சிறிலங்கா பேரினவாத அரசின் ஆணாதிக்க படைகள், தாம் யுத்த முனையில் கைப்பற்றிய பெண் புலி உறுப்பினர்களின் உடலை நிர்வாணப்படுத்தி, அதை தம் பாலியல் வக்கிரத்துடன் கொத்தித் தின்ற ஒரு வீடியோ ஆவணத்தை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த நிகழ்வுக்கு எதிரான கண்டனங்கள், போராட்டங்கள் அரசியல் உள்நோக்குடன், குறுகிய தம் அரசியல் வக்கிரத்துடன் பொதுவாக தவிர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் தான் பெண்ணியல்வாதிகள் என்று தம்மைத் தாம் கூறித் திரிந்தவர்கள், இதற்கு எதிரான எந்த விதமான எதிர்ப்பும் எதிர்வினையுமின்றி உள்ளனர். இதை தம் அரசியல் வக்கிரத்துடன் கூடிய பெண்ணியத்தின் பின், மூடிமறைக்கின்றனர்.

 

இலங்கை பெண்ணியல்வாதிகள் முதல் புலம்பெயர் பெண்ணியல்வாதிகள் வரை, இந்த பேரினவாத வக்கிரத்தை கண்டுகொள்ளாதவர்களாக இருப்பதும், இதில் உள்ள அரசியல் சூக்குமமும் வெளிப்படையானது.

 

இவர்களின் பெண் அரசியல், மக்களைச் சார்ந்ததல்ல. குட்டிபூர்சுவா எல்லைக்குள் சொந்த மன வக்கிரங்களை கொட்டிப் புலம்பி ஓப்பாரி வைப்பதுதான், இவர்களின் உயர்ந்தபட்ச பெண்ணியமாக இருந்தது. மக்களுடன் சேர்ந்து இயங்கும் பெண்ணியத்தை நிராகரித்தவர்கள், அந்த மக்களின் சுமைகளுடன் சேர்ந்து குரல்கொடுத்தது கிடையாது. இதனால் பேரினவாத இராணுவத்தின் செயல், இவர்களின் பெண்ணியத்தில் அடங்குவதில்லை.

 

இப்படி இலங்கை முதல் புலம்பெயர் பெண்ணியல்வாதிகள் வரை தமிழ் பெண்களின் அவலங்களையிட்டு வாய் திறக்க தயாரற்றவர்கள், எப்படித்தான் அதை செய்யமுடியும்;.   மகிந்தவின் மடியில் முந்தானையை அவிழ்த்து போட்டுவிட்டு அரசியல் செய்கின்றது முதல் சொந்த புலம்பலை பெண்ணியமாக பேசுகின்றவர்கள், தம் சொந்த குறுகிய அரசியல் எல்லையில் மனித விரோத ஆணாதிக்க சமூகக் கூறுகளை மூடிமறைக்கவே செய்கின்றனர்.

 

பி.பி.சி முதல் சில இணையங்கள், இணையம் ஒன்றில் வெளிவந்தாக கூறி (எம் இணையத்து பெயரை மூடிமறைத்து), தம் சொந்த குறுகிய அரசியல் எல்லையில் இதை இன்று கண்டிக்குமளவுக்கு அல்லது கருசனை எடுக்குமளவுக்கு கூட, பெண்ணியல்வாதிகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கக் கூடத் தயாரில்லை. (விதிவிலக்காக ஊடறு மட்டும் இதை தன் செய்தியாக்கியது) 

 

பேரினவாத பாசிசம் முதல் புலிப் பாசிசம் வரையிலான எல்லைக்குள் தமிழினம் சந்திக்கின்ற பல்வேறு நெருக்கடிகள், அவலங்கள், துயரங்களையிட்டு யாரும் நேர்மையாக குரல் கொடுத்;ததும் கிடையாது, போராடியதும் கிடையாது. இதே போல் தான் பெண்ணியம் பேசியவர்களும், தமிழ்பேசும் பெண்களின் பெண்ணியத்தை பேசியது கிடையாது.

 

பேரினவாதம் தன் சொந்த இனவாத பாசிச வக்கிரத்தை ஆணாதிக்கமாக இராணுவத்தில் ஊட்டி வளர்த்துள்ளது. தமிழ் பெண்கள் மேலான கற்பழிப்பு முதல் இறந்த பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி மேய்வது வரை, இவை இராணுவத்தின் மொழியாகின்றது.

 

கிருசாந்தி கற்பழிப்பாகட்டும், கற்பழித்த கோணேஸ்வரியின் பெண் உறுப்பில் கிறனைட்டை வைத்து பெண் உறுப்பை தகர்த்தாகட்டும், எல்லாம் பயங்கரவாத புலி ஒழிப்பின் பெயரில்தான் அரங்கேறியது.

 

இந்த பயங்கரவாத ஒழிப்பின் பெயரில் கைது செய்யப்படும் பெண்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதுடன், பெண் உறுப்புகளை படம்பிடித்து அதை ரசித்து சுற்றுக்கு விடுவது வரை, இவை அனைத்தும் பயங்கரவாத ஒழிப்பு என்கின்;றது. இதன் ஒரு அம்சமாகத்;தான் இறந்துபோன பெண்ணின் உடலை மேயும் காட்சியை. மகிந்த சிந்தனையிலான புலிப் பயங்கரவாத ஒழிப்பு, இப்படியும் நடத்துகின்றது.

 

இதை எல்லாம் மூடிமறைப்பதில் தான், பெண்ணியமும் பூத்துக் குலுங்குகின்றது. அருவருக்கத்தக்க பூர்சுவா புலம்பலை பெண்ணியமாக்கி, இது போன்ற குற்றங்களை மூடிமறைப்பதே இன்று பெண்ணியமாகிவிடுகின்றது.

 

மகிந்தாவின் வேட்டியில் தம் சீலைத் தலைப்பைக் கட்டிக் கொண்டு பெண்ணியம் பேசுபவர்களும், அவர்களுடன் ஒன்றாக கூடி கும்மாளம் போடும் பூர்சுவா பெண்ணிய புலம்பலாகட்டும், உண்மையான தமிழ் பெண்ணின் துயரத்தை பேசமறுத்து அதை மூடிமறைப்பதைத்தான், இவர்கள் பேசும் பெண்ணியம் அரசியலாகின்றது.

 

பெண்கள் சமூகத்தில் சந்திக்கின்ற பிரச்சனைகளை இனம் காணவிடாது தடுத்து, அவர்களை ஆணாதிக்கத்துக்குள் தக்க வைத்துக்கொள்வது தான் இன்றைய பெண்ணியம். அதையே இன்று இதை மூடிமறைப்பதன் மூலமும், மறுபடியும் செய்கின்றனர். இவர்களை இதற்கு ஊடாக இனம் காண்பது, சமூக அக்கறை உள்ளவர்களின் இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

 

பி.இரயாகரன்
31.12.2008