ஒருவேளை அல்ல திருவேளை
வெற்றிலை போடு! --போடா
தொதுக்கலும் நல்லஏற் பாடு!
சுரந்திட்ட எச்சிலை
வாயினில் தேக்குதல் போலே -- வேறு
தூய்மையில் லாச்செயல்
கண்டதில் லைவைய மேலே
ஒருவேளை...

கரியாகுமே உதடு! கோவைக்
கனியைநீ காப்பதும் தேவை!
தெரியாத ஆடவர்
வாய்நிறைய எச்சிலின் சேறு
தேக்கியே திரிவார்கள்
அவருக்கும் நீஇதைக் கூறு!
ஒருவேளை...

பூவைமார் 'நல்லிதழை' நல்ல
புன்னகை சிந்திடும் 'பல்லை'
நாவினால் யாம்சொல்வ தில்லை -- அவை
நன்மணத் தாமரை! முல்லை!
பாவைமார் வாயினில்
இயல்பான மணமுண்டு பெண்ணே!
பாக்குவெற் றிலைதனை
நீக்கலே மிகநன்று கண்ணே!
ஒருவேளை...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt148