மீண்டும் பங்குச் சந்தைக்கு வருவோம். பங்கு, பங்குச்சந்தை, பங்குச் சந்தை சூதாட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த பதிவில் ஊக வணிகம் பற்றிப் பார்க்கலாம்.

//ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு.

 

 அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.// - புதிய கலாச்சாரம்.

பங்குச் சந்தைச் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த காலங்களிலும் நெருக்கடி இருந்திருக்கின்றன. இப்பொழுது இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி ஏன்? காரணம் இருக்கிறது. நிதி மூலதன கும்பல்கள் நடத்திய ஊக வாணிகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிதான் காரணம்.

முதலில் உண்மை வணிகம், ஊக வணிகம் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

உண்மை வணிகம்

என்னிடம் 100 கிலோ கடலை இருக்கிறது. இன்னொருவருக்கு கடலையின் தேவை இருக்கிறது. நான் அதன் விலை ரூ. 1000 என்கிறேன். இருவரும் பேரம் பேசி ரூ. 900 என முடிவுக்கு வந்து, நான் பணம் பெற்றுக் கொள்கிறேன். இது உண்மை வணிகம்.

ஊக வணிகம்

சரக்கு இல்லாமலே சூதாடுவது. கடலையை கண்ணில் பார்க்காமாலே சூதாடுவது. ‘அ’ என்பவர் கடலை இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 1500 விற்கும் என்பார். “ஆ” என்பவர் ரூ. 800 க்கு தான் விற்கும். என்பார். இருவரும் பந்தயம் கட்டிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் என்ன நிலையோ அதற்கு தகுந்தபடி பந்தயப்பணம் கைக்கு மாறும்.


இந்த ஊக வணிகத்தின் அளவு எவ்வளவு என பார்த்தால் ...

உலகம் முழுவதிலும் நடக்கும் நிதி பரிவர்த்தனையில் உண்மை வணிகம் 2 %. மீதி 98% ஊக வணிகம் தான்.

உலக நிதிச் சந்தையில், இன்றைய நிலையில் ஓராண்டு காலத்திற்குள் நடக்கும் அன்னிய செலாவணி கைமாற்றுகளின் அளவு 10,00,00,000 கோடி டாலர்கள்! இதில் உற்பத்தியோடு தொடர்புடையது 2% மட்டுமே. மொத்த உலகத்தின் உள்நாட்டு உற்பத்தி அளவு இதில் 4% மட்டுமே! (Red Star – Oct 2006)

ஆச்சரியமாய் இருக்கிறதா!

ஊகவணிகத்தில் பந்தய ஒப்பந்த வகைகள் (deraivatives) இருக்கின்றன. நிதி மூலதன வங்கிகள் இந்த பந்தய வகையறாக்களில் விளையாடி கொள்ளையடித்தது தான் இவ்வளவு பெரிய நெருக்கடி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் கிடையாது. இதன் தன்மை, வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அதைப் பற்றி சில தகவல்கள்.

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

பழைய நினைவுகளில் கிளறிப் பார்த்தால்...


பந்தய ஒப்பந்த வகையறாக்களில் கொடிகட்டிப் பறந்து, பிறகு அவைகளினாலேயே என்ரான் குழுமம் நொறுங்கி விழுந்து திவாலானது. இந்த நிறுவனத்திற்குத் தான், மின் உற்பத்தியிலேயே ஈடுபடாமல், மகாராஷ்டிரா அரசு மாதம் 85 கோடி கட்டி, அதன் மின்சார வாரியம் திவாலானது. பிறகு, என்ரான் திவாலானதால், மகாராஷ்டிரா அரசு தப்பித்தது.




பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற் இரு மேதைகளால் நடத்தப்பெற்ற நீண்டகால முதலீட்டு நிர்வாகம் (LTCM) என்ற நிறுவனம் 1998ல் நொறுங்கியது இதற்கு இன்னுமொரு உதாரணம். இதன் கணக்குப் புத்தகங்களில் காணப்பட்ட பந்தய ஒப்பந்தங்களின் பண மதிப்பு 1,40,000 கோடி டாலர்களாகும்.

http://socratesjr2007.blogspot.com/