புலியெதிர்ப்பையே தமது அரசியலாகக் கொண்டவர்கள் ஒன்று கூடி, தமது அரசியல் பொறுக்கித்தனத்தை மறுபடியும் நிறுவிக் காட்டியுள்ளனர். அந்த அரசியல் பொறுக்கித்தனத்தையே ஒரு தீர்மானமாகவும் வெளியிட்டனர். மக்களை முட்டாளாக்கும் இந்த கழுதைகள், மக்களை கேனயர்களாக்கிய படி முதுகு சொறிகின்றனர். பேரினவாத மற்றும் ஏகாதிபத்திய மனிதவிரோத வக்கிரத்தையே, புலிப் பாசிசத்தின் துணையுடன் சுமப்பதே தமது உயர்ந்த இலட்சியமாக பிரகடனம் செய்கின்றனர்.


நவம்பர் 11 ,12 திகதி ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் கூடிய புலியெதிர்ப்பு அரசியல் பொறுக்கிகள் எல்லாம் ஒன்றாக கூடி தமது துரோகத்தின் இருப்பைக் கனைத்துக் காட்டினர். "இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும், புலம்பெயர்வாழ் தமிழ்பேசும் மக்களும்" என்ற பெயரில், தமது சமூகவிரோத ஏகாதிபத்திய சார்பு அரசியலை புலிப்பாசிசத்தின் பெயரில் அரங்கேற்றினர். இந்த அரங்கேற்றம் தடல்புடலாகவே வேஷம் கட்டி ஆடப்பட்ட போதும், சாம்பாறுக் குழையல் தான் விருந்தாக வழங்கப்பட்டது. இதை மக்களுக்கு உருட்டிக் கொடுப்பதே இலட்சியம் என்கின்றனர். இப்படி மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையையே, புலிப் பாசிசத்தின் துணையுடன் தான் எள்ளி நகையாடினர். எல்லா அரசியல் மோசடிக்காரர்களும் கூடினால், மோசடியான தீர்மானத்தை தவிர வேறு எதையும் அவர்களால் தரமுடியாது. இப்படித்தான் அங்கு ஒரு கோமாளிக் கூத்தே அரசியல் ஆபாசங்களாக அரங்கேறியது.


இந்தக் கூத்தில் மிக முக்கியமானது "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்றனர். இந்த தீர்மானத்தினுள்ளேயே முரண்பாடும், இதுவே ஒரு மாபெரும் அரசியல் மோசடியுமுண்டு. அரசியல் ஆபாசத்தைத் தவிர இது வேறு எதுவுமல்ல. இதை எல்லா அரசியல் பொறுக்கிகளும், பொறுக்குவது எப்படி என்று கூடிக் கனைத்து பின் வைத்தனர். பாசிச புலிகளும், அவர்களுக்கேற்ற கோயபல்ஸ் தமிழ்செல்வனும், இந்த புலியெதிர்ப்பு பொறுக்கிகள் முன்னால் கையேந்தி பிச்சை எடுக்கலாம. அவ்வளவு மோசடித்தனமானது.


இந்த தீர்மானத்தை இந்துமத சாதிய பாசிச தர்மகர்த்தாக்கள் முதலாய் தலித்தியவாதிகள் ஈறாக ஆதரித்து ஒன்று கூடி முன்வைத்தனர். இப்படி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட 10 அம்ச அறிக்கையில் உள்ள இந்த விடயம், மாபெரும் அரசியல் மோசடித்தனம் என்பதை அனைவரும் தெளிவாக அறிவர். அதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினை இதற்குள் இருப்பதாலும், மக்களின் அரசியல் கோரிக்கைகள் இதற்கு வெளியில் இல்லையென்பதாலும், இதை நன்கு திரித்து அரங்கேற்றும் இந்த மோசடியை துணிந்து முன்வைக்கின்றனர். இதில் கூடிக் கனைத்தவர்கள் யாரும் இதற்காக உண்மையாக நேர்மையாக போராடுபவர்கள் கிடையாது. அதற்கான ஒரு அரசியல் பார்வையைத் தன்னும் கொண்டிருப்பது கிடையாது. இந்த புலியெதிர்ப்பு அரசியல் பொறுக்கிகள், இந்த கோசத்துக்காக உண்மையாக நேர்மையாக கருத்துரைப்பது கிடையாது. இந்த கூட்டத்தின் முக்கிய பங்காற்றிய ஒரு சிலரின் கருத்துகள், தமது சொந்த பிரகடனத்துக்கு எதிராக இருப்பதை, இந்த போலிப் பிரகடனம் தடுத்து நிறுத்தவில்லை.


புலிகளினதும், பேரினவாதிகளினதும் அரசியல் மோசடியை விட, தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதையே மக்களுக்கு நிறுவிக்காட்டினர். நாங்கள் தமிழ்மக்களின் தலையில் ஏறியிருந்தே மொட்டை அடிக்கும் கயவாளிப் பயல்கள் தான் என்பதையே, மீண்டும் தமது சொந்தக் கனைப்பு மூலம் உறுதிப்படுத்தினர்.


"இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்ற இந்தத் திரிபுவாத தீர்மானத்தை முன்கொண்டு வந்த ஆனந்தசங்கரி, அரசியலில் கடைந்தெடுத்த அரசியல் போக்கிரி. அதையே மறுபடியம் நிறுவிக் காட்டியுள்ளார். தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்த ஒரு பிழைப்புவாத சுயநலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர். பிரபாகரனுக்கும், அவரின் புலிக்கும் அ, ஆ அரசியல் கற்றுக் கொடுத்த ஒரு கட்சியின் முக்கியஸ்த்தர். புலிகளை தமது கட்சியின் அரசியல் ரவுடிகளாக வளர்த்து, யாரை சுட வேண்டும் என்று ஆள்காட்டி படுகொலைகளையே தொடக்கி வைத்த ஒரு கட்சிக்கு இன்று தலைவர். அகிம்சை வேடம் போட்ட ஒரு பச்சோந்தி புலி. எந்த அரசியல் சுயவிமர்சனமும் செய்யாதவர்கள். சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்களில் புலிக்கு முன்னோடிகள் மட்டுமின்றி, பாசிச வழிகாட்டிகள் கூட. புலிகளுக்கு அ, ஆ பாசிச அரசியலைக் கற்றுக்கொடுத்ததுடன், அவர்களுக்கு பாசிச சோறூட்டி தாலாட்டி வளர்த்தவர்கள். இன்றைய சகோதர மனித அவலங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் புலிகள் அல்ல, கூட்டணியே.


இதற்கு துணையாக இருந்த இந்தக் கயவாளிப் பயல், மீண்டும் ஒரு அரசியல் மோசடியாக கொண்டு வந்த தீர்மானம் தான் "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுத"லாகும். மீண்டும் ஒரு மாபெரும் அரசியல் மோசடி இது. இதைவிட்டால் வேறு அரசியல் கிடையாது. இந்த மோசடித் தீர்மானம் கடந்தகாலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளினதும், இயக்கங்களினதும் சொந்த தீhமானங்களிலும் தூசிபடிந்தபடி இருப்பதை நாம் காணமுடியும். அதில் இருந்து இது எந்தவிதத்திலும் வேறுபடவில்லை. அன்று அவற்றுக்கு கனவுப+ர்வமாக நம்பிக்கையையும் விளக்கத்தையும் அப்பாவித்தனமாக வழங்கக் கூடியதாக இருந்தது. இன்று இதை புலிப்பாசிசத்தின் அரசியல் துணையுடன், குழைத்து மக்களின் வாய்க்குள் அடைக்கின்றனர்.


இதில் கலந்து கொண்டு இதற்கு ஆதரவாக கனைத்தவர்கள் எல்லாம், இதற்கு எதிராக படுகொலைகளை நடத்தியவர்கள். இப்படி இதில் கலந்துகொண்டு, இந்த தீர்மானத்துக்காக கனைத்தவர்கள் "புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி), டெலோ (ஸ்ரீசபாரட்ணம் அணி) ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி" என்று அனைத்து மக்கள் விரோதக் கும்பல்கள் தான் இதை அமுல் நடத்தப் போவதாக கூறுகின்றனர். இந்தக் கும்பல் நடத்திய உட்படுகொலைகள் முதல் பகிரங்க படுகொலைகள் வரை பெரும்பாலானவை "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" சமுதாயத்தைக் கோரியவர்களையே, பொறுக்கியெடுத்து கொன்றொழித்ததாகும். ஒரு சுயவிமர்சனம் கிடையாது. இவர்கள் சுயவிமர்சனம் செய்யமறுப்பது, அவர்கள் "..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" என்ற அடிப்படையில், இதை மோசடியாக திரித்து ஏற்க மறுத்ததால் தானோ? எப்படித்தான் இந்த அரசியல் போக்கிரிகள் சுயவிமர்சனம் செய்வார்கள். இவர்களால் எப்படித்தான் மக்களுக்காக போராடமுடியும்.


இதனால் "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" ஒரு சமூகத்துக்காக போராடியவர்களுக்கு ஒரு அஞ்சலி, அவர்களை முன்னிலைப்படுத்திய ஒரு அரசியல் முன்முயற்சி எதுவும் கிடையாது. மக்களுக்கு எதிரான செயலையே, இழிவான வகையில் அன்றாட அரசியல் வாழ்வாகக் கொண்டவர்கள் தான் இவர்கள். இந்த தீர்மானத்துக்கு எதிராகவே அனுதினமும் முக்கியபடி இருப்பவர்கள் புலிகள் அல்ல, இவர்களே.


இந்த அரசியல் போக்கிரிகளுடன் முன்னைய இலக்கிய சந்திப்பு பிதாமக்களும் கூடிக்கொண்டனர். கா கா என்று கத்திய தலித்துகள், உலகமயமாதலுக்காக புலம்பிய பின்நவீனத்துவவாதிகள், முதலாளித்துவ சீரழிவை ஆதரித்த அமைப்பியல் மறுப்பாளர்கள், அரசியலை மறுத்த இலக்கிய குஞ்சுகள், மார்க்சியத்துக்கு திருத்தம் கொடுத்த பிழைப்புவாதிகள் என்று, எல்லா அன்னக்காவடிகளும் சேர்ந்து இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதை "..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" மூலம் "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" அமைப்பை உருவாக்கப்போகின்றாராம். இந்த அரசியல் மோசடியை நம்புங்கள்.


புலியைத் தவிர்த்த எல்லா மனிதவிரோதிகளும், மனித விரோதத்தில் தமக்குள் முரண்பட்டபடி இதற்காக ஒன்றுபட்டு கையுயர்த்தியுள்ளனர். தமிழ் மக்களை ஏமாற்றி, அதில் அரசியல் செய்யும் இவர்கள், நடைமுறையில் இந்த தீர்மானத்துக்கு எதிராகவே வாழ்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்மானமாக காட்டி, மக்களை ஏமாற்றுவதே இந்த பொறுக்கி அரசியலின் அரசியல் கலையாகும்.


"இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு" என்கின்றீர்கள். எப்படி? எந்த வழியில்? இது ஒரு அடிப்படையான கேள்வி. இதற்கு சாத்தியமான நடைமுறை விளக்கமின்றி கோசமாக அதையும் திரித்து வைப்பது மோசடித்தனமானது. அத்துடன் இதை "..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" என்று கூறுவது அதை விட மோசடித்தனமானது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான், அதுவும் மக்களை சார்ந்தே நின்று தான் செய்ய முடியும். அதுவும் நிச்சயமாக ஏகாதிபத்திய எதிர்ப்பை, பேரினவாத எதிர்ப்பை, சமூக முரண்பாட்டின் மீதான மக்களின் எதிரியை தெளிவுபடுத்த மறுக்கின்ற அனைத்தும் மோசடித்தனமானது. மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வழியில் மட்டும் தான், இது குறைந்த பட்சம் சொல்லளவில் கூட உண்மைப்பட்டதாக இருக்கும். எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும், இவர்கள் இதற்கு எதிரானவர்கள் என்பது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத, பேரினவாதத்தை எதிர்க்காத, நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிகளை எதிர்க்காத இவர்கள், எதிரி யார் என்பதைக் குறிப்பிடாத இந்தத் தீர்மானம் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். எதிரியற்ற போராட்டத்தில் புலியெதிர்ப்பில் இதைச் சாதிக்கப்போகின்றனர். சுயபுத்தியற்ற உங்கள் மலட்டுத் தனத்தில் இந்த மோசடியை நம்புங்கள்.


"இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு" என்கின்றனர். அதை "ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்கின்றனர். எப்படி? யாராவது விளக்கம் தரமுடியமா? கடைந்தெடுத்த ஒரு மோசடி அல்லவா! தமிழ் மக்கள் காதுக்கு பூ வைக்கவே, எம்முடன் எம் மோசடியுடன் சேர்ந்து வாருங்கள் என்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுதலிக்கும் இந்த அரசியல் பொறுக்கிகள், "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" ஒரு அமைப்புக்காக "ஐக்கிய இலங்கைக்குள்" என்று கவனமாக ஒரு நிபந்தனை போடுகின்றனர். மோசடியைச் செய்வதிலும் கூட ஒரு நுட்பம்.


ஏகாதிபத்தியம் என்ன சொல்லுகின்றதோ, பேரினவாதம் எதை நினைக்கின்றதோ, அதை கிளிப்பிள்ளை போல் பின்பக்கத்தால் மோசடித்தனமாக தீர்மானமாக்குகின்றனர். அது அம்பலமாகாது இருக்க, எல்லா அரசியல் பொறுக்கிகளையும் ஒன்றிணைக்கவும், அழகுபடுத்தி அதை அலங்கரித்து விபச்சாரம் செய்ய "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" என்ற சொற்களை இணைத்துவிடுகின்றனர். இப்படி போடுவதன் மூலம், ஏதோ சொந்த தீர்மானம் போல் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற நினைப்பு. கழுதைகள் கூடி கனைப்பதற்கு இதுவே பாலமாக அமைகின்றது. மனித அவலத்தை நகைச்சுவையாகவே வேடிக்கையாக்கினர்.


இந்த மோசடிக்கு தூணாகவும் துணையாகவும் விளங்கும் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கமோ, கடைந்தெடுத்த மோசடியை இதற்கு எதிராகவே செய்கின்றார். புலிகள் "மேதகு தலைவர்", "தேசியத் தலைவர்" என்று கூறுவது போல், புலியெதிர்ப்புக் கும்பல் "ஆய்வாளர்" என்று பட்டம் சூட்டியதுக்கு இணங்கவே இதைச் செய்கின்றார். அதை அவர் "மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் மனித உரிமையையே, தனது விபச்சார அரசியல் வக்கிரத்துக்குள் திரித்துவிடுகின்றார். கைதேர்ந்த அரசியல் மோசடியை, தமிழ் மக்களின் முதுகில் குத்தியே அரங்கேற்றுகின்றார். இவர்களின அரசியல் மோசடித் தீர்மானம் கூறுகின்றது. "இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்கின்றது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு கையுயர்த்திய சிவலிங்கம், தனது திரிபுவாதத்தில் "முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள் சாத்தியமில்லாத போதிலும் சமஷ்டி வடிவிலான தீர்வுகளை நோக்கிச் செல்லும் வகையில் ஆட்சி அதிகாரம் படிப்படியாக திருப்பப்பட வேண்டும்" என்கின்றார். யாருடன் சேர்ந்து? எப்படி? இது எப்படி "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூதாயத்தை உருவாக்கும். இவர்கள் நம்பும் "முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள் சாத்தியமில்லாத போதிலும்" என்று கூறுவதன் மூலம், மக்களை இழிச்சவாயன்கள் என்று கூறுகின்றார்.


தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே மறுக்கும் இவர்கள் அரசியல், புலியின் அரசியல் எல்லைக்கு உட்பட்டதே. புலிக்கு பதில் சொல்லும் இவர்களின் அரசியலும் ஆய்வும், ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் திருப்தி செய்யும் எல்லைக்கு உட்பட்டதே. ரீ.பீ.சீயில் விதண்டாவாதம் கதைக்கும் புலிக்கும், புலியெதிர்ப்பு பச்சோந்திகளின் வாலாட்டாலுக்கு ஏற்ப அரசியல் செய்வதே, சிவலிங்கத்தின் அரசியலாகின்றது. இதை மக்களுக்கு செய்யமுடியாது. மக்கள் கோருவது "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகத்தைத் தான். இது உங்கள் கோசமல்ல. மக்களின் கோசம். அதை மோசடித்தனமாக திரித்து உங்களின் பின்னால் ஒட்டுகின்றீர்கள். நீங்கள் "முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள்" என்கின்றீர்கள்! சரி அது என்ன? மாங்காயா? கத்திரிக்காயா? இது சாத்தியமில்லை! என்கின்றீர்கள்? அப்படியானால் நீங்கள் ஏற்ற தீர்மானம் என்ன? அதை சாத்தியமற்றது என்று எப்போது திருத்துவீர்கள்? ஐயா மோசடிக்கார ஆய்வாளர்களே கூறுங்கள்!


இந்த சிவலிங்கம் என்ற புலியெதிர்ப்பு ஆய்வுக் குஞ்சு சொல்லுகின்றார் "சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுய விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும்." எதற்கு உலகளவில் உள்ள சுயநிர்ணயம் பற்றிய கோட்பாட்டை திருத்த கோரவேண்டும். இதையும் ஒரு தீர்மானமாக வைத்திருக்கலாம். ஏகாதிபத்தியத்திடம் இதற்காக ஒரு பரிசை கொடுக்க சிபாரிசு செய்த ஒரு தீர்மானத்தையும், இந்தக் கழுதைகள் எடுத்திருக்கலாம். ஆனந்தசங்கரிக்கு மட்டுமா இல்லை, சிவலிங்கத்துக்கும் ஒன்றைக் கோரியிருக்கலாம்.


ஆனந்தசங்கரி பல பத்து இலட்சம் பெறுமதியான யுனேஸ்கோ பரிசை வாங்கிய போது, ஐந்து நாட்களுக்கு முந்தைய தனது தீர்மானத்துக்கு அமைய, அதை அடைவது பற்றிய கொள்கை உரு விளக்கத்தை முன்வைக்கின்றார். "விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளிலிருந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களை மீட்டெடுக்க உதவும்படி சர்வதேச சமூகத்திடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்." என்றார். இது எப்படி "இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகத்தை பெற்றுத் தரும். சரி ஏகாதிபத்தியம் பெற்றுத் தரும் என்றே கூறுகின்றார். நீங்கள் யாராவது எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா!


அந்த அரசியல் மோசடிக்காரன் அதனுடன் நிற்கவில்லை. "ஜனநாயக ரீதியாகவும், சாத்வீக வழிகளிலும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எனது சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக இருந்தது என்று கூறலாம்." இந்த பரிசை தந்ததன் மூலம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் செயலை மெச்சி மெய்சிலிர்த்து குறிப்பிடுகின்றார். அதைத் தொடர வாக்குறுதி அளிக்கின்றார். "அனைவரின் தேவைக்கும் உலகில் இடமுண்டு. ஆனால் அனைவரின் பேராசைக்கும் உலகில் இடமில்லை" என்கின்றார். "அனைவரினதும் தேவைக்கும் இடமுண்டு" என்கின்றார், ஆனால் தேவை மறுக்கப்பட்ட சமுதாயமே ஜனநாயகம். பேராசை தான் ஜனநாயகம. இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு எந்த விளக்கமும் கிடையாது. சிலரின் பேராசைக்குத் தான் இடமுண்டு, அதைத் தான் அவர் "அனைவரின் பேராசைக்கும் உலகில் இடமில்லை என்கின்றார். இவர் எப்படி "இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூதாயத்தை உருவாக்குவார்?


இப்படி எல்லா மோசடிக்காரர்களும் கூடி தத்தம் சொந்த விளக்கத்தையே வழங்குகின்றனர். சிவலிங்கம் கூறுகின்றார் சுயநிர்ணயம் என்பது "தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும்." என்று கூறுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுப்பதில் புலிக்கு நிகர் நாங்களே என்கின்றார். புலிகள் நாலடி பாய்ந்தால் நாங்கள் பத்தடி பாய்ந்து மக்களை ஏறி மிதிப்போம் என்கின்றார். புலிகள் சுயநிர்ணயம் என்பது புலிகள் ஆட்சி என்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பல் தேர்தலில் இணைந்து வாக்கு போடுவது தான் சுயநிர்ணயம் என்கின்றனர். 1980க்கு முன்னம் மக்கள் வாக்கு போட்டதால் சுயநிர்ணயம் இருந்தது என்கின்றார். அதை புலிகள் இல்லாது ஆக்கிவிட்டனர் என்பதே, சிவலிங்கத்தின் நவீன சுயநிர்ணய ஆய்வு கூறுகின்றது. மக்கள் மீண்டும் வாக்கு போட்டால் சுயநிர்ணயம் வந்து விடுமோ? சுயநிர்ணயம் என்ன உங்கள் வீட்டு கத்தரிக்காயா? இப்படி கத்தரிக்காயாக்கி கறிவைக்க முனைகின்றார். அவர் தனது மோசடி ஆய்வில் கூறுகின்றார் "மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். போடு புள்ளடி என்கின்றார். மக்களின் இறைமை "இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" அமைப்பு அல்ல, வாக்குச் சீட்டே என்கின்றார். சுயநிர்ணயம் என்பது வாக்குச் சீட்டு தான் என்கின்றார். புள்ளடி போட்டால் மக்களின் இறைமை வந்துவிடும், நல்ல வேடிக்கை தான் போங்கள். அவர் நினைக்கின்றார் புலிகள் போன்ற ஐந்தறிவு தான் மக்களுக்கு இருக்கென்று நினைத்து, ஆய்வுரை செய்கின்றார்.


"இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகம் வேண்டுமா?


* சாதிபேதமற்ற அமைப்புக்கு ஒரு புள்ளடி! 
* பெண்ணியத்துக்கு ஒரு புள்ளடி!
* வர்க்க அமைப்புக்கு எதிராக ஒரு புள்ளடி?
*இனபேதத்துக்கு எதிராக ஒரு புள்ளடி?


கோரிக்கை ஒன்றை நாம் முன்மொழிகின்றோம். சமூக முரண்பாட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில், மக்களுக்கு புள்ளடி போட்டு எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன? இதை தீர்மானத்தில் பதினொன்றாவதாக சேர்க்கவும். எல்லா பிரச்சினையையும் வாக்கு போட்டு தீர்த்துக்கொள்ளமுடியும் அல்லவா? எதற்கும் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பெரிய நாமமாக மக்களின் நெற்றியில் போட்டுவிட வேண்டியது தான். அந்தப் புள்ளடியே போதும்.


"இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" அமைப்பை உருவாக்கிவிடுவோம் நம்புங்கள் என்கின்றனர். ரீ.பீ.சீ சதா இதையே கதையளக்கின்றனர். "மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றனர். அரசு, அதிகாரம், பற்றியும் ஆட்சி பற்றி விளக்கம் மக்களுக்கு எதிரானதும், மிககேவலமானதும் இழிவானதுமாகும். புலிகளை விட மிகக் கேவலமாக தமிழ் மக்களின் தலையில் அரைப்பதாகும். புலிகள் புலி ஆட்சியை தமிழ் மக்களின் விருப்பு என்கின்றனர். இந்த கயவாளிப் பயல்கள் ஏகாதிபத்திய ஆட்சியை மக்களின் விருப்பு என்கின்றனர்.


இந்த அரசியல் மோசடிக்காரன் முன்னைய வரலாற்றில் இருந்து, அதன் நோக்கில் இருந்து திருடி திரித்தபின் கூறுகின்றார் "பேச்சு, எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடுதல், இணைதல் போன்ற உரிமைகளை எக்காரணத்தை முன்வைத்து மறுத்தாலும் அது அம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீறுதலாகும்." இந்தக் கோரிக்கை முன்பகுதி எம்மால் 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்வைக்கப்பட்டது. பரந்துபட்ட மக்கள் மத்தியில் எங்களால் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு அரசியல் கோரிக்கையாகும். இதை சுயநிர்ணயம் என்று திரிக்கின்ற வக்கிரத்தை சிவலிங்கம் செய்து முடிக்கின்றார். சுயநிர்ணயம் என்பதை திரிப்பது, அவர்களின் அரசியல் எஜமானர்களின் தேவையாக உள்ளது. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசினதும் அடிப்படைப் பிரச்சினை, பாசிச புலிகள் மூலம் சுயநிர்ணயத்தை மறுப்பது தான். அதை திரிப்பது தான் புலியெதிர்ப்பு அரசியலின் உடனடிக் கடமையாக உள்ளது. இதுவே களவாளிப்பயல்களின் அரசியலாகின்றது. அன்று பல்கலைக்கழக மாணவர்களாகிய (தலைமை தாங்கி வழிகாட்டியவர்களில் எனது பங்கு தனித்துவமானது) நாம் இந்தக் கோரிக்கையை வைத்த போதும், நாம் சுயநிர்ணயத்தை தெளிவாக உயர்த்தி நின்றோம்.


இந்தக் கோரிக்கை சுயநிர்ணயத்துக்குள் அடங்கி உள்ளதே ஒழிய, இதுவே அனைத்தும் தழுவிய சுயநிர்ணயமல்ல. சுயநிர்ணயம் என்பது மக்கள் தமது சொந்த பொருளாதார சுரண்டலற்ற ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதும், அந்த அமைப்பில் அனைத்து சமூக முரண்பாடுகளை களைவதையும் அடிப்படையாகக் கொண்டதே. தமது தேசியபொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட, பண்பாட்டு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, அதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து நிற்றல் தான் சுயநிர்ணயம். எதிரி பற்றி தீர்மானகரமான நடைமுறை செயற்பாட்டில், மக்கள் பெறும் சொந்த சமூக பொருளாதார அதிகாரத்தில் தான் சுயநிர்ணயம் பிறக்கின்றது. இதற்கு வெளியில் அல்ல.


19.11.2006