மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,
விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள்.
கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்,

உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்

தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ?
தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச்
"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்; தேனைச்
சொட்டுகின்ற இதழாளே! பிழைபொ றுப்பாய்;
பிள்ளைபெற வேண்டாமே; உனைநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே ஆவேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.

"மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் எதோ
மனக்கசப்பு வரல்இயற்கை. தினையை நீதான்
பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி" ரென்றேன்.
எனைநோக்கிச் சொல்லலுற்றாள்: "நமக்கு மக்கள்
இல்லையெனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;
எனக்கும்இனி உயிரில்லை" என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கண்விழித்தேன். என்தோள் மீது
செங்காந்தாள் மலர்போலும் அவள்கை கண்டேன்.
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்;
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்.
படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்
பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt215