயற்சியுடன் கற்க முனைகின்றனர். இங்கு தான், எம் பணியை மையப்படுத்தி அதை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.  

 

3.'என்ன மாதிரியான அமைப்பை நோக்கிச் செல்கின்றோம்? மேற்கு தேசத்தில் உருவாக்கக் கூடிய அமைப்பு வகை தான் என்ன? இவ்வாறான அமைப்பிலா உள்வாங்கப்படுவர்?


இதில் ஐரோப்பிய சமூக உறவில் உள்வாங்கப்பட்டவர்கள் என பலரும் தத்தம் தளங்களில் இருக்கின்றனர். இவர்களிடையே தனித்துவவாத (தாராளவாத) சிந்தனை பிரபல்யம். தன்னிலையை முதன்மைப்படுத்துபவர்கள் ஆத்திரப்படுபவர்கள்
ஆத்திரப்பட்டு கைவைப்பவர்கள் (ஆத்திரப்பட்டு கல்வெட்டு வடிப்பவர்கள் - இவைகள் இந்தச் சமூகத்;தின் விழைவின் பயன் எவ்வாறு அணுகுவது?) இவ்வாறானவர்கள் தமது தளத்தில் இருந்து செயற்படுவர். இவர்களை எவ்வாறு அணுகுவது?


இவ்வாறான வேளையில்  தன்னியல்பைக் களைந்தவர்களாக, தூய்மைவாதிகளாக இருக்கின்ற போதுதான் ஒரு அமைப்பு உருவாக்கி வழிநடத்த முடியும் என்ற நிலைப்பாடு சரியா?"

 

கடந்தகாலத்தில் எம்மைச் சுற்றி இயங்கிய புலம்பெயர் இலக்கியவாதிகள் பற்றிய கற்பனைகள் தான், இந்தக் கருத்தை இப்படியாக முன்வைக்கின்றது. கடந்த காலத்தில் செயலாற்றியவர்கள் எதை சமூகத்துக்கு வைத்தனர்? எந்த அரசியலை மாற்றாக வைத்தனர்? எதுவும் கிடையாது. படுபிற்போக்குவாதிகள். புலியை மிஞ்சியவர்கள். புலியெதிர்ப்பு அரசியல் தளத்துக்கு கம்பளம் விரித்தவர்கள். அனைத்து அரசியல் பிற்போக்கு விபச்சாரம் செய்ய உதவியவர்கள். இப்படிப்பட்ட இவர்களைச் சுற்றிச் சிந்திப்பது, இதற்குள் இருந்து சமூகத்தைப் பார்த்து முடிவு எடுப்பது என அனைத்தும் சமூகத்தைப் புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.

 

இவர்கள் அரசியல் அல்லாத அரசியலையும், இதனடிப்படையில் கலைப்புவாதத்தையும், இருப்பு சார்ந்த அராஜக அரசியலையும் கொண்டு, மக்கள் விரோத அரசியலையே எப்போதும்  முன்வைத்தவர்கள். இந்த அடிப்படையில் அவர்களைப் பார்க்காமல், மற்றவர்களை 'தன்னியல்பைக் களைந்தவர்களாக, தூய்மைவாதிகளாக" வரையறுப்பது தவறானது.

 

எம் எதிர்காலத்ததை திpர்மானிக்கக் கூடியவர்கள், புதிய தலைமுறையினர்தான். அவர்களை நோக்கி நாம் செல்வதே, இன்று முதன்மையான எம் அரசியல் பணியாகும். அதற்கான முயற்சியும், கருத்துகளை எடுத்துச் செல்லுவதும் தான், எதிர்காலத்தின் மாற்றத்துக்கான செயல்பூர்வமான ஒரேயொரு அரசியல் வழியாகும்.   

 

பழைய பெருச்சாளிகள் பின்னால் அரித்துக் கொண்டிருக்கின்ற அரசியலை கைவிட்டு, அவர்களை அம்பலப்படுத்த வேண்டும்;. இவர்கள் புரட்சிகர முன்முயற்சிகளையும், புரட்சிகர கருத்துகளையும் தடுத்து நிறுத்துவதுதான், இவர்களின் பிற்போக்கான அரசியல் இருப்புக்கான அரசியல் அத்திவாரமாக உள்ளது. எனவே குழிபறிப்பதுதான், இவர்களின் அரசியல். இதை புரிந்துகொண்டு இவர்களை அம்பலப்படுத்துவதும், புதிய தலைமுறையிடம் கற்கவும் கற்றுக்கொடுக்கவும் நாம் முனைய வேண்டும். அவர்களிடம் நாம் கற்றால்தான், கற்றுக்கொடுக்கவும் முடியும். இதுதான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி.

 

பி.இரயாகரன்
26.03.2009