யாரெல்லாம் இன்றைய யுத்தத்தை ஆதரிக்கின்றரோ, அவர்கள் தமிழினத்தின் காவலராக நண்பராக மகுடம் சூட்டப்படும் சதி இன்று அரங்கேறி வருகின்றது. இது எப்படி சாத்தியம்?  உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இரகசிய நிகழ்ச்சிநிரல்கள் இதை மறுக்கவில்லை.

கருணாநிதி முதல் இலங்கை அரசு வரை போற்றப்படவும், புலிகள் தூற்றப்படவும் கூடிய நிலைமை, இந்த சமூக அமைப்பில் ஏற்படும். இந்த வகையில் ஓரு சதி அரங்கேறுகின்றது.

 

தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை, இந்தியா, நோர்வே முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் புலிகளின் அழிப்பைத் தொடர்ந்து, ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும்.

 

இதை இவ்வளவு காலமும் தருவதற்கு புலிகள் தடையாக இருந்ததாக காட்டி, தாம் இதை கொடுப்பதற்காகவே புலிகளுடன் போராடியதாக கூறுவர். இதன் மூலம் தமக்கு எதிரான முந்தைய நிலையை மறுக்க இது உதவும். இப்படி தி.மு.க முதல் இலங்கை அரசு வரை, பெரும்பான்மை தமிழ் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறும். எல்லாம் மக்களின் பெயரில், காய் நகர்த்தும் அரசியல் சதிகள்.  

  

தமிழ் கூலிக் குழுவின் அரசியல் இதன் மூலம் மீளமைக்கப்பட்டு, பெரும்பான்மை தமிழ் சமூகத்தை இதனூடாக புலிக்கு எதிரான ஒரு கருத்தியலாக கட்டமைக்கப்படும்.

 

இதில் அதிகளவு பாதிக்கப்படப் போவது, இந்தியாவின் புலி ஆதரவு பேசிய பிழைப்புவாதிகள்தான். அவர்கள் ஈழத் தமிழினத்துக்கு எதையும் கொடுக்க முடியாது என்ற உண்மையும், கருணாநிதி எதையோ கொடுத்தவராகவும் மாறிவிடுவார். இன்றைய துரோகிகள், நாளைய தியாகிகளாக மாற்றப்படுவர்கள். இப்படி திமுக முதல் காங்கிரஸ் வரை அரசியல் ரீதியாக பிழைத்துக் கொள்ளும்.

  

இந்த வகையில் இந்தியாவின் தேர்தலுக்கு முன்னமும் புலி அழிப்பின் பின்னால் என்ற ஒரு இடைக்காலத்தில், இந்த தீர்வும் அதிரடியாகவே இலங்கையில் முன்வைக்கப்படும்;. அதை வைக்க இவ்வளவு காலமும் புலிகள் தடையாக இருந்ததாகவும், அதை தாம் இப்போது வைப்பதாகக் கூறிய தமிழ் சமூகத்தை ஏமாற்றுகின்ற அரசியல் நாடகம் இன்றைய சர்வதேச பின்னணியுடன் இந்தியா தயாரிக்கின்றது.

 

தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா வேதனைகள், துன்பங்கள், இதை கண் மூடி ஆதரிக்கத் தூண்டுவதாக மாறும். இதையாவது விடக்கூடாது என்ற கோசத்துடன், ஓப்பாரிகள் பல்லவிகள் பாடும் கூட்டம் எங்கும் சலசலக்கும்.

 

இதற்கமைய இன்று தமிழினத்தை அதிகளவு துன்பப்படுத்தி, அதன் மூலம் இதுவாவது கிடைக்கின்றது என்ற பிச்சைக்கார நிலைக்குள் தமிழ் இனத்தை தயார் செய்கின்றனர். இது தான் இந்த மோசமான யுத்தத்தின் பொதுப் பின்னணி. 

 

இப்படி புலிகளைப் போல் புலியாதரவு பினாமிகளும் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்படுவர். நம்ப முடியாத எதிர்நிலை போக்குகள் உருவாகும். இதனடிப்படையில் திடீர் தீர்வாக தீர்வு முன்னிலைப்படுத்தப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலை முற்றாக மாற்றுவர். அதை நோக்கிய சதிகள், இன்று தொடங்கியுள்ளது.

 

புலிகளை ஆயுதத்தை கைவிடக் கோருவதும், இல்லையென்றால் அழிக்கப்படுவர் என்று மறைமுகமாக மிரட்டும் பின்னணியில் இந்தச் சதியுள்ளது. புலியை முடிவுக்கு கொண்டு வர, இலங்கை முதல் இந்தியா வரை அவசரப்படுகின்து. எவ்வளவு விரைவாக இது நடக்கின்றதோ, அந்தளவு விரைவாக தீர்வும் வைக்கப்படும்.

 

இந்தத் தீர்வு சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கப்போவதில்லை என்ற போதும், யுத்த அவலத்தால் இதை ஏற்றுக்கொள்ளும் போக்கு பெரும்பான்மையின் பொது அங்கீகாரமாக மாறும்.

 

தமிழர் சந்தித்த தொடர்ச்சியான அவலம், இதுவாவது கிடைத்தது என திருப்தியாக மாறும். இதைவிடக் கூடாது என்று கூறி இதை ஆதரிக்கும் நிலையும், தமிழ் நாட்டில் பிரதான கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவு வழங்கும்.

 

மொத்தத்தில் புலிகளின் பாசிசத்தின் பின்னணியில், ஒரு அரசியல் சதி அரங்கேறுகின்றது.   ஓட்டுமொத்த மக்களையும் பிற்போக்குவாதிகள் தம் பின்னால் திரட்டக் கூடிய இந்த சதி, தமிழ்நாட்டின் இன்றைய துரோகிகளை நாளை கதாநாயகராக மாற்றும். எம் வரலாற்றில் பாசிச வேர், மக்களின் பெயரில் மக்களுக்கு எதிரான பல அரசியல் சதியாட்டங்களையே, உருவாக்கி விட்டுச் செல்லுகின்றது. இப்படி புலிப் பிணம் அழுகி நாறுவதன் ஊடாகவும், சமூத்தில் பாசிச நஞ்சை விதைத்துவிட்டே செல்லும்.  

 

பி.இரயாகரன்
08.02.2009