கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

 

இப்போது முதன் முறையாக தாயின் உணவுப் பழக்கம். குறிப்பாக கருவுற்றிருக்கையில் தாய் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் குழந்தையின் மூளையில் பதிவாவதாகவும். அந்த பதிவுகளின் வெளிப்பாடுகளாக குழந்தையின் உணவுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

அதாவது கருவுற்றிருக்கையில் தாய் இனிப்புகள், பொரித்த உணவுகள் போன்றவற்றை அதிகமாய் உண்டால் குழந்தையும் அத்தகைய உணவுப் பொருட்களால் வசீகரிக்கப் படுகிறதாம்.

 

தாய்மை நிலையில் மிக அதிகமாக உண்பது, எப்போதும் எதையேனும் கொறித்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் குழந்தையும் அத்தகைய பழக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட வாய்ப்பு இருக்கிறதாம்.

 

இத்தகைய உணவுப் பழக்கங்களால் குழந்தை அதிக எடையுடன் வளரும் ஆபத்தும் இருக்கிறது என்பது தான் ஆராய்ச்சி தரும் எச்சரிக்கை.

 

தாய்மை நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உருவாகும் பந்தம் வெறும் வார்த்தைகளால் விளக்க முடிவதல்ல. அவை உணர்வு பூர்வமான பந்தம்.

தாயின் சிந்தனைகளும், தாயின் மனநிலையும், தாயின் உரையாடல்களும் கருவிலிருக்கும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே தான் தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல நேர் சிந்தனைகளும், பொறுமையும், அமைதியும் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இப்போது உணவு விஷயத்திலும் இது புகுந்திருக்கிறது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவெனில், இப்போதைக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளை வைத்துத் தான் இந்த ஆராய்ச்சி முடிவை ஆராய்சியாளர்கள் எட்டியிருக்கின்றனர்.

 

மனிதர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போது அந்த பார்வையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன

 

http://sirippu.wordpress.com/2007/08/18/mothers/