கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும்.நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேசப் பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணிவெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்கண்ணிவெடி அமைப்பு தெரிவிக்கின்றது.


153 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

வருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணிவெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணிவெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி மூன்றாவது தடவையாகவும் உலகம் பூராவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

“உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணிவெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் 4ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“இவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுகின்றனர்”. “ இந்த மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலக்கண்ணிவெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாள மக்கள் கண்ணிவெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.

விரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி பாதுகாப்பு தினம் ஏப்ரல் 4ம் திகதி இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

கிழக்கில் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் இந்தப் பிரதேசங்களுக்கான விஜயத்தின் போது இந்த பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகளினால் ஏற்படக்கூடிய அபாயம் புலனாகியிருந்தது.

உலகளாவிய ரீதியில் நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தல்கள்

ஒவ்வொரு 30 நிமிடத்திற்குள் ஒருவர் நிலக்கண்ணிவெடியின் மீது கால் பதிப்பதன் மூலம் ஒரு குடும்பம் பாதிப்படைகின்றது. பாரிய வெடிப்பு அல்லது சிறுவர் உயிரிழப்பு அல்லது கள ஊழியர்கள் காயமடைதல்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் முழுக் குடும்பமே துயரத்திற்கு உள்ளாகின்றது என ஒரு இலங்கை என்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஒரு இலங்கை நிறுவனம் பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கின்றது:

ஒரு நிலக்கண்ணிவெடியை புதைப்பதற்கு 3 முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகின்றது. எனினும், நிலக்கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர் வரை செலவாகின்றது

அணு, இரசாயன மற்றும் உயிரி ஆயுத பாவனையினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான உயிர்களை நிலக்கண்ணிவெடிகள் காவுகொண்டுள்ளன.

வருடாந்தம் 15,000 மேற்பட்டோர் நிலக்கண்ணிவெடிகளினால் பாதிப்புறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 288 பேரும், நாளொன்றுக்கு 41 பேரும், ஒரு மணித்தியாலத்தில் 2 பேரும் நிலக்கண்ணிவெடியின் கோரப்பிடியில் சிக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

70 வீதத்திற்கும் அதிகமான சிவிலியன்களே நிலக்கண்ணிவெடிகளினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுவர்கள் எனவும்; 50 வீதத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்த ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் 100 நாடுகளில் புதைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

பசுமையான விவசாய நிலங்கள், நகரங்கள், வீதிகள், நீர் நிலைகள், மற்றும் கால்நடை வளங்கள் செறிவாக காணப்படும் பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலக்கண்ணிவெடிகளினால் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் துரதிஷ்டவசமாக மிகச் செழுமையான விவசாய நிலங்கள் மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

யாழ் தீபகற்பத்தின் விவசாய நிலங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 700,000ற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை பாதுகாப்பு படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புதைத்திருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு 25,000 நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

2002ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திரடப்பட்டதனைத் தொடர்ந்து பாரிய நிலக்கண்ணிவெடியகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக புதைக்கப்பட்ட 1.5 மில்லியன் நிலக்கண்ணிவெடிகளும், ஏனைய வெடிபொருட்களும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் அகற்றப்பட்டன.

நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தினத்தின் மூலமாக பிராந்தியத்தில் நிலக்கண்ணிவெடிகளினூடாக ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக மீண்டும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

யுத்த அனர்த்தம் உக்கிரமடைந்தைத் தொடர்ந்து நிலக்கண்ணிவெடியினால் ஏற்படக்கூடிய அனர்த்த வீதமும் உயர்வடைந்துள்ளது.

நிலக்கண்ணிவெடி தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது.

நன்றி: ஊற்று

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை