லெபனானில் பெர்ஜ் அஷ்-ஷமாளி முகாமில் வசிக்கும், பாலஸ்தீன இளைஞர்கள் தயாரித்த குறும்படம் ஒன்று, பாலஸ்தீனியர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. தமது முகாமில் இருந்து ஆரஞ்சு பழத்தோட்டங்களில் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளரைப் பற்றிய விவரணப்படம் இது. லெபனானில் 4 லட்சம் பாலஸ்தீனியர்கள், கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், அவர்களை லெபனானிய சிவில் சமூகத்துடன் சேர்க்காமல், இன்றும் அகதிகளாக ஒதுக்கியே வைத்திருக்கிறது அரசாங்கம்.

லெபனான் சட்டப்படி அவர்கள் வெளிநாட்டவர்களாக பார்க்கப்படுவதால், எந்த ஒரு அரசியல்-சமூக உரிமைகளோ, சலுகைகளோ இன்றி, முகாம்களுக்குள் காலம் கடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒரு டசினுக்கும் அதிகமான வேலைகளை செய்வதற்கு, பாலஸ்தீன அகதிகளுக்கு தடை உள்ளது. உதாரணத்திற்கு மருத்துவப்படிப்பை முடித்த ஒரு அகதி (அரசாங்க ஆஸ்பத்திரிகளில்) மருத்துவராக பணி புரிய முடியாது. தனியார் மருத்துவனைகளில் ஒருவேளை தனியார் மருத்துவமனை பணிக்கு அமர்த்தினாலும், அது கூட தகுதிக்கேற்ற சம்பளமற்ற, தராதரம் குறைந்த வேலையாக இருக்கும்.



பாலஸ்தீனர்கள் என்ற காரணத்தாலேயே, சக லெபனானிய தொழிலாளரில் இருந்து பாகுபாடு காட்டப்படுதல். மிகக் குறைந்த சம்பளம் வழங்கி, உழைப்பை சுரண்டும் முதலாளிகள். நெருப்பாக கொளுத்தும் வெயிலிலும், எலும்பை உருக்கும் பனிக்குளிரிலும், வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுதல். சட்டப்படி பதிவு செய்யமுடியாததால், மருத்துவ காப்புறுதி, சமூகநலக் கொடுப்பனவு போன்ற சலுகைகளை பெற முடியாத நிர்க்கதியான நிலைமை. கூலி உயர்வுக்காக ஒன்றுபட்ட போராட்டம். தாங்களாகவே தொழிற்சங்கம் அமைத்து, தமக்குள்ளே சிறுதொகையை சேமித்து, தொழிலாளர் நலன் பேணும் காப்புறுதியை உருவாக்கி கொண்டமை. இவை போன்ற பிரச்சினைகளை, தொழிலாளர்களே சொல்லக் கேட்டு, யதார்த்தத்தை படம் பிடித்துள்ளனர், இந்த குறும்பட பயிற்சிப் பட்டறையை முடித்த மாணவர்கள்.

HARVESTING ORANGES
Part 1
Part 2