ஒரு இறுதித் தாக்குதலுக்கு உரிய மூர்க்கத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது சிங்கள இனவெறி அரசு. புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கைப்பற்றி விடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா.

இந்திய அரசு துணை நிற்பதுதான் சிங்கள இராணுவத்தின் இந்தத் திமிருக்கும் வெறிக்கும் மிக முக்கியமான காரணம். இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களும் போர்த்தளவாடங்களும் நிதியும் கொடுத்து புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவத்தை ஏவி விட்டிருக்கிறது இந்திய அரசு. புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயம்பட்டு குட்டு அம்பலமான பின்னரும் இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

 

கருணாநிதியும் முடிந்தவரை வாய்திறக்காமல் இருந்து விட்டு, பின்பு வழக்கம் போல பிரதமருடன் தொலைபேசியில் பேசிவிட்டார். இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆள்படையும் கொடுத்து உதவி வரும் இந்திய அரசு, உடனே இலங்கைத் துணைத் தூதரை அழைத்துத் தனது கவலையை வெளியிட்டிருக்கிறது. இதைவிடக் கேவலமான முறையில் தமிழக மக்களை இழிவு படுத்தமுடியாது.

 

துவக்கம் முதலே தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கம் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகி வந்திருக்கிறது. இலங்கையில் இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்கள், மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கம், தெற்காசியப் பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இன விடுதலை இயக்கமோ, புரட்சியோ வெற்றிபெற்று விடாமல் தடுப்பது என்ற இந்த நோக்கங்கள்தான் இந்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானித்திருக்கின்றன.

 

1983 இல் ஈழப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து, அவர்களைத் தனது கைப்பாவையாக ஆக்கிக் கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மீது செல்வாக்கு செலுத்த முயன்றார் இந்திரா. இந்தியாவின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் 1987 இல் இந்திய இராணுவத்தை ஈழத்தின் மீது ஏவினார் ராஜீவ். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைக்குக் காவு கொடுப்பதும் மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான். தற்போது உலகமயமாக்கல் கொள்கைகளின் ஆதாயத்தால் பெரிதும் கொழுத்து விட்ட டாடா, அம்பானி, மித்தல் போன்ற தரகு முதலாளிகளுக்கு தெற்காசியச் சந்தை முழுவதும் தேவைப்படுவதால், தெற்காசியா முழுவதும் ரூபாயையே நாணயமாக்குவது, தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயம் (சாப்டா) என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்யவும், ஆளும் வர்க்கங்கள் விரும்பும் "அமைதியை' இலங்கையில் நிலைநாட்டவும்தான் இந்த இரகசிய இராணுவ உதவி செய்யப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை மறைப்பதும், இந்திய அரசை நடுநிலையாளனாகவும், தமிழ் மக்களின் ஆதரவாளனாகவும் சித்தரிப்பது ஈழத்தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும்.

 

ஈழத் தமிழ் மக்களுடைய போராட்டத்தின் பின்னடைவுக்கு புலிகளின் பாசிசப் போக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. எனினும் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிகள் என்ற நிலையை அது உறுதி செய்துவிடும். ஈழப்போராட்டத்தை நசுக்குவதன் மூலம் இந்தியாவின் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் தார்மீக ரீதியில் பலவீனமாக்க முடியும் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

 

எனவே ஒரு அநீதியான இனவெறித் தாக்குதலை எதிர்ப்பது, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது என்ற நோக்கில் மட்டுமின்றி, இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பது என்ற நோக்கிலும் போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப் படவேண்டும்.