Fri03222019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!

உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!

  • PDF

 கணணி அல்லது மொபைல் போன் பாவிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் கொங்கோவில் நடக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் தான். யாராவது ஒரு திருடன், சொத்துக்கு உரிமையாளரை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கினால்,

 நாமும் அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் உடந்தையாக இருந்ததாக குற்ற உணர்ச்சி எழுவதில்லையா?

கொள்ளை சம்பந்தமான

 

கொள்ளை சம்பந்தமான
பிரச்சினை மட்டுமல்ல, கனிம வள சுரங்கங்களை கைப்பற்றி சுரண்டுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டனர், அல்லது படுகொலை செய்யப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலத்திரனியல் நிறுவனங்களின் மாபெரும் கொள்ளைக்காக நான்கு மில்லியன் அப்பாவி மக்கள் பலிகொடுக்கப்பட்டனர்.

பெரிய ஆப்பிரிக்க நாடான கொங்கோ, உலகில் பணக்கார நாடுகளில் ஒன்று. தங்கம், வைரம் மட்டுமல்ல, யுரேனியம் போன்ற விலைமதிக்கமுடியாத கனிமவளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருகாலத்தில்(19 ம், 20 ம் நூற்றாண்டில்) பெல்ஜிய அரசரின் தனிச் சொத்தாக இருந்த கொங்கோ சுரங்கங்களிலும், பெருந்தோட்டங்களிலும் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். உற்பத்தி குறையும் போதெல்லாம், குழந்தை தொழிலாளராக இருந்தாலும், தண்டனையாக கைகள் வெட்டப்பட்டன. அந்த நிலைமை இன்றைய “நாகரீக உலகிலும்” மாறவில்லை. அன்று பெல்ஜிய அரசரும், முதலாளிகளும் கொங்கோவை சுரண்டிக் கொழுத்தனர்; இன்று பன்னாட்டு நிறுவனங்கள் (உங்கள் மனங்கவர்ந்த “நோக்கியா” உட்பட) பகல் கொள்ளையில் போட்டிபோடுகின்றன.

உலகில் இனப்பிரச்சினை என்று அறியப்பட்ட யுத்தங்கள் பல பணப்பிரச்சினை காரணமாக நடப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே சியாரா லியோனில் வைர சுரங்கங்களுக்காக நடந்த சண்டையை, இனப்பிரச்சினை என்று சர்வதேச ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தை முறியடித்து “Blood Diamond” திரைப்படம் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தாலும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சர்வதேச ஊடகங்கள் கொங்கோவில் நடக்கும் போரையும் “இனப்பிரச்சினை” என்றே பிரச்சாரம் செய்கின்றன. அவர்களைப்பொறுத்த வரை கொங்கோலிய அரசபடைகள் பொதுமக்களை துன்புறுத்துகின்றன, சொத்துகளை கொள்ளையடிக்கின்றன, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றன, அதற்கெதிராக “லோறன்ட் குண்டா” தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் போராடுகின்றனர். அங்கே நடப்பது இனப்பிரச்சினை. (துட்சி) சிறுபான்மை இனத்தை, (நிங்காலா மொழிபேசும்)பெரும்பான்மை இனம் அடக்கி இனப்படுகொலை செய்கின்றது.

அங்கே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லை என்று நான் இங்கே கூறவரவில்லை. ஆனால் அதற்கு பின்னணியில் இருக்கும் அயல்நாடுகளான உகண்டா, ருவாண்டா படைகளின் ஆக்கிரமிப்பு, மூலப்பொருட்களுக்கு உரிய விலையை கொடுக்காது கொள்ளையடிக்கும் மேற்குலக வர்த்தக கழகங்கள் போன்றவற்றின் லாப நோக்கங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ருவாண்டாவின் அரசபடையினர் சீருடையை மாற்றிப் போட்டுக் கொண்டு “கிளர்ச்சியாளர்கள்” என்று சர்வதேச தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னாள் காட்சிதருகின்றனர். “நடுநிலை தவறாத” ஊடகங்கள் எதற்காக “கிளர்ச்சியாளர்களை” மட்டும் பேட்டி எடுக்கின்றன? அங்கே நடப்பது இனப்பிரச்சினை என்று நாம் நம்ப வேண்டுமாம்.
கடந்த பத்தாண்டுகளாக கொங்கோ போரில் நான்கு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை எடுத்து அறிவிக்கவில்லை. தற்போதும் அதுதான் நடக்கின்றது. சில மனித உரிமை ஸ்தாபனங்களின் விடாமுயற்சியால் ஐ.நா.சபை தலையிட்ட போது மட்டும் சிறிதளவு கவனிப்பு இருந்தது. அதுகூட கிழக்கு கொங்கோவில் அரசபடைகளின் கட்டுப்பாட்டை குறைத்து, கிளர்ச்சிப் படைகளுக்கு(என்று சொல்லப்படுவன) சுரங்கங்களை பராமரிக்கும் உரிமை வாங்கிக் கொடுக்கும் வகையிலேயே அந்த “சர்வதேச தலையீடு” இடம்பெற்றது. சமாதானப்படைகள் என்ற பெயரில் வந்த பன்னாட்டு இராணுவத்தினர்(இந்தியா கூட படை அனுப்பியது) சமாதானத்தை நிலைநாட்டினார்களோ இல்லையோ, கன்னிப் பெண்கள் மீது பாலியல் இச்சையை தீர்த்து தமது ஆண்மையை மட்டும் நிலைநாட்டினார்கள். மறந்தும் கூட கனிமவளங்கள் கொள்ளையடியடிக்கப்படும் சுரங்கங்கள் பக்கமே போகவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த சுரங்கங்களை நிர்வகிக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு ஆயுதம் விற்று மேலதிக வருமானம் தேடிக்கொண்டனர். இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதைகள் வெளிவந்த போது ஐ.நா.சபை நாணத்தால் கூனியது.

கிழக்கு கொங்கோவில் எந்த ஒரு அரசியல் சக்தியினதும் முழுமையான கட்டுப்பட்டு கிடையாது. கொங்கோ அரசாங்கத்தின் கனிமவள அமைச்சு நிர்வகிக்கும் சுரங்கங்கள் கூட அரசபடையில் இருக்கும் கொமாண்டர்களின் லாபநோக்கின் கீழ் சுரண்டப்படுகின்றன. தலைநகர் கின்சாசாவில் இருக்கும் மைய அரசோ, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் போர் என்று தான் கூறிவருகின்றது. இதில் ஓரளவு உண்மை இருப்பதால் சாதாரண பொதுமக்கள் போருக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் நட்பு நாடுகளான அங்கோலா, சிம்பாப்வேயும் தமது படைகளை அனுப்பி வைத்ததால், “ஆப்பிரிக்காவின் உலகப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. அப்போது கொங்கோ அரசு தோழமை நாடுகளின் இராணுவ உதவிக்கு மாறாக தெற்கில் சில சுரங்கங்களை வாடகைக்கு கொடுத்திருந்தது.

இந்தப் பிரச்சினையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், கொங்கோ அரசபடையாக இருந்தாலும், அங்கோலாவின் தோழமை இராணுவமாக இருந்தாலும், அல்லது “கிளர்ச்சியாளர்” சீருடையணிந்த ருவாண்டா படையாக இருந்தாலும், அனைவரது நோக்கமும் எந்தச் சுரங்கத்தை யார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்பது தான். அதே நேரம் அந்த சுரங்கங்களில் இருந்து அகழப்படும் தங்கம், வைரம், மற்றும் கொல்த்தான் போன்ற விலைமதிப்பற்ற திரவியங்கள் யாவற்றையும் இடைத்தரகர்கள் வாங்கிக்கொண்டாலும், அவை போய்ச் சேரும் இடங்கள் (உலக மக்களின் நன்மதிப்பை பெற்ற) பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

கொங்கோ போர் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம் கொல்த்தான் என்ற மூலப்பொருள். இதிலிருந்து தான் இலத்திரனியல் கருவிகளில் பயன்படுத்தப்படும் “சிப்” தயாரிக்கப்படுகின்றது. உலக சந்தையில் நடமாடும் தொலைபேசி(மொபைல்), மடிக் கணணி(லப் டாப்) போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்து, விற்பனை அதிகரித்ததற்கும், கொங்கோ மக்கள் கொல்லப் படுவதற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மூலப்பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கப்பட்டு, நியாயமான வியாபாரம் நடக்குமாயிருந்தால் இலத்திரனியல் பொருட்களின் விலை இப்போதும் (நாம் வாங்க முடியாத அளவு) அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொங்கோ மக்களை படுகொலை செய்து அல்லது அடித்துவிரட்டி விட்டு, எஞ்சியோரை வைத்து அடிமைகளாக்கி உற்பத்தி செய்யப்படும் கொல்த்தான் என்ற மூலப்பொருளின் விலை சர்வதேச சந்தையில் மிகக்குறைவாக இருக்கும் என்பதை கூறத்தேவையில்லை. இதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? எமது மத்தியதர வர்க்கம் வாங்கிப் பயன்படுத்தக் கூடியவாறு பாவனைப்பொருட்கள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும். இலத்திரனியல் கம்பனிகளின் நிகரலாபம் அதிகரிக்க வேண்டும். அதனால் உலக பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். இவை தானே நமது நல்வாழ்வுக்கு முக்கியம்? அதற்காக காந்தியின் குரங்குப் பொம்மை போல, “உண்மையை பார்க்காமல், கேட்காமல், பேசாமல்”; கணணிப்புரட்சியின் மகிமையை பற்றி மட்டுமே பேசிப் பொழுது போக்குவோம்.


மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு :
Documentary Video: Grand Theft Congo - DRC
Mining for minerals fuels Congo conflict

Last Updated on Tuesday, 11 November 2008 07:01