புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது.  இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.

மறுபக்கத்தில் பேரினவாதம் கொக்கரிக்கின்றது, மக்களை விடுவி அல்லது உன்னுடன் சேர்த்து மக்களையும் கொல்வேன் என்கின்றது. மக்களுக்காக தான் தாங்கள் போராடுவதாக கூறுபவர்கள் என்ன சொல்கின்றனர், யுத்தத்தை நிறுத்து என்று கூறி வீதிகளில் இறங்குகின்றனர். அவன் நிறுத்தமாட்டான் என்பது இன்று அறிவுபூர்வமாக தெளிவாகியுள்ளது.

 

இல்லை நிறுத்துவான் என்ற உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக, யுத்தத்தைத் நிறுத்தாவிட்டால், என்ன செய்வது!? அங்கு சிக்கியுள்ள மக்களையும் சேர்த்து கொல்வதையா நாம் ஆதரித்து போராடுகின்றோம். மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்லுங்கள்.

 

60 வருடமாக பேரினவாதம் தமிழரின் உரிமையை மறுத்து வந்தது மட்டுமல்ல, இன்று வரை அது நெளிந்துகொடுத்தது கிடையாது. இன்று புலிகள் மக்களை விடுவிக்காவிட்டால் கொல்லுவோம் என்று பேரினவாதம் கொக்கரிக்கின்றது. அவன் தான் அப்படி செய்கின்றான் என்றால், ஏன் புலிகள் மக்களை விடுவிக்கக் கூடாது? இதை ஏன் போராடும் மக்கள் கோரக் கூடாது? இதைக் கோராத வரை, அங்கு பேரினவாதம் மக்களை கொல்வதற்கு போராடும் மக்களும் உடந்தையா!?  

 

எங்கள் இரத்த உறவுகள், இப்படி மடிவதற்காகவா நாம் வீதியில் இறங்குகின்றோம். இல்லையென்றால், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்களை புலிகள் விடுவித்தேயாக வேண்டும். இதைவிட வேறு வழிகிடையாது.  புலிகள் கூறுவது போல் மக்கள் செல்ல விரும்பவில்லை என்றால், அவர்களை வெறுயேறும்படி கோர வேண்டும். அதை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

இதைக் கோராது, இதை நடைமுறைப்படுத்தாது, புலிகளுடன் மக்கள் அழிவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? இதையா புலிகள் விரும்புகின்றனர்? இந்தக் கேள்வியை எழுப்பாத வரை, அந்த மக்கள் கொல்லப்படுவதையா நீங்கள் ஆதரிக்கின்றீர்கள். புலிகள் அழிவு என்பது அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வழியில் நிகழ்வது எம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இவர்களுடன் மக்களையும் சேர்த்தா பலியிட வேண்டும்? சொல்லுங்கள். மனதைத் திறந்து மனச்சாட்சியுடன் சொல்லுங்கள். அங்கு சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற முனையுங்கள்.  

 

பி.இராயகரன்
03.02.2009

 

சிறி

03.02.2009