Mon04222019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

  • PDF
அன்பார்ந்த நண்பர்களே !

வினவுத் தளத்திலும் புதிய கலாச்சாரம் இதழிலும் மதம் தொடர்பாக வந்த கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

 

முன்னுரை

காலமும் சூழலும் மாறினாலும், வாழ்க்கைக்கான நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மதத்தின் கவர்ச்சி மட்டும் குறைந்தபாடில்லை. தொலைக்காட்சிகளின் பிரைம் டைமில் அழுகை சீரியல்கள் ஓய்ந்ததும், பின்னிரவில் விதவிதமான மூடநம்பிக்கை வியாபாரிகள் எண்ணிறந்த அபத்தங்களை கடவுளின் பெயராலும், ஆன்மீகத்தின் துணையுடனும் விற்பனை செய்யத் தொடங்குகின்றனர். கற்கால நம்பிக்கையின் பிரச்சாரக் கருவியாகி விட்டது கணினி.

மதத்தின் நவீனமயமாக்கத்தில் வேறுபாடுகளில்லாமல் எல்லா மதங்களும் மக்களின் மூளையை சலவை செய்து வருகின்றன. சபரிமலைக்கு மாலை போட்டுத் தயாராவதாக இருக்கட்டும், வருடத்தில் இரண்டுமாதங்கள் மட்டும் இயற்கையாக உருவாகும் பனிக்கட்டியை சிவலிங்கமாகப் புனைந்து வழிபடுவதற்காக அமர்நாத்திற்கு செல்வதாக இருக்கட்டும், மெக்காவுக்கு புனித யாத்திரை போவதாக இருக்கட்டும், அழகுப் போட்டியின் கேள்விகளால் அன்னை தெரசாவை அலங்கரிப்பாதாக இருக்கட்டும், வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தீர்வு தருவதாக மாயையூட்டும் ரவிசங்கரின் வாழும் கலை பேக்கேஜாக இருக்கட்டும் .. எல்லாம் ஆண்டுதோறும் பெருகியபடியே உள்ளன.

 

vbf3

 

மறுகாலனியாதிக்கம் திணித்திருக்கும் வாழ்க்கைச் சூழலில், கூண்டில் அடைபட்ட கிளிகளாகக் காய்ந்த பழங்களைப் புசித்துப் பசியாறும் மக்களுக்கு, சுரண்டல் லாட்டரியின் மகிமையை காட்டுகின்றன மதத்தின் நவீன வடிவங்கள். இந்த மாயவலையில் அதிகமும் சிக்கியிருப்பவர்கள், அறிவாளிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க மக்கள்தான். மக்கள் கடைத்தேறுவதற்கு மதம் உதவாது என்ற உண்மையைப் பல கோணங்களில், பல முறை நிறுவவேண்டிய தேவை இருப்பதனால், இந்தக் கட்டுரைகளை தனியொரு நூலாக வெளியிடுகிறோம். ‘நமீதா அழைக்கிறார் - நாசரேத் ஆயர்’ என்ற கட்டுரையும், ஷகிலா : பர்தா கண்ணியமா? கவர்ச்சி சுதந்திரமா? என்ற கட்டுரையும் எமது தோழர்கள் நடத்தும் ‘வினவு’ எனும் இணையத்தளத்தில் வெளிவந்தன. மற்ற கட்டுரைகள் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தவை.

சபரி மலையில் அரசாங்கமே ஸ்பான்சர் செய்து நடத்தும் மகர ஜோதி, அமர்நாத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் ஐஸ் லிங்கம் போன்று தெரிந்தே செய்யப்படும் மோசடிகள் பக்தியைப் பிழைப்புவாதம் கலந்த நுகர்வுக் கலாச்சாரமாக மாற்றியிருப்பது, கடவுள்- ஆன்மீகம் போன்ற சங்கதிகள் எல்லாம் மூளையில் ஒரு மடல் ஆற்றும் வினைகளே என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவும் கட்டுரை, நவீன சாமியார்கள் அளிக்கும் யோகப் பயிற்சிகள் எதுவும் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க வக்கற்றவை என்பதை உளவியல் நோக்கில் நிறுவும் கட்டுரை, இப்போது புனிதராகும் முயற்சியில் இருக்கும் அன்னை தெரசாவின் மனதில் கர்த்தர் கேள்விக்குறியாகத் தொங்கிக் கொண்டிருந்ததை அம்பலமாக்கும் கட்டுரை, நடிகை ஷகிலா பர்தா அணிந்து வந்தது குறித்து இசுலாமிய மதவாதிகள் கொண்ட கோபத்தின் உள்ளே உறையும் ஆணாதிக்கம், ஒரு நகைக்கடையை திறந்து வைப்பதற்காக வந்த நடிகை நமிதாவுக்காகக் காத்திருந்த நாசரேத் ஆயரின் ‘பாவம்’ என மத நம்பிக்கைகளை, அவற்றின் சமூக வெளிப்பாட்டின்  பல வகையான கோணங்களிலிருந்தும் அம்பலமாக்கும் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

விண்ணுலகில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்தின் மூலம் மதம் குறித்த பிரச்சினை எப்போதுமே தீர்க்கப்படுவதில்லை. ஏனென்றால் கடவுள் மண்ணுலகில் இருந்து கொண்டு, பல்வேறு வகையான மனிதர்களின் மூலமல்லவா மக்களை மயக்கிக் கொண்டிருக்கிறார்? கடவுள் ‘குடியிருக்கும்’ அத்தகைய கோயில்களை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து அவை அனைத்திலிருந்தும் அவரை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. அத்தகைய சில மறைவிடங்களிலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியே இந்த வெளியீடு.

தோழமையுடன்

ஆசிரியர் குழு,

புதிய கலாச்சாரம்,

ஜனவரி, 2009.

பக்கம் - 56, விலை ரூ.25

இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

 

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044 - 2371 8706 செல்பேசி : 99411 75876

 

 

கீழைக்காற்று வெளியீட்டகம், 
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
தொலைபேசி: 044 - 28412367

 

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Last Updated on Tuesday, 06 January 2009 19:49