மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி.ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்குவராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச்சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதாயிருந்தாலும் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவைகளைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படுமானால் பாக்கி இருக்கும் தேவஸ்தான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித்தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதிதான்.
(குடிஅரசு 07.11.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_14.html