மதங்களைப்போல, சினிமா போல எல்ல உணர்வுகளையும் மழுங்கடிக்கும் ஒருவித மயக்கமாக கிரிக்கெட் இருக்கிறது என்பதை விளக்க இப்போதைய சூழலில் ஆதாரம் ஏதும் தேவையில்லை. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளால் விளையாடப்பட்டுவரும் இந்த கிரிக்கெட் நாட்டுப்பற்றை அளக்கும்

 ஒரு அளவுகோலாக இருக்கிறது. விரித்துப்பார்த்தால் கிரிக்கெட்டை நேசிக்காதவர்கலால் நாட்டை நேசிக்கமுடியாது எனும் அளவிற்கு அது மக்களை மயக்கியிருக்கிறது, தவறு மயக்கவைகப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான எல்லா விளையாட்டுகளும் லாபம் தரும் தொழில் என்றாகிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் கழகமோ பலநூறு கோடி லாபம் பார்க்கும் நிறுவனமாக இருக்கிறது. இதனாலேயே வேறு வேறு நாடுகளுடன் தொடர்ச்சியாக போட்டிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. எரிந்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளைவிட்டு கவனம் திருப்ப எல்லா ஊடகங்களும் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தொலைக்காட்சிகள் விளம்பரங்களையே நேரலையாக ஒளிபரப்பி கல்லா கட்டுகின்றன.

 

 இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவரும் இலங்கை அரசை எதிர்த்தும், அதற்கு எல்லாவிதத்திலும் உதவி செய்தும் ஊக்கமளித்தும் மறைமுகமாக போரை நடத்தும் இந்தியாவை எதிர்த்தும் தமிழகத்தில் எல்லாத்தரப்பு மக்களும் போராடிக்கொண்டிருக்க, மறுபுரத்தில் இலங்கை இந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டின் வெற்றியை இந்திய நாட்டின் வெற்றியாக பூரித்துப்போகும் இந்திய இளைஞனுக்கு, குழந்தைகளையும், முதியவர்களையும் கூட இரக்கமற்ற முறையில் கொன்றுகுவிப்பதற்கு துணை நிற்கும் இந்திய அரசின் கொடூரம் எப்படிப்புரியும்?

 

           சில நாட்களுக்கு முன் பாக்கிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்(!) மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் காயமடைந்தனர், சிலர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பெரும் கவலை ஒன்றை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன. தாக்குதலை நடத்தியவர்கள் யார்? ஏன் நடத்தினர்? அவர்களின் நோக்கமென்ன? பின்னணியென்ன? தீர்வு என்ன? என்பனபோன்ற கேள்விகளை முன்வைத்து விவாதங்களை நடத்தியிருக்கலாம். ஆனால் ஊடகங்களோ இந்தியாவில் நடக்கவிருக்கும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுவிடுமோ என்றே இளைஞர்களை கவலைப்படச்சொல்கின்றன.

நாட்டின் உள்துறை அமைச்சர் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் போட்டிகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கைவைக்கிறார். ஆனால் போட்டிகளை நடத்தவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கோ தள்ளிவைக்கமுடியாது என்று மறுத்துவிட்டது. தொடர்ச்சியாக இந்திய அணிக்கு போட்டிகள் இருக்கின்றன என்பதால் மறுக்கப்படவில்லை, ஏற்படவிருக்கும் பலகோடி ரூபாய் இழப்பே காரணம். ஆனால் ரசிகர்கள் என்பவர்களோ இந்த அரசியல் குறித்த எந்தக்கவலையுமின்றி ஃபோர்களுக்காகவும் சிக்சர்களுக்காகவும் கைதட்டுவதற்கு காத்திருக்கிறார்கள்.

 

          சமூகம் பற்றியும், சூழல் பற்றியும் எந்த உணர்வுமில்லாமல் தொலைக்காட்சிப்பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, நாடே வெற்றிபெற்றுவிட்டதாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் அல்லது தோற்றுவிட்டதாய் கவலைப்படும் இந்த தேச பக்தர்களைப்போல் நாடு என்பது மட்டையோடும், பந்தோடும் முடிந்து போகும் ஒன்றல்ல. நாட்டின் மக்கட்தொகையில் எழுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இருபது ரூபாய் வருமானத்தில் ஒரு நாளை கழிக்கிறார்கள் என்பது இவர்களுக்குத்தெரியுமா? முப்பத்தைந்து விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உறைக்குமா? அதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று அலட்சியமாக தோளைக்குலுக்குபவர்கள் ஒரு உதாரணத்திற்காக தாங்கள் அணிந்திருக்கும் சட்டை எத்தனை ஆயிரம் கைகளின் உழைப்பைத்தாண்டி தங்களிடம் வந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்ளட்டும்.