2002இல் நடந்த ஏற்றுமதியை 2003உடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் உலக அளவிலான ஏகாதிபத்திய முரண்பாடுகளை தெளிவாக இனம் காணமுடியும். ஒப்பீட்டு அளவில் ஜெர்மனிய ஏற்றுமதியை எடுத்தால் 13,620 கோடி டாலரால் அதிகரித்தது. அமெரிக்கா ஏற்றுமதி 3050 கோடி டாலரால் அதிகரித்தது. சீனா ஏற்றுமதி 11,280 கோடி டாலரால் அதிகரித்தது. ஜப்பானிய ஏற்றுமதி 5,690 கோடி டாலரால் அதிகரித்து. ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு கடுமையான வீச்சான மோதல் நடக்கின்றது. சந்தையை யார் அதிகம் ஆக்கிரமிப்பு செய்வது என்பதில் கடுமையாகவே மோதுகின்றன. இது தேசங்கடந்த உள்நாட்டு இராணுவ மோதலாக, இராணுவ ஆக்கிரமிப்பாக மாறி வருகின்றது. 

 

 ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான சர்வதேச நெருக்கடி இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக ஒரு வீச்சில் நடக்கவில்லை. சோவியத்யூனியன் 1960களில் மார்க்சியத்தை கைவிட்டு ஒரு சமூக ஏகாதிபத்தியமாக பரிணமித்த பின்பு, புதிய ஒரு நெருக்கடி உருவாகியது. 1960க்கு முந்திய நிலையில் ஏகாதிபத்தியத்துக்கு சோவியத் நெருக்கடி என்பது, ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தது. ஒவ்வொரு நாடும் சொந்த நாட்டு வர்க்கப் போராட்டத்தைக் கண்டு பீதிக்குள்ளாகியது. இந்த வர்க்கப் போராட்டத்தை சோவியத் அபாயமாக ஏகாதிபத்தியங்கள் கண்டு அஞ்சின. உழைக்கும் மக்களின் போராட்டங்களே உலகின் நிகழ்ச்சி நிரலாக இருந்தன. இதனால் ஏகாதிபத்தியங்கள் காலனிகளை கைவிட்டு, தமது பொம்மை ஆட்சிகளை உருவாக்க நிர்ப்பந்தித்தது. இதுவே நாடுகளின் சுதந்திரங்கள் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டவை.


 1960க்கு பின்பாக சோவியத் வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட நிலையில், உலக சந்தையைக் கைப்பற்றும் போட்டியில் மற்றைய ஏகாதிபத்தியத்துடன் ஈடுபட்டது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு தன்னை ஒரு சமூக ஏகாதிபத்தியமாக மாற்றியதன் மூலம், ஏகாதிபத்திய போட்டி மூர்க்கமாகியது. ஏகாதிபத்தியம் வர்க்கப் போராட்டங்களைக் கண்டு அஞ்சிய காலம் முடிவுக்கு வந்தது. மாறாக உலகை மீள புதிய வடிவில் பகிர்வது முன்னுக்கு வந்தது. உலகம் இரண்டு போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான, சந்தைப் பகிர்வை முன்னிலைப்படுத்தியது. அமெரிக்கா தலைமையில் பல ஏகாதிபத்தியங்கள் ஒன்றாக முன்நின்று, சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே தனது மூலதனத்தை தக்கவைத்துக் கொள்ளப் போராடியது. ரசிய ஏகாதிபத்தியம் ஒரு சமூக ஏகாதிபத்தியமாக இருந்ததால், முன்னர் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுப் போராடிய பரந்துபட்ட மக்களை ஏமாற்ற முடிந்தது. தனது சமூக ஏகாதிபத்தியமயமாதலையே வர்க்கப் போராட்டமாக முன்வைத்து, உலகில் உள்ள பரந்துபட்ட மக்களை தனக்கு பின்னால் திரட்ட முனைப்புக் கொண்டது. சமூக (மக்கள்) மற்றும் ஏகாதிபத்தியம் என்ற இரண்டு பலமான கூறுகளைக் கொண்டிருந்ததால், ஏகாதிபத்தியங்கள் சோவியத்தை எதிர் கொள்வதில் கடுமையான ஒன்று குவிந்த தற்காப்பை நடத்த வேண்டியிருந்தது. 


 சமூக ஏகாதிபத்தியத்தின் துணையுடன் அவர்களின் ஏகாதிபத்திய போக்கை ஏற்றுக் கொண்டு இயங்கத் தொடங்கிய நாடுகள், உலக நாடுகளின் தேசிய வருவாயில் 25 சதவீதத்தையும், உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், அடிப்படை எரிபொருள் சக்தியில் 30 சதவீதத்தையும் உலகளவில் கட்டுப்படுத்தின. இதன் மூலம் மிகப் பெரும் போட்டியாளனாக மாறி, மற்றைய ஏகாதிபத்தியங்களுக்குச் சவால் விடும் நிலைக்கு வளாச்சியுற்றது. ரசிய சமூக ஏகாதிபத்தியம் மேற்கத்திய தேசங்கடந்த தொழில் கழகம் போல், உலகளாவிய சோசலிச தொழில் கழகங்களை நிறுவியது. ஏகாதிபத்திய தேசங் கடந்த நிதி மூலதன வங்கிகள், சர்வதேச நாணய மற்றும் நிதி மூலதன கூட்டுகளைப் போல் சமூக ஏகாதிபத்தியம் சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு வங்கி மற்றும் சர்வதேச முதலீட்டு வங்கியை நிறுவியது. சமூக ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையை சர்வதேச சோசலிச வேலைப்பரிவினை என்று பிரகடனம் செய்தது. இப்படி இரண்டு ஏகாதிபத்திய சந்தை, வேலைப் பிரிவினை உலகளாவிய ரீதியில் ஒன்றையொன்று எதிர்த்து மக்களைச் சூறையாடியபடி வளர்ச்சியுற்றது. ரசிய ஏகாதிபத்தியம் ஒரு சமூக ஏகாதிபத்தியமாக இருந்ததால், அது பலம் கூடிய ஒன்றாகவும், மற்றைய ஏகாதிபத்தியம் பெற்றிராத ஒரு ஆயுதத்தையும் கொண்டிருந்தது. இந்த சமூகக் கூறுகளைச் சொந்த நாட்டில் மட்டுமல்ல, மற்றைய நாட்டு உழைக்கும் வர்க்கத்தையும் இதனடிப்படையில் பயன்படுத்திக் கொண்டது. சமூக ஏகாதிபத்தியம் உலகளவில் ரூபிள் நாணயச்சந்தை, சமனற்ற ஒப்பந்தம், சமனற்ற வர்த்தகம், போன்றவற்றை உருவாக்கியது. வேலைப் பிரிவினையை உருவாக்கி, ரசிய ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுடன் இணைத்துக் கொண்டது.


 இதன் மூலம் ரசியா சமூக ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வலிமை உலகில் பலமான ஒன்றாக மாறியது. 1976இல் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தி 28,58,500 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. ரசியாவினுடையது 16,27,500 கோடி ரூபாவாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ரசியாவின் ஆலை உற்பத்தி ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டனின் மொத்த உற்பத்தியை விட அதிகமானதாக இருந்தது. இதன் மூலம் சமூக ஏகாதிபத்தியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்தது. சர்வதேசச் சந்தையைக் கைப்பற்றுவதில் கடுமையான இழுபறிக்குள் உலகம் சென்றது. தொடர்ச்சியான ஆட்சிக் கவிழ்ப்புகள், ஆக்கிரமிப்புகள் பரஸ்பர நியாயப்படுத்தலுடன் உலகின் பொது நிகழ்ச்சி நிரலாகியது. மூலதனத்தின் அடங்காத வெறி எங்கும் தலைவிரித்தாடியது. இதுவே இன்றைய நிலையும் கூட.


 யுத்த விளிம்புவரை தம்மைத்தாம் தயார் செய்தனர். ஒன்றையொன்று மிஞ்ச முனைப்புக் கொண்டனர். ரசிய சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க இராணுவ வலிமையை எட்டிப்பிடிக்கப் போட்டியிட்டது. அணுவாயுதம், மரபுவழி ஆயுதங்கள், கடற்படையிலும் அமெரிக்காவை மிஞ்சியது. உலகைப் பதட்ட நிலைக்குள் தள்ளிச் சென்றதுடன், தாக்குதல் நிலைக்குள் நகர்ந்தனர். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தற்காப்பு நிலை எடுத்தது எதிர்த் தாக்குதலை நடத்த காத்து இருந்தனர்.


 மறுபக்கத்தில் 1980 சமூக ஏகாதிபத்தியம் என்ற உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியமயமாதலில் சமூகம் என்ற உள்ளடக்கத்தை படிப்படியாக, முற்றாகத் துறந்த போது, சமூக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே தகர்ந்து போனது. சமூக ஏகாதிபத்தியம் தனது ஏகாதிபத்திய நோக்கில் உலகளவில் சமூகக் கூறுகளை தனக்கு எதிராக நிறுத்தியது.  இதனால் ரசிய ஏகாதிபத்தியம் மற்றைய ஏகாதிபத்திய சமூக விரோதக் கூறுகளை, எதிர்கொள்ள முடியாது திணறியது. இதனால் சமூக ஏகாதிபத்தியம் தனது பலத்தில் ஒரு நெருக்கடியை சந்தித்தது. அமெரிக்கா தலைமையிலான போட்டி ஏகாதிபத்தியம் தற்காப்பில் இருந்து விலகி, தாக்கி அழிக்கும் தந்திரத்தை ரசிய சமூக ஏகாதிபத்தியம் மீது நடத்தியது. இதை ஈடுகொடுக்க முடியாது சமூக ஏகாதிபத்தியம் சிதறி, அதன் கட்டுப்பாட்டில் இருந்த பொருளாதார, இராணுவக் கட்டமைப்பே சிதைந்து போனது. போட்டியாளன் திடீரென சந்தையில் காணாமல் போனான். அமெரிக்கா தனித்துவமிக்க ஏகாதிபத்தியமாக தன்னை மாற்றியது. ரசிய ஏகாதிபத்தியம் நலிந்து போன ஒரு ஏகாதிபத்தியமாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டு, மற்றைய ஏகாதிபத்தியத்துடன் கூடி நின்று அங்குமிங்கமாக ஏகாதிபத்திய புதிய நெருக்கடிக்கும் தன்னை புனர்நிர்மாணம் செய்ய முனைப்புக் கொள்கின்றது.


 சமூக ஏகாதிபத்தியத்தின் தகர்வுகளினால் அது கட்டுப்படுத்தி இருந்த பொருளாதார நலன்களை அடைவதில், அமெரிக்காவின் தலைமையில் இருந்த ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டம் வளர்ச்சியுற்று புதிய முரண்பாடாக மாறிவிட்டது. முன்னாள் சமூக ஏகாதிபத்தியத்தின் நலன்கள் பகிரப்பட்டு முதிர்வுற்ற நிலையில், உலகில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான அச்சுறுத்தலாக மாறியது. இவர்களுக்கு இடையில் மோதல் கூர்மையடைந்தது. இதை ஈடுகட்ட உலகமயமாதல் என்ற பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது உலகை அதியுயர்ந்த பட்சம் சூறையாடுதல் ஊடாக ஏகாதிபத்திய முரண்பாட்டை மட்டுப்படுத்த எடுத்த முயற்சியும் கூட நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது. இவை  ஏகாதிபத்திய போட்டியை புதிய தளத்துக்கு நகர்த்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என்ற மூன்று பிரதானமான ஏகாதிபத்திய மையங்களுக்கு இடையிலான மறுபங்கீட்டை அடிப்படையாக கொண்ட இழுபறியான ஒரு யுத்தம் தொடங்கியுள்ளது.


 1990களில் மேற்கு ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளுக்குள் 19 சதவீத சனத்தொகை கொண்ட ஒரு நாடாக இருந்தது. மொத்த உற்பத்தியில் 22 சதவீதமும், 31 சதவீத ஏற்றுமதியையும் கொண்டிருந்தது. ஐரோப்பிய கூட்டு பலம் உலகில் ஒரு பலமான சக்தியாக முன்னேறியது. இராணுவ ரீதியாக 1985களில் ரசியா 39 இலட்சம் பேரைக் கொண்ட படையாக இருந்த போது, ஐரோப்பாவின் படைப்பலம் 32.61 இலட்சமாகவும், அமெரிக்கப் படைபலம் 22.46 இலட்சமாகவும் இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவுக்குள் ஜெர்மனி முன்னிலை சக்தியாக வளர்ச்சியுற்றது. 1980இல் வருடாந்தம் 4.6 சதவீத வளர்ச்சியை எட்டியது. 1990இல் 22,80,000 கோடி இந்தியா ரூபாயை தேசிய வருமானமாகக் கொண்டு இருந்தது. ஜெர்மனியின் ஏற்றுமதி 1989 முதல் ஏழு மாதத்தில் 18 சதவீதமாக அதிகரித்தது. வர்த்தக உபரி 1,46,300 கோடி இந்தியா ரூபாவாகியது.


 1989இல் ஜப்பானை எட்டிப்பிடித்த மேற்கு ஜெர்மனியின் வெளிநாட்டுச் சொத்தின் மதிப்பு 42,57,000 கோடி இந்தியா  ரூபாவாகியது. ஏற்றுமதி வர்த்தக உபரி 1,53,900 கோடியாகியது. இக்காலத்தில் கிழக்கு ஜெர்மனி இணைந்தது. இது இணையும் போது மிகப் பெரிய பொருளாதார வளத்துடனேயே இணைந்தது. கிழக்கு ஜெர்மனியின் தனிநபர் வருமானம் ஸ்பெயினை விடவும் அதிகமாகவே இருந்தது. 60 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி திறனைப் பெற்றிருந்தது. கிழக்கு ஜெர்மனியின் கடன் வெறும் 7,600 கோடி இந்தியா ரூபாதான். ஆனால் அதன் கையிருப்பு 34,200 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. இந்த நாடு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்த போது, ஜரோப்பிய நாடுகளுக்கு இணையான சமாந்தரமான பலத்துடன் தான் இணைக்கப்பட்டது.


 கிழக்கு ஜெர்மனி இணைக்கப்பட்ட போது மொத்த சனத் தொகை 27 சதவீதத்தால் அதிகரித்தது. அதன் நிகர உள்நாட்டு உற்பத்தித் திறன் 24 சதவீதத்தால் அதிகரித்தது. அதாவது 2,04,630 கோடி இந்தியா ரூபாவாகியது. அதன் ஏற்றுமதி 81,32,000 கோடி இந்தியா ரூபாவாகியது. ஜெர்மனியின் நிகர தேசிய வருவாய் 2,60,87,000 கோடி இந்தியா ரூபாவாகியது. வருவாயில் 20 சதவீதத்தை மறுமுதலீடு செய்தது. 1989ஆம் ஆண்டுக்கு முன்பே மேற்கு ஜெர்மனி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 70,300 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. இதில் கிழக்கு ஜெர்மனிக்கு மூன்றில் ஒன்றை செய்தது. ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து பெரிய அளவில் நிதி மூலதனத்தை கிழக்கு ஐரோப்பாவுக்குள் ஜெர்மனி ஏற்றுமதி செய்தது. கங்கேரியில் 700 தொழில் நிறுவனங்களில் பாதிக்கு மேல் மேற்கு ஜெர்மனியுடையதாக இருந்தது. ரசியாவில் 1,000 மேற்பட்ட நிறுவனங்களுடன் கூட்டுத் தொழிலை தொடங்கியிருந்தது. ஒன்றிணைவின் பின் ஐரோப்பாவில் ருசியாவுக்கு அடுத்த, மிகப் பெரிய அதி நவீன இராணுவமாக மாறியது. சோவியத் சிதைக்கப்பட்டவுடன் அதில் அதிக லாபங்களை ஜெர்மனியே பெற்றது. இதற்கு கிழக்கு ஜெர்மனிய முன்னைய உறவுகள் வழிவகுத்தன. ஜெர்மனிய ஏகாதிபத்தியம் மிகப் பலம் பொருந்திய ஒன்றாக மாறியது. இப்படி ஏகாதிபத்திய பொருளாதார வளர்ச்சி, ஏகாதிபத்திய முரண்பாடுகளை புதிய தளத்துக்கு மாற்றியமைத்தது.


 மறுபக்கத்தில் ஜப்பான் மிகவேகமாக வளர்ச்சியுற்றது. அதி நவீன தொழில் நுட்பம் சந்தை, ஜப்பான் பக்கம் காற்றை வீசப் பண்ணியது. 1965 முதல் ஜப்பானியப் பொருளாதாரம், இரண்டு சர்வதேச எண்ணெய் நெருக்கடி ஆண்டுகளைத் தவிர. (197375, 197980) உபரியாகவே இருந்துள்ளது. 1965இல் ஜப்பானின் உபரி 1,900 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. இது 1975இல் பத்து மடங்காக மாறியது. 1985இல் 90 மடங்காகியது. குவிந்த ஜப்பானின் அன்னியச் செலவானி வெளிநாட்டு முதலீடாகவும், நிதி மூலதனமாகவும் மாறியது. இது அமெரிக்காவின் தொழில் துறையை விலை பேசி வங்கியது. ஜப்பானிய நிதி மூலதனம் உலகெங்கும் புகுந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமடியிலும் தங்கத் தொடங்கியது. அமெரிக்கப் பொருளாதாரம் அன்னிய நாடுகளின் உபரியில் வீங்கி பெருவடிவம் எடுத்துள்ளது. அதேநேரம் உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடாக அமெரிக்கா மாறிவிட்டது.


 உண்மையில் சமூக ஏகாதிபத்தியம் 1980களில் தொடங்கிய பத்தாண்டுகளில் தொடர்ச்சியாகச் சிதைந்தபோது, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான புதிய பங்கீடுகள் தொடங்கியது. இது அமைதியாகவும் அதேநேரம் கடும் மோதலுடனும் ஆரம்பமாகியது. எங்கும் அதிர்வுகள் எதார்த்தமான ஏகாதிபத்திய மோதலுக்கு அறைகூவியது. இந்த மோதல்கள் ஐரோப்பிய ஒன்றிணைவைத் துரிதமாக்கியது. அமெரிக்காவை நேரடியாக எதிர்கொண்ட ஐரோப்பிய நாடுகள், தனித்தனியாகப் போராட முடியாது திண்டாடின. அமெரிக்காவுக்கு எதிராக பொருளாதாரம் இராணுவப்பலம் என எதிலும் தனித்தனியாக நீடிப்பது சாத்தியமில்லை என்ற நிலை, ஐரோப்பிய இணைவைத் துரிதமாக்கியது. இந்த இணைவில் முதலில் 12 நாடுகள் தம்மை இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகையும், மற்றைய போட்டி ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொண்டு மோதத் தொடங்கியது.


 இந்த நிலையில் 1984இல் 12 ஐரோப்பிய நாடுகள் மொத்த ஆலை உற்பத்தி அமெரிக்காவின் உற்பத்தியை விட 13.4 சதவீதம் அதிகமானதாக மாறியது. ஜப்பானை விட 2.3 மடங்கு அதிகமாகியது. ஏற்றுமதி அமெரிக்காவை விட 2.8 மடங்கு, ஜப்பானை விட 3.6 மடங்கும் அதிகமாகவும் மாறியது. 2004இல் ஜெர்மனி மட்டும் அமெரிக்காவின் ஏற்றுமதியின் அளவைக் கடந்துள்ளது. உண்மையில் 1980களில் சோவியத் சிதைவுடன் அக்கம்பக்கமாகவே ஏகாதிபத்திய மோதல்கள் ஆரம்பமாகின. இது ஒன்றுபட்ட பல கூட்டுப் பிராந்தியங்களை உருவாக்கியது. புதிதாக ஈரோ நாணயம் சந்தையில் ஐரோப்பா அறிமுகப்படுத்தியதன் மூலம், டாலர் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. எங்கும் ஒரு நிழல் யுத்தம் தொடங்கியுள்ளது. தமக்கு இடையிலான தீவிரமான மோதலைத் தவிர்க்க கூட்டாக உருவாக்கியதே உலகமயமாதல். அதில் அரசு சொத்துக்கள் முதல் தனியார் தேசிய சொத்துக்களையும் கொள்ளை அடிப்பதை அடிப்படையாகக் கொண்டே உலகமயமாதல் நிபந்தனைகள் உருவாக்கப்பட்டது. இவை என்ன எனத் தெரியாத வகையில், கையெழுத்துகள் மட்டும் மூன்றாம் உலக நாடுகளிடம் வாங்கப்பட்டன. 


 இந்த நோக்கில் ஏகாதிபத்திய மூலதனங்கள் மூன்றாம் உலக நாடுகளை அதிகளவில் கொள்ளையடித்தல் என்ற போட்டியில் குதித்துள்ளதுடன், அவை தமக்கு இடையில் போட்டி போடுகின்றன. மக்களின் வாழ்வியலை பாதுகாத்த அதேநேரம் அவர்களின் உரிமையாக இருந்த தேசிய சொத்துக்களை வாங்கிக் குவிப்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. இதன் போது, அதிக தேசிய அரசு சொத்துக்களை கொண்டிருந்த சில நாடுகளிடம், சொத்துக்களை விற்பதன் மூலம் மூலதனம் குவியத் தொடங்கியது. அதேபோல் அதிக மலிவான உழைப்பைக் கொண்டதும், அதிகம் சுரண்டக்கூடிய நாடுகளிடம் மூலதனத்தின் திரட்சி நிகழத் தொடங்கியது. இந்த வகையில்  நவீனத் தொழில் நுட்பத்தை இயக்கவல்ல கல்வி அறிவு பெற்ற சீனா, மிக மலிவான கூலியுடன் உலகச் சந்தையையே ஆட்டம் காண வைக்கின்றது. அரசு சொத்துக்களை அன்னியருக்கும் உள்நாட்டிலும் விற்பதன் மூலம் பெரும் மூலதனங்களின் திரட்சியை பெறத் தொடங்கியது. இது சீன மூலதனத்தின் எல்லை இல்லாத வீக்கத்தை உருவாக்குகின்றது. உலகில் ஏகாதிபத்திய முரண்பாடுகளுக்கு தனது நாட்டிலேயே களம் அமைத்து கொடுத்துள்ளதுடன், இந்த முரண்பாட்டில் சீனாவும் தன்னை இணைக்கத் தொடங்கியுள்ளது.