பாசுமதி அரிசிக்கு அமெரிக்காவில் காப்புரிமை வழங்கப்பட்டது போல, மலேசியாவில் பொன்னி அரிசி என்ற பெயரை தன்னுடையது போல பதிவு செய்து கொண்டுள்ளது ஓர் இறக்குமதி நிறுவனம். இதற்கு தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

தென்னிந்தியாவில்தான் பொன்னி அரிசி அதிகம் விளைகிறது. இந்நிலையில் பொன்னி என்ற பெயரை பதிவு செய்து கொண்டுள்ளது சரிகாட் ஃபாயிசா என்ற நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து பொன்னி அரிசியை இறக்குமதி செய்து வருகிறது.

 

ஆனால் பொன்னி என்ற பெயரை மலேசிய வர்த்தக முத்திரை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, பிற இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

 

இது மற்ற இறக்குமதி நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரிகாட் ஃபாயிசா நிறுவனத்துக்கு பொன்னி என்ற பெயரை பதிவு செய்ததை எதிர்த்து வர்த்தக முத்திரை துறையை அவை அணுகி உள்ளன. இதையடுத்து பொன்னி என்ற பெயரை பதிவு செய்தது ரத்து செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

 

“பொன்னி என்ற பெயரை பதிவு செய்ய முடியாது. பாசுமதியை போலத்தான் இதுவும். பொன்னி அரிசி இந்தியாவுக்குத்தான் சொந்தம். மலேசியாவில் அதை பதிவு செய்ய முடியாது‘‘ என வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்தார். இவர், சரிகாட் ஃபாயிசா நிறுவனத்தால் அறிக்கை அனுப்பப்பட்ட ஒரு நிறுவனத்துக்காக வாதாடி வருகிறார்.


வெண்ணிற பொன்னி அரிசியை தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் 1986ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.

 

ஆகவே பொன்னி என்ற பெயருக்கு மலேசியாவில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என விவசாயப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராஜசேகருக்கு ஆதரவாக கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்திய நாட்டின் குறிப்பாக தமிழ் நாட்டின் பல மூலிகைச் செல்வங்கள் கடந்த நூற்றாண்டில் காப்புரிமை எனும் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களால் திருடப்பட்டு சொந்தம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அவலம் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டுதான் வருகிறது.

 

ஒரு ஜீரணிக்க முடியாத உதாரணம் கொடுக்கின்றேன்.

 

நீங்கள் மஞ்சளை வைத்து ஒரு புதிய மருத்துவமுறையையோ, அல்லது அதனை வைத்து தினசரி பயன்படுத்தக்கூடியப் பொருளையோ கண்டுபிடித்திருந்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மஞ்சளின் மகிமையைத் திருடி காப்புரிமையைப் பெற்றுவிட்ட அமெரிக்க நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் நீங்கள் உங்கள் பொருளை யாருக்கும் அறிமுகப்படுத்த முடியாது. மீறி அப்பொருளை நீங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தால், அவ்விஷயம் அந்த நிறுவனத்திற்குத் தெரிந்தால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

 

என்ன கொடுமைங்க இது…?

 

இன்னும் துளசி, வேப்பிலை என அமெரிக்க நிறுவனங்களால் திருடப்பட்ட மூலிகைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டேச் செல்கிறது.

இப்பொழுது பொன்னியை மலேசிய நிறுவனம் சொந்தம் கொண்டாட எத்தனிக்கிறது. பொன்னி என்ற பெயரே தமிழன் காவேரி ஆற்றிற்குச் செல்லமாக வைத்தப் பெயரல்லவா அது. அப்பொன்னி கரைபுரண்டோடும் நிலங்களில் பயிரிடப்படும் நெற்கதிர்களில் பொன்னியும் அடங்கும் அல்லவா.. தமிழனுக்கு உரிமையானதை பிறர் உரிமைக் கொண்டாடுவது எவ்வளவு மடத்தனம்..?

http://swarnaboomi.wordpress.com/2008/07/18/பொன்னி-யாருக்குச்-சொந்தம/