இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது.

அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.


டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம் வெளிநாட்டு கம்பெனிகளின் இந்த மனப்போக்கு தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரிகிறது.

வழக்கின் விபரத்தை முதலில் பார்ப்போம்.

மகாராஷ்ட்ரா ஹைபிரீட் சீட்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மரபணு மாற்றப்பட்ட (Genetically modified) விதைகளைத் தயாரிக்கும் கம்பெனி. அகில உலக ஜி.எம். விதை புகழ் மான்சாண்ட்டோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளி நிறுவனம் இது.

இந்த மகாராஷ்ட்ரா கம்பெனி உருவாக்கிய புதிய ஜி.எம். கத்திரிக்காய் விரைவில் இந்திய விவசாயிகளுக்கு விற்கப்படும் என்று செய்தி வெளியானது.

இந்த ஜி.எம். கத்திரிக்காயின் ஆதி அந்தம் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வேண்டும் என்று இந்திய உயிரிதொழில்நுட்பத் துறையிடம் மிக்க பணிவன்போடு விண்ணப்பம் செய்தது கிரின்பீஸ் என்கிற அமைப்பு.

(உலக அளவில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பு கிரின்பீஸ்.)

அரசு இலாகா என்றால் சாதாரணமா, அரசரைவிட அதிக விசுவாசம் காட்டுகிறவர்கள் ஆச்சே! கிரின்பீஸ் கேட்ட தகவல்களைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது.

இந்தத் தகவல்களை வெளியே சொன்னால் இதில் இருக்கிற வியாபார ரகசியம் அம்பலமாகிவிடும். இதனால் எதிரிகள் சுதாரித்துவிடுவார்கள். மேற்படி மகாராஷ்ட்ரா கம்பெனிக்கு பெரிய நஷ்டம் வரும். பாவம் என்று உச்சு கொட்டியது அரசு இலாகா.

இந்தத் தகவல்கள் முக்கியமானவை. எங்களுக்கு அவசியம் வேண்டும். எனவே நீங்களாவது எங்களுக்கு வாங்கித் தாருங்கள் என்று மத்திய தகவல் ஆணையத்தின் உதவியை நாடியது கிரீன்பீஸ்.

மத்திய தகவல் ஆணையம் அரசு இலாகா இல்லை. எனவே, கிரின்பீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்கும்படி நேர்மையாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் மூக்கு வேர்த்துப் போன மகாராஷ்ட்ரா நிறுவனம் இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு ஓடி வந்திருக்கிறது. இந்த மாதிரியான தகவல்களைக் கேட்பதெல்லாம் அபாண்டம். நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இப்போது விசாரித்து வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் உள்ள நியாய, அநியாயங்களை நாம் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

புதிதாக ஒரு பொருளை சந்தைக்குக் கொண்டு வரும் போது அந்தப் பொருள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் பதிலே சொல்ல மாட்டேன் என்றால் அது எந்த விதத்தில் நியாயம்?


கடைக்குப் போகிறோம். புதிதாக வந்த ஒரு பொருளை வாங்குகிறோம். நல்ல பொருள் சார், பாஸ்ட் மூவிங் என்று கடைக்காரர் சொன்னவுடன் நாம் வாங்கிவிடுவதில்லை. அந்தப் பொருளில் என்ன விஷயங்கள் கலந்திருக்கிறது என்பதைத் துருவித் துருவிப் பார்க்கிறோம்.

இப்படிச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. காசு கொடுத்து வாங்குபவர் என்கிற முறையில் நமக்கு இருக்கும் உரிமை இது.

ஆனால்,இந்த உரிமையை அங்கிகரிக்க மறுக்கின்றன வெளிநாட்டு கம்பெனிகள்.

சரி, போய்த் தொலையட்டும். நாளைக்கே நாம் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ போகிறோம். அற்புதமான சுவை கொண்ட ஒரு பானத்தை அங்கே விற்பனை செய்ய ஆரம்பிக்கிறோம். ஒகே, வித்துட்டு போ என்று கதவைத் திறந்து விட்டுவிடுவார்களா?

என்ன பானம்? எப்படித் தயாரித்தீர்கள்? மூலப் பொருட்கள் என்னென்ன? இதனால் என்ன நன்மை கிடைக்கும்? இதைக் குடித்தால் தீமையே ஏற்படாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி ஏதாவது தீமை ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?

இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு நம்மைக் குடைவார்கள் இல்லையா?

நிச்சயம் குடைவார்கள். மக்கள் மீது அக்கறை கொண்ட எந்த அரசாங்கமும் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைவதில் எந்தத் தவறும் இல்லை.

நம் அரசு இலாகாகளும் மேற்படி கம்பெனிகளை இந்த மாதிரி கேள்வி கேட்டு குடைந்திருக்கலாம்.அப்படி எல்லாம் செய்திருக்கவே மாட்டார்கள் என்று சொல்ல வரவே இல்லை.

அப்படிக் குடைந்த போது சம்பந்தப்பட்ட கம்பெனி அளித்த தகவல்களை நம் மக்களில் யாராவது கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இத்தனைக்கும் கிரின்பீஸ் நிறுவனம் வர்த்தக நிறுவனம் அல்ல. தகவல்களை வாங்கிக் கொண்டு ஜி.எம். கத்திரிக்காய் விதைகளை அவர்களே உற்பத்தி செய்து விற்க ஆரம்பித்துவிட மாட்டார்கள்.

அல்லது, அந்தத் தகவல்களை வேறு எந்த நிறுவனத்துக்கும் கொடுக்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கே ஜி.எம். விதை உற்பத்தியில் ஒப்புதல் இல்லை என்கிற போது அதை ஏன் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள்?

இதெல்லாம் குறைந்தபட்ச வாக்குறுதிகளாக இருக்கும்போது கிரின்பீஸ் நிறுவனத்தின் மீது ஏன் தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டும்?

இத்தனைக்கும் மான்சாண்ட்டோ கம்பெனி குறித்து கிரீன்பீஸ் நிறுவனத்துக்கு கசப்பான அனுபவம் ஒன்றுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் மான்சாண்ட்டோ நிறுவனம் ஒரு ஜி.எம். விதையை வெளியிட்டது. இந்த விதை பற்றிய தகவல்களை போராடி வாங்கியது கிரின்பீஸ் நிறுவனம். மான்சாண்ட்டோ சொல்கிறபடிதான் அந்த விதை இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நேருக்கு மாறான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்பட்டன.

இந்தியாவில் இப்போது அறிமுகமாகிற ஜி.எம். கத்திரிக்காயிலும் இந்த மாதிரி குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என்பதுதான் கிரின்பீஸ் அமைப்பின் அக்கறை.

மகாராஷ்ட்ரா கம்பெனி பயப்படுவதை பார்த்தால் மீண்டும் மாட்டிக் கொள்வோமோ என்கிற பயம்தான் அப்பட்டமாகத் தெரிகிறது.

அய்யா வெளிநாட்டுக் கம்பெனிமார்களே, இந்திய மாறிடுச்சுங்கய்யா. இது யூனியன் கார்பைட் காலம் இல்லைங்கய்யா. இதைக் கொஞ்சம் மண்டையில ஏத்திக்கங்கய்யா!

http://samsari.blogspot.com/2008/03/blog-post_22.html