செப்டம்பர் 29, 2008 அன்று நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாக்கூர், புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரமேஷ் உபாத்யாய், இராணுவப் பணியிலிருக்கும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோகித் மற்றும் தீவிர இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

 
 மராட்டியப் போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவின் கையிலிருக்கும் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்படி அந்தப் பெண் சாமியாரும் இந்த வழக்கில் இன்னமும் தலைமறைவாக இருக்கும் ராம்ஜி கல்சங்க்ராவும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்: "என்னுடைய வண்டி குண்டுவெடிப்புக்குப் பயன்பட்டிருக்குமேயானால், ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் இறந்திருக்கிறார்கள்?'', என்று பிரக்ஞா கேட்டதற்கு கல்சங்க்ரா, "அந்தக் கூட்டத்தின் நடுவில் வண்டியை நிறுத்த என்னால் முடியவில்லை'' என்று பதிலளிக்கிறார்.


 ஒருவேளை அப்படி நிறுத்தியிருந்தால் ஐந்து பேருக்குப் பதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்சாமியாருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிய இந்து மதவெறியர்கள் இப்போது இவருக்கு ஆதரவு கொடுப்பதில் போட்டி போடுகிறார்கள். காரணம் வர இருக்கும் தேர்தலில் இந்து அலையைக் கிளப்பி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான். பிரக்ஞா தீவிரமான மதவெறியைக் கக்கும் பிரபலமான பேச்சாளர். சென்ற முறை குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியுடன் ஓரே மேடையில் பேசியிருக்கிறார். இது போக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், ம.பி பா.ஜ.க. முதல்வர் சவுகான் ஆகியோரின் அருகில் இவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகிஇருக்கிறது.


 சங்கப்பரிவாரங்களின் எல்லா முக்கியத் தலைவர்களுக்கும் இந்த பெண் சாமியார் அறிமுகமாயிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையில் எல்லா வானரங்களும் கூடி இந்த வழக்கில் பிரக்ஞாவுக்கு எப்படி உதவ முடியும், அவருக்கு நியமிக்கப்படவேண்டிய வழக்கறிஞர், அதற்கான கட்டணம் எல்லாம் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இப்போது அத்வானியே இந்த அம்மாவுக்காக குரல் கொடுக்க, உடனே மன்மோகன் சிங் இந்த வழக்கு சம்பந்தமாக  அத்வானியோடு  போனில் பேசியும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை நேரில் அனுப்பியும் விளக்கமளிக்கச் செய்திருக்கிறார். மேலும், உண்மையறியும் சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட குறுந்தகடெல்லாம் அத்வானியிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


 விசாரணை நடக்கும் போதே அதன் விவரங்கள் ஒன்றுவிடாமல் இந்து மதவெறியருக்குப் போகிறது என்றால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடலாமே? இந்த சலுகை உலகில் வேறெந்தக் குற்றவாளிக்கும் கிடையாதே? தற்போது இந்த பெண் சாமியாரைக் காப்பாற்றுவதற்காக சிவசேனா, உமா பாரதி, பா.ஜ.க மூன்றுக்கும் பெரிய போட்டியே நடக்கிறது. உமா பாரதியோ அந்த சாமியாரிணிக்காக ம.பி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவே கூறியிருக்கிறார்.


 இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்ததும் நாடும், ஊடகங்களும், இந்து மதவெறி அமைப்புக்களும் ஆடிய ஆட்டமென்ன? ஐ.எஸ்.ஐ சதி, ஜிகாதிப் போர், இறந்தவர்களின் துயரக் கதைகள் என்றெல்லாம் கிளப்பி விடுபவர்கள், இப்போது நேர்மாறாக ஏதோ தேச பக்தர்களைப் போல இந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்றுகிறார்கள். காங்கிரசும் இந்துக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வழக்கில் அடக்கி வாசிக்கிறது. இசுலாமியர்கள் குண்டு வைத்தால், நாடு முழுவதும் அப்பாவிகளைக் கொத்துக் கொத்தாய் கைது செய்யும் அரசாங்கம், இதில் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் பெண் சாமியாருக்காக அத்வானியுடன் போனில் பேசி விளக்கமளிக்கிறது என்றால், இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம்.


 அகமதாபாத் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகன் அப்படிக் குற்றம் செய்திருப்பின் அவனைத் தூக்கில் போடவேண்டும் என்று பேசினார் ஒரு இசுலாமியத் தாய். இங்கோ பெண் சாமியாரின் தந்தை ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினராக இருப்பவர் தான் பெருமைப்படுவதாக பேட்டி கொடுக்கிறார். ஆக நாடு முழுவதும் இத்தகைய பொதுக் கருத்து இருக்கும் பட்சத்தில் இந்து மதவெறியர்கள் குண்டு வெடிப்பதை பெரிய அளவில் செய்தாலும் அது குறித்து யாரும் கவலைப்படப் போவதில்லை. இசுலாமியத் தீவிரவாதிகள் இசுலாமிய மக்களிடமே தனிமைப்பட்டிருக்கும் போது, இந்து பயங்கரவாதிகள் இந்துக்களின் நேரடியான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், இதுதான் இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பெரிய அபாயம்.


 இது வெளிநாட்டிலிருந்து அல்ல, உள்நாட்டிலிருந்தே தூண்டிவிடப்படும் பயங்கரவாதம். மேலும் குண்டு வெடிப்பு என்ற தீவிரமான செயல்பாடுகளுக்கே இந்தத் தீவிரவாதிகள் சமூகத்தாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை என்றால், இவர்கள் முசுலீம்களுக்கெதிரான கலவரத்தில் என்னவெல்லாம் செய்வார்கள்? அதையும் இனிமேல் செய்யவேண்டுமென்பதில்லை, குஜராத் 2002 கலவரத்திலேயே இதைப் பார்த்திருக்கிறோம்.


 பூனேவில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் மூலம்தான், அவர் பணியில் இருக்கும்போதுதான் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து    இந்து பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்குப் பல சுற்றுக்கள் அபாயங்கள் தாண்டிக் கிடைக்கும் இந்த நவீன வெடி மருந்து இந்து பயங்கரவாதிகளுக்கு சுலபமான வழியில், கைக்கெட்டும் தூரத்தில் இந்திய இராணுவத்திடமிருந்து கிடைக்கும் என்றால், இசுலாமிய மக்களின் கதி என்ன? ஏற்கெனவே பல கலவரங்களில் இசுலாமிய மக்களை இராணுவம் கொன்றதிலிருந்து, அதன் இந்து சார்பு வெளிப்பட்டிருக்கிறது. தற்போது இவர்களே குண்டு வெடிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால், இந்திய இராணுவம் இந்து மதவெறியர்களின் இராணுவமன்றி வேறென்ன?


 இந்த விசயத்தை மேலோட்டமாகக் கண்டிக்கும் துக்ளக் சோ, ஒருவேளை இராணுவம் மற்றும் உளவுத் துறைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் (அதாவது குண்டு வெடிப்புக்கள்) ஈடுபட்டால், அது இரகசியமாக இருக்கவேண்டுமென ஆலோசனை கூறுகிறார். இதன்மூலம் இந்திய உளவுத் துறை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அங்கீகாரமும் வழங்குகிறார். இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வெடித்தால், அது நிரூபிக்கப் படாமலேயே அவர்களைக் கொன்று அழிக்க வேண்டுமெனச் சாமியாடும் இந்த மொட்டைத் தலையன், இந்து பயங்கரவாதத்திற்கு மட்டும் இனப்பாசத்தோடு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்ல? மற்ற குண்டுவெடிப்புக்களின் போது மத்திய அரசு தீவிரவாதிகளை மென்மையாக நடத்துகிறது, பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று துள்ளியவர்கள், இப்போது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?


  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக  நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, சிமி இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் வதைக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் எல்லா இந்து மதவெறி அமைப்புக்களிலும் இருந்து வருவதற்கு எல்லா வகை ஆதாரங்களும், புகைப்படமும், வீடியோவும் இருந்தாலும்  விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபிநவ பாரத், ஹிந்து ஜாக்கரன் மன்ஞ், துர்கா வாஹினி, ஆர்.எஸ்.எஸ் போன்ற உண்மையான பயங்கரவாத அமைப்புக்கள் எவையும் தடை செய்யப்படவில்லை. அல்லது அப்படி தடைசெய்யவேண்டுமென ஒரு விவாதம் கூட ஊடகங்களிலும், தேசிய அரங்கிலும் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டிய இந்த இயக்கங்களின் தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாக பிரக்ஞா சிங்கிற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.


 நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நாட்டில், பட்டவர்த்தனமாக பயங்கரவாத செயல்களைச் செய்யும் தலைவர்கள் அங்கீகாரத்துடன் உலா வந்தால் என்ன நடக்கும்? நிச்சயமாக பாசிசம்தான் வரும். எப்படி ஹிட்லர் சட்டபூர்வ வழிகளில் தொடங்கி, பின்னர்  ஆட்சியைக் கைப்பற்றி எதிரிகளை சட்டப்படியே வேட்டையாடினானோ அதுதான் இங்கும் நடக்கப்போகிறது என்று கணித்தால் அது மிகை மதிப்பீடல்ல. பாசிசத்திற்கு முன்னோட்டமாக இங்கிருக்கும் எல்லா நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் இந்துத்வத்திற்கு ஆதரவாக இயங்குமாறு மாற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மலேகானில் அப்பாவி இசுலாமிய மக்களின் உயிரைக் குடித்த பயங்கரவாதிகள் தியாகிகளாகப் போற்றப்படுகிறார்கள்.


 இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அந்த மதத்தின் அப்பாவி மக்களையே பல இன்னலுக்குள்ளாக்குகிறது என்றால், தீவிரவாதத்திற்குப் பலியான இளைஞர்களை எப்படி நடத்துமென்று விளக்கத் தேவையில்லை. இதனால் இசுலாமிய தீவிரவாத்திற்கு ஆள் பிடிப்பதற்கும், குண்டு வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கும் மிகுந்த பிரயத்தனங்கள் செய்யவேண்டும். முக்கியமாக, இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து, அதற்குப் பழிவாங்கும் முகமாகச் சில இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை மேற்கொள்கிறார்கள். அதுவும் இந்து மதவெறியரை இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தண்டிக்கப் போவதில்லை என்பதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து அப்படி மாறுகிறார்கள். இப்போது இந்து பயங்கரவாதத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அந்த எண்ணத்தை வளர்க்கவே உதவி செய்யும்.


 ஆகவே, இந்து பயங்கரவாதத்தின் வருகையும், இருப்பும், அது தண்டிக்கப்படாததும் பல இன்னல்களை இந்நாட்டிற்கு ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். இந்த அபாயத்தை நாம் சட்டபூர்வமாகப் போராடி ஒழிக்க முடியாது என்பதால், இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தித் தண்டிக்க வேண்டும். அது நிறைவேறாத பட்சத்தில், இந்து மதவெறி பாசிசம் நாட்டை கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் நாட்டிற்கு அளிக்கும் செய்தி.


· இளநம்பி