பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
"என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார்.

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ'ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
"பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?"
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
"நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்"
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
"வேண்டும் எழுதத்தான் வேண்டும்"என்றோம். பாரதியார்,
"வேண்டும்அடி எப்போதும் விடுதலை" என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வௌியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் "தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்" என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
"தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்" என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt224