த.மு.எ.ச. மாநாடு : கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து !

சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், “வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை”  என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்காக நடத்தும்

 பிரச்சாரமோ என்று நாம் கருதிக்கொண்டு அருகில் போய் பார்த்த பிறகுதான், அது  சி.பி.எம். கட்சி சார்பு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டு விளம்பரம் என்பது தெரிந்தது.   மாநாடு நடைபெற்ற கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் கலை நுணுக்கம் மிக்க பல கருத்தோவியங்களையும், கவிதை வீச்சுக்களையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

“எல்லாப் பேன்களையும் நசுக்கியாச்சு. அட்டைகளை?” என்று அவர்களின் கவிதை தெருவெங்கும் கேள்விகேட்டது. தமிழகத்தையே உறிஞ்சும் அட்டையான பாசிச ஜெயாவோடு  கூட்டணி கட்டியிருக்கும் சி.பி.எம். செயலாளர் என்.வரதராசன் மட்டும் இதைப் பார்த்திருந்தால்…..?

இன்னொரு கருத்தோவியம் நடைபாதைப் பழவியாபாரியுடன்; “நேற்று வண்டியில் விற்றாய். இன்று கூடையில்; நாளை….? தூரத்தில் சிரிக்கும் வால்மார்ட்” என்று சொன்னது. கேரள மாநிலத்தில் ‘தோழர்களின்’ ஆசியுடன் நூற்றுக்கணக்கில் திறக்கப்பட்டிருக்கும் ‘ரிலையன்ஸ் பிரஷ்’ நமது நினைவுக்கு வந்து தொலைத்தது.

தெருவெங்கும் வைத்திருந்த ஓவியங்களில் சிறுமிகள் கிழிந்த துணிகளுடன் ஏங்கிக் கொண்டிருந்தனர்.  அதேநேரத்தில், சென்னையின் ஜவுளிக்கடலான ‘சென்னை சில்க்ஸ்’சின் முதலாளி நமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஊர்வழி போவதற்கென்று ஆளுக்கொரு கருப்பு ‘டிராவல் பேக்’ கொடுத்திருந்தார்.

தேர்ந்தெடுத்த முற்போக்குக் கவிதைகளைத் தியேட்டருக்கு உள்ளே கொடியில் துணி துவைத்துக் காயப்போடுவதைப் போலத் தொங்க விட்டிருந்தனர். அவற்றில் பிற்போக்குக் கழிசடை கண்ணதாசனும் இடம் பெற்றிருந்தார்.

அருகிலேயே ஒரு வண்ணப்படமும் இருந்தது. அதில் செங்கற்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் சித்தாள் பெண்மணியும்,“நம்பிக்கையோடு இரு. நாளை உன் கனவும் வீடாகும்” என்ற வாசகமும் கீழே ‘மராட்டிய வங்கி’யின் பெயரும் இருந்தன.

நன்கொடை தந்த வங்கியின் வீட்டுவசதிக்கடன் விளம்பரத்தையே இங்கு வைத்துவிட்டார்களோ என்ற மயக்கம் எழுந்தது.

அரங்க வாயிலில் நமது கண்ணில் பட்டதோ யுனைடெட் இன்சூரன்சு, பி.எஸ்.என்.எல்., ரெப்கோ வங்கி விளம்பரங்கள். இந்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்று கூடி ஜனநாயகப் புரட்சியை நடத்த த.மு.எ.ச.வுக்குக் கை கொடுக்க முன்வந்துவிட்டதை நினைக்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது.

வாழ்த்துரை வழங்க சகல தரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்திருந்தனர்.  மத்தியில் கூட்டணியை விட்டு விலகிவிட்டாலும்,  பெருநிதி புழங்கும் மைய அரசின் நிறுவனமான செம்மொழி ஆய்வு மையத்துடன் த.மு.எ.ச. இணைந்து சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருவதால், அந்த நன்றியுணர்வுடன் அந்த மையத்தின் முனைவர் ராமசாமியையும் ஆசிவழங்க அழைத்திருந்தார்கள்.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் முதல் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ அரசைக் கவிழ்த்ததில் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் பங்கு பற்றிய புதிய நூலை அரங்குக்கு வெளியே  விற்றுக்கொண்டிருந்த இவர்களே, சி.ஐ.ஏ.வின் பிரதியான போர்டு பவுண்டேசன் நடத்தும் அம்பேத்கர் ஆய்வு மையம் (பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம்) சார்பாக தர்மராஜனை  ஆசிவழங்க அழைத்திருந்தனர் .

த.மு.எ.சங்கத் தலைவர் அருணன், சங்கத்துக்கும் கோடம்பாக்கத்துக்கும் உள்ள பாரம்பரியத்தை எளிமையாக விளக்கி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். மறைந்த கோமல் சுவாமிநாதன், சங்கத்துக்கும் சினிமாக்காரர்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தார் என்றார். என்ன இருந்தாலும் எழுத்தாளர் அல்லவா? புரோக்கர் வேலைன்னு மக்கள் மொழியில் கொச்சையாகவா சொல்ல முடியும்? “கோமலுக்குப் பின்னர் சினிமாவில் இருப்பவர்கள் நம்மோடு நேசத்தோடு இருக்கிறார்கள். நம்ம செயலாளரோட கதை கூட படமாக்கப்பட்டு வெற்றிநடை போடுகிறது” என்று அவர் சொன்னதும் அரங்கமே, கைதட்டலால் அதிர்ந்து போனது.

கருத்து வேறுபாடுகளையும் அனுமதிக்கும் அமைப்பு இது எனக் காட்டுவதாக, “மும்பையில் தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிட்டு மடிந்தவர்களுக்காக நாம் மெழுகுவர்த்தி கொளுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாட்டுக்காகத் தினமும் சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கிச் சாகின்றவனை கவனக்குறைவால் இறந்ததாகச் சொல்லுகிறோம்” என்று மெழுகுவர்த்தி கொளுத்திய சி.பி.எம். கட்சியைக் கண்டித்தார், ஆதவன் தீட்சண்யா. அடுத்து அவர், நந்திகிராமில் தமது கட்சி செய்த படுகொலையைச் சாடிவிட்டு, அங்கே கொல்லப்பட்டவர்களுக்கு மெழுவர்த்தி ஏற்றச் சொல்லுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அதிலிருந்து ஒரே தாவாய்த் தாவி விளிம்புநிலை மனிதர்களான அரவாணிகள் பற்றியும் உதிரிகள் பற்றியும் நாம் அனுதாபம் கொள்ளவேண்டியதன் அவசியத்தைச் சொல்லிப் போய்விட்டார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சம்பத், “வன்கொடுமைக்கு எதிராகப் புகார் கொடுத்தால் மேல்சாதியினர் உடனே ‘கௌன்டர் பெட்டிசன்’ (எதிர் மனு) போடுகின்றனர். “கௌன்டர்” என்று நான் குறிப்பிடுவதை தயவு செய்து கோவைப் பகுதி தோழர்கள் தவறாக எடுத்துக் கோபித்துக் கொள்ளவேண்டாம்” என்று இன்னமும் கவுண்டர்களாக இருக்கும் கோவைத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாநாட்டின் மைய நோக்கங்களாக மதவெறி எதிர்ப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, பெண் விடுதலை, தலித் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என முன்னர் அறிவித்திருந்தனர்.  இன்றைக்கு உழைக்கும் மக்களை ஒன்றுபடவிடாமல் முனைப்பாக இயங்கி வருவது இந்துவெறிப் பாசிசம்தான் என்பதை வரையறுக்காமல், யார் மனமும் நோகாதபடி மொன்னையாக மதவெறி எதிர்ப்பு என முதலில் சொன்னவர்கள், சென்னைபோரூரில் இந்து முன்னணியினரிடம் அடிவாங்கி வந்தது நினைவுக்கு வந்ததாலோ என்னவோ, அதனையும் மாற்றி “வேற்றுமையில் ஒற்றுமை” என்று சொல் லி விட்டார்கள். கூட்டத்தில் பேசிய ஓர் எழுத்தாளரும் “இந்தியாவில் சமீபகாலமாக மதவெறியினால் மாண்டு போகிறவர்கள் அதிகமாகி விட்டனர்” என்று வருத்தப்பட்டார்.

எந்த மதவெறி என்று சொல்லவும் கூச்சம். இறுதியாக மதவெறியை ஒழிக்க காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஐ, “மதவெறி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக”க் கடைப்பிடிப்பதெனத் தீர்மானித்தனர்.

போகிறபோக்கில் புஷ் மீது காலணிகள் வீசப்பட்டதைப் பற்றிப் பேசிக் கைதட்டல்  வாங்கிக் கொண்டதைத் தவிர,  ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் என எதையும் அறிவிக்கவில்லை. கோக்கோ கோலா விளம்பர நாயகன் அமீர்கானை மாநாட்டுக்கு அழைத்து வருவதாகத்தான் முதலில் திட்டம் இருந்தது என்பதில் இருந்தே, இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும்  பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும்  சேர்த்துக்குவோம்;  இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக  உள்ளது .

த.மு.எ.ச. செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் ‘ஆண்களுக்கான சமையல் குறிப்பு’ நூலில் ‘மிச்சம் மீதியாகும் எல்லாக் காய்கறிகளையும் பருப்பையும் அரிசியையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கும் கதம்பக் கூட்டுச் சோறு’ பற்றிய சமையல் குறிப்பு ஒன்று உண்டு. அதே சமையல் குறிப்பை மாநாட்டுக்கும் பொருத்திப் பார்த்து   கலவையான கொள்கைக் கூட்டு ஒன்றைச் சமைத்திருக்கிறார்கள். பத்தியம் கருதியோ என்னவோ மார்க்சியப் பார்வையை அஞ்சறைப் பெட்டிக்குள் மறக்காமல் ஒளித்து வைத்து விட்டார்கள்.

இந்த மாநாட்டில் த.மு.எ.ச. என்ற பெயரை, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம்” என மாற்றி இருக்கின்றனர். இதை மனதில்வைத்துத்தான் பொன்னீலன் தனது வாழ்த்துரையில் ‘நாம் ரொம்பப் பெரியதாய் வளர்ந்திருக்கிறோம்’ என்று மெய்சிலிர்த்தாரோ!

இலட்சக்கணக்கில் செலவு செய்து கோடம்பாக்கத்தில் கூட்டப்பட்ட மாநாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை  இப்போது சினிமாக் கலைஞர்கள் பலரும், இயக்குநர்கள் பலரும் நம்மோடு வெகு நெருக்கமாயிருப்பதைப் பார்க்கும்போது நாம் எடுத்த முடிவு சரியானதுதான் என்பது உண்மையாகி இருக்கிறது’ எனத் தமிழ்ச்செல்வனும், ‘கோடம்பாக்கத்துக் கலைஞர்கள் பெருவாரியாக எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்’ என நன்மாறனும் இறுதி நாளில் குறிப்பிட்டனர். மேலும், அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டு விட்டதால், புரட்சிக்கு கோடம்பாக்கத்தில் ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கப் போகிறார்கள். இனிவரும் கலை இரவுகளில் விஜய் முதல் நமீதா வரை பலரும் பங்கேற்கலாம். இனி, அடுத்த கலை இரவு எங்கே இருக்கும்? ஏவிஎம் ஸ்டுடியோவிலா?

இருந்தாலும், த.மு.எ.க.ச.வின் இந்தத் திட்டம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போலத்தான். 35 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வேலையை வெகு எளிதாகச் செய்துவிட்டார்  போலி கம்யூனிசத் தலைவரான கல்யாணசுந்தரம். முன்னணி நடிகரான எம்.ஜி.ஆரை வளைத்துப் போட்டு, அவரையே புரட்சித் தலைவராக்கி விட்டார்.  இதற்காக அவர்   மாநாடோ, கலை இரவோ நடத்தவில்லை.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2009 (அனுமதியுடன்)

தொடர்புடைய இடுகைகள்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!