பாசிசம் சமூகத்தை அறிவால் வெல்வதில்லை. மனித மனங்களை வெல்வதில்லை. மாறாக அடக்குமுறையால், மோசடித்தனத்தால் வெல்ல முனைகின்றது. அது தனது ஈனத்தனமான கொலைப் பண்பாட்டால், உறையவைக்கும் அச்சத்தை விதைத்து, தன்னைத்தான் பலமானதாக காட்டிக்கொள்ளுகின்றது.

 சமூக விரோதம், லும்பன் தனம், காட்டுமிராண்டித்தனம் என்று அனைத்தையும் ஒருங்கே கொண்ட கோழைகளைப் போல், ஒடுங்கி ஒளித்தபடி குள்ள நரிகளாக குதறுவது தான் இதன் அரசியல் நடைமுறையாகும்.

 

இப்படி கோழைத்தனம், அற்பத்தனம், ஓடாடித்தனம், மலட்டுத்தனம் என்ற சமூகத்தின் இழிந்துபோன ஒரு வர்க்கத்தின் வக்கிரங்களை எல்லாம் கொண்டதுதான் பாசிசம். இதை அடிப்படையாகக் கொண்டு பாய்ந்து குதறுவதன் மூலம், தனது அரசியல் கோழைத்தனத்தை பலமானதாக காட்டிக்கொள்கின்றது. இதற்கு என்று சமூகத்துடன் இணைந்து செல்லும் நேர்மையான வழி எதுவும் கிடையாது. லஞ்சம் கொடுப்பது, விலைக்கு வாங்குவது, மோசடி செய்வது என்று சமூகத்தின் கடைக்கோடியில் நின்று தான், தன்னைக் காட்டிக்கொள்கின்றது.

 

எத்தனையோ வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள், பத்திரிகைகள், ஊடக பினாமிகள் என்று தகவல் ஊடகத்தையே, மிரட்டி வளைத்துப்பிடித்து கைப்பற்றி வைத்துள்ளவர்கள் இந்த பாசிட்டுகள். இந்த பாசிட்டுகளின் முன், ரீ.பீ.சீ ஒரு அற்ப புழு தான். ஆனால் இந்தப் புழு ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் வானொலி ஊடாக புகுந்து கொண்டு, பாசிட்டுகள் கட்டிவைத்துள்ள பெரிய பெரிய பொய் மூட்டைகளையே மெதுவாக அரிக்கத் தொடங்கியது.

 

இந்த அரிப்புக்கு எதிராக பாசிட்டுகள் என்ன தான் குதியம் குத்தி தாளம் போட்டாலும் இந்த புழுவின் அரிப்பை தடுக்க முடியவில்லை. தமது கருத்தால், தமது ஊடகத்துறையால் வெல்ல முடியாது என்று கருதிய பாசிட்டுகள், தொடர்ச்சியாக அந்த வானொலி நிலையத்தை மூன்று முறை சூறையாடிய போதும், அதை நிரந்தரமாக நிறுத்திவிட முடியவில்லை. இதில் வேலை செய்தவர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தியும், மிரட்டியும், ஏன் தொடர்ச்சியாக உளவியல் வன்முறையைக் கையாண்டும், ஆட்களை பணம் கொடுத்து விலை பேசி வாங்கியும் கூட, இதை நிறுத்த எடுத்த முயற்சிகள் எதனாலும் நிரந்தரமாக நிறுத்திவிட முடியவில்லை.

 

தற்போது மோசடிகள் மூலம், இதை நிறுத்தும் சட்ட எல்லைக்குள் இந்த பாசிச எடுபிடிகள் ஈடுபட்டு மறுபடியும் அம்பலமாகின்றனர். (பலர் இதை நம்ப மறுக்கின்றனர். உள்வீட்டு சதி என்று காண முனைகின்றனர். இதை புலி அல்லாத தரப்பு நினைப்பது தான் ஆச்சரியமானது. இது ஒரு அரசியலைச் சொல்லுகின்றது) போலிக் கையெழுத்துகள் மூலம் இதை அரங்கேற்றியுள்ளனர். குறுகிய குறுக்கு வழியும், சின்னப் புத்தியும் கொண்டு செய்யும் ஒரு மலிவான பாசிச நடத்தைகள் இவை.

 

ரீ.பீ.சீ போன்ற ஒரு வானொலி அரசியல் தளம் எச்சில் காக்கை கலைக்கும் அளவுக்கு மிகமிக பலவீனமானது. அதன் அரசியல் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. உண்மையில் புலிகளின் மக்கள் விரோத செயல்களைச் சொல்லியே உயிர்வாழ்வது தான், புலிப் பாசிசம் தான் ரீ.பீ.சீ இருப்புக்கான அடிப்படையாகும். அரசியல் ரீதியாக அதே புலிப்பாசிச அரசியல்தான் ரீ.பீ.சீ கோட்பாடு.

 

இந்த வகையில், இதை அரசியல் ரீதியாக வெல்வதும், அம்பலப்படுத்துவதும் இலகுவானது. எமது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையிலும், இவர்களின் ஜனநாயகம் எமது கருத்தை அனுமதிப்பதில்லை. இந்த நிலையிலும் நாம் நடத்தும் போராட்டம் இவர்களை அம்பலப்படுத்தும் போது, ரீ.பீ.சீயே தடுமாறுகின்றது. இந்தவகையில் எம் கருத்துக்கும், எம் கருத்து சார்பு கொண்ட எந்தக் கருத்துக்கும் ரீ.பீ.சீ கருத்து சுதந்திரத்தை வழங்குவது கிடையாது. புலிப்பாணியில் தான் அணுகுகின்றது.

 

உண்மையில் இப்படியிருக்க, எப்படி தான் ரீ.பீ.சீ வாழ்கின்றது என்றால், புலிப் பாசிட்டுகளின் நடத்தையைக் கொணNட வாழ்கின்றது. புலிகள் தாம் செய்வதை மக்கள் முன் மறைக்க, அதன் அரசியல் கூறை வெட்டிவிட்டு, பகுதியாக சம்பவமாக மக்கள் முன் வைப்பதன் மூலம் தான், இவர்களுக்கு இடையில் பரஸ்பர அரசியல் இணக்கத்துடன் ஒன்றையொன்று குழிபறிக்கின்றது.

 

புலிகளின் பாசிசம் எப்படி பேரினவாதத்தின் தயவில் வாழ்கின்றதோ, அப்படித் தான் ரீ.பீ.சீ புலிகள் பாசிசத்தின் தயவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு தளத்திலும் பரஸ்பர அரசியலை எதிர்ப்பதில்லை. ரீ.பீ.சீ க்கு புலிக்கு மாறாக தனித்துவமிக்க மக்கள் சார்பு கருத்து கிடையாது. இந்த வகையில் ரீ.பீ.சீ ஏகாதிபத்தியத்தினதும், இலங்கை அரசினதும் கருத்து எல்லைக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு இருப்பதே இதன் உள்ளார்ந்த அரசியலாகும். சொல்லப் போனால் புலிகளை அம்பலப்படுத்தவது போல் மற்றவர்களை அம்பலப்படுத்துவதில்லை. இதற்கு வெளியில் மக்கள் நலனைக் கொண்ட சமூக பொருளாதார கூறுகள் மீது, இதற்கென்று எந்தப் பார்வையும் கிடையாது. லும்பன்களின் கும்பலாக, புலியெதிர்ப்பில் வாழ்கின்றது.

 

இந்தப் புலியெதிர்ப்பு கும்பல் புலிகளின் பாசிசத்தின் ஒரு பக்கத்தினை, புலம்பெயர் தமிழர் மத்தியில் எடுத்துவரும் வானொலி என்ற வகையில், இதை பாசிட்டுகளால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. இந்த வகையில் தான் வேதாளம் முருங்கை மரத்தில் மீளமீள ஏறுகின்றது.

 

ரீ.பீ.சீ யை அம்பலப்படுத்தி வெல்லவேண்டும் என்றால், மக்கள் விரோத செயலை புலிகள் நிறுத்த வேண்டும். பாசிச செயற்பாட்டை நிறுத்தி, மக்களுக்காக போராடவேண்டும். மக்களை அவர்களின் சமூக பொருளாதார உறவின் ஊடாக அணுகி, அவர்களை தமது பங்காளியாக்கி மனதால் வெல்லவேண்டும்.

 

இல்லாது அற்பத்தனமாக, ஈனத்தனமாக, கோழைத்தனமாக ரீ.பீ.சீ போன்ற வானொலிகளை இடைநிறுத்த முனைவதற்கான குறுக்கு வழிகள் எப்போதும் தற்காலிகமானதே. புலிகள் கடந்த 30 வருடத்தில் கையாண்ட படுகொலை அரசியல் மூலம், அதில் தோற்றுத் தான் வருகின்றனர். படுகொலை அரசியல் மூலம் வெல்வதற்கானது என்ற கோட்பாடு, மீண்டும் மீண்டும் சொந்த எதிரிகளை ஆயிரமாயிரமாக பெருக்கிக்கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம். புலிகள் தமது அந்திம காலத்திலும் அதே வழியில் தொடர்ந்து செல்வது என்பது, பாசிசத்தின் சொந்த அரசியல் விதியாகும்.

பி.இரயாகரன்
02.02.2007