'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

 

ஆனால் சாதியில் பிறந்தவன் அதைத் துறக்கமுடியாத என்ற அர்த்தத்தில் கூறியிருந்தால், அது தவறு. சிறுத்தையின் புள்ளி உடம்பில் உள்ள அதன் அடையாளம். சாதி பிறப்புடன் வருவதில்லை. பிறந்த பின்பான சாதிய சமூக வாழ்வியலால் உருவாகின்றது. பார்ப்பனிய வயிற்றில் பிறந்த குழந்தையையும், தலித் வயிற்றில் பிறந்த குழந்தையும் இடமாற்றினால், அவை அந்த குறித்த சாதிய சூழலுக்குள் தான் வளரும். 'பார்பபானின் பிறவிக் குணமும்" என்ற ஒன்று தலித் வீட்டில் நுழையாது. பார்ப்பனிய வீட்டில் தலித் குழந்தை பார்ப்பனிய உணர்வுடன்தான் வளரும். (இதையொட்டி சாதியம் பற்றி எழுதிய எனது நூலில் இருந்து. இது இன்னமும் வெளிவரவில்லை.)

 
மூடிமறைக்கப்பட்ட அபாயகரமான பார்ப்பனியம்

 

இது பார்ப்பனியத்தை எதிர்க்க, பார்ப்பனிய வரையறையைக் கொண்டு பார்ப்பனியமாக மீள இயங்குதலாகும். பார்ப்பனியத்தை வெறும் உயர்சாதியாக, அதில் உள்ள தனிநபராக அடையாளப்படுத்துகின்றது. பார்ப்பனிய சாதிய பிறப்பு வரையறையை சரி என்று ஏற்றுக்கொண்டு, அதை அடிப்படையாகக் கொண்டு கருத்துகள் சிந்தனைகள் கோட்பாடுகள் மூலம் பார்ப்பனியமாகவே இயங்குகின்றது. 

இது என்ன சொல்லுகின்றது. பார்ப்பனச் சாதியில் பிறந்தவன் அல்லது உயர் சாதியில் பிறந்தவன், பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராட முடியாது என்கின்றது. சாதியப் படிநிலைகளில், பல தளத்தில் சாதியப் பிழைப்புவாதிகளால் இப்படி வைக்கப்படுகின்றது. 

 

சாதியைக் துறந்து சாதியை எதிர்க்கமுடியாது என்கின்றது. இதுவோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத பார்ப்பனியம்.

 

தற்செயலாக சாதி அமைப்பில் பார்ப்பனாகப் (உயர் சாதியில்) பிறப்பவன் ஒரு சமூக உயிரி. அவன் மனித குலத்தில் ஒரு மனிதன். இதை மறுப்பது மூடிமறைக்கப்பட்ட பார்ப்பனியம். உள்ளடக் ரீதியாக அதே பாhப்பனிய சிந்தனை முறை. சமூக விரோதமாகவுள்ள பார்ப்பனியத்தை எதிர்க்கவும், சாதிய அடையாளத்தை துறந்து நிற்கவும், அதற்கு எதிராகப் போராடவும், சாதியில் பிறக்கும் அனைவருக்கும் முடியும். இதை மறுப்பது, பார்ப்பனியத்தை (உயர்சாதி உள்ளவனை) மாற்ற முடியாத என்பது, இயக்க மறுப்பியல் கோட்பாட்டைக் கொண்டு மீள் பார்ப்பனியமயமாகி விடுகின்றது. பிறப்பு சார்ந்த பார்ப்பனிய கோட்பாட்டை, பின்பக்கமாக தூக்கி நிறுத்துவதாகும். 

 

தற்செயலாக உயர் சாதியில் பிறப்பவன், அதற்கு எதிராக போராடமுடியாது என்று சொல்பவன் யார்? இதன் கோட்பாடு என்ன? இதன் கோட்பாடு பார்ப்பனியம்;. அதாவது பார்ப்பனியம் இதைத்தான் சொல்லுகின்றது. சாதிக்கு வெளியில், சாதியில் பிறந்தவன் செல்ல முடியாது என்கின்றது. அதை அது தடுத்து நிறுத்துகின்றது.

 

இப்படி சாதிக்கு வெளியில் போராட முடியாது என்று கூறுபவன் தான், இதைத்தான் செய்கின்றான்.  உண்மையில் இவன்தான் பார்ப்பனியத்தை பாதுகாக்க முனையும், மக்களின் முதல்தரமான எதிரியாகின்றான். இந்த எதிரியின் தர்க்கமும் நடத்தையும் தான், மூடிமறைக்கப்பட்ட அபாயகரமான பார்ப்பனியம். இவர்கள் எந்த வேஷத்தை போட்டாலும், பிறப்பை முன்னிறுத்தி தனக்குத்தானே பார்ப்பனியமயமாகிபடியேதான் வருவார்கள். பிறப்பை முன்னிறுத்தி எதிரியை அடையாளப்படுத்துவது, பார்ப்பனியம் தான்.  சமூக பொருளாதார உறவுக்கு வெளியில், இந்த நஞ்சை விதைக்கின்றனர்.

 

எதார்த்தத்தில் பார்ப்பனியம் பிறப்பு சார்ந்த ஒரு சாதியின் (உயர் சாதியின்) முனைப்பு கொண்ட ஒரு சமூகக் கூறாக உள்ளடகத்தில் உள்ளது என்பது, அந்த சாதியில் தற்செயலாக பிறந்தவனுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவதற்கான ஒரு சமூகக் கூறாகிவிடாது. அப்படி பயன்படுத்தினால், அது சாதியில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும். இது சாதியை ஒழிக்க முடியாது என்ற எடுகோளுக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும். இதைதான் பார்ப்பனியம் அனாதியானது, காலகாலமாக நிலவுவது, நம்பிக்கை என்கிறது.  

 

பார்ப்பனியம் பார்ப்பன சாதியின் சுரண்டல் நலன் சார் கூறாக முழித்துக்கொண்டு நடைமுறையில் நிற்பது என்பது, அதன் உள்ளார்ந்த-அதன் சொந்த சமூக விதிகளாகும். இது தற்செயலாக அதில் பிறக்கும் எந்த ஒரு தனிமனிதனின் சொந்தத் தெரிவல்ல. மாறாக ஒரு மனிதனாக எப்படி வாழ்வது என்பது, தனிமனிதனின் சொந்த தெரிவுக்குள்ளாகுகின்றது. ஒரு மனிதன் சாதியில் பிறப்பது தற்செயலானது, ஆனால் சாதியில் வாழ்வது அவனின் சொந்த தெரிவுக்கு உட்பட்டதே. சாதியில் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற, மாற்றமற்ற எந்த சமூக விதியும் இயற்கையில் கிடையாது. பார்ப்பனியமும் சரி, பிறப்பை முன்னிறுத்திய பார்ப்பனிய எதிர்ப்பும் சரி, இதை மறுத்து நிற்கின்றது. இப்படித்தான் இருப்பதாக, இந்த இரண்டு பார்ப்பனியமும் கூறுகின்றது. 

 

இங்கு சாதிய சமூகம் கட்டமைத்துள்ள பார்ப்பனிய சுரண்டல் விதிக்கு முரணாக, வாழ்வதையும் போராடுவதையும் எப்படித்தான் நிராகரிக்க முடியும். சாதியத்தை நிராகரித்து வாழவும், போராட்டமும் சாத்தியமில்லை என்ற இறுகிய பார்ப்பனிய கோட்பாடுகள், எந்த வடிவில் அவை முன்வைத்தாலும் உள்ளடகத்தில் பார்ப்பனியம் தான்;. இது எங்கும் நிறைந்த ஒன்றாக உள்ளது.

 

சமூகத்தில் இயல்பாக சாதி சார்ந்த சமூக நடைமுறைகள்தான், பொதுவில் சமுதாயமாக பிரதிபலிக்கின்றது. இது சாதிய சமூக அமைப்பின் பொதுவான தன்மை. இதனால்தான், அது சாதிய சமூக அமைப்பாக உள்ளது. இதற்கெதிரான போராட்டம் என்பது, சாதிய சமூக நடைமுறைகளையும் வாழ்வையும் மறுக்கும், தனிநபர்களை உள்ளடக்கியதே. தனிநபர்கள் சாதிய சமூக அமைப்பில், சாதியைக் கடந்து அதற்கு எதிராகப் போராடுகின்றனர். இது அடிப்படையில் சமூக இயங்கங்களை உள்ளடக்கியதாகின்றது. அதாவது எல்லாம் முதலளித்துவமாக, நிலப்பிரபுத்துவமாக இருக்கும் சமூக அமைப்பை மறுக்கும், வார்க்கப் போராட்டம் போன்றதுதான் இதுவும்.

 

சுரண்டும் பார்ப்பனியம் திரிபுக்குள்ளாக்கிய படி, தன்னை சாதிய சுரண்டல் பார்ப்பனியமாகியது. இங்குதான், இதன் முரண் தன்மையை இனம் காணமுடியும்;. மனித வாழ்வில் சுரண்டும் பார்ப்பனியம் மறுக்கப்பட்டு அது மீறப்பட்டு வந்துள்ளது. இதனால் தான் அதையெல்லாம் உள்வாங்கிய பார்ப்பனியம், தன்னை சாதிக்குரிய தீண்டாமைக்குரிய சுரண்டல் பார்ப்பனியமாக்கியது. சாதியத்துக்கு முந்தையதை, அதாவது வருணத்துக்கு பிந்தைய இடைக்காலத்தில்,  பார்ப்பனியம் சாதியப் பார்ப்பனியமாகியது. இது தனது பிந்தைய காலத்தில், சாதியாக தனக்குள்ளும் திரிபுறுகின்றது. இது தீண்டாமையை அடைப்படையாக கொண்ட சுரண்டல் சாதியமாக மேலும் திரிபுறுகின்றது. இப்படியே பார்ப்பனியம் தீண்டாமை சாதியமாகியது. சாதி கூறுகள் மறுக்கப்பட்டதால்தான், திரிபுறுகின்றது. அடிப்படையில் சுரண்டி வாழ்வதற்காக, சாதிய கூறை திரிந்தபடியே சமூகத்தை சாதியமாக தொடர்ந்தும் தாழ்த்தியது.

 

இந்தப் பார்ப்பனியம் அதன் மூலத்தில், தன் பார்ப்பனன் நலனை முன்னிலைப்படுத்தியது. ஒரு சுரண்டல் வடிவத்தை, சுரண்டும் சமூகப் பிரிவின் தலைமுறைக்குரிய ஒன்றாக்கினர். அதை அவர்களின் தனி உரிமையாக்கி, அதைச் சமூகக் கூறாகியதால் அது திரிந்து சாதியமாகியது. குறித்த சுரண்டல் வடிவம் பார்ப்பன சாதிக்குரிய உரிமையாகியதால், தனிச்சொத்துரிமையின் சொந்த வர்க்க விதியையே மறுதலித்துவிடுகின்றது. இப்படி பார்ப்பனியம் தனிச்சொத்துரிமை சமூகத்தின் பொது நலனை, தனக்கு கீழாக பின்தள்ளியது. இதற்கமைய அனைத்து சமூக விதிகளையும் தனதாக்கிவிட, அனைத்து சமூக விரோதப் போக்கினதும் இயல்பான இணக்கமான கோட்பாடாகிவிடுகின்றது. இந்த பார்ப்பனிய சுரண்டல் மதவடிவில் இருந்ததால் தான், இலகுவாகவே சமுதாயத்தின் பொதுத்தன்மையாகியது. இப்படி பார்ப்பனச் சுரண்டல் மதத்தின் ஊடாக பார்ப்பனியமயமாகி; சாதி வடிவம் பெற்றதால், அது ஒரு சாதியின் நலனை மட்டும் பூர்த்திசெய்யவில்லை. அது அடியில் இருந்து மேல்வரை, எல்லா உயர் சாதிகளின் நலனையும், ஏற்றுத்தாழ்வுடன் படிமுறையில் பூர்த்திசெய்தது, செய்கின்றது.