திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள்

 

காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. நூற்றுக்கணக்கில் கூடி நின்ற மக்கள் மத்தியில் தோழர்கள் உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

அதே நேரத்தில் திருச்சி மலைக்கோட்டை வாசலில் உள்ள காங்கிரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் வாயிலில் மன்மோகன், ராஜபக்சே ஆகியோரின் “திருவுருவப் படங்களை” நிறுத்தி வைத்து அவற்றைச் செருப்பால் அடித்து மண்ணெண் ஊற்றி கொளுத்தினார்கள் தோழர்கள். ம.க.இ.க கிளைச் செயலர் தோழர் ராமதாசு தலைமையில் நடைபெற்ற இந்த செருப்படி வைபவத்தில் பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். மன்மோகன் சிங் செருப்படி பட்ட இடம் நகரின் மையமான கடைவீதிப் பகுதி என்பதால் அந்தக் காட்சியைக் காண கூட்டம் அலை மோதியது. மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் இந்நிகழ்ச்சிகள் அரங்கேறின. அனைத்தும் தொலைக்காட்சிகளின் படம் பிடித்து ஒளிபரப்ப பட்டன. மன்மோகனின் கொடும்பாவி கொளுத்தப்படும்போது காங்கிரசுக் கட்சி அலுவலகத்திலிருந்து அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு கேட்க தைரியமில்லை. பிறகு போலீசு வந்து கைது செய்து தோழர்களைக் கொண்டு சென்றனர். போராட்டம் உள்ளுர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்ப பட்டது. இதற்கு மேலும் கேட்காவிட்டால் மானக்கேடாகிவிடும் என்பதாலோ என்னவோ, 20,30 ஆட்களைத் திரட்டிக் கொண்டு ம.க.இ.க வுக்கு எதிராக தங்கள் கட்சி ஆபீசு வாசலிலேயே மறியல் நடத்தினார்கள் காங்கிரசுக்காரர்கள். “ம.க.இ.க வைத் தடை செய்! குண்டர் சட்டத்தில் கைது செய்! காங்கிரசு காரர்களுக்கு போலீசு பாதுகாப்பு கொடு” என்பவையே அவர்கள் எழுப்பிய முழக்கங்கள்.

 

இந்தக் கேலிக்கூத்தை போலீசுக் காரர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் மிகப்பெரும் நகைச்சுவை. “மறியலில் ஈடுபட்ட காங்கிரசு போராளிகளை” கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். “ம.க.இ.க வினர் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்கள் அவனை ஆதரித்து போராடுகிறீர்களா?” என்று ஒரு போலீசுக்காரர் காங்கிரசுக் காரர்களைக் கேட்க, கதர் சட்டைகளுக்கு ரத்தக் கொதிப்பு கூடி விட்டது. “அவர்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தினார்கள்” என்று கூச்சலிட்டார் ஒரு கதர்ச்சட்டை. காங்கிரசுக்காரர்களின் கேவலாமான நிலைமையைக் கேள்விப்பட்டு நகரின் காங்கிரசு மேயர் சாருபாலா தொண்டைமான் (கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த அதே தொண்டைமான் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்) போன்ற பிரமுகர்கள் திரண்டு விட்டனர்.

 

அதன் பிறகும் தோழர்களை சிறைக்கு அனுப்ப போலீசுக்கு மனமில்லை போலும். “நாங்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தவில்லை. ராஜபக்சேயைத்தான் கொளுத்தினோம். என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்களேன். எதற்காக அனாவசியமாக ஜெயிலுக்குப் போகிறீர்கள்?” என்றார் ஒரு போலீசு அதிகாரி. “நாங்கள் மன்மோகனைத்தான் கொளுத்தினோம். இனியும் கொளுத்துவோம்” என்றார்கள் தோழர்கள். முடிவு மூன்று பெண் தோழர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு திருச்சி மத்திய சிறை!

 

திருச்சியில் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்கெனவே கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மீண்டும் மாணவர்கள் போராடி அந்த நீக்கத்தை ரத்து செய்தனர். இப்பதோது சட்டக்கல்லூரியில் போராட்டத்தை பு.மா.இ.மு தொடர்கிறது. 27 மாணவர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

படங்கள்:

1

2

3

4

6

7

8

9

a

b

c

d

cong1

cong2

cong3

cong4

cong05