முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை  சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம்  தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர்  நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

 

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான பினாரயி விஜயன் மீது, ரூ. 390 கோடி லாவலின் ஊழல் வழக்கில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஊழல் கறை படியாத கட்சி என்ற மாயபிம்பத்தையும் அது தகர்த்தெறிந்து விட்டது.


ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய வழக்குகள் வரும்போதெல்லாம், ""மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேணடும்'' என்று கூப்பாடு போட்டு வந்த சி.பி.எம். கட்சி, இப்போது ""தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் சி.பி.ஐ.'' என்று புதிய விளக்கம் கொடுக்கிறது. அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான், இந்தத் திடீர் ""பல்டி''க்குக் காரணம்.

 

"1996 முதல் 2001 வரை கேரளாவில் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் போட்டார். இதில் ஊழல் நடந்துள்ளதாகக் கேரள காங்கிரசார் குற்றம் சாட்டி 2001 முதல் 2006 வரையிலான தமது ஆட்சிக் காலத்தில் ஒரு கமிட்டியை நிறுவி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் எதிர்பார்த்தபடி எந்த ஊழல்  முறைகேட்டையும் கண்டறிய முடியவில்லை. தமது ஆட்சியின் கடைசி நேரத்தில்  அதாவது, 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அன்றைய காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டி இந்த ஊழலை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம். கட்சியை ஊழல் கறை படிந்ததாகக் காட்டி ஆதாயமடைய காங்கிரசு முயற்சித்தது.


ஆனால், 2006இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கேரள மக்கள், காங்கிரசைத் தோற்கடித்து இடது முன்னணியை வெற்றி பெறச் செய்தனர். காங்கிரசின் அவதூறுக்கு பதிலடி கொடுத்து மக்கள் தீர்ப்பளித்த போதிலும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், மைய அரசின் அதிகாரத்தைக் கொண்டு மீண்டும் இந்த வழக்கைக் கிளறி ஆதாயமடையத் துடிக்கிறது, காங்கிரசு. எனவேதான், இந்த ஊழல் வழக்கும் மையப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கையும் அரசியல் உள்நோக்கம் கொண்டது'' என்று நியாயவாதங்களை அடுக்குகிறது, சி.பி.எம். தலைமை.


ஆனால், ஒப்பந்தப்படி லாவலின் நிறுவனம் செயல்படாததால் மாநில அரசும் மின் வாரியமும் ரூ. 390 கோடி நட்டமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது, மையப் புலனாய்வுத் துறை. ஒப்பந்தத்தில், மலபாரிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ. 98 கோடி நிதியுதவி செய்வதாக லாவலின் நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், அந்நிறுவனம் ரூ. 8.98 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. எஞ்சிய தொகை இதுவரை தரப்படவில்லை. பினாரயி விஜயன் கனடா நாட்டுக்குச் சென்றபோதிலும், லாவலின் நிறுவனத்திடமிருந்து அத்தொகையைப் பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

லாவலின் நிறுவனம் அத்தொகையை வழங்கியிருக்கக் கூடும் என்றும், அத்தொகையை பினாரயி விஜயனும் சி.பி.எம். கட்சித் தலைமையும் அமுக்கி விட்டனர் என்றும் காங்கிரசு குற்றம் சாட்டுகிறது. லாவலின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இத்தொகை பற்றி வெறும் வாக்குறுதியாக மட்டுமே உள்ளதே தவிர, தனியாக ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. மேலும், அப்போது மின்துறை அமைச்சராக இருந்த பினாரயி விஜயன், புற்றுநோய் மருத்துவமனைக்கான லாவலின் நிறுவனத்தின் நிதியுதவி பற்றி அமைச்சரவைக்குத் தெரிவிக்கவில்லை.

 

மையப் புலனாய்வுத் துறை மற்றும் காங்கிரசுக் கட்சியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பினாரயி விஜயனோ, சி.பி.எம். கட்சித் தலைமையோ இன்றுவரை விளக்கமளிக்கவில்லை. இவை அரசியல் உள்நோக்கமுடைய அவதூறுகள் என்று சி.பி.எம். கட்சித் தலைமை புறக்கணித்து வருகிறது. அவற்றை மட்டுமல்ல் சி.பி.எம். கட்சித் தோழர்களே ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதாக சந்தேகங்களை எழுப்பிய போதிலும், அவற்றை சி.பி.எம். கட்சித் தலைமை மூடிமறைத்து வருகிறது.

 

கேரள மாநில அரசின் கணக்கு  தணிக்கைத்துறை அதிகாரியின் அலுவலகம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 390 கோடி நட்டமேற்பட்டுள்ளதாக தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பாலானந்தன் தலைமையில் நிறுவப்பட்ட கமிட்டியானது, மூன்று மின் திட்டங்களைப் புதுப்பித்து நவீனப்படுத்த அரசுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்துடன் (""பெல்'') ஒப்பந்தம் போடுமாறும், அன்னிய தனியார் நிறுவனமான லாவலினைப் புறக்கணிக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும் இப்பரிந்துரைக்கு மாறாக பினாரயி விஜயன், லாவலின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், கேரள மாநில அரசின் ஊழல் தடுப்பு  கண்காணிப்புத் துறை, எட்டு உயரதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்த விவரங்களை இணைத்து 302 பக்க அறிக்கையாக கேரள சி.பி.எம். முதல்வரும் பினாரயி விஜயனுக்கு எதிரான கோஷ்டியின் தலைவருமான அச்சுதானந்தன், ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் புகாராகக் கொடுத்துள்ளார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான அச்சுதானந்தன் கொடுத்த இப்புகார் பற்றி கட்சிக்குள் கூட சி.பி.எம். தலைமை விசாரணை நடத்த முன்வரவில்லை.


 தற்போது பினாரயி விஜயன் மீது மையப் புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததும், உடனடியாக விமானமேறி டெல்லிக்குச் சென்று சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் காரத்தை அச்சுதானந்தன் சந்தித்தார். முதன்முறையாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஒருவர் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், வரும் பொதுத்தேர்தலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும், உடனடியாக கேரள மாநிலச் செயலர் பதவியிலிருந்து பினாரயி விஜயனை நீக்குமாறும் கோரியுள்ளார்.

 

மையப் புலனாய்வுத்துறையும் காங்கிரசும் அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு செய்கின்றன என்றால், கேரள முதல்வரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான அச்சுதானந்தன், பினாரயி விஜயன் மீது புகார் கொடுப்பதிருப்பதும் கூட வெறும் அவதூறுதானா என்று சி.பி.எம். கட்சிக்குள் கேள்விகள் எழத்தொடங்கின. ஏற்கெனவே பினாரயி விஜயன் கோஷ்டிக்கும் அச்சுதானந்தன் கோஷ்டிக்கும் இடையிலான நாய்ச் சண்டையால் கேரள சி.பி.எம். கட்சியே பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில், விஜயன் மீது நடவடிக்கை எடுத்தால் கேரளாவில் கட்சியே உடைந்து சிதறி விடும் என்று சி.பி.எம். தலைமை அஞ்சியது.
 மறுபுறம், மாநில ஆளுநரின் அனுமதி பெற்று மையப் புலனாய்வுத் துறை விஜயன் மீது விசாரணை நடத்த முற்பட்டால், சட்டப்படி இவ்வழக்கில் மாநில அரசின் நிலை பற்றி அமைச்சரவையில் விவாதிக்க நேரிடும். அப்போது முதல்வர் அச்சுதானந்தன், பினாரயி விஜயனைப் பழிவாங்க நடவடிக்கை எடுத்தால், அது கட்சிப் பிளவைத் தீவிரமாக்கி விடும் என்றும் கட்சித் தலைமை அஞ்சுகிறது. அல்லது, அச்சுதானந்தனை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்தச் சிக்கலிலிருந்து மீள கட்சித் தலைமை முயற்சித்தாலும், அச்சுதானந்தன் கோஷ்டி கலகத்தில் இறங்கி கட்சியைச் சிதறடித்துவிடும்.

 

என்ன செய்வதென்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட சி.பி.எம். தலைமை, பிப்ரவரி 14ஆம் தேதியன்று அரசியல் தலைமைக்குழு கூட்டத்தைக் கூட்டி, விஜயனை ஆதரித்து, கட்சியைக் காப்பாற்ற சமரசமாகப் போகுமாறு அச்சுதானந்தன் கோஷ்டிக்கு உபதேசித்துள்ளது. இதன் மூலம் விஜயனின் ஊழல்  முறைகேடுகளை வெளிப்படையாக நியாயப்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பினாரயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளதன் மூலம், இனி ஊழல் கறை படிந்தவர்களும் கட்சியில் தலைவராகலாம் என்ற புதிய மரபை சி.பி.எம். கட்சி உருவாக்கியுள்ளது. "ஊழலை ஒழிப்போம்!'' என்று இனி அக்கட்சி போராட்டம் நடத்தக்கூட அருகதை இழந்து விட்டது.

 

கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அச்சுதானந்தன் தெரிவித்த போதிலும், அச்சு கோஷ்டியினர் பினாரயி விஜயனின் ஊழல்  மோசடிகளை அம்பலப்படுத்தி வருவதோடு, அவரது உருவப் படத்துக்கு ஆங்காங்கே செருப்பு மாலை போட்டுத் தொங்கவிடும் வேலையையும் செய்து வருகின்றனர். புழுத்து நாறும் இக்கோஷ்டிச் சண்டை நாடாளுமன்றத் தேர்தலின் போது நாய்ச் சண்டையாக முற்றும் என்பது நிச்சயமாகி விட்டது.

 

நாடாளுமன்ற சாக்கடையில் மூழ்கி ஓட்டுப் பொறுக்கி வந்த சி.பி.எம். கட்சி, இன்று ஊழல் முடைநாற்றம் வீசும் கட்சியாக புதிய பரிமாணத்தை எட்டிவிட்ட பிறகு, இனி அக்கட்சியைச் சீர்செய்து மாற்றியமைத்துவிட முடியாது. செங்கொடி காட்டி இன்னமும் ஏய்த்து வரும் அக்கட்சியை நாட்டு மக்களும் புரட்சியை நேசிக்கும் அக்கட்சி அணிகளும் புறக்கணித்து, தனிமைப்படுத்தி முடமாக்குவதைத் தவிர, இனி வேறு வழியும் கிடையாது.

 

• மனோகரன்