"முதலாளித்துவ வர்க்கம் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கின்றது." - கார்ல் மார்க்ஸ், 160வருடங்களுக்கு முன்னர். இந்த மேற்கோளை தற்போது நினைவுபடுத்தி பார்ப்பவர்கள் வேறுயாருமல்ல; முதலாளித்துவ பத்திரிகைகள், பங்குச்சந்தை தரகர்கள், சந்தைப் பொருளாதார நிபுணர்கள் ஆகியோர்.

 


 

சோஷலிச நாடுகள் மறைந்து, கம்யூனிசம் காலாவதியாகிப்போன சித்தாந்தம் என்று கொண்டாடப்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சி காணும் முன்பே, மேற்கத்திய பொருளாதாரங்கள் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தன. அப்போது அதுபற்றி கதைக்காமல், புதிய சந்தைகளை சேர்த்துக் கொள்வதால், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொன்னூறுகளில் தகவல் தொழில்நுட்பப்(IT) புரட்சி ஏற்பட்டது. அது தான் இனி எதிர்காலம் என்று பலர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவே, பொருளாதாரம் தாறுமாறாக வீங்கியது. பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் பலமான சரிவுகளை கண்ட இதே தகவல் தொழில்நுட்பம், முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தது.

 

அதற்குப்பிறகு வீட்டுமனை துறை வளர்ச்சி பெற்றது. அதிக சம்பளம் எடுக்காத, கீழ் மத்தியதர வர்க்கத்தினர் கூட, வங்கிகள் கடன் கொடுக்கின்றன என்பதால் வீடு "வாங்கிப்"போட்டனர். வீட்டுக்கடனை குறிக்கும் "Mortgage" என்ற ஆங்கிலச்சொல், மரணம் என்ற பொருள்படும் "Mort" என்ற பிரேஞ்சுசொல்லில் இருந்து வந்தது. கடன்வாங்குபவர் சாகும்வரை கடனை அடைக்க வேண்டிவரும் என்ற அர்த்தத்தில் அந்தச்சொல் புழக்கத்திற்கு வந்திருக்குமோ தெரியாது. அமெரிக்காவிலோ இந்த Mortgage விவகாரம் கடன் கொடுத்த முதலீட்டு வங்கிகளுக்கே மரண அடியாக விழ, செய்வதறியாமல் திகைக்கின்றன இதுவரை திவாலாகாத வங்கிகள்.

 

அமெரிக்கா 1930 ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், தற்போது தான் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகின்றது. அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள், முழு பொருளாதாரத்தையே அதலபாதாளத்திற்கு கொண்டு போகாமல் தடுக்க, அரசாங்கம் தலையிட்டு காப்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்கள் பல பக்கங்களிலுமிருந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு வங்கிகளை தேசியமயமாக்கிய அமெரிக்க அரசாங்கம், பிற முதலீட்டு வங்கிகளை பிணை எடுக்க 700 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்க நிதியமைச்சர் போல்சன் தலைமையில் நிறுவப்படும் குழு, அறவிடப்படமுடியாத பங்குகளை வாங்கி, பெரிய வங்கிகளை தொடர்ந்து இயங்க வைக்கும் என்றும், மீண்டும் ஒரு காலத்தில் பொருளாதாரம் வளரும் வேளை, இந்த பங்குகளை தனியாருக்கு விற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

நல்லது. பிரான்ஸில் இதனை சிறப்பாக செய்துகாட்டினார்கள். அங்கே அதிக காலம் ஆட்சியில் இருந்த சோசலிஷ கட்சியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது முக்கிய நிறுவனங்களை தேசியமயமாக்கும். பின்னர் பொருளாதாரம் நல்லபடியாக வந்த பின்னர் அவற்றை விற்றுவிடும். ஆனால் அமெரிக்காவின் கதை வேறு. அங்கே அவர்களது பொருளாதார அகராதியின் படி, அரசாங்கம் என்பது ஒரு "கெட்டவார்த்தை". அரசாங்கம் பொருளாதாரத்தை நடத்தக் கூடாது, அதனை சந்தையின் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கூறுபவர்களின் நாடு.

 

இயற்கையான பொருளாதாரமான, முதலாளித்துவத்தின் சித்தாந்தமான, தாராளவாதத்தின் (லிபரலிசம்) குருவான ஸ்கொட்லந்துகாரர் அடம் ஸ்மித் கூட அரசின் பங்கு பற்றி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்கர்களின் புதிய லிபரலிச(Neo-Liberalism) கோட்பாடு, அரசாங்கம் என்பது தேவையற்ற ஒன்று, என்று கற்றுக்கொடுக்கின்றது. அதாவது இராணுவம், போலிஸ் மற்றும்பிற அரச அலுவலகங்களை மட்டுமே அரசாங்கம் நடத்த வேண்டும். பொருளாதாரத்தை சந்தை தீர்மானிக்கும்.

 

அப்படி சுதந்திரமாக விடப்பட்ட பங்குச்சந்தையில், ஊகவணிகம் செய்த சூதாடிகள் இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளதை, எல்லோரும் அவமானத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர். ஐரோப்பாவில் அரசாங்கம் தலையிட்டு ஊகவணிகம் செய்யும் பங்குச்சந்தை சூதாடிகளை தடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் சற்றே பிந்தி வந்த ஞானம் இது. மக்களின் ஓய்வூதிய காப்புறுதியிலும், சூதாடிகள் புகுந்து விளையாடி விட்டதால், வயதானவர்களின் ஓய்வூதியப்பணம் குறையப்போகின்றது.

 

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்ப அரசாங்கம் உதவவேண்டும் என்று கூறுவது ஒரு முரண்நகையான விடயம். அவர்களது பொருளாதாரக் கொள்கையின் படி, நன்றாக நிர்வாகிக்கப் படாத நிறுவனங்கள்(வங்கிகள் என்றாலும்) திவாலாகி, அழிந்து போவதில் தவறில்லை. சிறப்பாக நிர்வகிக்கப்பட்டவை மட்டும் நிலைத்து நிற்கும். ஆனால் தற்போது லிபரலிசத்திலும், சந்தைப் பொருளாதாரத்திலும் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் தற்போது அரசாங்க தலையீடு குறித்து யாரும் முணுமுணுக்கவில்லை.

 

அமெரிக்க அரசாங்கம் வழங்கப்போகும் பில்லியன் டாலர் நிதி, பெரிய வங்கிகளை மட்டும், அதுவும் தமக்கு பிடித்த நிறுவனங்களை மட்டும் காப்பற்றப் போகின்றது. இன்றைய நிதியமைச்சர் கூட முன்னர் ஒரு காலத்தில் Goldman Sachs Group நிறுவன நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தவர். அவர் கண்காட்டும் நிறுவனங்களுக்கு வழங்கப்படப் போகும் அரசநிதியானது, அமெரிக்காவில் எதிர்காலத்தில் அரச செல்வாக்குடன் பெருமளவு பணம் சேர்க்கப்போகும் வர்க்கமொன்றை உருவாக்கப்போகின்றது. இதனை கருத்தில் கொண்ட சில முதலாளிகள் போல்சன் அமெரிக்காவின் சக்திவாய்ந்த சர்வாதிகாரியாக மாறப்போவதாக கூறிவருகின்றனர். அதில் உண்மையில்லாமலும் இல்லை.

 

தற்போதுள்ள பொருளாதாரக் கட்டமைப்பை நவம்பர் மாத அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. அதற்குப்பின்னர், குறிப்பாக குடியரசுக்கட்சி வேட்பாளர் மக் கெய்ன் தெரிவானால், மீண்டும் பொருளாதார சரிவு ஏற்படும் வாய்ப்புண்டு. எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படப் போவது அமெரிக்க பொதுமக்கள் தான். நாட்டில் ஏழைகள் தொகை பெருகலாம். ஒரு வேளை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஏற்படலாம். இவற்றை சமாளிக்க இப்போதே நாடு முழுவதும் இராணுவம் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ள, ஒரு தொகுதி படையினரை உள்நாட்டு பாதுகாப்புக்காக(பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை?) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ செய்திகளை தாங்கிவரும் "Army Times" பத்திரிகை தெரிவிக்கின்றது. 

http://kalaiy.blogspot.com/