அண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, புதிய இடைக்கால அரசை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான திசையில் அந்நாடு அமைதியான முறையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.


 நேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.


 நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.


 தற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள்  உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள்  நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.


 புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (WORT-FM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.


—  ஆசிரியர் குழு

 

 *இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன?


 நேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.


 அடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி, தொழிற்துறை உறவுகளை வளர்த்து சோசலிசத்தை நோக்கி முன்னேற தொழிலாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டும். இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலத் தேவைகளை நிறைவு செய்யும்.


 தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் இவ்விரு கடமைகளையே மே நாள் நிகழ்ச்சிகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.


 *இந்தத் திசையில் செயல்பட நீங்கள் என்ன நடைமுறைப் பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


 நாங்கள் தேர்தலில் வெற்றியைச் சாதித்துள்ள போதிலும், பிற்போக்கு சக்திகள்  குறிப்பாக, ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு இரகசிய சதிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவோயிஸ்டுகளிடம் அதிகாரத்தைக் கையளிக்கக் கூடாது என்று அவர்கள் முடியாட்சி சக்திகளையும் அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பலையும் தூண்டிவிட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். நேபாள மக்கள் இவற்றுக்கெதிராக ஏற்கெனவே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ள போதிலும், தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இச்சதிகளை முறியடிக்க போராட்டத்துக்குத் தயாராக வேண்டும். அவசியமானால், வீதிகளில் இறங்கி போராடி இப்பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும். நடைமுறையில் இதைச் சாதிக்க மக்கள் தயாராக வேண்டும்.


 இரண்டாவதாக, எமது தலைமையில் புதிய அரசை நிறுவிய பிறகு, சில உடனடி நிவாரணங்களை உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் செய்ய வேண்டியுள்ளது. வறுமை, வேலையின்மை, புறக்கணிப்பு ஆகியவற்றால் நீண்டகாலமாக எமது மக்கள் வேதனைப்படுகிறார்கள். இதனைக் களைய, கூட்டுறவுச் சங்க கடைகள் எனும் வலைப்பின்னலின் மூலம் பொது விநியோக முறையை (ரேஷன்) விரிவாக்கி உறுதிப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.


 அடுத்து, எமது கொள்கை அறிக்கையிலும், இடைக்கால சட்டத்திலும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகள். புதிய அரசின் வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) இதற்கென முறையான நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் சாதிக்கவும் தீர்மானித்துள்ளோம். இவற்றைச் செயல்படுத்த, நடைமுறையில் மக்கள் பங்கேற்பும் ஈடுபாடும் மிக அவசியமாகும். அவர்கள் எமது கட்சிக்கும் எதிர்கால அரசாங்கத்துக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்; எமது கட்சியும் அரசாங்கமும் சரியான திசையில் செயல்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் தெரிவித்துள்ளோம். உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் கீழிருந்து நிர்பந்தம் செய்யாவிடில், அரசாங்கம் சரியான திசையில் இயங்க முடியாது. இது தொடர்பாக, வரலாற்றில் ஏராளமான எதிர்மறை படிப்பினைகள் உள்ளன. எனவே, உழைக்கும் மக்கள் விழிப்புடன் கண்காணித்து, தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தி கீழிருந்து அரசைக் கட்டுப்படுத்தி இயக்காவிட்டால், அரசாங்கமானது திசை விலகிப் போய்விடும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடும்.


 *கீழிருந்து நிர்பந்தம் கொடுத்து மக்கள் செயல்படுவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


 முதலாவதாக, நாங்கள் அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள போதிலும் இந்த அரசாங்கமானது முழுமையான புரட்சிகர அரசாங்கமல்ல; இடைக்கால அரசாங்கம்தான். எனவே, முதன்மை எதிரியை வீழ்த்த நாங்கள் இதர வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இதர வர்க்கங்களைவிட நாங்கள் முன்னிலையில் நிற்க விழைகி றோம். அரசின் உள்ளிருந்தே செயல்பட்டு அதன் தன்மையை மாற்றியமைக்க விழைகிறோம். இதன் காரணமாகவே, அரசுக்கு வெளியே மக்களின் நிர்பந்தத்தை நாங்கள் கட்டியமைக்க வேண்டியுள்ளது. எங்கள் கட்சித் தலைமை முழுவதும் இந்த அரசாங்கத்தில் பங்கேற்று விடவில்லை. ஒரு பிரிவினர் மட்டுமே அரசாங்கத்தில் பங்கேற்றுள்ளோம். மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்களைத் தொடர்ந்து அமைப்பாக்கி, போராட்டத்துக்குத் தயார்படுத்தி வருகிறோம். இந்தத் திசை வழியிலேயே எமது கட்சி செயல்படுகிறது.


 புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே போராடுவது தற்போது முதன்மையான போராட்ட வடிவமாக உள்ளது. அதேசமயம், எமது கட்சி அரசாங்கத்துக்கு வெளியிலிருந்தும் போராடும். எனவேதான் எமது மையக் குழுவின் அனைத்து தோழர்களும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாமல், ஒரு பிரிவினர் மட்டும் தேர்தலில் போட்டியிட்டோம். எமது கட்சியின் மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பார்கள். அதன் மூலம் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, மக்களாட்சிக்கான அரசியல் சட்டத்தை உருவாக்க துணை செய்வார்கள்.


 இதுதவிர, நாங்கள் சில மக்கள்திரள் அமைப்புகள்  நிறுவனங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்கான பருண்மையான வடிவங்களை இன்னும் தீர்மானிக்காத போதிலும், கொள்கையளவில் இது பற்றிய முடிவுகளை எடுத்துள்ளோம்.


 *உங்களது பொருளாதாரக் கொள்கைப்படி, அனைத்துலக மூலதனத்தின் சவாலை எதிர்த்து நின்று, உள்நாட்டு மூலதனத்தைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற என்ன வழிமுறைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


 உள்நாட்டு தேசிய மூலதனத்தைத் திரட்டுவதற்கே நாங்கள் அழுத்தம் கொடுப்போம். எமது அடிப்படைத் தேவைகளுக்காக நாங்கள் உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டாவிட்டால், நாங்கள் அனைத்துலக மூலதனத்தால் உருட்டி மிரட்டப்படுவோம். எனவே, உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டுவதே எமது முதன்மையான பணி.


 அதேசமயம், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு  அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு எமக்கு அந்நிய முதலீடுகள் கொஞ்சம் தேவைப்படுகிறது. அதற்கான அந்நிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவை நிர்பந்தம் கொடுக்கும் என்பது உண்மைதான். அதேசமயம், அந்நிறுவனங்களுக்கும் சில நிர்பந்தங்கள் உள்ளன. அவை எம்முடன் ஒத்துழைக்க மறுத்தால் அவை மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்.


 மேலும், அந்நிய மூலதனங்களுக்கு போர்த்தந்திர முக்கியத்துவமிக்க நீண்டகால நலன்களும் உள்ளன. அவை சீனா மற்றும் இந்தியாவின் பெரும் சந்தையைக் குறி வைத்துள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைதியான நிலைமை இல்லாவிட்டால், அது இந்தியசீன சந்தைகளையும் பாதிக்கும் என்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வழியில் நேபாளத்தில் அவையும் தமது சொந்த நலன்களைக் கொண்டுள்ளன.


 உள்நாட்டு மூலாதாரங்களைச் சார்ந்து நிற்கும் அதேசமயம், அடிக்கட்டுமான வளர்ச்சிக்கான அந்நிய முதலீட்டைப் பெற நாங்கள் எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். மக்கள் போராட்டங்கள் மூலம், அந்நிய நிறுவனங்களின் நிர்பந்தங்களிலிருந்து எமது பொருளாதாரம் விடுதலையடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.


 *உங்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த உழைக்கும் வர்க்கத்தை  குறிப்பாக உங்களது தொழிற்சங்கத்தை எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்?


 நேபாளத்தில் எமது கட்சியின் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்கள் மிக வலுவானவை. அனைத்து ஆலைகள்  தொழிற்கூடங்களில் எமது தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன.


 நேபாளத்தில் புல்லுருவித்தனமான மூலதனமே அதிகாரத்தில் உள்ளது. இதை தரகுஅதிகார வர்க்க முதலாளித்துவம் என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்த வகையான முதலாளித்துவம் தொழிலுற்பத்தியையோ வேலை வாய்ப்பையோ பெருக்குவதில்லை. சிதைக்கப்பட்ட, ஏகாதிபத்திய சார்புத் தன்மை கொண்ட இத்தகைய முதலாளித்துவத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நேபாளத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் எமது தொழிற்சங்கம் கூலி உயர்வு  வேலை நிலைமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தியபோது, சில விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை மூடிவிட்டு நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். சில பிற்போக்காளர்கள், நாங்கள் தொழில் முதலீட்டுக்கே எதிரானவர்கள் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். நாங்கள் இத்தகைய புல்லுருவித்தனமான முதலீடுகள் வெளியேறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேசமயம், நாங்கள் உற்பத்தி சார்ந்த உள்நாட்டு முதலீடுகளை எதிர்ப்பதில்லை. உள்நாட்டு முதலாளிகள்  வர்த்தகர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக எமது தொழிற்சங்கங்கள் செயல்பட்டுள்ளன. தேசிய முதலாளித்துவத்தையும் சிறு தொழில்களையும் வர்த்தகத்தையும் வளர்த்தெடுப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


 *தற்போதைய அரசின் கொள்கைப்படி உங்களது தொழிற்சங்கங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு செயல்படும்?


 எமது தொழிற்சங்கங்கள் அரசியல்மயமானவை. அரசியல் அதிகாரம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடம் இல்லாதவரை போராடிப் பெற்ற உரிமைகளையும் பொருளாதார ஆதாயங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்துள்ளனர். பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு அரசியல் போராட்டங்களையும் எமது சங்கங்கள் நடத்தி வந்துள்ளன.


 இதுதவிர, தொழிற்சாலைகளில் எமது சங்கங்கள் வலுவாக இருப்பதால், ஆலை நிர்வாகங்கள் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தையும் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற்றால்தான் செயல்படுத்த முடியும். இதை ஏற்கெனவே நாங்கள் சாதித்துள்ளோம். ""தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் அரசியல் அதிகாரம்'' எனும் சோவியத் வடிவத்தை முழுமையாகக் கொண்டிராத போதிலும், அந்த திசையில் நாங்கள் தடம் பதித்துள்ளோம். நேபாள தொழிற்சாலைகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் எமது தொழிலாளர்களே செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர்.


 *விவசாயிகள் பற்றியும் நிலச்சீர்திருத்தம் பற்றியும் கட்சியிலும், அரசாங்கத்திலும் விவசாயிகளின் பங்கேற்பு குறித்தும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்?


 எமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எமது நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயிகள், இவர்களில் பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். அவர்களிடம் அரை ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எமது புரட்சிகர திட்டத்தின் படி, நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து கூலிஏழை விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யும் நிலச்சீர்திருத்த இயக்கத்தை ஏற்கெனவே நாங்கள் நடத்தி வருகிறோம். புதிய அரசின் கீழும் இது தொடரும்.


 மூன்று வழிமுறைகளின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் விவசாயத்தைச் சீரமைத்து முன்னேற்றவும் தீர்மானித்துள்ளோம். முதலாவதாக, உற்பத்தி உறவுகளை  அதாவது, நிலவுடைமை முறைகளை மாற்றியமைத்தல்; சமவெளிப் பகுதிகளில் பல ஹெக்டேர் நிலங்களை நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளைச் சுரண்டி நகரங்களில் உல்லாசமாக வாழ்கின்றனர். நிலத்திலிருந்து விலகியுள்ள  விவசாயத்தில் ஈடுபடாத நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறித்து, உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கைப்படி, கூலிஏழை விவசாயிகளுக்கு இந்நிலங்களைப் பகிர்ந்தளித்து, விவசாய உற்பத்தியைப் பெருக்குவோம்.


 இரண்டாவதாக, சிறு விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்களில் அணிதிரட்டுவோம். அரசு இச்சங்கங்களுக்கு சலுகைகளையும் உரிமைகளையும் அளிக்கும். விவசாயிகள் அரசாங்கத்தில் பங்கேற்கவும் கட்டுப்படுத்தவும் இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் மிக அவசியமாகும்.


 மூன்றாவதாக, நவீன நீர்ப்பாசனம், உழுபடைக் கருவிகள், கூட்டுப் பண்ணைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். விவசாயிகளின் ஊக்கமான பங்கேற்பு இல்லாமல் இவற்றைச் சாதிக்க முடியாது. ஏற்கெனவே இத்தகைய பணிகளில் எமது கட்சி ஈடுபட்டு வந்துள்ளது.


 அடுத்து, உலக வங்கியும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் (ஊஅO) தீர்மானித்து ஏழைநாடுகளில் திணித்துள்ளதைப் போல, ஏற்றுமதி அடிப்படையிலான பணப்பயிர் உற்பத்தியைப் பெருக்குவதாக எமது விவசாய கொள்கை இருக்காது. எமது விவசாயிகளின், மக்களின் உணவுப் பாதுகாப்பே முதன்மையானது. உள்நாட்டுத் தேவைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதே எமது விவசாயக் கொள்கை. உற்பத்தி பெருகி உபரியாகக் கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். உணவு தானியங்களுக்காக ஏகாதிபத்தியங்களிடம் கையேந்துவதாக ஒருக்காலும் எமது விவசாயக் கொள்கை அமையாது.

 

 * இளம் கம்யூனிஸ்டு கழகங்களின் பங்கு என்ன?


 எமது இளம் கம்யூனிஸ்டு கழகங்கள் தற்போதைய புரட்சிப் போரில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் மிக்க அரசியல் சக்தியாகும். தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை அணிதிரட்டி அரசியல் பிரச்சாரம் செய்வதிலும், பிற்போக்காளர்களின் சூழ்ச்சிகள்  சதிகளை முறியடித்து வெற்றியைச் சாதித்ததிலும் இவை முக்கிய பங்காற்றியுள்ளன. வருங்காலத்திலும் இக்கழகங்கள் பிற்போக்கு  எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடித்து நாட்டையும் மக்களையும் காக்கும் கடமையில் ஈடுபடும். அடுத்து, இக்கழகங்கள் தம்மை அணிதிரட்டிக் கொண்டு உற்பத்திக்கான நடவடிக்கைகளிலும், மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும். மக்களைத் திரட்டி ஆரம்பக் கல்வி அளித்தல், மருத்துவசேவை, கட்டுமானப் பணிகள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு, அரசியல் நிர்ணய சபை பற்றியும் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு விளக்கி, அரசு நடவடிக்கைகளில் ஈடுபடவும் கண்காணிக்கவும் துணை நிற்கும்.


 *"புதிய நேபாளத்தைக் கட்டியமைப்போம்!'' என்ற முழக்கத்தை தேர்தலின்போது உங்கள் கட்சி முன் வைத்துப் பிரச்சாரம் செய்தது. தற்போதும் இதே முழக்கத்தை எதிரொலிக்கிறது. புதிய நேபாளம் என்பதன் உண்மையான பொருள் என்ன?


 புதிய நேபாளம் என்பது அரசியல் ரீதியில் நிலப்பிரபுத்துவ அரசியல்  பொருளாதார  கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதாகும். புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் தலைமையில் சமூக  பொருளாதார மாற்றத்தை நிறுவுவதாகும். பழைய ஒழுங்கமைவை அடித்து நொறுக்கிவிட்டு புதிய முற்போக்கான ஒழுங்கமைவைக் கட்டியமைப்பதாகும். நிலப்பிரபுத்துவ உறவுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, விவசாயத்தைச் சீரமைத்து, உற்பத்தி சக்திகளை வளர்த்து, நவீன தொழிற்துறை உறவுகளை நிறுவி, சோசலிசத்தை நோக்கிய திசைவழியில் முன்னேறுவதே புதிய நேபாளம் என்ற முழக்கத்தின் பொருளாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே தற்போதைய இடைக்கட்டத்தில் எமது மையக் கடமையாக உள்ளது.


 *அரசியல் நிர்ணய சபையில் நீங்களும் பிற இடதுசாரி சக்திகளும் சேர்ந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், முற்போக்கான சட்டங்களை இயற்றுவதில் இழுபறி நீடிக்குமே! பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே! உங்கள் மீது வீண்பழி சுமத்துமே! இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையை எவ்வாறு இயக்கிச் செல்லப் போகிறீர்கள்?


 நீங்கள் கூறுவது உண்மைதான். இது சுலபமான பாதை அல்ல. பெரும் போராட்டங்களின் மூலம்தான் புதிய முற்போக்கான சட்டங்களை இயற்ற முடியும் என்பதை நாங்கள் நன்கறிந்துள்ளோம். அதேசமயம் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் 37% இடங்களைப் பெற்றுள்ளோம். இது மூன்றில் ஒரு பங்கை விட அதிகமானது. எனவே, எமக்கு வெட்டு அதிகாரம் (""வீட்டோ'') உள்ளது.


 எங்கள் ஆதரவு இல்லாமல் பிற்போக்கு சக்திகளால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாது. நாங்கள் முற்போக்குச் சட்டங்களை இயற்றுவதை இச்சக்திகள் தடுக்குமானால், அவற்றின் பிற்போக்குச் சட்ட முன்மொழிதலையும் எங்களால் தடுக்க முடியும். இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் முட்டுக்கட்டையாகவே அமையும். நாங்கள் வெற்றி பெறுவது கடினமானதுதான் என்றாலும், நாங்கள் பின்வாங்கிவிட மாட்டோம்; தோற்றுவிடவும் மாட்டோம்.


 அரசியல் நிர்ணய சபையில் மூன்று விதமான சக்திகளும் மும்முனைப் போட்டியும் முரண்பாடும் நீடிக்கின்றன. நிலப்பிரபுத்துவ  முடியாட்சி ஆதரவு சக்திகள் ஒருபுறம்; முதலாளித்துவ நாடாளுமன்ற சக்திகள் மறுபுறம்; இடதுசாரி  பாட்டாளி வர்க்க சக்திகள் இன்னொருபுறம். நிலப்பிரபுத்துவ  முடியாட்சி ஆதரவு சக்திகளை வீழ்த்துவதே எமது முதன்மையான குறிக்கோள். அதன்பிறகு, வருங்காலத்தில் முதலாளித்துவ சக்திகளுக்கும் பாட்டாளி வர்க்க சக்திகளுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் நீடிக்கும். அதற்கும் தயாராகவே உள்ளோம்.


 ஒருக்கால் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதில் பிற்போக்கு சக்திகள் தடையாக நின்றால், அதற்கெதிராக தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இது மேல்மட்டத்தில்  அரசாங்கத்தில் நடப்பதாக மட்டுமின்றி, பிரதானமாக மக்கள்திரள் போராட்டங்களாகக் கீழ்மட்டத்திலும் நடப்பதாக இருக்கும். இரண்டு வழிகளிலும் நாங்கள் போராடுவோம். ஒருபுறம் அரசில் பங்கேற்று, அதைத் தலைமையேற்று வழிநடத்தவும், முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றவும் அரசின் உள்ளிருந்தே போராடுவோம். மறுபுறம், அரசுக்கு வெளியே மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்போம். இரண்டு முனைகளிலும் தொடரும் இப்போராட்டங்கள் மூலம் புதிய நேபாளத்தைக் கட்டியமைக்க விழைகிறோம்.·