கொழந்தசாமி, பெரிய வூட்டுக்கு அமெரிக்காவுலேந்து பெர்சா பார்சல் வந்துச்சின்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு எதுனாச்சும் கொடுத்திருப்பாங்களே? சும்மா சொல்லுயா நாங்க கேக்க மாட்டோம்!


 ""தோ! கையில இந்த நாயதான் கொடுத்திருக்காங்க. எல்லாந் தெரிஞ்சு கேக்குறியே..  ஊம், வாய்தான் வாழப்பழம் கை கருணைக்கிழங்கு. போவியா'' டீக்கடை வாசலில் மூங்கில் தூணில் சுண்ணாம்பை ஒரு விரலால் தடவிக்கொண்டே சுப்பையனை நிமிண்டி விட்டான் கோபு.


 “""என்னய்யா இப்புடி சொல்ற தோட்டம் தொறவு சாவி, காரு, கொட்டா சாவி, போரு கொட்டா சாவி.. எல்லாம் உன் கையுலதான்ங்குறாங்க..'' நீட்டி முழக்கினான்.


 ""ஏன் நாய்க்கரு வூட்டு பீரோ சாவியே எங்கிட்டதான்னு சொல்லேன். ஒன் வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்'' பேசிக்கொண்டிருக்கும் போதே, இறுகப் பிடித்திருந்த சங்கிலியை இழுத்த படியே நாய் கடைக்குள் போகப் பாய, குழந்தைசாமி தடுமாறிப் போனார்.


 ""யோவ் என்னயா இது ஆளையே இழுத்துத் தள்ளிடும் போலருக்கு, ஏய்! ஸ்! அமெரிக்காவா சும்மாவான்னேன்.''


 ""பின்னே அது நாய் மாதிரியா இருக்கு, கன்னுக்குட்டி சைசுக்கு இருக்கு, யோவ் இழுத்துப் புடிய்யா. இருக்குற எலும்ப இது லாவிடப் போகுது'' சுப்பையன் தள்ளி ஓடினான்.


 ""தோ.. தோ.. பிசி.. பிசி.. இங்க வா.. இத இழுக்க நாமே ஒரு கிலோ கறி திங்கணும்டா கோபு''


 ""என்னயா பிஸி, பிஸிங்குற.. என்னா பேரு அது?''. ""அது என்னமொ நாய்க்கரு அப்படிதான் கூப்புடுவாரு. அது என்ன பிஸியோ.. பீசியோ... எவனுக்கு வாயில நொழையுது. வரட்டா! டீக்கடைல நாய வச்சிட்டு நின்னேன்னு எவனாவது போட்டு வுட்டா அந்தாளு வள்ளுன்னு பாய்வாரு'' சுற்றுமுற்றும் ஜாடை பார்த்துக் கொண்டார் குழந்தைசாமி.


 ""சரி எரைப்பு, ஆஸ்த்துமான்னியே இப்ப எப்படி இருக்கு?''


 ""காலங் காட்டியும் நாய மேய்க்க எழுந்திருச்சா பனி ஒத்துக்காம எரப்பு புடுங்கி எடுக்குது. லேட்டா போனா அந்தாளு புடுங்கி எடுக்குறாரு. நாய பாக்குறதா? நாய்க்கர பாக்குறதான்னு லோல் படுறேன். மாசம் இந்த அறுநூறு ருவாய்க்கு தோட்டம், காரு கொட்டா, போரு கொட்டா... பத்தாததுக்கு நாய்க்கரம்மாவுக்கு கட கண்ணிக்கு போவணும். புள்ள ஒழுங்கா இருந்தா வயசான காலத்துல எனக்கிது தேவையா? சொல்லு! ''


 ""நாகப்பட்டிணத்துல ஒரு பாய் மருந்து தர்றாராமே! போய் பாக்குறதுதானே.''


 ""எல்லாம் பாத்தாச்சு கோபு... இன்னும எமன போய் பாக்க வேண்டியதுதான். ஏதோ தெனம் கடத்தெருவுல இந்த மாட்டுக்கறியும், சூப்பும் உள்ளாற வுட்டா தேவலாம் போல இருக்கு. நேரம் போவுது வரேன்.''


 கிழக்கு மேற்காக, நாய் குழந்தைசாமியைப் பிடித்து இழுக்க ""அவுத்து வுட்டா உனக்கும் எனக்கும் தேவலாந்தான். அப்பொறம் நாய்க்கரு உன்னையும் என்னையும் வுட்டுட்டு தேட மாட்டாரு ஆமாம்!'' பேசிக்கொண்டே வீட்டை நோக்கி வருவதைப் பார்த்த நாய்க்கர் புருவத்தை நெரித்து கூர்ந்து நாயைக் கவனித்தார்.


 ""என்னடா பிஸிய ஏதோ திட்டிகிட்டே வரியா?''


 ""அய்யய்யோ அதெல்லாம் இல்லீங்க, அங்க இங்க ஓடாத அய்யா தேடுவிங்கண்ணு...'' வார்த்தையை முழுவதுமாக முடிக்காமல் பணிவுடன் வளைந்து சங்கிலியைக் கழட்டிவிட, தயங்கி நின்று வெளியே திரும்பிப் பார்த்த நாயைச் செல்லமாக சேர்த்து இழுத்து அணைத்தார் நாய்க்கர்.


 ""வாடி செல்லம்.. என்ன வேணும்? என்ன வேணும்?'' குனிந்து முதுகில் முத்தம் கொடுத்து கொஞ்சினார்.


 ""என்னடா நாய்க்கு ரொம்ப எரைக்குது, செருமுற மாதிரி வருது, கட பக்கம் போறேன்னு எதுவும் பொறைய கிறைய வாங்கி போட்டுறாத; வீட்டுப்பக்கம் போறப்ப சோத்த கீத்த வச்சிடாத. உன் வீட்டு ரேசன் அரிசியெல்லாம் ஒத்துக்காதுடா'' நாய்க்கர் நாய் முகத்தையே ஆராய்ந்தார்.


 ""அய்யய்ய அதெல்லாம் இல்லீங்க.. ஓடியாந்தது எரைக்குங்க..'' வந்த இரைப்பை அடக்கிக் கொண்டு படபடப்புடன் குழந்தைசாமி ""எனக்குத் தெரியாதுங்களா... வீட்டரிசி பொன்னி சூப்பர்ல அதுக்குப் போடுறீங்க!''


 ""ஆமாம் மறந்தாப்ல ஏதும் தந்துடாத.. இந்த மாசம் அத டாக்டர் செக்கப் வேற அழச்சிட்டு போவணும்'', சற்று குரலைத் தாழ்த்தி ""அப்புறம்! நாய்கிட்ட நெருக்கமா போய் வாய்ப்பக்கம் கொஞ்சுறேன்னு பேசிடாதே! உனக்கு ஆஸ்துமா இருக்குல்ல''


 "சரிங்க' என்று மவுனமாக குழந்தைசாமி தலையாட்ட ""அதுக்கில்லடா, சிலருக்கு நாய்மூச்சு பட்டா ஒத்துக்காது! உனக்காகத்தான் சொல்ல வந்தேன்; காலைல நேரத்தோட வா! லேட்டானா பிஸி வெளிக்கி போக தவிச்சு போவுது''


 ""கோழி கூப்புட வந்துர்றேங்க.'' வீட்டுக்கு கிளம்பி கேட்டுக்கு வெளியே போன குழந்தைசாமியை ஏக்கமாக பார்த்தபடி நாய்க்கர் கைப்பிடிக்குள் திமிறிக் கொண்டிருந்தது நாய்.


···


 ""வந்து நிக்குற ஆட்டை கட்டி வைக்காமகூட எங்க போனா இவ.., மருதாயி, மருதாயி'' கத்திக் கொண்டே குடிசைக்குள் குனிந்தார் குழந்தைசாமி.


 ""தே! ஏன் இப்புடி உசுரு போற மாதிரி கத்துற.. டான்னு சாப்புட வருவியேன்னு கருவாடு வைக்க உள்ளாற வந்தேன், ஆஸ்த்துமாவுக்கு ஆவாதுன்னா அடங்குறியா. செஞ்சாலே ஆச்சுன்னு வாங்கி குடுத்து வுட்ருக்க!''


 ""ஆமாம் எதுதான் ஆவுது தின்னுபுட்டாவது சாவுறேன் போ! என்ன இங்க அய்வேசு கிழியுது!''


 ""அதான கட்னவள கூட வுட்ருவ; இந்த கருவாட வுடமுடியாது உன்னால'', முனகிக் கொண்டே தட்டில் சோற்றை எடுத்து வைத்தாள்.


 ""சே! ச்சூ.. கொழம்பை கொதிக்கவுடலெ, ஊருபட்ட பூனைங்க, உரமொறைய கூப்புட்டுட்டு வருதுங்க...'' வளைய வளைய வந்த பூனைகளை விரட்டியடித்தாள்.


 ""அட ஙொப்பன் தன்னான.. இத பாரு!'' குழந்தைசாமி திடுக்கிட,  ""அட நாய்க்கரு வூட்டு நாயி! எப்புடி செயினை அறுத்துட்டு வந்துச்சு'' மருதாயி கன்னத்தில் கைவைத்து அதிசயித்தாள்.


 ""நாய்க்கரு கட்டாம வுட்ருப்பாரு! பிசி.. தோ! வா! வா!''


 வாலாட்டிக்கொண்டே, சாப்பாட்டில் கைவைத்த குழந்தைசாமியின் முதுகில் வந்து அணைந்து கொண்டது நாய்.


 ""தே... என்ன அறிவு பாரு! எடஞ்ச பண்ணாம ஓரமா உக்காந்துகிச்சுங்குறேன்'', மருதாயிக்கு திகைப்பு கூடியது.


 ""நாயக்கரு வூட்ல இருந்தாதான் அது ஏறுக்கு மாறு! இங்க எப்படி சொன்னதை கேக்குது பாரு! நாய்க்கரு கூடவே இருந்துச்சு இதுவும் கொணங்கெட்ட நாயாகிடும்.''
 ""தே ரவ சோறு வையேன் பாவம்!''


 ""ஏய் நீ வேற நாய்க்கரு வேற நாயை மோந்து, மோப்பம் பிடிப்பாரு. தெரிஞ்சுது வுட்டுட்டு தேட மாட்டாரு!'' இடது கையால் தடவிக்கொண்டிருக்க ""கொழந்தசாமி நாயி வந்துச்சா நாய்க்கரு தேடுறாரு. உன்ன வரச்சொன்னாரு யோவ்!'' கூவிக்கொண்டே சைக்கிளில் இருந்தபடியே ஒரு காலை ஊன்றினான் சுப்பையன்.


 ""தோ கௌம்பிட்டேன்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை உதறியபடி நாயைப் பிடித்துக்கொண்டு நடந்தார் குழந்தைசாமி.


 ""அய்யே எமனாட்டம் வந்துச்சு. செத்த அந்த சோத்த திங்க வுட்டுச்சா'', மருதாயி ஆத்திரத்தில்  நாயை முறைத்தாள்.


 ""தே! வாயில்லாதது, நாய்க்கரு தேடுதறதுக்கு நாய் என்னா பண்ணும், அமெரிக்காவுல புள்ளைய வுட்டுட்டு கூட இருப்பாரு, அஞ்சு நிமிஷம் நாயை வுட்டுட்டு இருக்கமாட்டாரு, தோ வந்துடறேன்!''


 ""ஆமாம் உனக்கு ரொம்ப வாயிருக்கு! அதாவது இருக்க புடிக்காம அத்துகிட்டு வந்துடுது... நீயும் இருக்கியே!'' மருதாயி முனகிக் கொண்டே தட்டை மூடினாள்.


···


 ""ஏய்... ஸ்! நாய்க்கரு வூட்டு வண்டிதான அது, காருக்குள்ள கழுத்த நீட்டிட்டு என்னமா போவுது பார்றா நாயி!''


 ""திமிற பார்ரா பழிப்பு காட்டுற மாதிரி வாயை காட்டிட்டு போவுது.''


 ""சே! அப்புடி பாக்குதுறா! நாய்க்கருக்கு குஷி வந்தா போரு கொட்டாபக்கம் போவாரு! இல்லேன்னா நாயை தூக்கிகிட்டு கார்ல சுத்துவாரு!'' சுப்பையன் பொடிவைத்துப் பேச, தங்கையன் வாய்விட்டு சிரித்தான்.


 ""ஏ சுப்பையா! நாய்க்கரு நல்ல மூடுல இருக்காரு, அறுப்பறுத்த மூணு நாள்கூலி பாக்கி வச்சிருக்கார்றா. இப்ப போனா வாங்கிட்டு வந்துடலாம். இரு பதமா போயிட்டு வந்துடறேன்.''


 தங்கையன் நாய்க்கர் வீட்டுப் பக்கம் போக, அங்கே ஏற்கனவே கேட்டுக்கு வெளியே சின்னப்பொண்ணு குழந்தையை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


 ""எங்க வந்த?''


 ""புளி உடைச்ச காசு வாங்க வந்தேன்! லேசுல வர மாட்டேங்குது, ஆணும் அப்புடி, பொண்ணும் அப்புடிதானா இருக்கும்?!''


 ""சின்னப்பொண்ணு வருத்தப் படாதே பேசாம இரு நாய்க்கரு வர்றாரு'' தங்கையன் அமைதிப்படுத்தினான்.


 ""வாடா'', நாய்க்கர் குரலுக்கு போட்டியாக நாயும் குரைத்தது. சின்னப்பொண்ணு பின்னால் நகர, இடுப்பிலிருந்த பிள்ளை நாயைப் பார்த்து கையை நீட்டியது.


 ""தே பாப்பா போவாத புடுங்கி வச்சுடும்'', வெடுக்கென நாய்க்கர் சின்னப்பொண்ணுவை கூர்ந்து பார்க்க, ""பாப்பா நாயைப் பாரு, தோ நாயைப் பாரு!'' என்று சின்னப்பொண்ணு நாயைக் காட்டினாள். திண்ணை சோபாவில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்த நாய்க்கர் பிஸ்ஸி, பிஸ்ஸி என்று நாயை வாரி மடியில் போட்டார்.


 ""என்னங்க பிசி என்னமோ மாதிரி இருக்கு?'' நைசாக தங்கையன் பேச்சுக் கொடுத்தான்.  ""இவ்வளவு நேரம் ஏ.சி. ரூம்ல இருந்துச்சா அதான் என்ன மாதிரி அதுக்கும் வெளியில வந்தா ஒரு மாதிரி ஆவுது''. ""இங்க பாரு இங்க பாரு,'' கொஞ்சிக் கொண்டே கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பிஸியின் கழுத்தில் மாட்டி அழகு பார்த்தார் நாய்க்கர்.


 ""நல்லா இருக்குல்ல?''


 ""சூப்பரா இருக்குதுங்க'' என்று சின்னப்பொண்ணு சிரிக்க, தலையாட்டிக் கொண்டே தங்கையன் சின்னப்பொண்ணு முகத்தைப் பார்த்த படி தானும் சிரித்துக் கொண்டான். கழுத்தை ஆட்டி ஆட்டி உதறிப் பார்த்தது நாய். ""ஏய்! போட்டுக்க நாயே! அஞ்சு பவுனு'', செல்லமாய் தாடையை தட்டினார் நாய்க்கர். ஊவ், ஊவ் என்று அவர் பிடியிலிருந்து திமிறியது நாய்.


 ""அத ஏண்டா கேக்குற தங்கையா நீ! நேத்து நைட்டு நானும் வீட்டுலயும் ஆப்பிள் நறுக்கி சாப்புடுறோம். குடுக்க குடுக்க இன்னும் கேக்குது! கறி தின்னாலும் நம்ப வூரு நைஞ்ச கறியத் திங்க மாட்டேங்குது. பெசலா  டவுண்ல போய் வாங்கிட்டு வந்தா பொண்ணாட்டுக் கறியா கேக்குது, ஆளப்பாரு ஏய்! ஏய்!''


 ""சும்மாவா உங்க வளர்ப்பாச்சே'', சின்னப்பொண்ணு செயற்கையாய் சிரித்தாள். திடீரென உள்ளே நாய்க்கர் எழுந்துபோக, தானாக நினைவு வந்து பணம் எடுக்கத்தான் போகிறார் என்று தங்கையன் எதிர்பார்க்க, கையில் செல்போனோடு வந்த நாய்க்கர், ""ஏய் பிஸி அமெரிக்காவுலேந்து அண்ணன் பேசுறான் கேளு, கேளு'' செல்போனைக் கொண்டு நாயின் காதில் நெருக்கி வைக்க  ""லொள், லொள்'' என்று கத்திக்கொண்டு பயந்து ஒதுங்கியது நாய். ""ஏய்! அமெரிக்காவுலேந்து பேசுறான் கேள்றி பிஸி'', நாய்க்கர் நாயை விடவில்லை.


 ""ஏங்க அதுக்கு கேட்குமா?'' சின்னப்பொண்ணு வாயைப் பிளக்க ""தே! நீ ஒண்ணு நாயின்னா கேக்காதா பின்ன, அது டி.வி.யே பாக்குது!'' தங்கையன் சின்னப்பொண்ணு வாயை அடக்கி எப்படியாவது விசயத்துக்கு வரத் தவித்தான். ""ஏய் தங்கையா அதுவும் இந்த கோலங்கள் போட்டா அந்த நேரத்துக்கு என்னா அமைதியா பாக்கும்ங்குற! அத வுடு, ஒருநாள் சுப்பையன் என் காரு பக்கம் போயிட்டான், என்னமா அவன் மேல பாயுதுங்குற..'' நாய்க்கர் சொல்லிக் கொண்டே போக சின்னப்பொண்ணு ""ஒங்க வூட்ல ஒண்ணால்ல அது இருக்கு! நம்ம வூட்டுப் பொருளை ஒருத்தர் தொட்டா வுடுமா? ராசா மாதிரி உங்க அந்தஸ்துக்கு அத வச்சிருக்குறீங்க.. நன்றிய வுடுமா?'' மேலும் வாயைக் கிளறிய சின்னப்பொண்ணை முறைத்துப் பார்த்த தங்கையனுக்கு ஆளைவிட்டால் போதும் என்று ஆகிப்போனது.
 ""ஏ தங்கையா! எங்கெல்லாம் தேடுறது.. உன் வூட்ல உன்னைத் தேடுது'' சுப்பையன் குரல் கொடுக்க, ""தோ என்னன்னு கேட்டுட்டு வந்துடறங்க'' என்று தங்கையன் சமயம் கிடைத்ததென்று நடையைக் கட்டினான். "என்ன காசு பேந்துச்சா' என்று சுப்பையன் ஜாடையில் கையைக் காட்டி கேட்க ""ஊக்ஹூம்'' என்று உதட்டைப் பிதுக்கியபடி தெருவுக்கு வந்தான். குழந்தைசாமி புரிந்து கொண்டு ""யோவ்! இருந்து வாங்கிட்டுப் போயா'' என்று கையைப் பிடித்து இழுத்தார்.


 ""ஏ சாமி! அந்தாளு எதனாவது நம்பள பத்தி கேக்குறாரா? எவனால முடியும் நாயைப் பத்தி நாலுமணி நேரம் பேசுவான். காசே போனாலும் அய்யாசாமி அப்பாடா நீ ஆள வுடு! நீதான் அந்தாளுக்கு லாயக்கு!


 ""நீ வேற நானே உடம்புக்கு ஈரல் எடுத்து தின்னா நல்லதுண்ணு காலைல அம்பது ரூவா கேக்குறேன்.. அப்புறம் பாக்கலானுட்டு எனக்கு நேராவே டிரைவர்கிட்ட நாய்க்கு கறி வாங்க டவுணுக்கு அனுப்புறார்ங்குறேன்.. கொடுமை இல்ல இது.. ஏ அப்பா! மணி ஆகுது! போரு கொட்டாகிட்ட போகணும், மடையை மாத்திட்டு வந்து இந்த நாயை அழைச்சிட்டு வேற நடக்கணும்.. வா பின்ன.. நாய்க்குள்ள பவுசு நமக்கில்ல..'' முனகிக் கொண்டே அசைந்து அசைந்து நடந்தார் குழந்தைசாமி.


···


 ""அன்னைக்குத்தான் பாத்தேன் எல்லக் கல்லாட்டம் இருந்தாரு நாய்க்கர், இப்புடி சாஞ்சிடுவார்னு யாரும் நெனக்கல.''


 ""அது என்னவோ ரத்தக்கொதிப்பாம்ல, ஓவராம்.''


 ""நேத்து பூரா ராவுல நாய் கத்திருக்கு! யமன் அது கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு''


 ""நாயை மல்லுக்கட்டி குளிப்பாட்ட போனவரு செத்த நேரத்துக்கெல்லாம் படபடத்து டாக்டர கூப்புடுறதுக்குள்ள உசுரு போயிடுச்சாம்.'' கட்டிலில் கிடத்தியிருந்த நாய்க்கர் பிணத்தைப் பார்த்து ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர். நாய்க்கர் வீட்டம்மாள் அப்படியே கணவன் தலைக்குப் பக்கத்தில் பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள்.


 ""தோ பாருப்பா என்னதான் கிராமமா இருந்தாலும் எல்லாரையும் வீட்டுக்குள்ள விட முடியுமா? பேசாம கட்டிலைத் தூக்கி அந்த ஜன்னலோரம் வச்சு கதவை திறந்த வச்சா, சந்து வழியா ஜனம் பாத்துட்டு போகட்டும்'' நாய்க்கர் வீட்டு உறவினர்களில் வளப்பமான ஒருவன் ஆலோசனைகளைக் கூற, பிணத்தைக் கூடத்திலிருந்து ஜன்னலோரம் நகர்த்தினர்.


 ""ஏ புள்ள! பொம்பள ஆளுங்க எல்லாம் மளமளன்னு சந்து வழியாவந்து பாத்துட்டு போங்க சீக்கிரம் அய்யாவ எடுத்தாயிடும்'' குழந்தை சாமி தெருப்பெண்களுக்கு வழிகாட்டினார்.


 ""நாய வுட்டுட்டு எப்புடித்தான் போனீங்களோ! சாவுறப்ப கூட கைய நீட்டி நீட்டி அங்க காமிச்சுருக்காரு.''


 ""அந்த பீரோ பக்கமா?'' செல்வி கேட்க ""சே! சத்தம் போடாத நாயை காட்டிருக்காருங்குறேன்.. இவ ஒருத்தி வௌரம் கெட்டவ!''


 ""சாவுற நேரத்துல நாயி இல்øலயாம்ல; கொழந்தசாமி நடத்தறதுக்கு கூட்டிட்டு போயிட்டாராம்லா. அய்யோ பாவம்.. அந்த நாய் மூஞ்ச பாத்துட்டு கண்ணை மூடிருக்கலாம்.. நாயை நாயாவா வளர்த்தாரு அதற்கு என்னா தீனி? என்னா சோப்பு? என்னா சவரசனை?''


 ""அட என்னமொ போக்கா! அவுதி கிவுதி படாம ஆருக்கும் படுத்தாம... நாய்க்கருக்கு நல்ல சாவுதான் போ!'' கோமதி முந்தானையால் வாயை மூடிக்கொண்டே முனகினாள். நாய் ஆமோதிப்பது போல தலையாட்டி விட்டு, திண்ணைப்பக்கம் வந்தது.


 ""கோவிந்தா.. கோவிந்தா..'' பாடையைத் தூக்க கூட்டம் பின் தொடர்ந்தது. ""எங்க அந்த நாயி அய்யாவுக்கு முன்னாடி சுடுகாட்டுல போயி நிக்குதா?'' மருதாயி பேசிக் கொண்டே தேட, திண்ணை மூலையில் இருந்த கிண்ணத்தில் இருந்த பழைய சோற்றைப் பொறுமையாகத் தின்று கொண்டிருந்தது நாய்.


 ""சே! இங்க பாரேன் ஆசையா வளர்தவங்க செத்தா நாய் சோறு திங்காம கால் மாட்ல கெடக்கும், இந்த நாயைப் பாரு,'' மருதாயி பொருமித்தள்ளினாள்.


 அருகே வந்த குழந்தைசாமி, ""அடப்போவியா! நாய்க்கர்கிட்ட நான் பட்ட பாடவிட இந்த....'' முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்தில் நாய்க்கர் வீட்டுப் பெண்கள் வர, நாயைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டே ""கோயிந்தா .. கோயிந்தா..'' என்று பாடையை நோக்கி ஓடினார்.


· துரை.சண்முகம்