கேள்வி
நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கது வோபுகல் அண்ணே.

விடை
கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தை இங்கில்லாக் கதைகளை
ஏற்றின ரோஅவர் தம்பி? - இது
மாறா திருக்குமோ தம்பி?

கேள்வி
தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? - இங்
கெழுத்தாள ரேஇல்லை அண்ணே.

விடை
சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்.
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி.

கேள்வி
செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே.

விடை
அந்தத் தெலுங்கு, மலையாளம், கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி.

கேள்வி
அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே.

விடை
கங்குல், பகல்,அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்,மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன் றில்லையே தம்பி.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt262