சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம்

 அமைத்ததும், பல்லாண்டுகளாக அரசின் குப்பைத் தொட்டியில் கிடந்த மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதும் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.


அவரின் மரணத்தையடுத்துத் திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவைகளும், அறிவுஜீவிகள், தன்னார்வக் குழுக்களின் மனித உரிமைப்போராளிகள் போன்றவர்களும் "சமூகநீதிப் புரட்சியை ஏற்படுத்தியவர்' என்று ஏற்றிப் போற்றி, அவரைப் புனிதராக்குகின்றனர். சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?


வி.பி.சிங் தனது அரசியலை காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். தெலுங்கானாப் புரட்சி வெற்றிகரமாக நிலப்பங்கீட்டை நடத்தி முடித்திருந்த காலகட்டத்தில், எங்கே புரட்சித் தீ இந்தியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச் சத்தில் வினோபா பாவே ஆரம்பித்த மோசடித்தனமான "பூமிதான' இயக்கம்தான் இந்த முன்னாள் ராஜாவை காங்கிரசுக்குக் கொண்டுவந்தது.


பாசிஸ்ட் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியிடம் வி.பி.சிங் காட்டிய தீவிர விசுவாசமே அவரை படிப்படியாக முன்னுக்குக் கொண்டுவந்து, 1980இல் உ.பி. முதல்வராக்கியது. 1984இல் இந்திரா செத்த பிறகு, ராஜீவால் மத்திய நிதியமைச்சராக ஆக்கப்பட்டார். 1987இல் போபர்சு பீரங்கி ஊழல் அம்பலமானதையடுத்து, இவரது காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வந்தது.


காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?


அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?


1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?


கறைபடாதவர் எனப் போற்றப்படும் இவர், போபர்சு பீரங்கி விவகாரத்தில் காங்கிரசை விட்டு வெளியேறி ஜன மோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் தளபதியோ கிரிமினல் குற்றவாளியான சஞ்சய் சிங். இந்திய பாட்மின்டன் வீரர் சையது மோடியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சஞ்சய் சிங், 1988இல் லக்னோவில் மோடியைச் சுட்டுக் கொன்றான். இக்கொலை வழக்கு வி.பி.சிங் பிரதமரானவுடன் முடக்கப்பட்டது. ஜன மோர்ச்சா, அப்போதிருந்த உதிரிக்கட்சிகள் பலவற்றுடன் சேர்ந்து ஜனதா தளமானது. ஜனதா தளத்துக்கும் வி.பி.சிங் தலைவரானார். "திருவாளர் புதிய பரிசுத்தம்' அவர்களின் கட்சியிலோ தேவிலால், லாலுபிரசாத் யாதவ், தேவே கவுடா எனப் பெரும் ஊழல் பெருச்சாளிகள் மண்டிக் கிடந்தனர்.


பாசிச ராஜீவின் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங், குற்றவாளி ராஜீவ் கும்பலை விசாரிக்கவோ தண்டிக்கவோ செய்யவில்லை. காங்கிரசுக்கு மாற்று என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்துவெறி பயங்கரவாதக் கட்சியான பா.ஜ.க.வுடன் சிங் கூட்டணி கட்டினார். அதற்கு முன்பு வெறும் 2 எம்.பி.களை மட்டும் வைத்திருந்த பா.ஜ.க. இவரது உதவியால் 89 இடங்களில் வெற்றி பெற்றது. தனது ஆட்சியின்போது பா.ஜ.க. இட்ட வேலைக்கெல்லாம் தட்டாமல் சேவை செய்தார். இந்து பயங்கரவாதி ஜக்மோகனை பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் காஷ்மீரின் ஆளுநராக்கினார். ஜக்மோகன் பதவி ஏற்ற நாளிலிருந்து இந்திய ராணுவம் காஷ்மீரில் பச்சை இரத்தம் குடிக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் கொன்று வீதிகளில் வீசப்பட்டனர். நாடெங்கும் எதிர்ப்பு வலுத்த பின்னர் வேறுவழியின்றி சிங், ஜக்மோகனைத் திரும்ப அழைத்தார் . "அதிகாரத்தை நோக்கி உண்மை' பேசும் அ.மார்க்ஸ், வி.பி.சிங்கின் இந்துத்துவ சேவையை மறைத்துவிட்டு இடஒதுக்கீடு மட்டும் பற்றிப் பேசுவது ஏன்?


வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஒருமுறை கூட பாபர் மசூதி பிரச்சினையில் தனது நிலைப்பாடு எதுவென கூறியது கிடையாது. 1990இல் சோமநாதபுரத்தில் இருந்து அத்வானி தொடங்கிய இரத யாத்திரையை அவர் எந்த இடத்திலும் தடுக்க முயலவே இல்லை. யாத்திரை சென்ற இடமெல்லாம் இரத்தக் களறியை ஏற்படுத்தி, முசுலிம்களைக் கொன்று குவித்தது. அத்வானியின் இந்துவெறி இரத யாத்திரை உ.பி. மாநிலத்தில் மட்டும் 3 மாதங்களில் 600 பேர்களைக் காவு கொண்டது. அலிகாரில் மட்டும் 88 பேரைப் படுகொலை செய்தது. இவ்வாறு நாடெங்கும் இந்துவெறி பயங்கரம் ஆட்டம்போட்டபோதும், தனது நாற்காலி மட்டும் கவிழ்ந்து விடாமல் சிங் பார்த்துக் கொண்டார். கடைசியில் பீகார் எல்லைக்குள் இரத யாத்திரை நுழையும்போதுதான் லாலுபிரசாத்தின் அரசு அத்வானியைக் கைது செய்தது. உடனே வி.பி.சிங் அரசும் கவிழ்ந்தது. மண்டலுக்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர் என்று சிங்குக்குப் பட்டம் சூட்டும் பெரியார் இயக்கம், அவர் இப்படி இந்து மதவெறியைக் கண்டும் காணாமல் இருந்ததை விமர்சிப்பதே இல்லையே, ஏன்?


ராஜீவால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பத்தாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து, பாலியல் வல்லுறவுகளை நடத்தியது. சுமார் 3,000 வீரர்களைப் பலிகொடுத்துத் தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த இந்தியப் படையை இலங்கை அரசும் வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்து வந்தது. இன்னும் கேவலமாகத் தோற்பதை விட நாடு திரும்புவதே மேல் என்ற முடிவின் பேரில்தான் வி.பி.சிங், அந்தக் கூலிப்படையைத் திரும்பப் பெற்றார். ஆனால், அந்த முடிவை மட்டுமே மையப்படுத்தி, இவரை "ஈழத்தமிழர்கள் பால் நேசம் கொண்டவர்' என்று இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் சிலாகித்துக் கொள்கிறார்கள். ராஜீவ் காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதே பிராந்திய மேலாதிக்கத்தைத் தான் வி.பி.சிங்கின் அரசும் பின்பற்றியது என்பதையோ, காஷ்மீர், அசாம் மாநிலத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவரின் அரசும் கொடூரமாக நசுக்கிக் கொண்டிருந்தது என்பதையோ பேச இவர்கள் வாய் திறப்பதில்லையே, அது ஏன்?


1990இல் மண்டல் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டு வந்த வி.பி.சிங்கோ, மண்டல் முக்கியமாய் பரிந்துரைத்திருந்த நிலச்சீர்திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார். இதே வி.பி.சிங் தான் 198586இல் ராஜீவ் காந்தியின் அரசில் நிதியமைச்சராக இருந்தபோது, அதுவரை அரசு வேலை வாய்ப்புக்களைக் கணிசமாக உருவாக்கி வந்த, நேரு பாணி கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கைவிட்டு, தனியார்மயத்துக்கு ஆதரவான பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டினார். பின்னாளில் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் தனியார்மயம் முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும், ராஜீவ் அரசின் காலத்தில் இருந்தே அதற்கு அடித்தளம் போட்டவர் தான் வி.பி.சிங்.


2000த்திற்குப் பிறகு ஏற்பட்டு வரும் மக்கள் போராட்டங்களின்போது வி.பி.சிங் இன்னொரு அவதாரமும் எடுத்தார். எங்கெல்லாம் உலகமயம், தனியார்மயத்துக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டார். அங்கும் அவர் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் துரத்தி அடிக்கச் சொல்லிப் பேசவில்லை. நிலமிழந்தவர்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக இருந்தது. மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கும் அரசியல் அவரிடம் கிடையாது. தாராளமயக் கொள்கைக்கு மனிதமுகம் தரும்படி, தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதியாகத்தான் அவர் இருந்தார். இந்தப் புள்ளிதான் வீரமணியில் இருந்து அ.மார்க்ஸ் வரை உள்ள "சமூகநீதி' பக்தர்களையும் வி.பி.சிங்கையும் இணைக்கிறது.


கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அனைத்து அரசு வேலைவாய்ப்புகளையும் அடைத்துவிட்டது. ஆக, மண்டல் பரிந்துரையால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நடைமுறையில் எந்தப் பலனும் இல்லை. இருப்பினும், அது ஒரு சமூக நீதிப் புரட்சியை நடத்தி விட்டதாகக் கூறுவது, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றும் தந்திரமே.


ஒரு அரசியல் தலைவரை, எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனிமனிதப் பண்புகளையும் ஒருசில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து துதிபாடிப் போற்றுவதென்பது இன்னுமொரு மோசடியே.


· கவி