சுதந்திரம், ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பிரகடனம் செய்து எதைச் சாதிக்கின்றனர் என்பதைக் குறிப்பாகப் பார்ப்போம். உலகில் மிகப் பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம் சீனாவில் தனது விற்பனையை 2003இல் ஆறு மடங்காக்கியது. சந்தை உருவாக்கித் தரும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைச் சூறையாடுவதையே பிரகடனமாகின்றது. 2002இல் ஜெனரல் மோட்டார் நிறுவனம் 14.2 கோடி டாலரை லாபமாக பெற்ற இந்த நிறுவனம், 2003இல் 43.7 கோடி டாலர் லாபத்தைப் பெற்றது. சீனாவின் ஜனநாயகம் மக்களின் வாழ்வை சூறையாடி விட, அதுவே லாபங்களை அள்ளிக் கொடுத்தது.

மொத்தத்தில் ஆசிய மற்றும் பசிபிக்  நாடுகளில் இந்த நிறுவனம் பெற்ற லாபம் 70 முதல் 80 கோடி டாலராகும். சீனாவில் தனது வாகன விற்பனையை இரட்டிப்பாக்கியதுடன், 7.66 லட்சம் வாகனங்களை ஒரே வருடத்தில் விற்றது. கார்கள் வீதிகளில் பவனி வர, மக்கள் தம்மைத்தாமே ஓடு பாதையாக்குகின்றனர். வாகனங்கள் பவனி வர மக்கள் குடியிருப்புகள் பலாத்காரமாகவே குடியெழுப்பப்பட்டு தகர்க்கப்பட்டு அவைகளே வீதியாகின்றன. மக்கள் அனாதைகளாக, குடியிருக்க நிலமின்றி, வீதிவீதியாக பிச்சை எடுக்கின்றனர். இது தான் சீனாவில் ஜனநாயகத்தை மீட்ட போது எதிர்ப்படும் எதார்த்தமான காட்சியாகும்.


 இதுவே ரசியாவிலும் நடந்தது. ஜனநாயகத்தை மீட்டதாகப் பிரகடனப்படுத்திய பண்பான பத்து வருடங்களில், ரசியாவில் இருந்து 25,000 கோடி டாலருக்கு மேலான பணத்தை நாட்டை விட்டே கடத்தியுள்ளனர். 2000மாவது ஆண்டில் மட்டும் இந்தத் தொகை 2,460 கோடி டாலராக இருந்தது. இது 1999யை விடவும் 30 சதவீதம் அதிகமாகும். இவை எல்லாம் சட்டப்பூர்வமாகவே நாடு கடத்தப்பட்டவை. சட்டவிரோதமான புள்ளிவிபரங்களையும் உள்ளடக்கின், இதன் தொகை பலமடங்காக இருப்பது தவிர்க்க முடியாது. மீட்கப்பட்ட ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் கதை இதுதான். ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி பாசாங்கு பண்ணி மூக்கால் அழுகின்றனரோ, அங்கெல்லாம் இதுதான் கதை. மனித வரலாறு இப்படித் தான் மனிதத் துயரங்கள் மேல்  உள்ளது.


  சீனாவில் ஜனநாயகத்தை மீட்கப் புலம்பிய ஏகாதிபத்தியங்களின் நலன்கள் தான் என்ன என்பதை வெளிப்படுத்திய மற்றொரு தெளிவான உதாரணம். 20032004இல் கொக்கோகோலா என்ற அமெரிக்க மூத்திரத்தின் விற்பனை சீனாவில் 37 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் மூலம் ஆசியாவிலேயே தனது விற்பனையை 4 சதவீதத்தால் அதிகரித்தது. இது உலகளவில் ஒரு சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் ஜெர்மனியில் இது 15 சதவீதத்தால் குறைந்தது. மக்களின் சமூக விழிப்புணர்ச்சி குறையும்போது விற்பனை அதிகரிப்பும், மக்களிடம் சமூக விழிப்புணச்சி ஏற்படும் போது விற்பனைக் குறைவும் ஏற்படுகின்றது. 


 சீனாவின் ஜனநாயகத்தில் அக்கறை கொண்டு கூக்குரலிட்ட ஜெனரல் மோட்டாரின் விற்பனை வருமானம் 1992இல் 13,300 கோடி (133 பில்லியன்) டாலராகும். இது பல நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். தான்சானியா, எத்தியோப்பியா, நேபாளம், வங்காளதேசம், உகண்டா, நைஜீரியா, கென்யா, பாகிஸ்தானின் வருமானத்தை விடவும், அதாவது அங்கு வாழும் 50 கோடி மக்களின் வருமானத்தை விட இந்த நிறுவனத்தின் வருமானம் அதிகமாக இருந்தது. இது உலக சனத்தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களின் வருமானத்துக்குச் சமனாகும். உண்மையில் உலகின் மிகப் பெரிய கம்பெனிகள், பல சிறிய நாடுகளையும், அந்த நாட்டு மக்களையும் அடிமையாக சேர்த்து வாங்கும் திறனைப் பெற்று விட்டன. இந்த நிலையில் நாடுகளையும் அதில் வாழும் மக்களையும் அடிமைப்படுத்தி வாங்கும் நிகழ்ச்சி நிரல் தான் நடைமுறையில் அமலாகும் உலகமயமாதல். இதே நிறுவனம் 1999இல் தனது சொத்துக்களின் பெறுமானம் 19,923 கோடி ஈரோவாகியது. 1992க்கும் 1999க்கும் இடையில் ஈரோ மற்றும் டாலர் நாணயங்களை சமனாக எடுத்து ஒப்பிடின், சொத்துக் குவிப்பு 1992யை விட 6,923 கோடி டாலரால் அதிகரித்திருந்தது. இந்தப் பணம் எங்கு இருந்து எப்படிக் குவிந்தது. இவற்றைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனினதும் சமூகக் கடமையாகும். நமது உழைப்புத்தான் இப்படிச் சூறையாடப்பட்டுக் குவிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமானதாகி விடுகின்றது.


 இப்படி உலகை ஆட்டிப் படைக்கும் முதல் 200 பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களில் ஐந்து மட்டுமே ஏகாதிபத்தியம் அல்லாத நாடுகளில் காணப்பட்டது. இந்த ஐந்தில் மூன்று தென் கொரியாவிலும், இரண்டு பிரேசிலிலும் காணப்பட்டது. 1992இல் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் 100இல் 38 ஐரோப்பாவிலும், 29 அமெரிக்காவிலும், 16 ஜப்பானிலும் காணப்பட்டது. மற்றவை கூட ஆஸ்திரேலியா மற்றும் எண்ணெய் வள நாடுகளைச் சார்ந்த, பிரதான ஏகாதிபத்திய நிறுவனங்களாகவே இருந்தன. 1992இல் முன்னணி 200 பன்னாட்டு நிறுவனங்களில் 25.1 சதவீதத்தை ஜப்பான் கட்டுப்படுத்தியது. 1995இல் 38.7 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1995இல் முதல் பத்து பன்னாட்டு நிறுவனங்களில் 6 ஜப்பானுடையது. 3 அமெரிக்காவினுடையது. மற்றையது பிரிட்டன் மற்றும் நெதர்லாந்துக்கு சொந்தமானதாக இருந்தது. 20ல் 11 ஜப்பானுக்கும், 7 அமெரிக்காவுக்கும் 2 ஐரோப்பாவுக்கும் சொந்தமானதாக இருந்தது. முதல் 100 பன்னாட்டு நிறுவனத்தில் 38 ஐரோப்பாவுக்குச் சொந்தமாக இருந்தது. 37 ஜப்பானுடையது. 24 அமெரிக்காவுக்குச் சொந்தமானது. உண்மையில் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள்கூட, வெவ்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்படுவதும் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகி உள்ளது. மூலதனத்தின் இடமாற்றம் திடீர் திடீரென நடப்பதையே, உலக வர்த்தக நெருக்கடிகள் ஏற்படுத்தி விடுகின்றன. உலகமயமாதல் பற்றிய புரிதலில் பன்னாட்டு நிறுவனங்கள், எப்படி மற்றொன்றுக்கு தூக்கி எறியப்படுகின்றது என்பது பற்றிய தெளிவும் மிக முக்கியமானது.


 அதேநேரம் இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் உழைப்பும் உருவாக்கும் செல்வங்களின் மொத்த இருப்பிடங்களாக, ஏகாதிபத்தியங்கள் மாறிவிட்டது. 1997இல் மிகப்பெரிய 25 காப்புறுதி நிறுவனங்களில் 9 அமெரிக்காவினுடையதாக இருந்தது. 16 ஐரோப்பாவினுடையதாக இருந்தது. உலகில் மிகப் பெரிய 25 வங்கிகளில் 4 அமெரிக்காவினுடையதாக இருந்தது. 8 ஜப்பானினுடையதாகவும், மிகுதி 13ம் ஐரோப்பாவினுடையதாகவும் இருந்தது. மிகப் பெரிய 25 தொழில்துறை நிறுவனங்களில் 9 அமெரிக்காவினுடையதாக இருந்தது. 10 ஜப்பானுடையதாகவும், 5 ஐரோப்பாவினுடையதாகவும் இருந்தது. உழைக்கும் மக்களின் உழைப்பு உருவாக்கும் செல்வம், எல்லாவிதமான தடைகளையும் கடந்து, தனிப்பட்ட ஒரு சிலரிடமும், சில நிறுவனங்களிடமும் சென்று குவிந்து விடுகின்றது. இது அன்றாட நிகழ்ச்சி நிரலாகி விட்டது. இப்படிக் குவிந்து செல்லும், இந்தச் செல்வத்தின் அளவு என்ன எனப் பார்ப்போம்.


 1997இல் மிகப் பெரிய செல்வ ஆதாரங்களைக் கொண்ட சொத்துக்களின் பெறுமதி கோடி டாலரில்
 உலகின்  உலகின்  உலகின்
 

1.மிகப் பெரிய தொழில் துறை  

2.மிகப் பெரிய வங்கி 

3.மிகப் பெரிய  காப்புறுதிநிறுவனம்
                                                                                            1                                           2                                               3
உலகில் மிகப்பெரிய நிறுவனம்                    17,817                               71,887                                       5,269
உலகில் மிகப்பெரிய 5 நிறுவனங்கள்         75,455                            2,80,600                                     17,520
உலகில் மிகப்பெரிய 10 நிறுவனங்கள்    1,32,540                           5,07,405                                     27,160
உலகில் மிகப்பெரிய 25 நிறுவனங்கள்    2,42,410                         10,28,830                                     39,230


 1997க்கு முந்திய ஆண்டில் மிகப் பெரிய நிறுவனங்களின் சொத்துக்களின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது, எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் வீங்கி வெம்புகின்றன என்பதை ஒப்பீட்டில் இனம் காணமுடியும். 1996இல் மிகப் பெரிய தொழில்துறை பன்னாட்டு நிறுவனத்தின் சொத்து 16,836 கோடி டாலராகும். முதல் ஐந்து பன்னாட்டு நிறுவனத்தின் சொத்துக்கள் 67,165 கோடி டாலராக இருந்தது. பத்து பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் மொத்தப் பெறுமதியோ 1,04,626 கோடி டாலராகும். முதல் 25 பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் 1,89,865 கோடி டாலராகும். 1996க்கும் 1997க்கும் இடையில் ஒரே வருடத்தில் தொழில்துறை முறையே 981, 8,290, 27,914, 52,545 கோடி டாலரால் சொத்துக்களின் பெறுமதி அதிகரித்து இருந்தது. சொத்துக்கள் வருடாந்தரம் பெரும் தொகையில் அதிகரிக்கும் அதேநேரம், இது ஏகாதிபத்திய நாடுகளிடையே அங்கும் இங்குமாக இடமாறுகின்றது.


 1998, 1999, 2000ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய 100 நிறுவனங்களை எடுத்து ஆராயும் போது, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கடும் முரண்பாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதைப் பார்ப்போம்.


ஆண்டு             அமெரிக்கா             ஜப்பான்                ஐரோப்பா           சீனா                   மற்றவை
 1998                          27                             17                              40                         -                              6
 1999                         35                              22                              41                        2                              0
 2000                         54                              12                              29                        2                            31
 2003                         37                              22                              22                        2                               -


 இப்படி செல்வத்தால் வீங்கியுள்ள பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் அனைத்தும், பிரதான ஏகாதிபத்தியங்களின் சொந்த வளர்ப்பு பிள்ளையாக இருக்கும் அதேநேரம், அங்குமிங்குமாக இடம் மாறுகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் கடுமையான, இழுபறியான முரண்பாடுகள் உருவாகின்றன. உலகை மறுபடியும் மறுபங்கீடு செய்வது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி நிரலாகின்றது. மோதல்கள், சதிகள் இன்றி ஏகாதிபத்தியமாக நீடிக்க முடியாத வகையில், உலகமயமாதல் பொருளாதாரக் கட்டமைப்பு பூத்துக் குலுங்குகின்றது. இப்படிப் பூத்துக் குலுங்கும் போது நடக்கும் மாற்றங்கள் தான் என்ன? 2003இல் உலகின் அதிக மக்களை ஏமாற்றி அவர்களின் அடிமைத்தனம் மீது வர்த்தகம் செய்த, முதல் 100 நிறுவனங்களில் 37 அமெரிக்காவுடையது. இது போன்று ஜப்பான் 22யும், ஜெர்மனி 10யும், பிரான்ஸ் 7யும், பிரிட்டிஷ் 5யையும் கொண்டு இருந்தது. இது போன்று முதல் 500 பன்னாட்டு நிறுவனங்களில் 185 அமெரிக்காவுடையது. ஜப்பான் 104யும், ஜெர்மனி 34யும், பிரான்ஸ் 37யும், பிரிட்டிஷ் 34யும் கொண்டு இருந்தது.


 2003இல் உலகில் உள்ள முதல் நிறுவனத்தின் வர்த்தகம் 24,653 கோடி டாலராக இருந்தது. முதல் 5 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகமோ 97,391 கோடி டாலராக இருந்தது. முதல் 10 பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 1,65,203 கோடி டாலராக இருந்தது. முதல் 25 பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 2,94,153 கோடி டாலராக இருந்தது. 1996க்கும் 2003க்கும் இடையிலான ஏழு வருடத்தில் முறையே 7,817, 30,226, 60,577, 1,04,288 கோடி டாலரால் தனது வர்த்தகத்தையே அதிகரித்து இருந்தது. மக்களை ஏமாற்றி, சூறையாடிய மிகப் பிரமாண்டமான வர்த்தகம், மக்களின் இயற்கை ஆற்றலையே மறுத்துவிடுகின்றது. மக்களின் தெரிவைச் சுருக்கி நலமடித்து விடுகின்றது. தரம், சுவை, செயல் திறன், தொழில் நுட்பம், செயல் ஆற்றல், கலைத் தன்மை என்று ஒரு பொருளில் வெளிப்படும் அனைத்துப் பண்புகளும், மக்களின் சுயதெரிவு சார்ந்த ஆற்றலில் இருந்து அழிக்கப்பட்டு, ஒரு மாடல் சார்ந்த சரக்கு உலகமாக மாற்றப்படுகிறது. இது, சாவி (கீ) கொடுத்த பொம்மையாட்டம் தனது செயலை முடக்கி, மந்தைக்குரிய வகையில் நுகர்வை, இருப்பதில் தேர்வு செய்கின்றது. உலகம் திறந்தவெளி மந்தைகளின் பட்டியாக மாற்றப்படுகின்றது. அதை நோக்கி மனித இனத்தின் சுய ஆற்றல் சார்ந்த எல்லாக் கூறுகளையும் உலகமயமாதல் அழிக்கின்றது.


 இதன் அடிப்படையில் மிகப் பெரிய நிறுவனங்கள் முதல் மிகச் சிறிய பன்னாட்டு நிறுவனங்கள் வரை மக்களைக் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி, உலகையே தமது காலடியில் அடிமைப்படுத்துகின்றனர். 2003இல் உலகின் மிகப்பெரிய 2000 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 19,00,000 கோடி (194 டிரில்லியன்) டாலராகும். இவற்றின் நேரடியான மொத்த நிகர லாபம் 76,000 கோடி (760 பில்லியன்) டாலராகும். இவற்றின் நிலையான சொத்துக்களின் மொத்த பெறுமானம் 69,00,000 கோடி (69 டிரில்லியன்) டாலராகும். இங்கு மொத்தமாக வேலை செய்தோர் எண்ணிக்கை வெறுமனே 6.4 கோடி பேராவர். அதேநேரம் உலகில் 2 டாலருக்கு குறைவான நாள் வருமானத்தைக் கொண்டோர் எண்ணிக்கையோ 280 கோடி பேராவர். இதில் 120 கோடி மக்கள் ஒரு டாலரைக் கூட பெற முடிவதில்லை. இவர்கள் குறைந்தபட்சம் ஒரு டாலரையும், 2 டாலரையும் பெறுகின்றார்கள் என்று எடுத்தால், அவர்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் மொத்தப் பணம் 1,60,600 கோடி டாலராகும். உலகில் அரைவாசி மக்களுக்குக் கிடைப்பது இவையே. இது முதல் 2,000 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகத்துடன் ஒப்பிடும் போது வெறுமனே 12இல் ஒரு பங்கைத்தான் வருமானமாகப் பெறுகின்றனர். இந்த நிறுவனங்களின் நிலையான சொத்தில் வெறுமனே 43இல் ஒரு பங்கு மட்டுமே வருமானமாகப் பெறுகின்றனர். ஒரு டாலருக்கும் குறைவாக நாள் ஒன்றுக்கு பெறுவோர், உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் உள்ளனர். இவர்களின் வருமானத்தைக் குறைந்தபட்சம் ஒரு டாலர் என எடுத்தால், முதல் 2,000 பன்னாட்டு நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்துடன் ஒப்பிடும் போது 43 இல் ஒரு பங்கு தான் வருமானமாகப் பெறுகின்றனர். நிலையான சொத்துடன் ஒப்பிடும் போது 158இல் ஒரு பங்கைத் தான் வருமானமாக பெறுகின்றனர்.