ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள்.

 

சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள் தம்மையறியாமல் தாமதிக்கின்றன. அனுமதி வழங்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய வந்து நிற்கும் காவல்துறையின் முகத்தில் ஈயாடவில்லை.
சென்ற வேலையை மறந்து ஆர்ப்பாட்டத்தை கவனிக்க நிற்கிறார்கள் மக்கள். முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. தெறிக்கும் தமிழர் இரத்தத்தின் புரவலன் யார், புரவலன் யார்? இலங்கை இராணுவம் கைகளிலே இருப்பதென்ன, இருப்பதென்ன? இந்திய அரசு சப்ளை செய்த துப்பாக்கிகள், ஆயுதங்கள்! இந்திய அரசே, காங்கிரஸ் அரசே, பதில் சொல், பதில் சொல்! நாடகம் வேண்டாம், நாடகம் வேண்டாம், நயவஞ்சக நாடகம் வேண்டாம்” கூர்ந்து கவனிக்கிறார்கள் பலர். வியந்து நிற்கிறார்கள் சிலர். மாட்சிமை தாங்கிய உலகத்தின் மாபெரும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் கொண்டாட்ட நாளன்று, அதன் அயோக்கியத்தனத்தை, அகிம்சை தரித்த கொலை முகத்தை தோலுரிப்பதா?

 

ஆம். ஜனநாயகக் குடியரசின் முகத்திரையை கிழிக்கும் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட எமது அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம்(ம.க.இ.க), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி(பு.ஜ.தொ.மு), விவசாயிகள் விடுதலை முன்ணணி(வி.வி.மு), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ணணி(பு.மா.இ.மு), பெண்கள் விடுதலை முன்ணணி(பெ.வி.மு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் அன்றுதான் களத்திலறங்கின. முதல் நாள் பு.ஜ.தொ.மு-வின் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பங்கேற்க வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம், மாநாடு முடிந்த இரவில், மறுநாள் காவல்துறை அனுமதியின்றி, சிங்களப் பாசிச அரசுக்கு துணைபோகும் நயவஞ்சக இந்திய அரசை அம்பலப்படுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள திட்டம் அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்காமல் பங்கேற்க முன்வந்தனர் தோழர்கள். அன்று இரவு ஆயிரக்கணக்கான தோழர்கள், ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் சென்னையின் பல இடங்களிலும் தங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் அன்று இரவு உறங்கினர். விரட்ட வந்த காவல்துறையை சாதுர்யமாகப் பேசி விரட்டியடித்தனர்.

 

மறுநாள் காலை, தோள்பைகளையும், குழந்தைகளையும் சுமந்து கொண்டு பட்டொளி வீசிப் பறந்த ஆயிரக்கணக்கான செங்கொடிகளோடு சில மணி நேரங்களில் போர்ப்படையாய் சைதையில் அணிவகுத்து நின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைவரும் செந்நிறத்தில் உடையணிந்து நிற்க, செம்படை அணிவகுப்பாய் சீறித் தொடங்கிற்று ஆர்ப்பாட்டம். போர்முழக்கமாய் தப்பு ஒலிக்க, காற்றை கிழித்துக் கிளம்பின முழக்கங்கள். சிவப்பு அலையாய் எழுந்து நின்ற தோழர்களைக் கண்டு உள்ளூர கலங்கி நின்ற காவல்துறை, ஒரு புறம்கைது செய்ய வேண்டும், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்” என தலைவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. மறு புறமோ இலங்கைக்குள்ள திரும்ப திரும்ப மூக்கை நுழைக்கிற, குப்புறக் கிடந்தான் ராஜீவ் காந்தி மறந்து போகுற!” என ம.க.இ.கவின் மையக் கலைக்குழு பாடிக் கொண்டிருந்தது. அந்த புனித நாளில் அந்தப் புனிதப் பாடலை சத்தியமூர்த்திப் பவனத்து கதர்ச்சட்டைகள் கேட்டிருக்க வேண்டும். மெய்மறந்து போயிருப்பார்கள்.

 

கிளிநொச்சி வீழ்ந்தது, முல்லைத்தீவு பிடிக்கப்பட்டது என ஒவ்வொரு நாளும் வெளிப்டையாக தமது குரூர மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் பார்ப்பனப் பத்திரிக்கைகளை அம்பலப்படுத்தி பேசத் துவங்கினார் ம.க.இ.கவின் மாநிலச் செயலாளர் மருதையன். 1983 முதல் தனது உளவு அமைப்புகளால் ஈழப் போராளி அமைப்புகளை கைக்கூலிகளாக்க முயன்றதையும், தான் முன்வைத்த துரோக ஒப்பந்தத்தை ஈழ மக்கள் புறக்கணித்த ‘குற்றத்திற்காக’ அமைதிப் படை என்ற பெயரில் தனது படையை அனுப்பி ஈழ மக்களை கொன்று குவித்தும், ஈழப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கிய வரலாற்றின் துயரத்தை சில வரிகளால் கோட்டுருவமாக எழுப்பினார். தமது தலைவனுக்காக செண்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் கதர்ச்சட்டை காலிகள் ஈழப்பெண்களின் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் என்றைக்காவது பதில் சொல்லியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.

 

இந்நிலையில் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் மக்களின் கோரிக்கையைப் பற்றி வாய் திறக்காமல், சோறு அனுப்ப இரங்கற்பா பாடும் கேவலத்தை திரைகிழித்தார்.ஏய் பிச்சையெடுப்பதற்கா நடக்கிறது அங்கே போராட்டம்? ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் அது” என கொதித்த குரலில் தகித்தது மண். இந்திய அரசை கைகூப்பி போரை நிறுத்த வலியுறுத்தும் மோசடியை அம்பலப்படுத்தினார். இந்திய அரசு குறைந்தபட்சம் போரை நிறுத்து என்று கூட சொல்லாது. ஏன் என்றால், டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது. ஏன் என்றால் அம்பானிக்கு அங்கே எண்ணெய்க் கிணறு இருக்கிறது. அந்துஜாவுக்கு சிமெண்ட் கம்பெனி இருக்கிறது. மித்தலுக்கு தொழில்கள் நடக்கின்றன. எனவே இந்தியத் தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக இந்திய அரசு மாமா வேலை பார்க்கிறது” என தெற்காசியாவின் பிராந்திய நாட்டாமையாக தன்னை நிறுவிக் கொள்ள முயலும் இந்திய அரசின் வர்க்க நலனை படம் பிடித்தார். தனது சொந்த நாட்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, அவர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளும் இந்திய அரசு, சிங்கூரிலும், நந்திகிராமிலும், ஒரிசாவிலும், கோவாவிலும் தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் மக்களை சுட்டுத் தள்ளிய இந்திய அரசு, ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என்பது பகற்கனவு மட்டுமல்ல, இந்திய அரசின் நயவஞ்சக கொலைவெறி முகத்தை மறைப்பதாகும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.உடனடித் தீர்வுகள் ஏதுமில்லை. எனினும் போராட்டம் தொடர்கிறது. ராஜபக்சே நினைப்பது போல புலிகளையும், பிரபாகரனையும் ஒழித்து விட்டால் ஈழப் போராட்டம் முடிந்து விடுமென்பது வீண்கனவு. மக்களுக்கு எதிரான எந்த அடக்குமுறையும் வென்றதில்லை. விடுதலைப் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் விடுதலைக்கான போராட்டம் தேதி குறிப்பிட்டு தொடங்கி, தேதி குறிப்பிட்டு முடிக்கப்படுபவையல்ல” என முழங்கினார். கண நேரம் பெரும் மழை பொழிந்த அமைதி நிலவியது.

 

கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன, இல்லை வென்றது இல்லை, இல்லை! இனவெறி ஆதிக்கம் வென்றது இல்லை!” என முழக்கங்கள் அதிர காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள் தோழர்கள். கம்பியிட்ட ஜன்னல்களின் வழியே செங்கொடி பறக்க முழக்கமிட்ட தோழர்களை ஏற்றியவாறு கடந்து சென்றன வாகனங்கள். எனினும் காற்றில் ஒலித்தவாறிருந்தன அடர்த்தியான குரல்கள். இதோ நேற்று பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கிறார். போரை நிறுத்துவதற்கு அல்ல, வெற்றியைக் கொண்டாட! இலங்கை அரசு கொக்கரிக்கிறது, கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வேடிக்கை பார்க்க அழைக்கிறது! துக்ளக் சோ சிரிக்கிறான், சுப்பிரமணிய சுவாமி குதூகலிக்கிறான், இந்து ராம் வாழ்த்துப்பா எழுதுகிறான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கிரிக்கெட் போட்டியில் டாஸ் ஜெயிப்பது எவ்வளவு முக்கியமென டோனி விளக்குகிறார். எல்லா சமயமும் நீங்களே டாஸ் ஜெயித்து விட முடியாது. காலங்கள் மாறும், மாறியே தீரும். இன்று நெறிக்கப்பட்டு கிடக்கும் ஈழமக்களின் குரல்வளைகளிலிருந்து தணியாத விடுதலைத்தாகம் பெரும் ஓலமாய் எழுந்தே தீரும். இது வரலாற்றின் விதி.

படங்களை பெரியதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்