பாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை உணர்த்த விரும்பினோம். அதை கொள்கை அளவில் ஏற்க வைத்தோம்.

 

 

இந்த வகையில் தலித் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் அரசியல் ரீதியாக கடைப்பிடித்த சூக்குமத்தை, உடைத்தெறிந்தோம். சந்தர்ப்பவாதமாக நழுவும் விலாங்குத்தனத்தை உடைத்துப்போடுவது அவசியமாக இருந்தது. புலியெதிர்ப்பே தலித்தியம், என்ற மாயையை, அது சார்ந்த ஒருங்கிணைவை உடைத்துப் போட வேண்டியிருந்தது. எமக்கு கிடைத்ததோ 5 நிமிடங்கள் தான். நான்கு பிரதானமான விடையங்களைக் கவனத்தில் கொண்டோம்.

 

1. தலித் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தாம் எந்த அரசியலும் அற்றவர்கள் என்றனர். இதையே அவர் ரீ.பீ.சி.யிக்கு வழங்கிய பேட்டியிலும் சொல்லியிருந்தார். அதையே அன்றைய கூட்டத்திலும் சொன்னார். இந்த விடையம் கூட்டத்தில் மற்றவர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் தாம் எந்த இயக்கத்துடனும் இல்லை என்பதைத் தான், இப்படி சொன்னதாக கூறினார்.

 

இந்த இரண்டு வாதத்திலும் உள்ள சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்ட தெளிவின்மையையும், நழுவும் சூக்குமத்தையும் உடைத்தோம். இந்த வாதமே சந்தர்ப்பவாதம் மட்டுமின்றி, சுற்றிவளைத்து சில புலியெதிர்ப்பு பிரிவை சமாளிக்கின்ற உத்தி என்பதை அம்பலப்படுத்தினோம்.

 

மாறாக நேரடியாக இதை அம்பலப்படுத்தி, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம். இன்றுள்ள எந்த இயக்கமும், எந்த அரசியல் கட்சியும், எந்த அரசும் தலித் மக்களுக்கு எதிரானது. அது சாதிய ஒழிப்பைச் செய்யாது. தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்காது. மாறாக அதை பாதுகாப்பவை தான். இதை தெளிவாக அறிவிக்கத் தவறின் தலித் மாநாடு கொள்கை ரீதியான சந்தர்ப்பவாதமாகும். தலித் மாநாடு அரசியல் ரீதியாக தன்னை அறிவிக்க வேண்டியிருந்தும், சந்தர்ப்பவாதத்தால் மூடிமறைத்ததை சுட்டிக் காட்டினோம்.

 

எனது இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தலித் ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த எல்லைக்குள் தலித் மக்கள் தமது முதல் வெற்றியை, தலித் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து கொள்கையளவில் பெற்றனர்.

 

2. தலித் மக்களின் இரண்டாவது வெற்றி என்பது, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசுபவர்கள் சாதியை ஓழிக்க முன்வரமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டது தான். எமது இரண்டாவது தெளிவுபடுத்தல் இதுதான். புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, ஆதிக்க சாதியினரின் ஜனநாயகம் தான். அவர்கள் கூட தலித் மக்களின் பிரச்சனையை தீர்க்கமாட்டார்கள். சாதியை ஒழிக்க முன் வரமாட்டார்கள். சாராம்சத்தில் தலித்திய ஒடுக்குமுறையை மேலிருந்து பாதுகாப்பவர்கள். இதனால் தான், தலித் மாநாடு தனியாக நடக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினேன். பலத்த கரகோசத்துடன், இந்தக் கருத்தை இம் மாநாடு ஏற்றுக்கொண்டது. தலித் ஏற்பாட்டாளர்களும் எனது இந்தக் கருத்தை அங்கீகரித்தன் மூலம், தலித் மக்களின் இரண்டாவது வெற்றி கொள்கை ரீதியாக உறுதி செய்யப்பட்டது.

 

3. தலித்தியம் எதிர் தேசியம் என்ற மையவாதம், அங்கு தீர்மானகரமாக தகர்க்கப்பட்டது. பலரும் இதுவே தமது தலித் மற்றும் பாசிச ஒழிப்பு நிலையாக கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இதை சுக்கு நூறாக்கிய எமது வாதம், கேள்விக்குள்ளாகவில்லை.

 

புலியெதிர்ப்பு சமன் தலித் என்ற அடிப்படையில் தான், எல்லா இயக்க புல்லுருவிகளும் அங்கு குழுமினர். அங்கு அதை நிறுவத் தான் முனைந்தனர். தலித் மக்களை ஒடுக்குகின்ற புலியெதிர்ப்பு ஆதிக்க சாதிகள், தமக்கு ஜனநாயகத்தை மூகமூடியாக்கிக் கொண்டனர்.

 

இந்த அரசியல் மோசடியை நாம் உடைத்துப் போட்டோம். தலித்தியம் எதிர் தேசியம் என்ற அடிப்படையில், தேசியத்தை வரையறுக்கின்ற அளவுகோல் பொய்யானது போலித்தனமானதும் என்பதும், அது அரசியல் கபடத்தை அடிப்படையாக கொண்டது என்பதை சுட்டிக்காட்டினோம்.

 

தேசியம் என்பது பிரபாகரனும் புலிகளும் கட்டமைத்த தேசியம் என்ற கேள்வியூடாகவே, இந்த வரையறையை உடைத்தோம். அவர்கள் வரையறுத்து நடத்துவதே தேசியம் என்றால், புலியிசத்தை தேசியமாக காட்டும் புதுக்கோட்பாட்டை எழுதி முதலில் வையுங்கள் என்று சவால் விடுத்தோம்.

 

தேசியம் என்றால் புலியிசம் என்ற வரைவிலக்கணத்தை முன்னிறுத்தி, அதற்கு எதிராக தலித்தியதை நிறுவுவது என்பது தவறு என்றோம். இது அப்பட்டமான ஆதிக்க சாதிகளின் மற்றொரு சதியே என்பதை சுட்டிக்காட்டி, அதை உடைத்தோம். தேசியம் சமன் புலியிசம் என நிறுவ, முன்னாள் புலியாக இருந்த ராகவன் அதே புலியாகவே தேசியத்தை சித்தரித்து ஒரு கட்டுரையை முன்வைத்தார். அதன் போலியான புலியெதிர்ப்பு, புலியிசத்தை அம்பலப்படுத்தினோம். அதை தனியாக பின்னால் பார்ப்போம். இப்படி மூன்றாவது தளத்தில், தலித் மக்களின் நலனை அடையாளப்படுத்தினோம்.

 

4. தலித்மாநாடு புறக்கணித்த, உண்மையான தலித் போராளிகள் நினைவுகளை, அவர்களின் தியாகத்தை அங்கு நாம் முன்னிறுத்தினோhம். 1970க்கு முந்தைய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தியாகத்தை அடையளப்படுத்தி தலித் மாநாடு, பிந்தைய வரலாற்றை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தது. இதற்கு பிந்தைய தலித்தியப் போராட்டத்தை மறுத்தது, தலித்திய உணர்வுக்கு எதிரானது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். 1970க்கு பிந்தைய பத்தாண்டுகளின் இறுதியிலும், 1980 க்கு பிந்தைய பத்தாண்டுகளின் முற்பகுதியிலும், தலித்திய அடிப்படையாக கொண்ட கூர்மையான ஒரு போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு தப்பி ஒடினர். பலர் அரசியல் ரீதியாகவே ஒதுங்கினர். சிலர் மாற்று வழிகளைத் தேடினர். உண்மையில் தலித்திய விடுதலைக்கான பாதை தோற்கடிக்கப்பட்டது.

 

இதன் மூலம் தான் வலதுசாரிய பாசியம் தேசியமாகியது. அனைத்து பெரிய இயக்கமும் வலதுசாரியத்தை தமது அரசியலாக கொண்டது. பாசிசம் படிப்படியாக, அதன் அரசியலாகியது. அழிக்கப்பட்ட இந்த தலித்திய போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த, அதை நினைவு கூர மறுத்த, அதை தனது போராட்ட பாதையாக ஏற்க மறுத்த, பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தினோம். இதை மூடிமறைப்பது, பாதுகாப்பது படுபிற்போக்கானது என்பதை சுட்டிகாட்டினோம். உண்மையான தலித்தியவாதிகளாக, நாம் நிமிர்ந்து நின்று இதைச் செய்தோம்.

 

இப்படி நான்கு பிரதானமான விடையத்தை 5 நிமிடத்தில் தெளிவுறுத்தியதன் மூலம், தலித்திய மக்களின் நலனை முன்வைத்தோம். இதன் அடிப்படையில் தலித்திய மக்களின் எதிர்கால நலன்களை முன்நிறுத்த கோரி, தலித்திய ஏற்பாட்டாளர்களை சிந்திக்கத் தூண்டினோம். கொள்கையளவிலான இந்த வெற்றி, தலித் மக்களின் முதல் வெற்றி. இதைத் தலித் மாநாடு எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், எமது தலித்திய நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியிலான முதல் வெற்றியாகும்.

 

பி.இரயாகரன்
27.10.2007