Fri04192019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !

  • PDF

இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

 கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

 

புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தங்களால் இயன்ற அளவு போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. தேசிய ஊடகங்களும் ஈழத்திற்கான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை.

 

சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். அதனால்தான் வீரர்களையும், ஆயுதங்களையும், அதிகாரிகளையும் இறக்கி இந்தப் போரில் இந்தியா பங்கேற்கிறது. தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை. அதன் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் ஈழ மக்களை பூண்டோடு அழிக்கும் இலங்கையின் போரை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். ஊடகங்களுக்கும் அப்படித்தான் பேட்டி கொடுக்கின்றனர்.

 

எனவே ஈழத்தின் அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சி என்பது இந்தியாவை உலக நாடுகளில் அம்பலப்படுத்துவதன் மூலமே செய்யமுடியும். ஏதோ மனிதாபிமான பிரச்சினைக்காக ஈழத்தின் மக்களுக்கு குரல் கொடுப்பதை விட அரசியல் ரீதியான இந்த கோரிக்கைக்குத்தான் வலு அதிகம். புலம்பெயர்ந்த தமிழர்களும், வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும், இந்தப் பிரச்சினையை அறிந்த பல்தேசிய இன மக்களும் இலங்கையில் மறைமுகப்போரில் ஈடுபடும் இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் கண்டித்து வெளியேறுமாறு முழக்கமிடவேண்டும். இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும். இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்தை நேபாளின் மாவோயிஸ்ட்டுகள் புரிந்து கொண்டே அரசியல் பாதையை அமைத்தனர். அதனால்தான் கடைசி நேரத்தில்கூட மன்னராட்சிக்கு முட்டுக்கொடுத்து வந்த இந்திய அரசு பின்னர் வேறு வழியின்றி நேபாள் மக்களின் போராட்டத்தால் தனது நிலையை மாற்றிக் கொண்டது.

 

ஈழம் தொடர்பாக நாம் செய்யவேண்டியதும் இதுதான். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் உலகநாடுகளிலும் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்திய அரசை நாம் பணியவைக்க முடியும். இதன் மூலமே ஈழத்து மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும். குறைந்த பட்சம் முல்லைத்தீவில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற முடியும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இருக்கும் உலக ஆதரவு அல்லது கவனத்தை நாம் ஈழத்திற்காகவும் பெறவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கோரிக்கையுடன் இந்தியாவை அம்பலப்படுத்தி நடந்த லண்டன் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். முத்துக்குமாருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு இணையாக இந்திய அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம். அப்படி நடத்தப்படும் போராட்டங்களின் செய்திகள், புகைப்படங்களை அனுப்பித் தந்தால் வினவில் வெளியிடுகிறோம்.

 

131

141

04

 

 

08

05

06

07

09

03

02

10

01


Last Updated on Thursday, 05 February 2009 06:50