வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.

 

அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.

 

இப்படித் தாக்குதலின் போது கால், கை முறிந்தவர்கள், எலும்பு உடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், மரணமானவர்கள், அவமானத்தாலும் இயலாமையினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ, எண்ணில் அடங்காது.

 

இதனால் முற்றாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், மறுபக்கம் மனநோய்க்குள் முழுச் சமூகம் சேடமிழுக்கின்றது.

 

இதை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகளின் ஒத்த வயதுடைய, புலி காடையர் கும்பல்கள் தான். எந்த இலட்சியமுமற்ற, நோக்கமுமற்ற, பொறுக்கித்தின்னும் லும்பன் கும்பலாக வளர்ந்த வேட்டை நாய்கள் தான். அந்த வேட்டைக் கும்பலின் வக்கிரத்தை, அதன் இழிந்த நடத்தைகளையும் அனுபவரீதியாக காணாத, அனுபவிக்காத எந்த மக்களும் இன்று வன்னியில் கிடையாது.

 

சமூகமே அங்கு புலியைத் தூற்றுகின்றது. அடி உதையைக் கடந்து, எந்தப் பெண் தான் புலிகளைத் தூற்றவில்லை? 'நாசாமாப்போவாங்கள்", 'மண்ணுக்குள் போவாங்கள்" என்று, சாபமிடாத எந்தப் பெண் தான் அங்கு உண்டு! தம் குழந்தைகளை புலியிடம் பறிகொடுத்த தாய்மையும், குழந்தைகளின் பிணத்தை மீளத் தரும் புலிக்கு எதிராக, தூற்றிப் போடும் சாபங்களால், புலித் தேசியம் ஒருபுறம் செத்துக் கொண்டிருக்கின்றது. புலியின் கண்காணிப்பு, அடக்குமுறையையும் மீறி, புலியைக் காறி உமிழ்கின்றனர். சதாகாலமும் திட்டித் தீர்க்கின்றனர், தூற்றுகின்றனர், புலம்புகின்றனர். இப்படி ஒரு இனத்தின் தாய்மை, மனநோய்க்குள் உள்ளாகி பரிதவிக்கின்றது.

 

வாய் திறக்க முடியாதவர்கள் மனதுக்குள் கறுவுகின்றனர். எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து, புலித்தேசியத்தின் மீது வாரிக் கொட்டுகின்றனர். எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள்.

 

இந்த மக்களை மீட்பார் கிடையாது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடையாது. இந்த துயரத்தை எழுத்தில் உள்ளடக்க முடியாது. எதை எழுதுவது, எப்படி எழுதுவது. மனித அவலங்களில், மொத்த சமூகமும் சிதைந்துவிட்டது. வற்றாத கண்ணீர், வாழ்வாகிவிட்டது. இழவு வீடே, தேசியமாகிவிட்டது. பிரமை பிடித்த மனித வாழ்வை, புலியிசத்தின் வெற்றியாக அதிகாரமாக பீற்றிக்கொள்ளப்படுகின்றது.

 

புலித்தேசியத்தில், மனிதம் வறண்டு செத்துக் கிடக்கின்றது. இங்கு யாருக்கு, யார் தான் ஆறுதல் கூறமுடியும். புலியிசத்தின் வக்கிரத்தில், மொத்த சமூகமே துன்ப துயரத்துடன் புலம்புகின்றது.

 

புலிகளை கேள்வி கேட்டால், புலிகளை எதிர்த்தால், குழந்தையை எங்கே என்று கேட்டால், குழந்தை அவர்களிடம் இருந்து பாதுகாக்க முனைந்தால், குழந்தையை ஒழித்து வைத்தால், குழந்தையை வன்னியை விட்டு வெளியேற்றினால், கண்மூடித்தனமாக தண்டிக்கப்படுகின்றனர். அடித்தல் முதல் அடித்தே கொல்லும் மரண தண்டனை வரை, அங்கு சாதாரணமான அன்றாட விடயமாகிவிட்டது.

 

பெரியவர்கள், பெற்றோர்களும் குழந்தைகள் முன்னாலே தண்டனைக்குள்ளாகின்றனர். இவை நம்பமுடியாத கற்பனைகளல்ல. வன்னியில் இருந்து கசிந்து வரும் செய்திகள், உற்றார் உறவினர்கள் கதறி அழும் தொலைபேசி உரையாடல்கள், மரணத்தை தாங்கி வரும் செய்திகள், மக்களின் இந்தக் கதியை கதைகதையாக புட்டுவைக்கின்றது. தொடர்பாடல் கண்காணிப்புக்களையும் மீறி, தொலைபேசியை ஒட்டுக்கேட்டல்களைக் கடந்தும், பொதுக் கண்காணிப்புகளைக் கடந்தும், நடைபெறும் மனித அவலங்கள் எல்லையின்றி வெளிவரத்தான் செய்கின்றது. அது அவர்களின் வாழ்வாகிவிட்டதால், அதைத் தவிர எதைத்தான் அவர்கள் உரையாட முடியும்.

 

இந்த மக்களைத்தான் மீட்கப் போவதாக கூறிக்கொண்டு, அந்த மக்களின் தலைக்கு மேல் பேரினவாதம் தாக்குதலை நடத்துகின்றது. ஒருபுறம் புலிகள் மக்களின் ஆன்மாவை கொன்றுவிட்ட நிலையில், மறுபுறம் பேரினவாதம் தமிழ் இனத்தின் மேல் அழித்தொழிப்பை நடத்துகின்றது.

 

மக்களை பகடைக்காயாகவும், மந்தைக் கூட்டமுமாக்கிவிட்டனர். புலிகளும் அரசும் மக்களை அங்குமிங்குமாக தமது யுத்தமுனைக்கு ஏற்ப பந்தாடுகின்றனர். மக்களை தம்மை சுற்றி தம் பாதுகாப்புக்கு புலிகள் சிறைவைத்துள்ளனர் என்றால், அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி தம் சிறையில் வைத்திட முனைகிறது பேரினவாதம். இதற்குள் காய் நகர்த்தல்கள், அறிக்கைகள். சுதந்திர நடமாட்டம் பற்றி ஐ.நாவின் புலம்பல். வன்னியில் இருந்து வரும் மக்கள், இராணுவத்தின் சிறை முகாமை விட்டு வெளியேறி சுதந்திரமாகத் தான் வாழ அனுமதிக்குமா? இலட்சக்கணக்கான மக்களை இந்த முகாம்கள் எப்படித் தான் வாழவைக்கும். இவை எல்லாம் ஊரை உலகத்தை ஏமாற்ற நடத்தும் நாடகங்கள்.

 

புலிகள் தம் பாதுகாப்புக்கு மக்களைக் கேடயமாக்கி, அந்த மக்களை யுத்த அகதியாக காட்டி புலம்பெயர் நாட்டில் பணம் திரட்டுகின்றனர் புலிப் பினாமிகள். இந்தப் பணம், அகதிகளுக்கு எந்தவகையிலும் செல்லாது. வன்னியானது பேரினவாத இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளது. அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கே பணம் என்பது, வழமை போல் மோசடிகளான ஏமாற்றுகள் தான். புலிப்பினாமிகள் அந்த மக்களின் துயரத்தை மலையளவாக்கி, இறுதிச் சுற்று அறுவடையை நடத்துகின்றனர்.

 

பேரினவாதத்தின் கொக்கரிப்பு

புலிகள் தோற்றுக்கொண்டு இருக்கின்றனர் என்று அன்று நாம் கூறிய போது, நடைமுறைச் சாத்தியமற்றது என்றனர், நம்ப மறுத்தனர். நாங்கள் புலிகளின் இராணுவம் மற்றும் அரச இராணுவத்தின் பலத்தில் இருந்து, இதை மதிப்பிட்டு கூறவில்லை. மாறாக மக்களை புலிகள் கையாண்ட நடைமுறைகளை வைத்து, இதைக் கூறினோம். மக்கள் புலிகளை தோற்கடித்த பின், புலிகளால் ஒரு யுத்தத்தை வெல்ல முடியாது.

 

மக்களை அடித்து உதைத்த படி, அவர்களின் குழந்தைகளை திருடிச் சென்று, அவர்களைக் கொண்டு யுத்தத்தில் வெல்லுதல் என்பது கற்பனையானது. தோற்றுத் தான் ஆக வேண்டும்.

 

பிரபானிசத்தின் புலியிசம் தன்னைத்தான் தோற்கடித்ததையே வரலாறாகக் கொள்கின்றது. இதன் மேல் தான் பேரினவாதம் ஏறிக் கொக்கரிக்கின்றது.

எந்த மக்களின் விடுதலை என்றார்களோ, அந்த மக்களை வருத்தித் துன்புறுத்தி தமக்காக போராட வைக்க முடியுமா? ஒரு மோடனும், முட்டாளும் தான் இப்படி எண்ண முடியும். இதை புலியிசமாக கொண்டு, இதையே தமிழ் தேசியமாக்கிய போது, அது தமிழ் இனத்தின் மொத்த அழிவுக்கே இட்டுச் சென்றுவிட்டது.

 

பேரினவாதத்தின் வெற்றிகள் என்பது, அதன் சொந்த வெற்றியல்ல. அது தமிழ் இனத்தை (புலி) தேசியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் தோற்கடித்த வரலாறு. புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை, தமிழ் மக்களின் முதுகில் குத்திய வரலாறு. இதுதான் பேரினவாதத்தின் வெற்றி

 

 

புலிகள் எதைப் பாதுகாக்க முனைகின்றனர்

தமிழ் மக்களுக்காக எதையும் பாதுகாக்க, அதனிடம் எதுவுமில்லை. சொந்த மக்களையே வதைத்தும், துன்புறுத்தியும், அடித்தும் உதைத்தும் ஆட்டம் போடும், கடைகெட்ட பாசிட்டுகளாகிவிட்ட பின், என்னதான் தமிழ் மக்களுக்காக போராட எஞ்சிக் கிடக்கின்றது? யார் தான், அதற்காக போராடுவர்?

 

இன்று புலிகள் தம் சொந்த பாதுகாப்புக்காக சண்டை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழ் இனத்தின் அப்பாவிக் குழந்தைகள் பலியிடப்படுகின்றனர். இதைவிட இதற்கு அப்பால் எதுவுமில்லை. புலி தனக்காக பலியிடுவது தான், அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. இதுதான் கடைசி கிளைமாக்ஸ்.

 

சமாதானம், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தின் போது, நோர்வே புலிக்கு பணமும், சொகுசுப் பொருட்களும், புலித் தலைவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மேற்கில் கல்வியும், சலுகைகளும் கொடுத்த போது, அது புலியை செல்லரிக்க வைக்கும் சதியாக இருந்தது. ஆடம்பரமான வாழ்வு, சொத்துகள் மீதான நாட்டம், சலுகைக்குள் வாழ்தல், இதன் மேலான உள் முரண்பாடுகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில், புலியின் தலைமையை செல்லரிக்க வைத்தது. இது ஏகாதிபத்திய தந்திரங்களில் ஒன்று. பொருள் வகைப்பட்ட வாழ்வில் நாட்டத்தை ஊக்கப்படுத்தி அவர்களை அழித்தலாகும்.

 

இப்படி புலிகள் புலித்தேசியம் மீது கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தேசியம் பற்றிய சொந்தப் பிரமைகளையும் துறந்தனர். மக்களை வெளிப்படையாக தமது சொந்த நலனுக்கு ஏற்ப பயன்படுத்த முனைந்தனர். மக்களை அடித்து உதைத்துத்தான் பயன்படுத்தவும், அடக்கியாளவும் முடியும் என்ற எல்லை வரை, புலியிசம் செத்துப் போய்விட்டது. இனி மீள முடியாது. இதைத்தான் பேரினவாதம் தனது சொந்த வெற்றியாக்குகின்றது. அவர்கள் உருவாக்கப்போவதும் அடிமைத்தனத்தைத் தான். தமிழ் கைக்கூலிகளைக் கொண்டு, தமிழ் மக்களை அடக்கியொடுக்குவது தான்.

 

பி.இரயாகரன்
08.09.2008