மரபணு ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு

 

புற்றுநோய், இதய நோய், எய்ட்ஸ் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அவற்றின் இன்னல்களை எதிர்த்து போரிடும் ஆற்றல் ஆகியவை தொடர்பாக மருத்துவ உலகம் கேள்விகள் பலவற்றோடு தேடிக்கொண்டிருக்கும் தீர்வாக இருக்கக்கூடும் என்று அறிவியலர் நம்பிக்கை கூறும் ஒரு கண்டுபிடிப்புக்கு இந்த ஆன்ட்ரூ ஃபையரும், கிரேக் மெல்லோவும் சொந்தக்காரர்கள். நமது மரபணுக்களில் குறிப்பிட்ட சில மரபணுக்களை சாந்தப்படுத்தும் அல்லது அமைதியாக்கும் ஒரு வழிமுறையை இந்த அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆர் என் ஏ இன்டெர்ஃபியரன்ஸ், ஆர் என் ஏ குறுக்கீடு அல்லது இடையூறு அல்லது தடை என்ற இந்த முறை, தெளிவாக ஓடிக்கொண்டிருக்கும் மரபணு செய்தித் தொடர்பு நீரோட்டத்தை கட்டுப்படுத்துவது என்று சொல்லலாம். இந்த ஆர் என் ஏ குறுக்கீடு தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான், இது மரபணு செயல்பாட்டின் சீர்மையையும், வைரஸ்களிலிருந்து பாதுகாக்கவும் அவசியமான ஒன்று என்று அறிவியலர்கள் கூறுகின்றனர்.

 

அதாவது மரபணுக்களில் குழப்படி செய்யும் ஒரு குறிப்பிட்ட மரபணுவை அல்லது சில மரபணுக்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் அவற்றின் பாதிப்புகளை கட்டுபடுத்த முடியும் என்பதை இந்த அமெரிக்க அறிவியலர்கள் கண்டறிந்து சொன்னதால், இன்றைக்கு அவர்கள் பெயர்கள் நோபல் பரிசு பெற்றோர் வரிசையில் இடம்பிடித்துள்ளன. இன்றைக்கு மரபணு ஆய்வுகளில் குறிப்பாக மரபணுக்கள் என்ன செய்கின்றன என்பதை அறிய பொதுவாக அடிப்படை வழிமுறையாக மேற்கொள்ள படுவது ஆர் என் ஏ இன்டெர்ஃபியரன்ஸ் எனும் ஆர் என் ஏ குறுக்கீடுதான். 1998ல் ஃபையரும், மெல்லோவும் கண்டுபிடித்து வெளியிட்ட இந்த வழிமுறை இன்றைக்கு அறிவியலர்களால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அளவீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய், பார்க்கின்சன் நோய், கண்பார்வையிழப்பு என ஒரு நீண்ட நோய் பட்டியலுக்கு எதிரான சிகிச்சையை கண்டறிய இந்த வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகம் முழுவது பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயிரி மருத்துவத்துறையில் இந்த ஆர் என் ஏ குறுக்கீடு வழிமுறை ஒரு புரட்சியை செய்துள்ளது என்று ஆர் என் ஏ ஆய்வில் 1989ல் நோபல் பரிசு பெற்ற தாமஸ் செக் என்பவர் கூறுகிறார்.

 

னரபணுக்களின் இஅயக்கம் மெசஞர் ஆர் என் ஏ எனப்படும் செய்தியை கொண்டுச் செல்லும் அனுக்களை செல்களில் புரதங்களை தயாரிக்கும் பகுதிக்கு அனுப்புவதன் மூலம் நடைபெறுகிறது. ஆர் என் ஏ இன்டெர்ஃபியரன்ஸ் எனப்படும் ஆர் என் ஏ இடையூறு என்ற நடைமுறையில், இத்தகைய செய்தியாளர் ஆர் என் ஏவை செயலிழக்கச் செய்யும் அல்லது அழிக்கும் அனுக்கள் உருவாக்குகின்றன, இதனால் புரதம் தயாரிக்கப்படாமல், அந்த மரபணு செயலிழந்து போகிறது. விளக்கமாக சொன்னால் ஒரு குறிப்பிட்ட மரபணுவில் இப்படி ஆர் என் ஏ இடையூறு செய்வதன் மூலம் அந்த மரபணுவை செயலிழக்கச் செய்து அதன் பாதிப்பை, பங்களிப்பை துண்டிக்கலாம். ஆய்வுகூடச் சோதனைகளில் ஒரு குறிப்பிட்ட மரபணுவை ஆர் என் ஏ இடையூறு மூலம் செயலிழக்கச் செய்வதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். என்றாலும் இந்த அடிப்படை தகவல்கள், ந்டைமுறைகளை மருந்துகள், சிகிச்சை என்ற அளவில் பயன்படுத்த இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்கிறார் இவ்வாண்டு நோபல் பரிசு செறும் மெல்லோ.

 

பொதுவாக ஆர் என் ஏ எனப்படும் ரைபோநியூக்லியாக் அமிலம், ஒற்றைச் சரமாக அமைந்து காணப்படும். ஆனால் இரட்டைச் சரமாக அமையும் ஒரு ஆர் என் ஏவை குறிப்பிட்ட ஒரு மரபணுவில் செலுத்துவதன் மூலம், அம்மரபணுவின் செயல்பாட்டை, அதன் விளைவை தடுக்கலாம் என்று மெல்லோவும், ஃபையரும் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ மற்றும் அறிவியல் உலகை மேலதிக ஆய்வுகளில் ஈடுபடச் செய்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் தீயாக மரபணு ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. தவரங்களில் மரபணு செயலிழப்பில் ஆர் என் ஏவுக்கு தொடர்பு உள்ளது என்று அறிவியலருக்கு முன்பே தெரிந்திருந்தது என்றாலும், எப்படி இது நிகழ்கிறது என்பதில் அவர்களுக்கு புரிதல், தெளிவு இல்லாமல் இருந்தது. ஆனால் மெல்லோவும், ஃபயரும் தங்களது ஆய்வுகளை வெளியிட்டபின் காலையில் கண்விழித்து சாளரத்தினூடே வந்து கதிரவனின் வெளிச்சமூட்டுவது போல சந்தேகங்களை எல்லாம் தெளிவாயின. 1.4 மில்லியன் அமெரிக்க டாலரையும், உலக வரலாற்றில் மருத்துவத்துறையில் நீங்காத பெயரையும் இந்த நோபல் பரிசு மூலம் பெற்றுள்ள ஆன்ட்ரூ ஃபையர், கிரேக் மெல்லோ இருவரின் கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் மருத்துவ உலகிற்கும் மானுட உலகிற்கும் மாபெரும் கொடைகளாகியுள்ளன என்பதில் ஐயமேதுமில்லை. இவர்களின் மரபணு ஆய்வுகளின் மூலமான தெளிவை அறிவியல் உலகம் நோய்கள் பலவற்றை குணப்படுத்த பயன்படுத்தும். விடை பெறுவதற்கு முன் ஒரு முக்கிய செய்தி, நோபல் பரிசு பெறாவுள்ளது குறித்து கிரேக் மெல்லோவுக்கு நோபல் பரிசுக் கமிட்டி தொலைபேசியபோது, தனது 6 வயது மகளின் ரத்த அழுத்தத்தை சோதித்துக்கொண்டிருந்தாராம் மெல்லோ. அவரது மகளுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக அறியப்படுகிறது.

 

http://tamil.cri.cn/1/2006/10/09/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.