புலிகள் தாம் விரும்பிய ஒரு 'தேசிய" போராட்டத்தை நடத்துகின்றனர். அது சொந்த மக்களையே, தனது சொந்த எதிரியாக பார்க்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையில் ஜனநாயக ரீதியான எந்த உறவும் கிடையாது. மாறாக பாசிச வழிமுறைகளில் தான், மக்களை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

 

 

மறுபக்கத்தில் தமிழனை இராணுவம் வெட்டுகின்றான் கொத்துகின்றான் என்ற, பிரச்சாரத்தை புலிகள் செய்கின்றனர். இருந்தபோதும் தமிழ்பேசும் மக்கள் புலிகளுடன் வாழ்வதைவிட, சிங்கள பகுதியில் வாழ்வதையே விரும்புகின்றனர். புலிகளிடம் இருந்து தப்பிச்சென்ற பெரும்பான்மை தமிழ் இனம், சிங்களப் பகுதிகளில் தான் வாழ்கின்றனர். புலிகளின் பகுதிகளில் வாழ்பவர்கள், தப்பிச்செல்ல வழியின்றியும், பொருளாதார ரீதியாக வேறு பிரதேசத்தில் வாழ முடியாதவர்களும் தான் எஞ்சியுள்ளனர். இவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிச்செல்லவும், புலிகளுடன் சோந்து வாழவிரும்பாத எதிர்மனப்பாங்குடன் தான் வாழ்கின்றனர்.

 

இதுவே இன்றைய எதார்த்தம்;. யுத்தம் கடுமையாகி, புலிகளின் அழிவை தீர்மானிக்கின்ற இக்கட்டான நிலைக்குள், புலிகளின் பாசிசம் பேரினவாதத்தைப் பலப்படுத்தியுள்ளது.  புலிகள் தப்பிப்பிழைக்க, எஞ்சியுள்ள மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துவதை புலிகளின் பாசிசம் வழிகாட்டுகின்றனர். யுத்த சூழலை விட்டு தப்பிச்செல்லாத வண்ணம், மக்கள் பலாத்காரமாகவே துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான யுத்தத்தில், தமிழ்மக்கள் வலுக்கட்டாயமாகவே பலியிடப்படுகின்றனர்.

 

பேரினவாதம் குண்டுகள் பொழிந்து அப்பாவித் தமிழரைக் கொல்ல முனைகின்றனர். மக்கள் இதில் இருந்து தப்பிப் போகாத வண்ணம், புலிகள் மக்களை தடுத்து நிறுத்துகின்றனர். புலிக்கோ தம்முடைய வாழ்வா சாவா பற்றிய பிரச்சனை, இதனால் அப்பாவி தமிழ் மக்களை பலியிடுகின்றனர். இராணுவத்தைக் கொன்று கொன்ற பிணத்தை, ஊர் உலகத்தில் வைத்து விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் தாம் தப்பிப் பிழைக்க வழிகிடைக்குமா என்ற, குதர்க்கமான பாசிச வழிமுறைகள். சுனாமியின் போதும் பிணத்தைக் காட்டி, பணத்தைக் குவித்து அதை ஏப்பமிட்டவர்கள் அல்லவா! 

  

இப்படி அப்பாவி தமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலத்தை, எந்த தமிழ் உணர்வாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இப்படி ஒரு போராட்டத்தின் தவறான பக்கங்கள், அக்கம்பக்கமாகவே தொடருகின்றது. பாவம் தமிழ் மக்கள். அவர்களின் பெயரில் தான், தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசம் அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றது.

 

தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமைப் போராட்டத்தை மறுத்த புலிகள், அதனிடத்தில் பாசிசத்தை நிறுவினர்.

 

புலிகளின் அகாரதி என்பது, தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை மறுத்தவர்களின்  பாசிச வரலாறாகும். தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்ததன் மூலமும்;, தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை குழிதோண்டிப் புதைத்ததன் மூலமும்;, தமிழ் இனத்தை இரண்டு அடக்குமுறைக்குள் புலிகள் அடிமைப்படுத்தினர். இப்படி தமிழ் மக்களின் உரிமையை புதைத்தவர்கள், அதன் மேல் தம் பாசிசத்தை நிறுவினர். அதையே தமிழ் தேசியம் என்றனர். 
 
இப்படி தமிழ்மக்களின் உரிமைப்போர், புலியின் இருப்பு போராகியது. தமிழ் மக்களின் சுயநிர்ணயம் சார்ந்த பிரச்சனை, வெறும் பேரினவாத இராணுவம் சார் ஒடுக்குமுறையாக திரித்தனர். சுயநிர்ணயத்துக்கான அரசியல் அடிப்படையைக் கைவிட்டு, யுத்தம் சார்ந்த இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே, தேசியப் போராட்டமாக புலிகளால் திரிக்கப்பட்டது. இப்படி தமிழ் மக்களின் சுயவுரிமைப் போராட்டம் சிதைந்து, அரூபமானதாகவும் எழுந்தமானதாகவும் வழிபாடாகவும் மாறியது.

 

இன்று சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, புலிகளே முன்னின்று மறுக்கின்ற ஒரு அரசியல் விடையமாக மாறிவிட்டது. சுயநிர்ணயத்தின் முதல் எதிரி புலிகளாக இன்று உள்ளனர். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதுபோல், சுயநிர்ணயத்தையும் புலிகள் மறுக்கின்றனர். அதாவது மக்களின் உரிமை தான் சுயநிர்ணயம்.

   

இதனால் போராட்டம் சிதைந்து பல கற்பனையான எடுகோளை அடிப்படையாக கொண்டு, ஒரு சிறிய பகுதியின் குழு வழிபாடாகி விட்டது. தமிழனின் போராட்டம் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரானதாக கற்பித்துக்கொள்கின்ற அளவுக்கு, அது பரிதாபகரமானதாக சிதைந்து போனது. சுயநிர்ணயம் என்பது பிரபாகரன் ஆளும் தனிநாடு, அதாவது புலிகள் ஆளுவதே சுயநிர்ணயம் என்று கற்பித்துக்கொண்டு, அதையும் திரித்துவிட்டனர். மக்களின் உரிமை, தேசத்தின் உரிமை என்பதையெல்லாம், இது தெளிவாக மறுதலிக்கின்றது. இப்படிக் கோருவது மரணதண்டனைக்குரிய துரோகமாக்கப்பட்டு, அவை தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றது. புலிகளின் உரிமை பற்றி மட்டும் பேசுகின்றனர். இப்படித்தான் புலிகளின் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் கூட, தமிழ்மக்களுக்கு எதிரானதாகவே நடத்தினர். இப்படி எங்கும் போராட்டமானது மக்களின் உரிமையைக் கைவிட்டதால், அது வெறும் இராணுவம் சார் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக வெற்று வேட்டுத்தனமாக சிதைந்துபோனது.

 

இதற்குள் தான் இந்தியப் பிழைப்புவாத தமிழ்வுணர்வு கூட சுருங்கிப்போனது. தமிழ் மக்களை இராணுவம் கொல்லுகின்றது, உணவுத்தடை என்ற எல்லைக்குள் அது சலசலக்கின்றது. தமிழனின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவதும் கிடையாது, அதனடிப்படையில் போராடுவதும் கிடையாது.  

 

இப்படித் தமிழ் மக்களுக்கு எதிராகவே, அனைத்தும் புலிப் பாசிச எல்லைக்குள் கட்டமைக்கப்படுகின்றது. 1987 இல் இந்தியத் தலையீடும், தமிழ் நாட்டு பிழைப்புவாத தமிழ் உணர்வும், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தையே உருவாக்கியது. இது தமிழ் மக்கள் மேலான புதிய ஒடுக்குமுறைக்கு வித்திட்டது. இந்தியத் தமிழ் உணர்வு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பணம்; மூலம், தமிழினம் ஒடுக்கப்பட்டது. இன்று புதிய தலையீடு பேரினவாதத்தை பலப்படுத்தும் வகையில், உணவையும் வழங்கி புலிக்கு எதிரான யுத்தமாக காட்டி அதைப் பலப்படுத்தியுள்ளது. இப்படித் தமிழ்மக்கள் பேரினவாதத்துக்கு நிகராக, தமிழ் பாசிசத்தையே தமிழ் உணர்வாக எதிர் கொள்கின்ற அவலம் உருவானது. தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்தையே அனுபவித்தனர், அனுபவிக்கின்றனர்.

 

இப்படி ஈழத் தமிழினத்தை கொன்றவர்கள், கொன்று குவித்தவர்களும், அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்ததுடன் சுயநிர்ணய போராட்டத்தையே மறுத்தனர். 

 

இப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தை மறுத்தவர்கள், போராட்டத்தை தமிழ் மக்கள் மேலான பேரினவாத இராணுவ நடவடிக்கையாகவும், உணவு தடையாகவும் சித்தரித்தனர். இப்படி அரசியல் ரீதியாக தமிழ்மக்களுக்கு எதிரான அணியை புலிகள் பலப்படுத்தினர். மக்களை செயலற்ற பொம்மைகளாக்கி, அவர்களை அடக்கியொடுக்கி, எதிரியின் நோக்கத்தை பூர்த்திசெய்தனர், செய்கின்றனர். 

 

இப்படி எங்கும் தமிழ்மக்களின் பிரச்சனையை பேரினவாதத்தின் இராணுவ உள்ளடக்கத்தில் புரிந்து வைத்திருப்பதும், அதற்கெதிரான செயல்பாடாக மாற்றி நிற்பதும், இதில் இருந்து பாதுகாப்பதே தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக காட்டப்பட்டது, காட்டப்படுகின்றது.

 

தமிழ் மக்களின் எதிர்வினை

 

மக்கள் புத்திசாலிகள். இராணுவ ஒடுக்குமுறையில் இருந்து தப்பி சென்றால் தீர்வு என்று நம்பத்தொடங்கினர். இதையே இன்று மக்கள் செய்ய, புலிகள் பலாத்காரமாகத் தடுக்கின்றனர். 

 

புலியல்லாத பிரதேசத்தில் இருந்து விலகுதல் மூலம், மக்கள் தம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்ற நிலை உருவானது. சுயநிர்ணயத்தை மறுத்த புலியின் அரசியலும், புலிகளின் பாசிசமும் இயல்பாக இந்த நிலையை உருவாக்கியுள்ளது. இப்படி தமிழ்மக்கள் புலிகளுடன் வாழத் தயாராகவில்லை என்ற உண்மை தான், அவர்களை சிங்களப் பகுதிக்கு தப்பியோட வைக்கின்றது. எப்படியாவது புலியல்லாத பிரதேசத்துக்கு சென்று விட வேண்டும் என்ற போராட்டமே, தமிழ் மக்களின் உணர்வாகியது. இதற்காக அவர்கள் போராடினர், போராடுகின்றனர்.

 

கடந்த 30 வருடத்தில் கொழும்பு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, தமிழ்மக்களின் பெரும்பான்மை (90 சதவீதம்) சென்றுவிட்டது. எஞ்சியவர்களும் அப்படி சென்றுவிடவே விரும்புகின்றனர். இதைத் தடுக்கும் புலிகள், தம் சொந்த தவறைக் களையவில்லை. மாறாக பாஸ் நடைமுறையும், உறவினரைப் பணயம் வைப்பதும், சொத்தை ஈடாக கேட்பதும், அடித்து உதைப்பதும் என்ற நடைமுறையைத்தான், இதற்கு தீர்வாக கடந்த 15 வருடமாக புலிகள் கடைப்பிடிக்கின்றனர். இப்படித்தான் எஞ்சியுள்ள (10 சதவிதமான) தமிழ்மக்களை தம்முடன் பலாத்காரமாக  வைத்திருக்கின்றனர்.

 

மக்கள் புலிகளுடன் வாழமுடியாத நிலையை அடைகின்றனர். யாழ்குடாவைவிட்டு புலிகள்  வெளியேறிய போதும் சரி, இன்று வன்னியிலும் சரி, தமிழ் மக்களை தம்முடன் அழைத்துச் செல்லுகின்ற வகையில் பிரச்சாரத்தையும் வன்முறையையும் கையாளுகின்றனர். தமிழ் மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றிய புலிகள், அவர்களைத் தம் பண்ணையில் அடைத்து வைக்கவே முனைகின்றனர்.

 

இப்படிப்பட்ட புலிகளை ஆதரிக்கின்றவர்களுக்கு இடையிலான உறவு அரசியல் ரீதியானதல்ல. ஏன் அது ஜனநாயக பூர்வமானதுமல்ல. சலுகைகளுக்கு அண்டி வாழ்பவர்கள், புலியை வைத்து பிழைப்பவர்கள், சூழல் காரணமாகச் சிக்கியவர்கள், மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று பற்பலவிதமான மக்கள் விரோத சுயநலத்தைக் கொண்டவர்கள் தான் புலியுடன் நிற்கின்றனர். 

 

இப்படி புலிப்பாசிசத்தை வைத்து பிழைத்துக்கொள்ளும் கூட்டம், அடிப்படையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுக்கின்றவர்களாக எதார்த்தத்தில் உள்ளனர்.

   

இந்த நிலைமைக்கான காரணம் என்ன?    
 
தமிழர் பிரச்சனையை அரசியல் ரீதியாக புலிகள் முன்னெடுத்தது கிடையாது. அதாவது தமிழ் மக்களின் சயநிர்ணய உரிமையை முன்னிறுத்தியது கிடையாது. மாறாக அதை இராணுவ ரீதியாக காட்டி, அதன் மூலம் அணுகினர். புலிகளின் சுத்த இராணுவக் கண்ணோட்டம் தனிநபர் பயங்கரவாதமாக, அனைத்தையும் இதற்கூடாகவே குடைந்தனர். தமிழர் பிரச்சனையை காட்டவும், ஆள் பிடிக்கவும், இராணுவ வன்முறையைத் தூண்டி அதைப் பிரச்சனையாக காட்டினர். இதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்தனர். சுயநிர்ணயத்தைக் கோராது இருக்க, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமையையே பறித்தனர். இப்படித் தமிழினம் உரிமையற்ற ஒரு இனமாக அடிமைப்படுத்தப்பட்டது.

 

தாம் தமிழினத்துக்காகவே போராடுவதாக காட்ட, பேரினவாதம் கட்டவிழ்த்துவிடும் இராணுவ வன்முறை அவசியமாகியது. இதை புலிகள் வலிந்து தூண்டுவதன் மூலம், தமிழரை வகைதொகையின்றி கொல்லவைத்தனர். இப்படி புலியின் தனிநபர் பயங்கரவாத அரசியல் அவர்களின் சொந்த நடவடிக்கை மூலம் ஊக்குவிக்கப்பட்டது. மக்கள் இராணுவ வன்முறைக்கு உட்பட்டனர். இந்த அனுபவத்தைக் கொண்டு மக்கள் போராட வேண்டும் என்பதே, புலிகளின்; அரசியலாகியது. இப்படி புரிந்து கொண்ட மனப்பாங்கும், பிரச்சாரமும் தான் புலி உறுப்பினர்களின் அடிப்படையாக, சமூகமும் இதற்கூடாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் பேரினவாத இராணுவ பயங்கரவாதத்துக்கு உட்பட்டால் தான், புலிகளின் பின் மக்கள் நிற்பார்கள் என்ற தர்க்கமே, புலியின் அரசியல் இராணுவ நடைமுறையாகியது. இதனால் தமிழ்மக்கள் அதிகளவு, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இராணுவ வன்முறைக்குள் உட்படுத்தப்பட்டனர்.

 

இதன் விளைவு என்ன?

 

இந்த இராணுவ வன்முறையில் இருந்து தப்பிச்செல்லுதல் மூலம், இந்த பேரினவாத பயங்கரவாத சூழலில் இருந்து மீளமுடியும் என்ற உண்மையை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். அதாவது புலிகளில் இருந்து தப்பிச் செல்வதன் மூலம், இராணுவ வன்முறையில் இருந்து மீளமுடியும் என்ற உண்மையை மக்கள் எதார்த்தத்தில் கண்டு கொண்டனர்.

 

இப்படியே புலிகள் இருக்கும் பிரதேசத்தில் இருந்து மக்கள் தப்பிச் செல்லத் தொடங்கினர். இதனால் புலிகள் இல்லாத பிரதேசத்தில் தான், பெரும்பான்மையான தமிழ்மக்கள் வாழ்கின்றனர். புலிகளுடன் வாழ்பவர்கள் கூட தப்பிச் செல்வவே விரும்புகின்றனர். இந்த எதார்த்தம் சொல்லும் உண்மைகளோ பல.

 

போராட்டம் வெறும் இராணுவவாதமாகி சீரழிந்து போனதையும், தமிழரின் சுயநிர்ணய உரிமைப்  போராட்டம் என்பது கைவிடப்பட்டு விட்டதையும் காட்டுகின்றது. நடப்பது புலியின் இருப்பு போராட்டமாக, அது தமிழரை உரிமையை தொட்டுக் கொள்ளும் விடையமாகிவிட்டது. இதனால் தமிழ்மக்கள் தம் அடிப்படை ஜனநாயக உரிமையை புலிகளிடம் இழந்ததால், புலிகளின் பாசிச சூழலில் வாழ முடியாத நிலைமையை இது எடுத்துக்காட்டுகின்றது.  

 

தமிழ்மக்கள் தம் பாதுகாப்புக்கு புலிகள் அல்லாத பிரதேசத்தை தேர்ந்தெடுத்தனர். இன்று   இராணுவ பிரதேசத்தில் வாழ்கின்ற 90 சதவீதமான இலங்கைத் தமிழர்கள், தாம் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இங்கு வாழமுடியும் என்ற எதார்த்தம், தமிழரின் பிரச்சனையை எதுவுமற்ற ஒன்றாக மாற்றிவிட்டது. சுயநிர்ணய உரிமையை புலிகள் மறுத்ததன் மொத்த விளைவு, மக்களை இப்படியான தீர்வையே நடைமுறை அனுபவத்தில்  காண வைக்கின்றது.

 

புலியுடன் தொடர்புடையவர்கள் தான், இராணுவ பகுதியில் பிரச்சனை என்ற நடைமுறை உண்மை, அவர்களை அதில் இருந்து மேலும் விலக வைக்கின்றது. புலிகளில் இருந்து விலகி வாழ்வதன் மூலம், இலங்கையில் அமைதியாக நிம்மதியாக வாழ முடியும் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நம்புகின்றனர். சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை கைவிட்டதன் விளைவும், அதை இராணுவரீதியான திரித்ததன் மூலமும், தமிழ் இனம் தீர்வைக் காண்கின்றது. அது புலியல்லாத சூழலில் வாழ்தலை, தன் தீர்வாகக் கருதுகின்றது. சாராம்சத்தில் இது புலியை ஒழிக்கவிரும்புகின்றது.   

 

மந்தைகளாக்கப்பட்டு வாழும்  மலையகத் தமிழர்களும், முஸ்லீம் தமிழர்களும், இலங்கையில் பிரச்சனைகளின்றி தமிழர்களாக வாழ்கின்ற எதார்த்தமும், இன்று கிழக்கு மக்களும் அந்த நிலைமையை அடைந்துள்ள நிலைமை, வடக்கு தமிழர்களின் பொது உணர்வாகியுள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக புலிகள் போராடுவதாக எந்த தமிழினமும் நம்புவது கிடையாது. அதுவென்ன என்று தெரிந்து இருக்காத அடிமையினத்தைத்தான், புலிகள் பலாத்காரமாக உருவாக்கி வைத்துள்ளனர். உரிமை பற்றிய எந்த தெளிவுமற்ற தமிழ் மந்தைகள், பிரபாகரன் ஆண்டால் என்ன? மகிந்தா ஆண்டால் என்ன? என்ற அடிமை நிலைக்குள் வாழ்கின்றனர். உண்மையில் புலிகள் தான் தம் பிரச்சனை என்ற உண்மை, இன்று தமிழரின் பொது உணர்வாகியுள்ளது.

 

தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்காகவும், இன்று யாரும் போராடுவது கிடையாது என்பதே உண்மை. மக்கள் அடிமையாக்கப்பட்டதால், மந்தைக் கூட்டமாக எங்கும் எப்படியும் வாழத் தயாராகவே மக்கள் உள்ளனர். அது புலியுடன் அல்லது அரசுடன் என்பது பற்றி அதற்கு கவலை கிடையாது. எங்கு நிம்மதியாக வாழமுடியும் என்பதுதான் அதன் கவலை. இப்படி போராட்டம் மக்களிடம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இதுதான் இன்றைய எதார்த்தம். 

 

பி.இரயாகரன்
31.10.2008