ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

 

 இந்தக்கூட்டத்தில் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்தால் இலங்கை அரசுடன் பேச்சு வாரத்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனப்பேசிய ப.சிதம்பரம் இந்தக்கூட்டத்தில் பா.ம.க ராமதாசுக்கு மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார்.

pmk-ramadas1

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஏற்கனவே தி.மு.க கூட்டணயில் சவுடால் வீரம் பேசி வெளியேறிய ராமதாசு, மத்தியில் காங்கிரசு கூட்டணியில் நீடிப்பதாகவும் அதன் மூலம் அன்புமணியின் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏதேதோ கொள்கைகள் பேசினார். ராமதாசுவின் இந்தப் பிழைப்புவாதத்தை ஏற்றுக் கொண்ட கருணாநிதியும் மத்திய அமைச்சரவையிலிருந்து பா.ம.க விலகவேண்டுமென கோரமாட்டோம் என பிற்காலத்தில் ராமதாசு கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்பதற்காக சில கணக்குகள் போட்டு அதையே பெருந்தன்மை என அறிவித்தார். ஆனாலும் ராமதாசு ஈழப்பிரச்சினையில் கருணாநிதி ஒன்றும் செய்யவில்லை என வீர வசனம் பேசினார். இவர் ஏதோ ஈழத்திற்காக கிழித்துவிட்டார் என்றால் அப்படியொன்றும் இல்லை.

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் கூட புலிகளுக்கு ஆதரவான முழக்கங்கள் இடம்பெறும் என்பதால் அந்த ஊர்வலத்தில் முதலில் கலந்து கொள்வதாக இருந்த ராமதாசு பின்னர் மத்திய உளவுத்துறை எச்சரித்ததின் பேரில் கலந்து கொள்ளவில்லை. இத்தகைய வீரர் ஈழத்திற்காக சண்டாமிருதம் செய்ததால் எரிச்சலைடைந்த கருணாநிதி சோனியாவிடம் ஏதோ பேசியிருப்பார் போலும். அதன் படி ப.சிதம்பரம் எச்சரிக்கை விட்டதும் பதறிய மருத்துவர் ஐயா உடனே விமானம் பிடித்து டெல்லி சென்று அன்னை சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சில காரணங்களுக்காக ஈழப் பிரச்சினையில் வெளியில் அப்படி பேசுவதாகவும் மற்றபடி மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று தோப்புக்கரணம் போட்ட ராமதாசு தனது மகன் அன்புமணியின் பதவியை பறித்து விடாதீர்கள் எனவும் கெஞ்சியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட சோனியாவும் கருணாநிதிஜீக்கு தொந்தரவு வராமல் பேசுமாறு உத்தரவு போட்டிருக்கிறார்.

இதெல்லாம் நாங்கள் கூட இருந்து கேட்டது போல எழுதுவது சரியா என சிலர் நினைக்க கூடும். இதை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல. ஈழப்பிரச்சினைக்காக இந்தியா துரோகம் செய்கிறது என்பதை நாடே அறிந்திருக்கும் போது மத்திய அரசில் இடம் பிடித்திருக்கும் பா.ம.க தனது அமைச்சர் பதவிகளை ஈழத்திற்காக ராஜினாமா செய்வதாக ஒரு உதார் கூட விடவில்லை. இத்தகைய பதவி வெறியர்கள் பதவிக்காக என்னமும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி இந்தியா ஈழத்தின் மீது போர் தொடுத்திருக்கும் இலங்கை நிறுத்த வேண்டுமென கோரமுடியாது என தெளிவாக அறிவித்துவிட்டார். உடனே பா.ம.க எம்.பிக்கள் அதை எதிர்த்தார்களாம். கூடவே அமைச்சர் பதவிகளில் அன்புமணியும், வேலுவும் கூலாக அமர்ந்திருந்தார்கள். ரோசமிருந்தால் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவிக்க வேண்டியதுதானே. இவ்வளவிற்கும் இன்னும் இரண்டு மாதங்கள்கூட இந்த அரசிற்கு இல்லை.

ஆனாலும் அடுத்த கூட்டணியில் சில எம்.பி பதவிகளை பெற்று மீண்டும் பா.ஜ.க அல்லது காங்கிர அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்கு யாருடன் சேரலாம் என்பது இன்னமும் முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் போது உடனிடியாக காங்கிரசு அரசை பகைத்துக் கொள்வதற்கு ராமதாசு தயாரில்லை. ஆனால் பிரணாப் முகர்ஜி போட்டுடைத்ததும் வேறு வழியின்றி ராமதாசு ஒன்றை வெளியிட்டார். முதலில் சோனியா சந்திப்பு பற்றி நிருபர்களிடன் பேசிய ராமதாசு ஈழப்பிரச்சினை குறித்து கேட்டுக்கொண்ட சோனியா இது குறித்து கவனிப்பதாக அறிவித்தாராம். அடுத்த முறை நிருபர்களிடம் பேசிய ராமதாசு இலங்கையில் இராணுவ ஆட்சி வருவதற்கு சதி நடக்கிறதாம், அதனால்தான் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி இதை தடுக்கவேண்டும் என சோனியாவிடன் கூறினாராம். சோனியாவும் உடனே இலங்கை என்பது பக்கத்து நாடு, அந்த நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையீடு செய்ய முடியாது என கூறினாராம்.

எப்படியெல்லாம் சுற்றி வளைத்து ஈழத்திற்காக போராடுவதாக நடிக்கிறார்கள் பாருங்கள். இந்திய அரசு ஆயுத உதவி, இராணுவ உதவி செய்து இந்தப் போருக்கு மறைமுகத் தலைமை ஏற்றிருக்கும் வேளையில் அதைக் கண்டித்து பேசாமல் ஏதோ இராணுவ ஆட்சி என்றெல்லாம் பீலா விடவேண்டும்? ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதும், இந்தியா அதற்கு என்ன செய்கிறது என்பதும் இப்போது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மருத்துவர் ஐயா எப்படி காங்கிரசு அரசிடம் பல்லிளித்தவாறு அடிமைத்தன சேவகம் அதுவும் இரண்டு அமைச்சர் பதவிகள் எனும் எலும்புத் துண்டுக்காக நடத்துகிறார் என்பதைத்தான் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பா.ம.க தற்போது அந்த இயக்கத்தின் மூலம் இரண்டு கோடி கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்பப் போகிறதாம்.

இரண்டு கோடிமக்களின் கையெழுத்தை வாங்குவதை விட பா.ம.கவின் இரண்டு மத்திய அமைச்சர்களும் நான்று எம்.பிக்களும் பதவி விலகினால் அதனுடைய விளைவு இரண்டு கோடியை விட வலிமையாக இருக்குமே? ஆனாலும் இரண்டு கோடி மக்களைவிட இரண்டு அமைச்சர்களின் பதவிதான் முக்கியம் என்றால் மருத்துவர் ஐயா ஈழம் பற்றி பேசாமல் இருந்து விடலாமே?

9.3.09 அன்று புரட்சித்தலைவி ஈழப்போரை நிறுத்தவேண்டும் என்பதற்காக -அதாவது அப்படி நடிப்பதின் மூலம் ஈழ ஆதரவு கூட்டணிக் கட்சிகளை திருப்திப் படுத்தலாம் கூடவே மக்கள் ஓட்டையும் சென்டிமெண்டாக சுருட்டலாம்- நடத்தப்படும் உண்ணாவிரதத்தை ஆதரித்து மருத்துவர் அய்யா இன்று அறிக்கை விட்டிருக்கிறார். ஒரு வேளை அவர் உண்ணாவிரதத்தை ஆதரித்து நேரில் வாழ்த்துவதற்கு பட்டாடையுடன் அன்புச் சகோதரிக்கு போத்திய கையோடு கூட்டணிக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அது நடந்தால் என்ன நடக்கும்? இப்பொது சோனியாவுக்கு தோப்புக்கரணம் போடும் அய்யா இனி புரட்சித் தலைவிக்கு தோப்புக்கரணம் போடுவார்!

அதானையா பம்ம்ம்ம்மாக!!