book _6.jpgஆணாதிக்கம் மனித இனத்தைச் சிதைத்த போது பாலியல் பல வக்கிரங்களைக் கண்டது. இயற்கையின் பரிணாமத்தையும், இயற்கையின் அழிவையும் ஏற்படுத்தியே மூலதனத்தின் சுதந்திரம் பூத்துக் குலுங்கியது குலுங்குகின்றது. இந்தச் சிதைவுகளில் இருந்து அலங்கோலமான பாலியல் வடிவங்கள் வெடிக்கின்றன. இந்த எதார்த்தத்தில் இருந்து அங்கீகரிக்கக் கோரும் போராட்டமும், இதை ஜனநாயகத்தின் சுதந்திரமாக, தனிமனித உடல் சார்ந்த கூறாகவும் என பலவித விளக்கத்துடன் இன்று கோட்பாட்டு விளக்கங்கள் வருகின்றன. இதில் ஓரினச் சேர்க்கையும் ஒன்று. அதை ஆராய்வோம்.

ஓரினச் சேர்க்கையில் உலக அளவில் நூறுக்கு 0.09 சதவீதம் ஆண்கள் ஈடுபடுகின்றனர். அதிகபட்சமாக இஸ்ரேலில் 35 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். பெண்களின் ஓரினச் சேர்க்கையான லெஸ்பியன் என்பது கிரீஸ் நாட்டிலுள்ள லெஸ்போஸ் தீவில் இருந்து அறிமுகமானதால் லெஸ்பியன் என்று அழைக்கப்படுகின்றது. உலகளவில் ஆறு சதவீதமான பெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். (3.8.1998)28


''உறைக்குச் சிறை" என்ற தலைப்பில், ''ஆணுறைக்குத் தடை" என்ற செய்தியில், தில்லி திகார் ஜெயிலில் சுகாதாரத் தினம் நடத்தச் சென்ற 400-இக்கும் மேற்பட்ட மருத்துவர் குழு பரிசோதனையை நடத்தியது. அங்கு இருந்தோரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டனர் என்பதை ஒப்புக் கொண்டனர். கைதிக்கு ஆணுறைக் கொடுக்கக் கோரி உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசனை கொடுத்துள்ளது. (21.5.1994)34


ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரின் உலகளாவிய புள்ளிவிபரம் மேலே உள்ளது. அது போல் இதற்குப் பொதுமக்களின் ஆதரவு பெருகிவருவதும், இதை ஒட்டிய தத்துவ நடைமுறைக் கோட்பாட்டு ஆதரவுக் குரல்களும் கணிசமான அளவு இன்று உள்ளது. இது ஏன்? இதுவே எமக்கு முன் உள்ள அடிப்படையான முக்கியமான கேள்வியாகும்.


ஓரினச் சேர்க்கையில் ஆணைவிட பெண் அதிகமாக ஈடுபடக் காரணம் என்ன? உலகளவில் ஈடுபாடு உடையோரை மிஞ்சும் அளவுக்கு இஸ்ரேலில் ஏன் 35 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர்? ஆதரவு-ஈடுபாடு என்று புள்ளிவிபரங்கள் எதார்த்தமானவை. இது எமக்கு உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.


ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய விபச்சாரம், பலதாரமணம், பெண்ணின் ஒருதார மணத்தில் ஆணின் மேலாண்மை மற்றும் ஏகாதிபத்தியச் சீரழிவான பாலியல் வடிவங்கள் ஆகியவை ஆணின் பாலியல் நுகர்வுக்குத் தடையாக இருப்பதில்லை. ஆண் இதில் ஒன்றையோ, பலவற்றைத் தெரிவு செய்வதன் மூலம் தனது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. ஆணின் பாலியல் நெருக்கடி இதனால் பெண்ணைவிட குறைவாகும். ஆணின் நெருக்கடி என்பது பெண் பற்றிய ஆணாதிக்கப் பார்வையால், ஆணாதிக்க நுகர்வுப் பண்பாட்டால் உண்டாகின்றது. அது பல பெண்களைக் கட்டுக்கடங்காது நுகர, அனுபவிக்கக் கோருகின்றது. இந்த நிலையில் மட்டுமே பாலியல் நெருக்கடி சாதாரண மக்கள் மத்தியில் ஆண் சார்ந்துள்ளது.


ஆணாதிக்க அமைப்பைக் கட்டிக்காக்க உருவான நிரந்தர இராணுவங்கள், இந்த அமைப்பின் சட்டத்தால் கைதாகி நிரம்பும் சிறைக்கூடங்கள் போன்றவற்றில் மேற்கூறிய வழியில் பாலியல் பூர்த்தியின்றி ஆண்வழி சார்ந்து முடமாக்கப்படுகின்றது. இந்த முடமாக்கல் என்பது ஆணின் ஓரினப் புணர்ச்சியைத் தூண்டுகின்றது. மேற்கூறிய சிறையில் ஓரினப் புணர்ச்சியின் 66 சதவீதப் பங்கு தெளிவாகின்றது. வெளி உலகில் 0.09 சதவீதமான ஆணின் ஓரினப்புணர்ச்சி சிறையில் 66 சதவீதமாக இருப்பது அதிர்ச்சி அளிக்க கூடியது மட்டுமின்றி இந்தச் சமூகத்தின் பாலியல் நிர்வாணத்தை துல்லியமாக்குகின்றது. அதே நேரம் இஸ்ரேலில் ஏன் 35 சதவீதமான ஆண்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர்? இது யூத மதத்தின் ஆணாதிக்கக் கொடூரமாகும். யூதமதம் மிகக் கட்டுப்பாடான ஒழுக்கத்தை மதம் சார்ந்து நிற்பதால் அங்கு பாலியல் நெருக்கடி ஆணுக்கு ஏற்படுகின்றது. கிறித்துவ மதத்தில் ஆண் போதகர்களுக்கும்-பெண் கன்னியாஸ்திரிகளுக்கும், பௌத்த மதத்தில் புத்தத் துறவிகளுக்கும் உள்ள பாலியல் தடை அவர்கள் மத்தியில் அதிகளவு ஓரினச் சேர்க்கையையும், பாலியல் வன்முறையையும் தூண்டுவதை அன்றாடச் செய்திகள், கைதுகளில் அம்பலமாகின்றது.


யூத மத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாடுகள் ஆணின் பாலியல் உணர்ச்சியை நலமடிக்கின்ற போது ஓரினச் சேர்க்கையாக அது வெடிக்கின்றது. உதாரணமாக யூத மதத்தை ஆச்சாரமாகக் கடைப்பிடிக்கும் ஒருவன் வானொலி கேட்பது தடை செய்யப்பட்ட ஒன்று. இது போல் பல விடயங்கள் உண்டு. யூத மதத்தில் ஆச்சாரமான பண்பாட்டில் திளைக்கும் ஆணாதிக்கம் அங்கு பாலியல் உறவைச் சிதைக்கின்றது. இது அச்சமூகத்தின் ஓரினச் சேர்க்கையைத் தீர்வாக்குகின்றது. பெண்களுடன் கதைப்பது கூட யூத மதத்தில் ஆச்சரியத்துக்குரிய விடயமாக, (பைபிள்:அரு.4.27) தடை செய்யப்பட்ட நிலையில் பெண் அசிங்கப்படுத்தப்பட்டாள். பெண்ணில் இருந்து அன்னியப்பட்ட ஆண் தனக்கிடையில் ஓரினப்புணர்ச்சியைக் கைக்கொள்வது அவனின் தீர்வாக இருந்தது.


பெண்ணைப் பொறுத்தவரையில் ஆணுக்கு இருந்த சலுகை அவளுக்கு எட்டாத விடயமாக இருந்தது. திருமணம் மட்டுமே அவளின் ஒரே பாலியல் தீர்வாக இருந்தது. அங்கும் ஆணின் மேலாண்மை பெற்ற பாலியல் பெண்ணின் பாலியலைப் பூர்த்தி செய்வதை எப்போதும் கேள்விக்குள்ளாக்கியது. ஒருதாரமணத்தைப் பெண்ணுக்கு மட்டும் நிபந்தனையாக்கி, இதை மீறும் அனைத்துக்கும் கடும் தண்டனையைச் சமூகம் வழங்கியது. பெண்ணின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டு அவளை ஆணின் பாலியல் வேலைக்காரி ஆக்கியதன் மூலம், பெண்ணின் உணர்ச்சிகள் நலம் அடிக்கப்பட்டது. ஆணில் இருந்து அன்னியப்படுத்தி வீட்டில் சிறைவைத்த ஆணாதிக்கம் பெண்ணைத் தனது போகத்துக்குரிய பொருளாகக் கண்டது. இந்தவகையில் பெண்களை அதிகார வர்க்கம் அந்தப்புரங்களில் ஆயிரக்கணக்கில் அள்ளிச் சென்று சிறைவைத்தது. ஒருநாள் மோகம் அல்லது அதுவுமற்ற பெண்கள் தமது உணர்ச்சிக்கான பாதையைக் கண்ணீரில் நிரப்பினர். ஆணாதிக்க வர்க்க அதிகார மையங்கள் ஆயிரம் ஆயிரமாக வரலாறு முழுக்க பெண்களைத் தமது அந்தப்புரத்தில் நிரப்பிச் சுகம் கண்டது.


இன்று இந்தியாவைப் பாசிசத்தின் இந்து வடிவமான இராமனின் தந்தை மலட்டுத் தசரதன் 60,000 மனைவிகளை வைத்திருந்தான் என்கிறது வரலாறு. மலட்டுத் தசரதனின் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்களின் உணர்ச்சிக்கான தீர்வு எதுவாக இருந்திருக்கும்? பழைய கிரேக்கச் சாம்ராஜ்ஜியங்கள் முதல் அனைத்து வரலாற்று மன்னர்களினதும், நிலப்பிரபுக்களின், வர்த்தகர்களின் மாடமாளிகைகளில் அந்தப்புரங்கள் எல்லாம் பெண்ணின் கண்ணீரால் உருவானவைகளே. இந்தப் பெண்கள் தமக்கிடையில் ஓரினப்புணர்ச்சியைத் தேர்ந்தெடுப்பது ஒரு மாற்றாக இருந்தது. மன்னர்களின் வக்கிரங்கள் பல பெண்ணை ஒரே நேரத்தில் புணர முற்படுவது போன்ற வக்கிரப் பண்பாட்டில் அப்பெண்களின் உணர்வுகளின் தணிவு தவிர்க்கமுடியாத நிலையில், அவர்களுக்குகிடையிலான ஓரினச் சேர்க்கையாக இருந்தது. அத்துடன் அவர்களின் இந்தப் புணர்ச்சியை இரசிக்கும் ஆணாதிக்க வக்கிரம் இதை ஊக்குவிக்க மேடையேற்றியது. இவைகளை இந்தியச் சிற்பக் கலைமுதல் ஐரோப்பியச் சுவர் ஓவியங்கள் வரை எதார்த்தமாகத் தரிசிக்கமுடியும். பெண்களின் பாலியல் துயரங்கள் அவர்களுக்கிடையான ஓரினப்புணர்ச்சியை ஊக்குவித்தது. அதனால்தான் ஆணைவிட பெண் உலகளவில் அதிகமாக ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுகின்றாள்.


இன்று ஆண் பெண்ணின் பிளவுகள் ஆணாதிக்கப் போக்கிலும், தனிச் சொத்துரிமை வடிவிலும் வீங்கி வெடிக்கும் போது அதை ஆணாதிக்கத்துக்கும், தனிச் சொத்துரிமை வடிவத்துக்கும் எதிராக மாற்றுவதற்குப் பதில் ஆண் பெண் எதிர்ப்பாகக் காட்டப்படுகின்றது. இதனால் ஆண் எதிர்ப்பும், பெண் எதிர்ப்பும் ஓரினப்புணர்ச்சியின் தூண்டுதல் மையமாக மாற்றம் காண்கின்றது.


உலகைச் சூறையாடும் தனிச் சொத்துரிமையை எதிர்ப்பின்றி ஜனநாயக வடிவமாகக் காண்பதும், விளக்குவதும் பரந்துபட்ட வடிவமாக உள்ளது. இதுபோல் ஓரினப்புணர்ச்சியை அங்கீகரிப்பதும் வடிவமாகின்றது. தனிமனிதனின் சுதந்திரத்தை இந்த ஜனநாயகத்துக்குள் கோரும் போது அனைத்துக்கும் அங்கீகாரம் கிடைத்து விடுகின்றது. இது உலகமயமாதலின் அடிப்படையான விதியும் விடயமுமாகும். உதாரணமாகச் சொத்துரிமை அழிப்புக்கு அங்கீகாரம், அதாவது சிறு சொத்துகளை, தேசியச் சொத்துகளை அழிப்பதுக்கும் அங்கீகாரம். தனிச் சொத்து என்பது சில விரல் விட்டு எண்ணக் கூடியவர் வரை சுருங்கிச் செல்லும் எல்லைவரை இது விரிகின்றது.


ஓரினப்புணர்ச்சி அங்கீகாரம் இந்தவகையில் நியாயப்படுத்தப்படுகின்றது. இன்று சமுதாயத்தில் பாலியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்ட ஒருவனின் ஓரினப்புணர்ச்சி நடத்தைகளைப் பாட்டாளி வர்க்கம் அனுதாபத்துடன் அணுகுகின்றது. அதே நேரம் இயற்கையின் பாலியல் வடிவத்தை முன்வைக்கின்றது. இதற்கு எதிரான கோட்பாட்டு விவாதத்தில் எதிர்த்து போராடுகின்றது. ஓரினச்சேர்க்கைக்கு எதிராகத் தண்டனை இந்த ஆணாதிக்க அதிகாரச் சட்டவடிவங்கள் வழங்கும் போது எதிர்த்து அம்பலப்படுத்துகின்றது. ஏனெனின் இது ஆணாதிக்கத்தின் கொடையையும், பக்க விளைவுகளையும் நீக்காத தண்டனையின் ஊடாக ஆணாதிக்க அமைப்பு பாதுகாக்கப்படுவதை அம்பலப்படுத்திப் போராடுகின்றது.


அதாவது பாட்டாளிவர்க்கம் ஆணாதிக்க விளைவை அம்பலப்படுத்துகின்றது. அதன் கொடூரத்தை அம்பலப்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் பக்கவிளைவை அனுதாபத்துடன் அணுகுகின்றது. அங்கு இயற்கையின் வரலாற்றுப் பாலியலை நிலைநிறுத்துகின்றது. கோட்பாட்டில் நியாயப்படுத்தும் எல்லா ஆணாதிக்க ஓரினப்புணர்ச்சி நியாயப்படுத்தல்களையும் அம்பலப்படுத்துகின்றது.


இது மதம் பற்றிய மார்க்சிய அணுகுமுறைக்கு ஒப்பானது. மதம் எப்படி ஓர் அபினாக இருக்கின்றது என்பதை அம்பலப்படுத்துகின்றது. மக்களின் இன்றைய சமூக வடிகாலாகப் போலியான கடவுள் இருக்கின்றார் என்பதை மார்க்சியம் அணுகும் போது மக்களின் அறியாமையையிட்டு அனுதாபப்படுகின்றது. அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கடவுளின் பொய்மையை அம்பலப்படுத்தி ஆயுதபாணியாக்குகின்றது. அதே நேரம் மதத்தை நியாயப்படுத்தும் அனைத்துக் கோட்பாட்டு உருவாக்கத்தையும், நியாயப்படுத்தலையும் வேர் அறுப்பதில் மார்க்சியம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றது. சமூக விளைவால் மக்கள் கடவுளை அணுகுவது தொடர்பாக அணுகும் போக்கில் நிதானம், விளக்கப்படுத்தல், அறியாமையைப் புரியவைத்தல் என நிதானமான சமூக மாற்றத்தின் ஊடான அணுகுமுறையையும், மக்கள் அல்லாத அனைத்து மத வடிவங்கள் மீதும் எதிர்த் தாக்குதலை எதிரிக்கு எதிராகவும் நடத்துகின்றது. இது போல் ஆணாதிக்க விளைவாக ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவோர் மீது ஆணாதிக்க ஒழிப்பின் ஊடான நிதானமான இயற்கை மீதான மனித வரலாற்றைக் கட்டமைக்கும் போராட்ட அணுகுமுறையும், ஆணாதிக்க விளைவை நியாயப்படுத்தும் எல்லா ஆணாதிக்கப் பாதுகாப்பையும், கோட்பாட்டையும் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்ட எதிரியாகக் கண்டு எதிர்த்துப் போராடுகின்றது. சமூகத்தின் இயற்கையை மறுக்கும் அனைத்துச் சமூகப் பக்கவிளைவுகளையும் இதன் வழியில் அணுகுவது மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை மட்டுமின்றி மக்கள் நலன் சார்ந்தவையாகும். அதேநேரம் அதைக் கோட்பாட்டில் நியாயப்படுத்தும் அல்லது பாதுகாக்கும் அனைத்தையும் எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை அதன் மீது நடத்துகின்றது.


பழைய காலப் பார்ப்பனியச் சடங்குகளில் சில நிகழ்வுகளை ஆராய்வோம்;. ''அவர்கள் குதிரையைப் புணர்கின்றனர்.... குதிரையைக் கொல்கின்றனர். ... அரசரின் பட்டத்து இராணி குதிரையின் அருகே படுக்கின்றாள். புரோகிதன் குதிரையையும், இராணியையும் ஒரு துணியினால் மூடுகின்றான். குதிரையின் லிங்கத்தால் இராணி யோனி ஸ்பர்சம் செய்கின்றாள். புரோகிதன் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி இராணியை மோசமாகப் பேசுகின்றான்;. இராணியின் ஆதரவாளர்கள் அதே வடிவில் பதிலும் அளிக்கின்றனர்."18


''எஜமானன் மனைவியை, எஜமானே கொன்று கிடத்திய குதிரையின்மேலே தள்ளி, கட்டிப் பிடித்து படுக்கும் படி செய்த பின்னர், ~சொர்க்கச் சுகத்தை அனுபவித்துக் கொள்| என்று கூறுகின்றான். தொடர்ந்து துதிப்பாடல்களிடையே எஜமான் மனைவிக்கும் இறந்த குதிரைக்கும் இடையில் சம்போகம் நடைபெறுகின்றது....... குதிரையும் இராஜபதனியும் இவ்விதமாக இருக்கும்போது, எஜமானாகிய அரசன் காம உணர்வுடன் சில ரிக்குகளைச் சொல்லிக் கொண்டேயிருப்பான்;."18


ரிக்வேதத்தில், ''ஏ மனிதர்களே! பெண் ஆட்டுடன் சம்போகத்தில் ஈடுபடுக. அது உங்களுடைய பிராண வாயுவையும், புஷ்டத்திலிருந்து வெளியே போகின்ற வாயுவையும் கட்டுப்படுத்தும்;. வாக்குவன்மை பெற ஆட்டுக்கிடாவுடன் சம்போகம் செய்க. அய்ஸ்வர்யங்கள் கிடைக்க காளையுடன் சம்போகம் செய்யுங்கள்."18


ஐயப்பன் பிறந்த கதையும் ஓரினச்சேர்க்கை வகைப்பட்டது. இந்துமதம் ஆண் ஓரினச்சேர்க்கையைப் பல கதையூடாக அங்கீகரிக்கின்றது. மதத்தின் ஊடாகக் கட்டமைக்கப்பட்ட கேவலமான சடங்கு புணர்ச்சிகளும் வக்கிரங்களுமே மேல் உள்ளவை. இந்து மதத்தின் காட்டுமிராண்டித்தனத்தில் பெண் மீதான சடங்குகள் பாலியல் பக்கவிளைவுகளைத் தணிக்கும் மாற்றுப் புணர்ச்சியாக ஓரினப் புணர்ச்சிகள் உருவாக்கப்பட்டன. மிருகங்களுடனான புணர்ச்சியைப் பலர் பார்த்து இரசித்து நடத்தும் பண்பாட்டுச் சடங்குகளை ரிக்வேதம் மந்திரமாக்கி, ஆண்கள் காமம் கொட்ட ஓதுவதன் மூலம் பாலியல் இன்பத்தை நுகர்ந்தான்;. அத்துடன் மிருகப் புணர்ச்சியை ஊக்குவித்து அவை நோய்ப் போக்கியாகவும், பொருட்களை அடையும் ஊடகமாகவும் என்று பலவிதமான விளக்கத்துடன் இவை நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளின் போது ஆண்கள் இதைக் கண்டு களிப்பதன் மூலம், தமது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டனர்.


இயற்கையின் பாலியல் மீது நடந்த திரிபு, பலவிதமான வக்கிரமான புணர்ச்சிகளையும், இரசனைகளையும் கூட ஏற்படுத்தியது. இவை காலம், அறிவு, பொருளாதார மாற்றம் போன்றவற்றால் கைவிடப்பட, புதியதான அந்த இடத்தில் புகுந்து கொள்வதுமாகப் பாலியல் வக்கிரங்களை ஆணாதிக்கம் தொடர்கின்றது. இது சிலவேளை அங்கீகாரம் பெற்றும், பெறாமலுமாக உள்ளது. அங்கீகாரம் அற்றவை அதை உரிமையாக, சுதந்திரமாக ஆணாதிக்கத்துக்கு மாற்றாகக் காண்பதும், காட்டுவதும் வரலாறாக உள்ளது. இதுதான் ஓரினப்புணர்ச்சிக்கும் நிகழ்ந்தது, நிகழ்கின்றது.