ஆதிக்கம் பெற்று நிற்கும் எதிர்புரட்சிகர சக்திகள் அனைத்தும், இதற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வைக் காட்டமுனைகின்றனர். இப்படி கடந்தகால வரலாறு முழுக்க, இதற்குள்ளாகவே ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று போட்டனர்.

 இந்த இரண்டு எதிர்புரட்சிகர வழிக்கும் வெளியில், தமிழ்மக்கள் சிந்திப்பதை செயல்படுவதை இருதரப்பும் அனுமதிப்பதில்லை. அப்படியான முயற்சிகளையும், சிந்தனைகளையும், படுகொலைகள் மூலம் இருதரப்பும்; தடுத்து பதிலளித்தனர். படுகொலை சாத்தியமற்ற நிலையில், இந்த வழிமுறையை முடிந்தவரை இழிவுபடுத்தினர்.

 

இருதரப்பும் தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை அரசியல் ரீதியாகவே மறுக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களின் உரிமையை அங்கீகரிப்பது கிடையாது. மக்களின் உரிமைகளை, தமது சொந்த வர்க்க நலனுக்கு எதிரானதாகவே பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர்கள், தாம் தமிழ்மக்களில் அக்கறை உள்ளவராக காட்டி நடிப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.

 

புலிகளை எடுத்தால் அவர்கள் பேரினவாதத்தைக் காட்டுகின்றனர். ஆகவே புலித் தமிழீழத்தை வைத்து தமிழ் மக்களை அடக்குகின்றனர்.

 

புலியெதிர்ப்பை எடுத்தால் பாசிசப் புலியை காட்டுகின்றனர். ஆகவே புலியொழிப்பை வைத்து தமிழ் மக்களை அடக்குகின்றனர்.

 

இவர்கள் தமிழ்மக்களின் பிரச்சனையை இரண்டாக பிரித்துக் காட்டுகின்ற போது, தமிழ் மக்கள் இதற்குள்ளாக மட்டும் வாழவில்லை. அதாவது இரண்டில் ஒன்றே தமிழ் மக்களின் பிரச்சனை என்று இவர்கள் கூறுவது போல், தமிழ் மக்களின் மொத்த பிரச்சனையை மறுக்கின்றனர்.

 

பேரினவாதம் தமிழ்மக்களின் மீதான ஒடுக்குமுறையை தீவிரமாக்கிய போது அனைவரும் தமிழீழம் என்றனர். அப்போதும் அனைவரும் சமூக விடுதலையை உள்ளடக்கிய வகையில் தீர்வையும் விடுதலையையும் முன்வைத்தனர். இப்படி சமூகப் பிரச்சனைகளுடன் மக்களை அணுகியவர்கள், நடைமுறையில் அதற்காக போராடவும் மறுத்தனர். மற்றவர்கள் அதற்காக போராடுவதைக் கூட எதிராகப் பார்த்தனர். இப்படி சமூகப் பிரச்சனையை தீர்க்கவே மறுத்தனர். இப்படியே தான் எதிர்புரட்சிகரத் தலைமைகள் உருவானது.

 

சமூக பிரச்சனையின் அடிப்படையில் அணிதிரண்டவர்கள், சமூகப் பிரச்சனையை முன்வைத்தபோது அவர்களை அடக்கினர். அதை மீறிய போது கொன்றனர். இப்படி எதிர்புரட்சிகர அரசியல் வரலாறே தொடங்கியது. மக்களை ஏமாற்றிய அரசியல் வரலாற்றுத் தொடர்ச்சி, இன்று புலித் தமிழீழம், புலியொழிப்பாகி நிற்கின்றது. புரட்சிகரமான மக்கள் அரசியல் மறுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இழிவாடப்படுகின்றது.

 

தமிழீழம் என்று தமிழ்மக்களின் பெயரில் அவர்களைக் கொன்ற எமது எதிர்புரட்சிகர தலைமைகள், அன்று போல் இன்றும் புரட்சிகரமான சிந்தனையை அனுமதிப்பதில்லை.

 

தமது வர்க்க நலனை சார்ந்து தமிழ்மக்களை பயன்படுத்தும் எதிர்புரட்சிகர செயல்பாடுகளை, தமிழ் மக்களின் புரட்சிகர செயல்பாடாக காட்டுகின்றனர். இந்த எதிர்புரட்சிகர துரோக வரலாற்றையே தமிழ் மக்களின் தலைவிதியாக, தீர்வாக காட்டுகின்ற அனைத்து முயற்சியையும் முறியடிக்காத வரை, தமிழ் மக்களுக்கு விடுதலை என்பது கிடையாது.

பி.இரயாகரன்
26.07.2007